Thursday, 27 December 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 46

•   பாபாவின் கயா பயணம்
•   ஆடுகளின் கதை

இந்த அத்தியாயம் ஷாமா காசி, பிரயாகை, கயா முதலிய இடங்களுக்குப் பயணம் செல்வதையும், பாபா எங்ஙனம் அவருக்கு முன்னால் சென்று அங்கிருந்தார் என்பதையும் விளக்குகிறது.  மேலும் இரண்டு ஆடுகளைப்பற்றிய பாபாவின் பழைய நினைவுகளையும் விவரிக்கிறது.



முன்னுரை

ஓ! சாயி,   தங்களது பாதங்களும் தங்களைப் பற்றிய நினைவுகளும் தங்களது தரிசனமும் புனிதமானவை.  அவை எங்களை கர்ம தளைகளிலிருந்து விடுவிக்கிறது.  எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால் பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகிறார்கள்.  கட்புலனுக்குத் தென்படாத சூட்சுமமான நூலால் தாங்கள் அருகிலும், தொலைவிலுமுள்ள பக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல அரவணைக்கிறீர்கள்.  தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லையென்றாலும், தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரிக்கிறீர்கள் என்பதைக் கடைமுடிவாக அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கிறீர்கள். 

தங்கள் அஹங்காரத்தின் காரணமாக புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் இவர்களெல்லோரும் சம்சாரக் குழியில் விழுகிறார்கள்.  ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள்.  ஆன்மஸ்வரூபமாகவும் யாரும் அறியாதபடியும் எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறீர்கள்.  தாங்களே செயல்களைச் செய்கிறீர்கள்.  ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கிறீர்கள்.  ஒருவருக்கும், ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப்பற்றித் தெரியாது.  எனவே எங்களது பாவங்களைப் போக்கும் எங்களுக்குண்டான சிறந்த வழி, மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும்.  அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் பூர்த்தி செய்கிறீர்கள்.  பற்றற்றவர்களுக்குப் பேரானந்தப் பெருநிலையை அளிக்கிறீர்கள்.  தங்கள் இனிமையான பெயரை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்.

இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும் முக்கியத்துவம் அடைகின்றன.  விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் தொடர்கின்றன.  பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம்.  (இரண்டும் ஒன்றே) இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும்.  நமது மனம் அமைதியும், சாந்தியும் பெறுவதே இதற்கான ஒரே நிச்சயமான அடையாளமாகும்.  இச்சரணாகதி, பக்தி, ஞானம் இவற்றின் பெருமை தனித்தன்மை வாய்ந்தது.  ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத் தொடர்ந்து வருகின்றன.

ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை அவர் தொடர்கிறார்.  இரவும், பகலும், வீட்டிலும், வெளியிலும் அவருடனேயே இருக்கிறார்.  அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.  அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.  கீழ்வரும் கதை இதை விளக்குகிறது.



கயா பயணம்

காகா சாஹேப் தீஷித், சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார்.  ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார்.  தீஷித், சாந்தோர்கர் ஆகிய இருவரும் ஷீர்டிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர்.  தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக்கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார்.  அவரே நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட முன்னாலிருப்போம் என்று கூறினார்.  இத்தருணம் பாபாவின் மொழிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஏனெனில் அவைகள், அவரின் சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன.


ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள், ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார்.  ஆபாகோதேவும் அவருடன் அவருடன் செல்வதாக இருந்தார்.  இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர்.  காகா சாஹேப் தீஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 கொடுத்தார்.  பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்துக்காகச் சென்றனர்.  அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும் அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் கொடுத்தனர்.  பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார்.  காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடாரின் மேனேஜரால் நன்கு வரவேற்கப்பட்டார்.

அவர்கள் (ஷாமா, கோதே) அயோத்தியில் இருபத்தொரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர்.  பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர்.  கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர்.  இரவில் கயா ஸ்டேஷனில் இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள்.  காலையில் கயாவாலா (யாத்திரீகர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர்) வந்து "யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டுவிட்டனர்.  நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது" என்றார்.  ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார்.  இல்லை என்றார் கயாவாலா.  "தயவுசெய்து எவ்விதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்" என்றார்.  பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள்.  அது பெரிய விசாலமான சத்திரமாகும். 


தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார்.  ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான சாயி படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது.  "அவர் காசிக்கும், பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கு இருப்போம்" என்ற பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்தார்.  கண்களில் கண்ணீர் பொங்கியது.  மயிர்க்கூச்செறிந்து தொண்டை அடித்துத் தேம்பி அழத்தொடங்கினார்.  அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார்.  ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று விசாரித்தார்.  கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவருக்கு 200 அல்லது 300 ஏஜெண்டுகள் மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்.

பின்னர் ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்
ஷீர்டிக்கும் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.  அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா அவருக்குக் கொடுத்தார்.  இது அதே படம்தான்.   இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா அப்போது நினைவுகூர்ந்தார்.  முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாலாவுக்கு மகிழ்ச்சி கரை காணவில்லை.  பின்னர் அவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக்கொண்டார்கள்.  மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர்.  கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார்.  அவர் பெரும் பணக்காரர்.  தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, சௌகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.  

இக்கதையின் நீதியாவது பாபாவின் மொழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன.  தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும்.  அதைவிட்டுவிடுவோம், அவர் எல்லா ஜீவராசிகளையும் கூடச் சமமாக நேசித்தார்.  ஏனெனில் அவர்கள்பால் தாம் ஒன்றியவராக நினைத்தார்.  பின்வரும் கதை இதை விளக்குகிறது.



இரண்டு ஆடுகள்

ஒருமுறை லெண்டியிலிருந்து பாபா திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் கண்டார்.  அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன.  அவைகளிடம் சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்புசெலுத்தி அவைகளை ரூபாய் 32க்கு விலைக்கு வாங்கினார்.  பாபாவின் இந்தச் செயலைக்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர்.  இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது 4 வீதம் இரண்டு ஆடுகளும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர்.  அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துகொண்டனர்.  ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்.  ஷாமாவும், தாத்யா கோதேவும் அதற்கு விளக்கம் கேட்டனர்.  தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.  தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படி கூறினார்.  இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தகாரருக்குக் கொடுத்துவிட்டு, ஆடுகளைப் பற்றிய தமது பழைய ஞாபகத்தையும், கீழ்கண்ட கதையையும் கூறினார்.  


"ஓ! ஷாமா, தாத்யா!", இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கிறீர்கள்.  கிடையாது.  அவைகளின் கதையைக் கேளுங்கள்.  அவைகளின் முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர்.  எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்.  அவர்கள் ஒருதாய் மக்கள்.  முதலில் ஒருவரையொருவர் நேசித்தனர்.  ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர்.  மூத்தவன் சோம்பேறி, பின்னவன் சுறுசுறுப்பானவன்.   ஆதலால் பெரும்பொருள் திரட்டினான்.  மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக்கொள்ள விரும்பினான்.

தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டை போடத்தொடங்கினர்.  மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான்.  இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள்.  முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர்.  அவர்கள் வினையின் காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர்.  சற்றுமுன் என்னைக்கடந்து சென்றபோது, நான் அவர்களை அறிந்துகொண்டேன்.  அவைகளின் முந்தைய பிறவிகளை நினைவுகூர்ந்து இரக்கம்கொண்டு அவைகளுக்கு இளைப்பாறுதாலும், சௌகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன்.  இதற்காகத்தான் நீங்கள் என்னைப் குறை கூறுகிறீர்கள்.  நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்", என்றார்.  ஆடுகளிடம் சாயியின் அன்பு அத்தகையது.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

Thursday, 20 December 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 45

•   காகா சாஹேபின் ஐயமும்,
    ஆனந்த்ராவ் கண்ட காட்சியும்
•   மரப்பலகை பாபாவின்
படுக்கைக்கானது,
    பகத்தினுடையது அல்ல!



