Thursday, 29 November 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 41

•  சித்திரத்தின் கதை
•  கந்தல் துணி திருடுதலும்
   ஞானேஷ்வரி பாராயணமும்




முந்தைய அத்தியாயத்தில் குறிக்கப்பட்டுள்ளது போல் அந்தச் சித்திரத்தின் கதையை இங்கே தொடர்கிறோம். 

இந்து நிகழ்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் அலி முஹமது, ஹேமத்பந்த்தைப் பார்த்துக் கீழ்வரும் கதையைக் கூறினார். 

பம்பாய் வீதிகளில் ஒருமுறை அவர் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது இந்தப் படத்தை ஒரு தெரு வியாபாரியிடமிருந்து வாங்கினார்.  பின்னர் அதை கண்ணாடி, சட்டம் போட்டு பாந்த்ராவில் உள்ள தம் வீட்டில் தொங்க விட்டார்.  அவர் பாபாவை விரும்பினாராகையால் அப்படத்தைத் தினந்தோறும் தரிசித்து வந்தார். 
ஹேமத்பந்த்துக்கு அதைக் கொடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, காலிலுள்ள கட்டிக்காக (வீக்கத்திற்காக) அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது.  பம்பாயில் அவரது மைத்துனரான நூர் முஹமது பீர்பாயின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.  பாந்த்ராவில் உள்ள அவரது வீடு மூன்றுமாத காலமாக சாத்தப்பட்டிருந்தது.  ஒருவரும் அங்கு வசிக்கவில்லை.  புகழ்பெற்ற பாபா அப்துல் ரஹ்மான், மௌலானா சாஹேப், முஹமது ஹுஸேன், பாபா சாயி, பாபா தாஜூதின் மற்றும் பல உயிருடன் இருந்த ஞானிகள் படங்களும் அங்கு இருந்தன.  காலச்சக்கரம் இவைகளையும் விட்டு வைக்கவில்லை.  பம்பாயில் அலி சுகவீனமுற்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்.  படங்கள் எல்லாம் ஏன் அங்கு (பாந்த்ராவில்) கஷ்டப்படவேண்டும்?  அவைகளுக்கும் உள்ளே வருதலும் வெளியே போதலும் (பிறப்பும், இறப்பும்) உண்டு எனத் தெரிகிறது.  எல்லாப் படங்களும் தங்கள் விதியைச் சந்தித்தன.  ஆனால் சாயிபாபாவின் படம் எங்ஙனம் அதற்குத் தப்பியது என்பதை ஒருவரும் எனக்கு இதுவரை விளக்கியதே இல்லை.  சாயியின் எங்கும்நிறை தன்மையையும், சர்வவியாபித்துவத்தையும் அறிவுக்கெட்டாத அவரின் சக்தியையும் அது காண்பிக்கிறது.


அலிமுஹமது பல வருடங்களுக்கு முன் முஹமது ஹுஸேன் தாரியா டோபணிடமிருந்து ஞானி பாபா அப்துல் ரஹ்மானின் சிறிய படம் ஒன்றைப் பெற்றார்.  அதை அவர் தன் மைத்துனரான நூர் முஹமது பீர்பாயிடம் கொடுத்தார்.  அப்படம் அவரது மேசையில் எட்டு வருடங்கள் இருந்தது.  ஒருமுறை நூர் முஹமது பீர்பாய் அதை ஒரு புகைப்படக்கலை நிபுணரிடம் எடுத்துச்சென்று உயிர் அளவுப்படமாகப் பெரியதாக்கி, அதன் பிரதிகளை அலிமுஹமது உட்பட தமது உறவினர்களிடையேயும், நண்பர்களிடத்தும் விநியோகித்தார். 

அலிமுஹமது அதை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மாட்டினார்.  நூர் முஹமது, ஞானி அப்துல் ரஹ்மானின் சீடர்.  தமது குருவிடம் அவரால் நடத்தப்பட்ட ஒரு திறந்த தர்பாரில் அப்படத்தை அளிக்கச் சென்றபோது குரு கோபமடைந்து அவரை உதைப்பதற்காக ஓடினார்.  அவரை வெளியில் தள்ளினார்.  அவர் மிகவும் வருத்தமுற்று மனம் உடைந்தார்.  நூர் தனது பெரும் பணத்தையும் இழந்து, குருவின் கோபத்தையும், துன்பத்தையும் பெற்றதற்காக வருந்தினார்.  அவருடைய குருவுக்கு உருவ ஆராதனை பிடிக்காதாகையால், பெரிதாக்கபட்
அப்படத்தை அப்போலோபந்தருக்கு எடுத்துச்சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி நீரில் சென்று மூழ்கடித்தார்.  நண்பர்களையும், உறவினர்களையும் தங்கள் பிரதிகளைத் திருப்பிக்கொடுக்கும்படி வேண்டி, அவைகளைத் திரும்பப் பெற்றபின் (மொத்தத்தில் ஆறு பிரதிகள்) அனைத்தையும் பாந்த்ரா கடலில் மீனவனைக்கொண்டு எறியச் செய்தார்.  இச்சமயத்தில் அலிமுஹமது அவரின் மைத்துனரது வீட்டில் இருந்தார்.


ஞானிகளின் படங்களையெல்லாம் உடனே தண்ணீரில் மூழ்கடித்துவிட்டால் அவரது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நூர் முஹமது கூறினார்.  இதைக்கேட்ட அலிமுஹமது தனது மேதாவை (மேனேஜரை) பாந்த்ரா வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்த ஞானிகள