முன்னுரை

முந்தைய மூன்று அத்தியாயங்களில் பாபாவின் மறைவைக் குறித்து நாம் விவரித்தோம். 
அவரது நிலையற்ற ஸ்தூல உருவம் நமது காட்சியிலிருந்து மறைந்ததில் ஐயமில்லை.  ஆனால் அவரது அழிவற்ற சூட்சும உருவம் எப்போதும் வாழ்கிறது.  அவரது வாழ்நாளில் நடைபெற்ற லீலைகள் இன்றும் பெருமளவில் சொல்லப்பட்டு வருகின்றன.  அவர் மறைந்த பின்னரும் அவரது புதியதான லீலைகள் நடைபெற்றன.  இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இவை பாபா எப்போதும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்பதையும், அவர்தம் பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகின்றன.  பாபாவின் வாழ்நாளில் அவரது தொடர்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளே.  ஆனால் அவர்களில் எவராவது இவ்வுலகப் பற்றையும், இன்பங்களின் மேல் விருப்பத்தையும் விடாமல் கடவுள்மேல் உள்ளத்தைத் திருப்பவில்லை என்றால் அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும்.  அப்போதும், இப்போதும் தேவை என்னவென்றால் பாபாவின்பால் முழுமனதான பக்தியே.  நமது புலன்கள், உறுப்புக்கள், மனம் யாவும் பாபாவை வழிபடுவதில் ஒருங்கிணைத்து அவருக்குச் சேவைபுரிய வேண்டும்.  வழிபாட்டில் சில உறுப்புக்களை மட்டும் ஈடுபடுத்தி, மற்றவற்றை வேறுபக்கம் செலுத்துவது பயனற்றது.  வழிபாடு, தியானம் போன்றவை மனப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்யப்படவேண்டும். 

கற்புறுமாதர் தம் கணவரிடம் கொண்டிருக்கும் அன்பு, சீடன் குருவிடம் கொண்டிருக்கும் அன்புடன் சிலசமயம் ஒப்பிடப்படுகிறது. 
எனினும் முன்னது குருபக்தியை விட மிகத்தாழ்வானபடியால் இரண்டையும் ஒப்பிட இயலாது.  தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறுஎந்த உறவினரோ நம் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய (ஆத்ம உணர்வு பெற) உதவிக்கு வரமாட்டார்கள்.  நாமே திட்டமிட்டுக்கொண்டு ஆன்ம உணர்வு பெறும் பாதையில் வழிநடக்க வேண்டும்.  உண்மைக்கும், மாயைக்கும் இடையில் பேதம் கண்டு இகபர இன்பங்களையும் பொருட்களையும் துறந்து, புலன்களையும் மனதையும் அடக்கி முக்தியை அடைவதில் மட்டுமே விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.  மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக நம்மிடமே நமக்குப் பூரண நம்பிக்கை வேண்டும்.

பேதங்கள் உணர பயிற்சி செய்யத்தொடங்கும்போது உலகம் ஒரு மாயை என்றும் நிலையற்றது என்றும் அறிந்து கொள்வதால் உலக ஆசைகள் மீதான பற்று குறைந்து முடிவில் பற்றற்ற நிலையைப் பெறுகிறோம்.  பிரம்மம் என்பது நமது குருவைத்தவிர வேறல்ல என்றும், அவரே முழு நிச்சநிலையில் நாம் காணும் அண்டசராசரங்களிலும் வியாபித்து ஆட்கொண்டிருப்பதையும் உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும் கண்டு வணங்கத் தொடங்குகிறோம்.  இதுவே கூட்டுப் பிராத்தனை (பஜனை) அல்லது வழிபாடாகும்.

இவ்விதம் குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம் அவர்களுடன், ஒன்றி ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்.  சுருக்கமாக, குருவின் நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்துகொண்டு இருப்பதும், அவரைத் தியானிப்பதும் எல்லா ஜீவராசிகளிலும் அவரைக் காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச் சொரிகிறது.  பின்வரும் கதை இதனை விளக்குகிறது.



காகா சாஹேபின் ஐயமும் ஆனந்த்ராவ் கண்ட காட்சியும்

ஏக்நாத்தின் நூல்களான ஸ்ரீமத் பாகவதம், பாவார்த்த ராமாயணம் இரண்டையும் காகா சாஹேப் தீஷித்தை தினந்தோறும் வாசிக்கச்சொல்லி சாயிபாபா உத்தரவிட்டார் என்பது நன்றாகத் தெரிந்த விஷயம்.  காகா சாஹேப் தீஷித், பாபா உயிருடன் இருக்கும்போதும், அவர் மறைந்த பின்பும் இதனைப் பின்பற்றினார்.  பம்பாய் சௌபாத்திலுள்ள காகா மஹாஜனியின் வீட்டில் ஒருநாள் காலை காகா சாஹேப் தீஷித் ஏக்நாத்தின் பாகவதத்தை வாசித்துக்கொண்டிருந்தார்.  ஷாமா என்றழைக்கப்பட்டும் மாதவராவ் தேஷ்பாண்டேயும், காகா மகாஜனியும் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் பதினோராம் காண்டம் படிக்கப்பட்டதைக் கவனத்துடன் கேட்டனர்.  அதில் ரிஷபக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது சித்தர்கள் அல்லது நாதர்கள் என்றழைக்கப்பட்ட கவி, ஹரி, அந்தரிக்ஷா, பிரபுத்தா, பிப்பலாயன், அவிர்ஹோத்ரர், த்ருமில், சமஸ், கரபாஜன் முதலியோர் பாகவத தர்மத்தை ஜனகராஜனுக்கு உபதேசித்தார்கள். 


ஜனகர் அவ்வொன்பது நாதர்களையும் மிகமிக முக்கியமான கேள்விகளைக் கேட்டார்.  அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் திருப்திகரமானமுறையில் பதிலளித்தார்கள். 

முதல்வரான கவி பாகவத தர்மம் என்றால் என்ன! என்று விவரித்தார். 

ஹரி பக்தனின் குணநலன்களை விளக்கினார்.

மாயை என்றால் என்ன என்பதை அந்தரிக்க்ஷா விளக்கினார்.

மாயையை எவ்வாறு கடப்பதென்பதை பிரபுத்தா விளக்கினார். 

பரப்பிரம்மம் என்பதை பிப்பலாயன் விவரித்தார்.

கர்மத்தைப் பற்றி அவிர்ஹோத்ரர் விளக்கினார்.

த்ருமில் கடவுள் அவதாரங்களையும் அவர் செயல்களையும் விளக்கினார்.

மரணத்துக்குப்பின் பக்தனில்லாதவன் எங்ஙனம் கூலி கொடுக்கப்படுகிறான் என்பதை சமஸ் கூறினார். 

வெவ்வேறு யுகங்களில் விவ்வேறு விதமான கடவுள் வழிபாட்டைப் பற்றி கரபாஜன் விளக்கினார்.

கலியுகத்தில் ஹரி அல்லது குருவின் பாதங்களை நினைவூட்டிக்கொள்வதே விடுதலைக்கு ஒரேவழி என்பதே எல்லா விளக்கங்களின் கருத்துமாகும்.
 
 

வியாக்கியானம் முடிவடைந்த பின்னர், மாதவ்ராவிடமும் மற்றவர்களிடமும் காகா சாஹேப் மனஞ்சோர்ந்த குரலில் கூறினார்.  "பக்தியைப் பற்றி ஒன்பது நாதர்களின் விளக்கமும் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது!  அதே நேரத்தில் அதை அப்பியாசத்திற்குக் கொண்டுவருவது எவ்வளவு கடினம்!  நாதர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள்.  ஆனால் அவர்களால் விவரிக்கப்பட்ட பக்தியை நம்போன்ற அறிவற்றவர்கள் அடைவது சாத்தியமா?  பல பிறவிகளுக்குப் பின்னரும் நாம் அதை அடையப்போவதில்லை.  பின்னர் எங்ஙனம் நாம் முக்தியடைய முடியும்?  நமக்கெல்லாம் கதிமோட்சத்திற்கான நம்பிக்கையே இல்லையென்றே தோன்றுகிறது".  காகா சாஹேபின் இந்த சோர்வான எண்ணத்தை மாதவ்ராவ் விரும்பவில்லை.

அவர் கூறினார், "வைரத்தைப் போன்ற பாபாவைக் குருவாக அடைந்த நல்லதிர்ஷ்டம் உள்ள ஒருவர் இவ்வளவு தாழ்வுணர்ச்சியுடன் அழுவது பரிதாபமானது.  பாபாவிடம் அவருக்கு அசைவற்ற நம்பிக்கை இருக்குமானால் ஏன் அவர் மனச்சலனமடைய வேண்டும்.  நாதர்களின் பக்தி உறுதியானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம்.   ஆனால் நமது பக்தி அன்பும், பாசமும் உடையதல்லவா?  ஹரியினுடைய அல்லது குருவினுடைய பெயரை ஸ்மரணம் செய்துகொண்டிருப்பதே நமக்கு முக்தியை அளிக்கும் என்று பாபா நமக்கு ஆணித்தரமாகக் கூறவில்லையா?  பின் பயத்துக்கும், கவலைக்கும் ஏது காரணம்?".  மாதவ்ராவின் விளக்கத்தால் காகா சாஹேப் தீஷித் திருப்தியடையவில்லை.  அன்று முழுவதும் அவர் நாதர்களின் சிறந்த பக்தியுணர்வைப்போல் தாமும் எவ்விதம் பெறுவது என்ற சிந்தனையிலும் எண்ணத்திலும், கவலையாகவும், மன அமைதியற்றும் இருந்தார்.  அடுத்த நாள் காலை பின்வரும் அற்புதம் நிகழ்ந்தது.

ஆனந்த்ராவ் பாகாடே என்ற ஒரு பெருந்தகை மாதவ்ராவைத் தேடி அங்கு வந்தார்.  பாகவத பாராயணம் அப்போது நடந்துகொண்டிருந்தது.  பாகாடே, மாதவ்ராவின் அருகில் அமர்ந்து எதையோ அவரிடம் முணுமுணுத்தார்.  அவர் தாம் கண்ட தெய்வீகக் காட்சியை மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருந்தார்.  பாராயணத்துக்கு அவரது முணுமுணுப்பு சிறிது இடையூறாக இருந்ததால் காகா சாஹேப் படிப்பதை நிறுத்திவிட்டு மாதவ்ராவை விஷயம் என்னவென்று கேட்டார்.  மாதவ்ராவ்,"நேற்று உங்கள் சந்தேகத்தை எழுப்பினீர்கள்.  இப்போது அதற்கு விளக்கம் கிடைத்திருக்கிறது.  பக்தியின் 'காப்பாற்றும்' குணாதிசயத்தையும், குருவின் பாதங்களை வணங்குதல், வழிபடுதல் ஆகிய ஆர்வம் மட்டுமே போதும் என்று பாபா கனவின் மூலம் பாகடே அவர்களுக்குக் காண்பித்ததைக் கேளுங்கள்" எனக்கூறினார்.

எல்லோரும், குறிப்பாக காகா சாஹேப் தீஷித், அக்கனவுக் காட்சியைக் கேட்க ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்.  அவர்களது யோசனையின்பேரில் பாகாடே தமது காட்சியைப் பின்வருமாறு வர்ணிக்கத் தொடங்கினார். 

ஆழமான கடலில் இடுப்பளவு நீரில் நான் நின்றுகொண்டிருந்தேன்.  திடீரென்று அங்கு சாயிபாபாவைக் கண்டேன்.  அவர்தம் பாதங்கள் நீரில்பட வைரங்கள் பதிக்கப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்.  பாபாவின் ரூபத்தால் நான் மிகமிக மகிழ்வுகொண்டு திருப்தியடைந்தேன்.  கனவு என்று நினைக்கமுடியாத அளவுக்கு தத்ரூபமாக அக்காட்சி இருந்தது.  மிகுதியான ஆர்வத்துடன் மாதவ்ராவும் அங்கு நின்றுகொண்டிருந்தார்.  அவர் உணர்ச்சிவசப்பட்டு, "ஆனந்த்ராவ், பாபாவின் பாதத்தில் விழு!" என்றார்.  "நானும் அங்ஙனமே செய்ய விரும்புகிறேன், ஆனால் பாபாவின் பாதங்கள் தண்ணீரில் இருக்கின்றன.  எங்ஙனம் எனது சிரசை அவற்றின் மேல் வைக்கமுடியும்?  நான் இயலாதவனாக இருக்கிறேன்".  பின்னர் நான் பாபாவிடம், "ஓ! தேவா, நீரில் இருக்கும் தங்கள் பாதங்களை வெளியே எடுத்துக்கொள்ளுங்கள்" என்றேன்.  உடனே பாபா தமது பாதங்களை வெளியே எடுத்துக்கொண்டார்.  தாமதமின்றி நான் அவைகளைப் பற்றிக்கொண்டு வணங்கினேன்.  இதைக்கண்டு பாபா என்னை ஆசீர்வதித்து, "இப்போது போ, உனது நன்மையை நீ பெறுவாய்.  பயத்துக்கோ, கவலைக்கோ காரணமில்லை.  எனது ஷாமாவுக்கு பட்டுக்கரை வேட்டி ஒன்றைக்கொடு.  நீ நன்மை அடைவாய்" என்றார். 

பாபா கனவிலிட்ட ஆணைக்கேற்ப பாகாடே ஒரு வேஷ்டி கொணர்ந்து அதை மாதவ்ராவிடம் கொடுக்கும்படி காகா சாஹேப் தீஷித்தை வேண்டிக்கொண்டார்.  ஆனால் பாபா அதனை ஏற்றுக் கொள்வதற்கேற்ற ஏதாவதொரு குறிப்பு அல்லது யோசனை கூறினாலன்றி தாம் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மாதவ்ராவ் கூறிவிட்டார்.

சிறிது விவாதத்திற்குப்பின் காகா சாஹேப் திருவுளச் சீட்டுப் போடத் தீர்மானித்தார்.  ஐயப்பாடுள்ள எல்லா விஷயங்களிலும் திருவுளச் சீட்டுப்போட்டு பொறுக்கி எடுக்கப்பட்ட சீட்டில் கண்டுள்ளபடி நடப்பது காகா சாஹேபின் நிரந்தரமான வழக்கமாகும்.  இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் 'ஏற்றுக்கொள்ள', 'தள்ளிவிட' என்று இரு சீட்டுக்களில் எழுதப்பட்டு பாபாவின் படத்தின் அடியில் வைக்கபப்ட்டு ஒரு குழந்தையால் ஒரு சீட்டு எடுக்கும்படி கேடக்கப்பட்டது.  'ஏற்றுக்கொள்' என்ற சீட்டே குழந்தையால் எடுக்கப்பட்டு வேஷ்டியும் மாதவ்ராவிடம் கொடுக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இவ்விஷயமாக ஆனந்த்ராவ், மாதவ்ராவ் இருவருமே திருப்தியடைந்தனர்.  காகா சாஹேபின் பிரச்சனை தீர்ந்தது.   

மற்ற ஞானிகளின் மொழிகளுக்கு மரியாதை கொடுக்க இக்கதை நம்மை ஊக்குவிக்கிறது.  அதே சமயம் நமது அன்னையிடம் (அதாவது குருவிடம்) முழு நம்பிக்கைகொண்டு அவரது அறிவுரைகளின்படி நடக்கவும் கூறுகிறது.  ஏனெனில் அவர் வேறு எவரையும்விட சிறப்பாக நமது நலத்தை அறிகிறார்.  பின்வரும் பாபாவின் மொழிகளை உங்கள் உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ளுங்கள்.  "இவ்வுலகில் எண்ணற்ற ஞானிகள் இருக்கிறார்கள்.  ஆனால் 'நமது தந்தையே' (குருவே), 'உண்மையான தந்தை' (நிஜமான குரு) ஆவார்.  மற்றவர்கள் பல நல்ல விஷயங்களைக் கூறலாம்.  ஆனால் நமது குருவின் மொழியை மறக்கவே கூடாது.  சுருக்கமாக உங்கள் குருவை முழு மனதுடன் நேசியுங்கள்.  அவரிடமே பரிபூர்ண சரணாகதியடையுங்கள்.  பயபக்தியுடன் அவர்முன் சாஷ்டாங்கமாக வணங்குங்கள்.  பின்னர் ஆதவனுக்குமுன் இருள் இல்லாதிருப்பதைப் போல் உங்கள் முன் நீங்கள் கடக்கவேண்டிய உலக வாழ்வெனும் கடல் இல்லாததைக் காண்பீர்கள்."



மரப்பலகை - பாபாவின் படுக்கைக்கானது,
                            பகத்தினுடையது அல்ல!


தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார்.  பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுதுண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்.  (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்.  இதைக்கேட்டுக்கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும்
மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்கவிடுகிறேன்" என்றார். 

பாபாமஹல்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை.

காகா:  மஹல்ஸாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன்.

பாபா:  அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்?  பலகையின் மீது தூங்குவது எளிதல்ல.  தன்னிடத்து பல நல்ல குணங்கள் - பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும்.  தனது கண்கள் 'அகல விழித்திருக்கும் நிலையில்' தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்.  நான் தூங்கப்புகும்முன்
மஹல்ஸாபதியை என் அருகில் அமரச் சொல்லி எனது நெஞ்சின் மீது கைவைத்து நாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்.  இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை.  தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்.  எனது நெஞ்சில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்.  தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்குமுடியாமல் தடுமாறுபவனும் தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்?

மற்ற அநேக முறைகளில் அடியோர்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது.  எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார்.

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

            

Thursday, 13 December 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத். 43 & 44

பாபா மஹா சமாதியடைதல்
(தொடர்ச்சி)

•   ஏற்பாடுகள்
•   சமாதி மந்திர் (கோவில்)
•   செங்கல் உடைதல் 

•   72 மணிநேர சமாதி
•   ஜோகின் துறவு
•   பாபாவின் அமுத மொழிகள்

அத்தியாயம் 43, 44 பாபா மஹாசமாதியடையும் நிகழ்ச்சி பற்றியே குறிப்பிடுவதால் அவைகள் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.



முன்னேற்பாடு

ஒருவன் மரணத்தறுவாயில் இருக்கும்போது அவனது போகும்வழி இயற்கையாகவும், எளிதாகவும் இருக்கும்பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து அவன் மனதை மீட்டு ஆன்மிக விஷயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் எண்ணத்துடன் சில மத சம்பந்தமான நூல்கள் பராயணம் செய்யப்படுவது இந்துக்களிடையே உள்ள பொதுவான வழக்கமாகும்.  ஒரு அந்தண ரிஷியின் புதல்வனால் பரீக்ஷித்து மஹாராஜன் சாபமிடப்பட்டு மரணத்தறுவாயில் இருந்த நாட்களில் மாபெரும் ரிஷியான சுகர் புகழ்பெற்ற பாகவத புராணத்தை (சப்தாஹம்) அவருக்கு விளக்கினார்.


இப்பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இன்னும் பல புனிதநூல்களும் மரணத்தறுவாயில் இருப்பவர்களிடம் வாசிக்கப்படுகிறது.  கடவுளின் அவதாரமான பாபாவுக்கு அத்தகைய உதவி எதுவும் தேவையிருக்கவில்லை.  ஆனால், மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டாக இவ்வழக்கத்தை அவர் பின்பற்றினார்.  தாம் விரைவில் காலமடையப் போவதை அறிந்த அவர், வஸே என்பாரை தம்மிடம் ராமவிஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார்.  வஸே வாரமொருமுறை அதைப் படித்தார்.பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி பாபா கேட்டுக்கொண்டார்.  அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார்.  இவ்வாறாக பதினோரு நாட்கள் சென்றன.  பின்னர் மீண்டும் மூன்று நாட்கள் படித்துக் களைப்படைந்து விட்டார்.  எனவே பாபா அவரைப்போக அனுமதித்துவிட்டு தாமே அமைதியாக இருந்துகொண்டார்.  தமது ஆத்மபோதத்திலேயே மூழ்கினவராய் தமது கடைசி வினாடிக்காகக் காத்திருந்தார். 

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே தமது காலை சஞ்சாரத்தையும், பிக்ஷாதனம் பெறச்செல்லும் நியமத்தையும் அவர் நிறுத்திவிட்டு மசூதியிலேயே தங்கிவிட்டார்.  தமது இறுதி வினாடிவரை உணர்வுடன் இருந்து தமது அடியவர்களை மனமுடைய வேண்டாமென்று உபதேசித்துக்கொண்டிருந்தார்.  தாம் சமாதி அடையவுள்ள சரியான தருணத்தை அவர் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை.  மசூதியில் தினந்தோறும் அவருடன் காகா சாஹேப் தீஷித்தும், பூட்டியும் மதிய உணவு உண்டனர்.  ஆனால் அன்று (அக்டோபர் 15) ஆரத்திக்குப் பின்னர் பாபா அவர்களை, தங்கள் இருப்பிடங்களுக்குச் சாப்பிடச் செல்லும்படி
பாபா கூறினார் என்றாலும் லக்ஷ்மிபாய் ஷிண்டே, பாகோஜி ஷிண்டே, பஜாஜி, லக்ஷ்மண் பாலா ஷிம்பி, நானா சாஹேப் நிமோண்கர் போன்றவர்கள் அங்கேயே இருந்து கொண்டனர்.

ஷாமா கீழே படிகளில் அமர்ந்திருந்தார்.  லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு ரூ.9 கொடுத்தபின்பு பாபா தமக்கு மசூதியில் சௌகரியமாய் இல்லையென்றும், பூட்டியினுடைய தகடி வாதாவுக்கு (கல் கட்டிடம்) எடுத்துச் செல்லப்படவேண்டும் என்றும், அங்கு தாம் நலமுற்றுவிடப் போவதாகவும் கூறினார்.  இக்கடைசி மொழிகளை உதிர்த்துவிட்டு பஜாஜி கோதேயின் மேனியில் சாய்ந்துகொண்டு உயிர் நீத்தார்.  அவரது மூச்சு நின்றுவிட்டதை பாகோஜி கவனித்து கீழே அமர்ந்திருந்த நானா சாஹேப் நிமொண்கரிடம் கூறினார்.  நானா சாஹேப் சிறிது தண்ணீர் கொணர்ந்து பாபாவின் வாயில் ஊற்றினார்.  அது வெளியே வந்துவிட்டது.

பின்னர் அவர் பலமாக "ஓ! தேவா" என்று கதறினார்.  பாபா சிறிதே தமது கண்களைத் திறந்து "ஆ!" என்று மெல்லிய குரலில் கூறுவதைப் போன்றிருந்தது.  ஆனால், பாபா தமது பூத உடலை க்ஷேமமாக நீத்துவிட்டார் என்பது சீக்கிரமாக நிதர்சனமாயிற்று.பாபா காலமான செய்தி ஷீர்டி கிராமத்தில் காட்டுத்தீபோல் பரவியது.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் மசூதிக்கு ஓடி வந்து இந்த இழப்பின் துயரைப் பல்வேறு விதங்களில் வெளியிட்டனர்.  சிலர் பலமாகக் கதறினர்.  சிலர் தெருவில் உருண்டு புரண்டனர்.  சிலர் மூர்ச்சித்து விழுந்தனர்.  எல்லோருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்தது.  அனைவரும் வருத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

சிலர் சாயிபாபாவின் மொழிகளை நினைவூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.  வரப்போகும் காலங்களில் தாம் ஒரு எட்டுவயதுப் பையனாகத் தோன்றப்போவதாக மஹராஜ் (சாயிபாபா) தம் பக்தர்களிடம் தெரிவித்ததாகச் சிலர் கூறினர்.  இவைகள் ஞானியின் மொழிகள்.  எனவே, இது குறித்து யாரும் ஐயுறத் தேவையில்லை.  ஏனெனில் கிருஷ்ணாவதாரத்தில் சக்ரபாணி (மகாவிஷ்ணு) இதே காரியத்தைத்தான் நிகழ்த்தினார்.  சிறையிலிருந்த தேவகியின்முன் கிருஷ்ணர் ஒளி பொருந்திய நிறத்தினராகவும், தமது நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்த எட்டுவயது பையனாகவும் தோற்றமளித்தார்.   

அந்த அவதாரத்தின்போது கிருஷ்ணர் பூமியின் பாரத்தைக் குறைத்தார்.  இந்த அவதாரம் தமது பக்தர்களின் முன்னேற்றத்திற்கானது.  எனவே ஐயத்துக்குரிய காரணம் எங்கேயுள்ளது?  ஞானிகளின் வழியோ உண்மையான அறிவெல்லை கடந்தது.  சாயிபாபாவுக்குத் தமது பக்தர்களுடன் உண்டான தொடர்பு இந்த ஒரு தலைமுறைக்குரியது மட்டுமன்று அது கடந்த 72 ஜென்மங்களின் தொடர்பாகும்.  இத்தகைய அன்புப் பிணைப்புக்களை உருவாக்குதற் பொருட்டே மஹராஜ் (சாயிபாபா) திக்விஜயம் செய்யச் சென்றுள்ளார் போலத்தோன்றுகிறது.  அவர் மீண்டும் விரைவில் திரும்பி வருவார் என்று அவர் பக்தர்கள் உறுதியான நம்பிக்கை பூண்டுள்ளனர்.

பின்னர் பாபாவின் பூதவுடலை எங்ஙனம் அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது.  சில (முஸ்லிம்கள்) பாபாவின் உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் ஒரு சமாதி கட்டவேண்டும் என்றனர்.  குஷால் சந்த்தும், அமீர் ஷக்கரும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.  ஆனால் ராமச்சந்திர பாடீல் என்னும் கிராம அதிகாரி உறுதியான தீர்மானமான குரலில் கிராம பரிஷத்தை நோக்கி, "எங்களுக்கு உங்கள் கருத்து சம்மதமில்லை.  வாதாவைத் தவிர வேறு எவ்விடத்திலும் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படக்கூடாது" என்று கூறினார்.  மக்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகொண்டு முப்பத்தாறு மணிநேரம் வரை இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.  புதன்கிழமை காலை பாபா, லக்ஷ்மண் மாமா ஜோஷியின் கனவில் தோன்றி
அவரைத் தம் அருகில் அழைத்து, "சீக்கிரம் எழுந்திரு, பாபு சாஹேப் நான் இறந்துவிட்டதாக நினைக்கிறார்.  எனவே அவர் வரமாட்டார்.  நீ வழிபாட்டை நடத்தி காகட் (காலை) ஆரத்தி செய்" என்றார்.  லக்ஷ்மண் மாமா, கிராம ஜோசியரும் ஷாமாவின் தாய் மாமனுமாவார்.  அவர் ஒரு வைதீகப் பிராமணர்.  பாபாவைக் காலையில் வணங்கிய பின்னர் கிராம தெய்வங்களை வணங்கினார்.  பாபாவிடம் அவருக்கு மிகுந்த பக்தி உண்டு.  இக்கனவுக்குப் பின்னர் பூஜாத்திரவியங்கள் அனைத்துடனும் வந்து மௌல்விகளின் எதிர்பையும் பொருட்படுத்தாது உரிய சம்பிரதாயங்களுடன் பூஜையும், காலை ஆரத்தியும் காண்பித்துச் சென்றுவிட்டார்.  பின்னர் மத்தியானம் பாபு சாஹேப் ஜோக் மற்றெல்லாருடனும் வந்து வழக்கம்போல் மத்தியான ஆரத்தியைச் செய்தார். 

பாபாவின் இறுதி மொழிகளுக்கு கிராமமக்கள் உரிய மதிப்புக் கொடுத்து அவர்தம் திருமேனியை வாதாவில் வைக்க முடிவுசெய்து, அதன் நடுப்பகுதியைத் தோண்டத் துவங்கினார்கள்.  அடுத்தநாள் மாலை ராஹாதாவிலிருந்து சப்-இன்ஸ்பெக்டரும் மற்ற இடங்களிலிருந்து மக்களும் வந்து எல்லோரும் கலந்து பேசி அம்முடிவை ஏற்றுக்கொண்டனர்.  அடுத்தநாள் காலை பம்பாயிலிருந்து அமீர்பாயும், கோபர்காவனிலிருந்து மம்லதாரும் வந்தனர்.  மக்கள் கருத்து வேறுபாடு கொண்டதாகத் தோன்றியது.  சிலர் அவர் உடம்பு திறந்தவெளியில் அடக்கம் செய்வதற்கு வற்புறுத்தினர்.  எனவே மம்லதார் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி வாதாவை உபயோகப்படுத்தும் தீர்மானம் மற்றதைப் போல் இரண்டு பங்கு ஓட்டுக்கள் பெற்றதைக் கண்டார்.


ஆயினும் அவர் கலெக்டரிடம் இதுகுறித்து குறிப்பிட விரும்பியதையொட்டி காகா சாஹேப் தீஷித் அஹமத்நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.  இத்தருணத்தில் பாபாவின் அகத்தூண்டுதலால் மறுசாராரிடம் ஒரு கருத்துமாற்றம் ஏற்பட்டு அனைவரும் எதிர்ப்பின்றி ஒரே முடிவை ஆதரித்தனர்.  புதன்கிழமை மாலை பாபாவின் திருமேனி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாதாவுக்கு கொண்டுவரப்பட்டு உரிய சம்பிரதாயங்களுடன் முரளீதரின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட மத்திய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  உண்மையில் பாபா முரளீதர் ஆனார்.

எங்கே அவ்வளவு அதிகமான பக்தர்கள் அமைதியும், சாந்தியும் தேடிச்சென்றார்களோ, சென்று கொண்டிருக்கிறார்களோ அத்தகைய கோவிலாகவும், புனித ஆலயமாகவும் வாதா திகழத் தொடங்கியது.  பாபாவின் இறுதிச் சடங்குகள் யாவும் பாலா சாஹேப் பாடேயாலும், பாபாவின் ஒரு பெரும் அடியவரான உபாஸனியாலும் நிறைவேற்றப்பட்டது.


பேராசிரியர் நார்கே கவனித்த விதமாக இந்த இடத்தில் இது குறிப்பிடப்படுகிறது.  முப்பத்தாறு மணிநேரம் பாபாவின் உடல் திறந்து வைக்கப்பட்டிருந்தபோதிலும் சடலம் விறைத்துப் போகாமலும், அங்கங்கள் வளைந்து கொடுக்கும் விதத்திலும் மிருதுவாக இருந்ததால் அவர் அணிந்துகொண்டிருந்த கஃப்னி துண்டுகளாகக் கிழிக்கபடாமல் கழற்றி எடுக்கப்பட்டது.



செங்கல் உடைதல்

பாபா இறுதிவிடை பெறவிருந்த சில தினங்களுக்கு முன்பாக இது குறித்து முன்கூட்டியே ஒரு சகுனம் ஏற்பட்டது.  மசூதியில் பாபா கைவைத்து அமரும் ஒரு பழைய செங்கல் இருந்தது.  இரவில் அதன் மீது சாய்ந்துகொண்டு இருக்கையில் அமர்வார்.  இது பல ஆண்டுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.  ஒருநாள் பாபா இல்லாதபோது தரையைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு பையன் தனது கையில் அதை எடுத்தான்.  துரதிர்ஷ்டவசமாக கைதவறிக் கீழே விழுந்து அது இரண்டாகியது. 

பாபா இதைத் தெரிந்துகொண்டதும் அவர் அதன் இழப்பைக் குறித்து வெகுவாகக் கவலை அடைந்து "உடைந்தது செங்கல் அல்ல.  எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது.  அது எனது ஆயுட்கால நண்பன்.  அதன் ஸ்பரிசத்துடன் நான் எப்போதும் ஆத்மதியானம் செய்தேன்.  அது என் உயிரைப்போன்று அவ்வளவு பிரியமானது.  இன்று அது என்னைவிட்டு நீங்கிவிட்டது" எனப் புலம்பி அழுதார்.  செங்கல்லைப் போன்ற ஒரு ஜடப்பொருளுக்கு பாபா ஏன் இவ்வளவு வருந்தவேண்டும்? என்று சிலர் கேட்கலாம்.  இதற்கு ஹேமத்பந்த், "ஞானிகள் இவ்வுலகில் ஆதரவற்றோரைக் காப்பது என்ற முக்கிய நோக்கத்துக்காகவே அவதரிக்கிறார்கள்.  அவதரித்த உருவில் மக்களுடன் கலந்து அம்மக்களைப் போலவே வெளிப்படையாகச் சிரித்தல், விளையாடுதல், அழுதல் ஆகியவற்றைச் செய்தாலும் தமக்குள்ளே அவர்கள் தமது கடமைகளையும், பிறவியெடுத்த நோக்கத்தையும் பற்றி முழுதும் விழிப்பாய் இருக்கிறார்கள்" என பதிலளித்திருக்கிறார். 



72 மணி நேர சமாதி

இதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1886ல் பாபா எல்லைக்கோட்டை
(ஆயுள் என்ற எல்லை) தாண்ட முற்சித்தார்.  ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார்.  அதைத் தொலைப்பதற்கு பாபா தனது பிராணனை மிகஉயர எடுத்துச்சென்று சமதிநிலையை அடையத் தீர்மானித்தார்.  பகத் மஹல்ஸாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக.  நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும்.  நான் திரும்பவில்லை என்றால் அந்த திறந்தவெளியில் (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்.

இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்.  அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின.  உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்றுவிட்டதைப்போல் தோன்றியது.  கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக்காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம்செய்ய வந்தனர்.  ஆனால்
மஹல்ஸாபதி இதைத் தடை செய்தார்.  தமது மடியிலேயே வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார்.  மூன்று நாட்கள் கழிந்ததும் காலை 3 மணிக்கு பாவாவிடம் உயிரின் அறிகுறிகள் தெரிந்தன.  அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது.  கண்கள் திறந்தன.  தனது அங்கங்களை நீட்டிக்கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்.

இதிலிருந்தும் மற்ற காரணங்களாலும் வாசகர்கள், சாயிபாபா இத்தனை ஆண்டுகளாக உறைந்த 3½ முழ அளவான உடலைக் கொண்டவர்தானா, அதை விட்டுவிட்ட பிறகு அவர் நீங்கிவிட்டாரா, அல்லது அகத்தே உறையும் ஆத்மவடிவாக விளங்கினாரா என்று தீர்மானித்துக்கொள்ளலாம்.  பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.

இப்பரம்பொருளாகிய சாயியே அண்ட பேரண்டங்களிலும் இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார்.  இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார்.  குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுடம்பை எடுத்துக்கொண்டார்.  தமது குறிக்கோள் நிறைவேறியதும் தமது அழியும் உடம்பைத் (வரையறையுள்ள பண்புக்கூறு) துறந்துவிட்டு தமது வரையறையற்ற பண்புக்கூற்றை அடைந்தார்.  கடவுள் தத்தர், கனகாபூரைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி போன்ற முந்தைய அவதாரங்கள் போலவே சாயி எப்போதும் வாழ்கிறார்.  அவரது மரணம் ஒரு புறத்தோற்றமே தவிர உயிருள்ளவற்றிலும், ஜடப்பொருட்களிலும் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தி அவைகளைக் கட்டுப்படுத்துகிறார்.  இது இயல்பானதே.  இப்போதும் கூடத் தங்களைத் தாங்களே முழுமையும் சரணாகதியடைவோரும் அவரையே முழுமனதாக பக்தியுடனும் வணங்குவோருமாகிய பலரும் அனுபவபூர்வமாக இதை உணரலாம்.

பாபாவின் ஸ்தூல உருவத்தை
நாம் தற்போது காண இயலாவிடினும், இப்போதும்கூட ஷீர்டிக்குச் செல்வோமானால், மசூதியில் அவரது அழகான, தத்ரூபமான சித்திரம் காட்சியளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.  பாபாவின் புகழ்பெற்ற அடியவரும், சித்திரக்காரருமான ஷாம்ராவ் ஜெயகரால் இந்த ஓவியம் வரையப்பட்டது.  கற்பனைவளம், பக்தியுள்ள பார்வையாளருக்கு இப்படம் இன்றும் பாபாவின் தரிசனம் தரும் திருப்தியையளிக்கிறது.  பாபா இப்போது உடல் உருவில் இல்லையாயினும் அவர் அங்கும், எங்கும் இருந்து அவர் பூதவுடலுடன் இருந்த சமயம் எவ்வாறு பக்தர்களை நலமுடன் ஆராதித்தாரோ அவ்வாறே இப்போதும் அருள் செய்கிறார்.  பாபாவைப் போன்ற ஞானிகள் மனிதர்களைப்போன்று தோன்றினாலும், இறப்பதே இல்லை.  உண்மையில் அவர்கள் கடவுளே ஆவர்.



பாபு சாஹேப் ஜோக்கின் துறவு 
 

ஜோகின் சந்நியாசத்தைப் பற்றிய செய்தியுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.  புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக் என்பவரின் மாமா சகாராம் ஹரி என்ற பாபு சாஹேப் ஜோக் ஆவார்.  அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து (P.W. டிபார்ட்மெண்டில் சுப்பர்வைசர்) 1909ல் ஓய்வு பெற்றதும், தமது மனைவியுடன் ஷீர்டிக்கு வந்து வசித்து வந்தார்.  அவருக்குக் குழந்தைகள் இல்லை.  கணவனும், மனைவியும் பாபாவை நேசித்தனர்.  பாபாவை வழிபடுவதிலும், அவருக்குச் சேவை செய்வதிலும், தங்கள் முழுநேரத்தையும் செலவிட்டனர்.  மேகாவின் மரணத்திற்குப்பின் மசூதியிலும், சாவடியிலும் பாபாவின் மஹாசமாதிவரை ஜோக் ஆரத்தி எடுத்தார்.  சாதேவின் வாதாவில் ஞானேஷ்வரியையும், ஏக்நாத் பாகவதத்தையும் மக்களுக்குப் படித்து விவரிக்கும் வேலையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஜோக் பல ஆண்டுகள் பாபாவுக்குச் சேவை செய்தபின்ன்னர் பாபாவை நோக்கி, "நான் இத்தனை காலம் தங்களுக்குச் சேவை செய்தேன்.  எனது மனம் இன்னும் அமைதியும், சாந்தியும் பெறவில்லை.  ஞானிகளுடன் எனக்கு உண்டான தொடர்பு எங்னம் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது?  எப்போது என்னைத் தாங்கள் ஆசீர்வதிப்பீர்கள்?" என்று கேட்டார்.   

பக்தரின் வேண்டுகோளைச் செவிமடுத்த பாபா, "உரிய காலத்தில் உனது தீவினைகள் (அவைகளின் விளைவு அல்லது பயன்) அழிக்கப்பட்டுவிடும்.  உனது நன்மை, தீமை யாவும் சாம்பலாக்கப்படும்.  எல்லாப் பற்றுக்களையும் துறந்து, அடங்காச் சிற்றின்ப அவாவையும், சுவை உணர்வையும் ஜெயித்து, எல்லாத் தடைகளையும் ஒழித்துவிட்டு, முழு மனதுடன் கடவுளுக்கே சேவை செய்து பிச்சைப் பாத்திரத்தை எப்போது நாடி அடைகிறாயோ (சந்நியாசம் ஏற்கிறாயோ) அன்றே நான் உன்னை புனிதமடைந்தவனாக நினைப்பேன்" என்றார்.  சில நாட்களுக்குப் பின் பாபாவின் மொழிகள் உண்மையாயின.  அவரது மனைவி அவருக்குமுன் இயற்கை எய்தினாள்.  வேறு பற்றொன்றும் அவருக்கு இல்லை.  அவர் சுதந்திரமானார்.  இறப்பதற்குமுன் சந்நியாசம் ஏற்றார்.  வாழ்க்கையின் இலட்சியத்தை எய்தினார்.



பாபாவின் அமுத மொழிகள்

அன்பும், கருணையும் உள்ள சாயிபாபா பலமுறை கீழ்கண்ட இனிய மொழிகளை மசூதியில் கூறியிருக்கிறார்.



"என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான்.  என்னைவிட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது.  எனது கதைககளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை.  இடையறாது என்னையே தியானித்து, என் நாமத்தையே அவன் ஸ்மரணம் செய்கிறான்.  முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன்.  அவனுக்கு விடுதலையை (தன்னையுணர்தல்) அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்.  என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்திருக்கிறேன்.  இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான்.  பெருமையையும், அஹங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பியுங்கள்!"



யார் இந்த 'நான்'
 
பலமுறை சாய்பாபா யார் இந்த நான் என்பதை விளக்கியிருக்கிறார்.  அவர் கூறினார், "நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம்.  உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்கும், அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது.  அது நானேயாகும்.  இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும், எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக.  இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்".

எனவே வாசகர்களுக்கு ஹேமத்பந்த் வணக்கம் தெரிவித்துவிட்டு எல்லாத் தெய்வங்களையும், ஞானிகளையும், பக்தர்களையும் மரியாதை செய்யும்படி பணிவுடனும், அன்புடனும் வேண்டிக்கொள்கிறார்.  "எவனொருவன் பிறர்மீது குறைகூறி குற்றங்கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்துக் காயமேற்படுத்துகிறான்.  ஆனால் எவன் கஷ்டப்பட்டுப் பொறுமையுடன் இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்"
என்று பாபா அடிக்கடி கூறியதில்லையா?

பாபா இங்ஙனம் எல்லா ஜந்துக்களிடமும், ஜீவராசிகளிடமும் வியாபித்து அவைகள்பாலும், எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து இருக்கிறார்.  எல்லா உயிர்களிடமிருந்தும், அன்பைத் தவிர வேறெதையும் அவர் விரும்புவதில்லை.  இத்தகைய புனிதமான அமிர்தம் எப்போதும் பாபாவின் திருவாயினின்று பெருக்கெடுத்தது.  அவர்தம் புகழை அன்புடன் பாடுவோர், அதையே பக்தியுடன் கேட்போர் ஆகிய இருவரும் சாயியிடம் ஒன்றாகிவிடுகிறார்கள்.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

Thursday, 6 December 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 42

பாபா மஹா சமாதியடைதல்

•   முன்பாகவே உணர்த்திய குறிப்பு
•   ராமச்சந்திர தாதா பாடீல் - 

    தாத்யா கோதே பாடீல்  
    இவர்கள் மரணம் தவிர்த்தல்
•   லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு 

    தர்மம் செய்தல்
•  கடைசி நேரம்

இந்த அத்தியாயம் பாபா மஹாசமாதியடைதலை விளக்குகிறது.



முன்னுரை

இவ்வுலக வாழ்க்கையின் பயத்தை குருவின் கிருபை என்ற ஒளி நீக்குவதை முந்தைய அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட கதைகள் காண்பிக்கின்றன. 
முக்திக்கு வழி வகுக்கின்றன.  நமது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றன.  சத்குருவின் பாதங்களை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டு ருப்போமானால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன.  மரணம் தனது கொடுமையைத் தளர்த்திவிடுகிறது.  இவ்வுலக வாழ்வின் துயரங்கள் நீக்கப்படுகின்றன.  எனவே, தங்கள் நலத்தை விரும்புவோர் மனதைத் தூய்மைப்படுத்தும் சமர்த்த சாயியின் இக்கதைகளைக் கேட்கவேண்டும்.  ஆரம்பத்தில் ஹேமத்பந்த், டாக்டர் பண்டிட்டின் வழிபாட்டையும், அவர் பாபாவின் நெறியில் மூன்று பட்டைகள் இட்டதைப் பற்றியும் கூறுகிறார்.  ஆனால் இது அத்தியாயம் 11இல் முன்பே கூறப்பட்டுவிட்டதால், இவ்விடம் நீக்கப்பட்டுவிட்டது. 


 
முன்பாகவே உணர்த்திய குறிப்பு

வாசகர்கள் இதுவரை பாபாவின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளைக் கேட்டார்கள்.  அவர்கள் தற்போது பாபாவின் மறைவைப்பற்றி கவனத்துடன் கேட்கட்டும்.  பாபாவுக்கு 1918 செப்டம்பர் 28ம் திகதி லேசான ஜூரம் கண்டது.  ஜூரம் இரண்டு, மூன்று நாட்கள் இருந்தது.  பின்னர் பாபா உணவு சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டார்.  அதனால் நாளுக்கு நாள் பலவீனமானார்.  17வது நாளன்று அதாவது 1918ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மாலை சுமார் 2:30 மணிக்கு பாபா தமது பூத உடலை நீத்தார்.  விவரங்களுக்கு தாதா சாஹேப் கபர்டேவுக்கு பேராசிரியர் நார்கேயின் 1918 நவம்பர் 5ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் சாயிலீலா சஞ்சிகையில் (முதல் வருடம், பக்கம் 78) பார்க்க.  இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1916ல் பாபா, தாம் இயற்கை எய்துவதைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கொடுத்தார்.  ஆனால் அதை அவர்கள் அப்போது புரிந்து கொள்ளவில்லை.  அது பின்வருமா
று:

"விஜயதசமியன்று (தசரா) மாலையில் மக்கள் ஷிமோலங்கணிலிருந்து (ஷிமோலங்கண் என்பது கிராம எல்லையைத் தாண்டுதல்) திரும்பிவரும்போது பாபா திடீரென்று கோபாவேசமடைந்து தமது தலையணி, கஃப்னி லங்கோடு முதலியவைகளை எல்லாம் கழற்றி அவைகளைக் கிழித்து அவருக்கு முன்னால் உள்ள துனியில் எறிந்தார்.  இந்தச் சமர்ப்பணத்தை உண்டு துனியிலுள்ள தீ, மிக்க ஒளியுடன் எரிந்து பிரகாசிக்கத் தொடங்கியது.  பாபா முற்றிலும் நிர்வாணமான நிலையில் அங்கு நின்றார்.  நெருப்பைப்போன்ற சிவந்த கண்களுடன் எல்லோரையும் நோக்கி, "ஓ! பேர்வழிகளே, இப்போது என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்து, நான் ஒரு இந்துவா அல்லது முஸ்லீமா என்பதைத் தீர்மானியுங்கள்" என்று உரக்கக் கூறினார்.  எல்லோரும் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தனர்.  ஒருவருக்கும் பாபாவிடம் நெருங்கத் தைரியமில்லை.
 

கொஞ்ச நேரத்திற்குப்பின் பாபாவின் தொழுநோய் அடியவரான பாகோஜி ஷிண்டே தைரியத்துடன் அருகில் சென்று லங்கோடை கட்டிவிடும் முயற்சியில் வெற்றிபெற்றார்.  "பாபா என்ன இதெல்லாம்.  இன்றைக்கு ஷிமொலங்கண் - தசரா விடுமுறை" என்றார்.  பாபா தமது சட்காவைத் தரையில் அடித்து, "இது என்னுடைய ஷிமொலங்கண் என்றார்.  இரவு பதினோரு மணிவரை சாந்தமடையவில்லை.  அன்றிரவு சாவடி ஊர்வலம் நடக்குமா என்று அனைவரும் ஐயம் அடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் பாபா தமது சாதாரண நிலைக்குத் திரும்பினார்.  வழக்கம்போல் உடையணிந்துகொண்டு முன்னமே விளக்கப்பட்டவிதமாக சாவடி ஊர்வலத்தில் பங்குகொண்டார்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் தசராவே தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்ற கருத்தை அவர் தெரிவித்தார்.  ஆனால் ஒருவரும் அதன் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை.  மற்றுமொரு குறிப்பாலும் பாபா இதனை உணர்த்தினார்.  அது பின்வருமாறு.



ராமச்சந்திர, தாத்யா
பாடீல்களின் மரணத்தைத் தவிர்த்தல்

இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் ராமச்சந்திர பாடீலுக்குத் தீவிரமான காய்ச்சல் கண்டது.
  அவர் பெரிதும் துன்பமடைந்தார்.  அவர் எல்லாவித சிகிச்சைகளையும் கையாண்டு, குணமேதும் காணாமல் தமது வாழ்வில் வெறுப்படைந்து கடைசி வினாடிக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  பின்னர் ஒருநாள் நள்ளிரவு பாபா திடீரென்று அவரது தலையணைக்கருகில் நின்றார்.

பாடீல் பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, "வாழ்க்கையின் எல்லாவித நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன்.  நான் எப்போது சாவேன் என்று எனக்கு உறுதியாகக் கூறுங்கள்" என்றார்.  கருணையுள்ள பாபா, "கவலைப்படாதே, உனது ஹண்டி (மரண ஓலை) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.  நீ விரைவில் குணம் ஆவாய்.  ஆனால் தாத்யா பாடீலைக் குறித்து நான் கவலைப்படுகிறேன்.  அவன் சக வருடம் 1840ல் (1918) விஜயதசமியன்று மரணமடைவான்.  யாருக்கும் இதை வெளியிட்டுவிடாதே.  அவனுக்கும் இதைச் சொல்லாதே.  ஏனென்றால் அவன் பயங்கரமான அளவுக்குப் பீதியடைவான்" என்றார்.


ராமச்சந்திர தாதா சுகமடைந்தார்.  ஆனால் தாத்யாவின் வாழ்வைப்பற்றி அவர் நடுக்கமுற்றார்.  ஏனெனில் பாபாவின் மொழிகள் மாற்ற இயலாதவை என்பதாலும், இரண்டாண்டுகளில் தாத்யா மரணமடைவார் என்பதைக் குறித்துமே.  பாலா ஷிம்பி (தையல்காரர்) என்பவரைத் தவிர வேறொருவரிடமும் இக்குறிப்பைக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார்.  ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி என்ற இவ்விரண்டுபேர் மட்டும் தாத்யாவின் உயிரைப்பற்றி, என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு இருந்தனர்.  ராமச்சந்திர தாதா படுக்கையைவிட்டு நீங்கி நடமாடத் தொடங்கினார்.  காலம் வேகமாகச் சென்றது.  சக வருடம் 1840 (1918) புரட்டாதி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் வரத்தொடங்கியது.

பாபாவின் கூற்றுப்படியே தாத்யா காய்ச்சலினால் படுத்த படுக்கையானார். 
எனவே அவரால் பாபாவின் தரிசனத்துக்கு வரமுடியவில்லை.  பாபாவுக்கும் காய்ச்சல் வந்தது.  பாபாவிடம் தாத்யாவுக்கு முழுநம்பிக்கை இருந்தது.  தாத்யாவின் காய்ச்சல் மோசமடைந்துகொண்டே வந்தது.  அவரால் அசையமுடியவில்லை.  எப்போதும் அவர் பாபாவை ஞாபகப்படுத்திக்கொண்டார்.  பாபாவின் கஷ்டமான நிலைமையும் அதே அளவு வளர்ந்தது.  முன்னால் பாபாவால் உருவாக்கபட்ட விஜயதசமி நாளும் வந்துகொண்டிருந்தது.

ராமச்சந்திர தாதாவும், பாலா ஷிம்பியும் தாத்யாவைப் பற்றி பயங்கரமான அளவு பீதியடைந்தனர்.  பாபா முன்னுரைத்தபடி தாத்யாவின் முடிவு வந்துவிட்டது என்று அவர்கள் எண்ணி, அவர்கள் உடல் நடுங்கி வியர்த்தது.  விஜயதசமியும் மலர்ந்தது.  தாத்யாவின் நாடி மிகமெதுவாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது.  விரைவில் அவர் மரணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. 
தாத்யா பிழைத்துக்கொண்டார்.  அவரது மரணம் தவிர்க்கப்பட்டது.  அவருக்குப் பதிலாக பாபா உடலை உகுத்தார்.  ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டதாகத் தோன்றியது.  பாபா தாத்யாவுக்காகத் தமது உயிரைக் கொடுத்தார் என்று மக்கள் கூறினர்.  அவர் அங்ஙனம் செய்தாரா?  அவரது வழிகள் அளவுக்கு அப்பாற்பட்டவையாகையால் அவருக்கு மட்டுமே தெரியும், என்றாலும் இந்நிகழ்ச்சியில் பாபா தமது மரணத்தைப் பற்றி தமது பெயருக்குப் பதில் தாத்யாவின் பெயரைப்போட்டுக் குறிப்புப் தந்தார் என்றே தோன்றுகிறது.

அடுத்தநாள் காலை (அக்டோபர் 16) பண்டாரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவில் பாபா தோன்றி, "மசூதி இடிந்து வி
ழுந்துவிட்டது.  ஷீர்டியில் எல்லா எண்ணெய்க்காரர்களும், கடைக்காரர்களும் என்னைப் பெருமளவு துயரப்படுத்தினர்.  எனவே நான் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டேன்.  நான் இதை உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன்.  தவுசெய்து அங்கு உடனே சென்று 'பக்கல்' (கதம்ப மலர்கள்) புஷ்பங்களால் என்னைப் போர்த்து" என்றார்.  தாஸ்கணு இவ்விஷயத்தை ஷீர்டியிலிருந்து வந்த கடிதங்கள் மூலமாக அறிந்தார்.  எனவே அவர் ஷீர்டிக்குத் தமது சீடர்களுடன் வந்து பஜனையும், கீர்த்தனைகளும் செய்யத் தொடங்கினார். 
இறைவன் நாமத்தை பாபாவின் சமாதி முன்னால் நாள் முழுவதும் பாடினார்.  ஹரி நாமத்துடன் தாமே ஒரு அழகிய பூமாலை தொடுத்து பாபாவின் சமாதி முன்னர் வைத்து பாபாவின் பெயரால் மக்களுக்கு அன்னதானமும் செய்துவைத்தார்.



லக்ஷ்மிபா
யிக்குத் தானம்

எல்லா இந்துக்களாலும் தசரா அல்லது விஜயதசமி மிகமிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. 
பாபா தமது எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கு இந்நாளைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமேயாகும்.  இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் துன்புற்றார் என்றாலும் எப்போதும் அவர் உள்ளுணர்வுடன் இருந்தார்.

கடைசித் தருணத்திற்குச் சிறிது முன்னரே எவருடைய உதவியுமின்றி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சியளித்தார்.  பாபாவுக்கு அபாயம் நீங்கிவிட்டதென்றும் அவர் தேறி வருகி
றாரென்றும் மக்கள் நினைத்தனர்.  தாம் விரைவில் காலமாகப் போவதை அவர் அறிந்திருந்தார்.  எனவே லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தாம் ஏதும் தர்மம் செய்யவேண்டுமென்று நினைத்தார். 



எல்லா ஜந்துக்களிலும் பாபா விஜாபித்திருத்தல்

இந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே
ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி.  இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள்.  பகத் மஹல்ஷாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர வேறு எவரும் இரவில் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.  ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள்.  பாபா அவளிடம், "ஓ! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்" என்றார்.  அதற்கு அவள், "பாபா சிறிதுநேரம் பொறுங்கள்.  நான் ரொட்டியுடன் வருகிறேன்" என்று கூறிக்கொண்டு சென்றாள்.  பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள்.  அவற்றை பாபாவின்முன் வைத்தாள்.  அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.

அதற்கு லக்ஷ்மி, "பாபா! இது என்ன?  உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது சொந்தக் கைகளால் ரொட்டி தயாரித்தேன்.  நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துகொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகிறீர்களே!  வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்?" என்றாள்

அதற்கு பாபா, "ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய்.  நாயின் பசியைத் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம்.  நாய்க்கும் ஒரு ஆத்மா இருக்கிறது.  ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும், சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவைகள் யாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம்.  பசியாய் இருப்போர்ர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துகொள்வாயாக.  இதை ஒரு ஆதார நீதியாகக் கருது" என்று பதிலளித்தார்.  இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான்.  ஆனால், ஒரு மிகப்பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார்.  தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுறையில் எடுத்துக்காட்டினார்.

இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் அவருக்குத் தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும் பக்தியுடனும் அளித்து வந்தாள்.  பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார்.  இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயிக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார்.  அவளும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் உண்டாள்.  இந்த ரொட்டிக்கதையை ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது.  அது எங்ஙனம் சாயிபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கிறார் என்றும் காட்டுகிறது.  அவர் சர்வவியாபி, பி
ப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்.

பாபா லக்ஷ்மிபாயின் சேவையை நினைவு கூர்ந்தார்.  அவளை எங்ஙனம் அவர் மறக்கமுடியும்?  உடம்பைவிட்டு நீங்குவதற்குமுன் தமது கையைப் பைகளில் போட்டு ஒருமுறை ஐந்து ரூபாயும், மீண்டும் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்தார்.

ஒன்பது என்ற எண் 21ம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட நவவித பக்தியைப்பற்றிக் குறிப்பிடுகிறது. (இந்த நவவித பக்தியும் ஸ்ரீராமரால் சபரிக்கு உபதேசிக்கப்பட்டது.)  அல்லது ஷிமொலங்கண் நேரத்தில் அளிக்கப்பட்ட்ட தஷிணையாக இருக்கலாம்.

லக்ஷ்மிபாயி ஒரு வசதியான பெண்மணி.  எனவே பாபா அவளுக்குக் குறிப்பால் உணர்த்தி, நல்ல அடியார்களுக்கு வேண்டிய ஒன்பதுவித குணங்களைச் சொல்லியிருக்கலாம்.

பாகவதத்தில் 11வது காண்டத்தில், 10வது அத்தியாயத்தில் 6வது பாடலில் முதலாவது, இரண்டாவது செய்யுளில் முறையே முதல் ஐந்து குணங்களும், பின் நான்கு குணங்களும் கூறப்பட்டுள்ளன. 
பாபாவும் அத்தகைய ஒழுங்கைப் பின்பற்றி முதலில் ஐந்து ரூபாயும், பின்னர் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் அளித்தார்.  அப்போது மாத்திரமல்ல.  பலமுறை லக்ஷ்மிபாயின் கைகளில் ஒன்பது ரூபாய் சென்றிருக்கிறது.  ஆனால் பாபாவின் இந்த ஒன்பதை எப்போதும் அவள் நினைவில் கொண்டிருப்பாள்.  கவனமானவரும், எப்போதும் ஜாக்கிரதையானவருமான பாபா தமது கடைசித் தருணத்தில் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்தார்.  தமது அடியவர்களுடைய அன்பாலும், பாசத்தாலும் சிக்கிக்கொள்ளாதபடி அல்லது பிணிக்கப்படாதபடி அவர்கள் எல்லோரையும் நீங்கச் சொல்லி ஆணையிட்டார்.

காகா சாஹேப் தீஷித்தும், பாபு சாஹேப் பூட்டியும் பாபாவிடம் கவலையுடன் காத்திருந்தனர்.  ஆனால் பாபா, அவர்களை வாதாவுக்குப்போய் உணவுக்குப்பின் வரும்படி கூறினார். 
பாபாவின் சந்நிதாதனத்தைவிட்டு அவர்களால் நீங்க முடியவில்லை.  எனினும் பாபாவுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்கமுடியவில்லை.  எனவே அவர்கள் சுமை நிறைந்த மனத்துடன் வாதாவிற்குச் சென்றனர்.  பாபாவின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது என்பதை அவர்கள் அறிவார்களாதலால் அவரை அவர்களால் மறக்க முடியவில்லை.  உணவுக்காக அமர்ந்தாலும் அவர்கள் மனம் எங்கேயோ இருந்தது.  அது பாபாவுடன் இருந்தது.  அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்பாக பாபா பூதவுடலை நீத்துவிட்டார் என்ற செய்தி வந்தது.  உடனே தங்கள் உணவை விட்டுவிட்டு மசூதிக்கு ஓடினார்கள்.  பயாஜி கோதேயின் மடியில் இறுதியாகப் படுத்திருந்ததைக் கண்டார்கள்.  அவர் தரையில் விழவில்லை.  தமது படுக்கையிலும் அவர் படுத்திருக்கவில்லை.  ஆனால் அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துகொண்டே, தமது சொந்தக் கைகளால் தர்மம் செய்துகொண்டே தமது பூதவுடலை நீத்தார்.

ஞானிகள் ஒரு குறிப்பான காரணத்துடன் இந்த உலகிற்கு வருகை தருகிறார்கள்.  அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியாகவே அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்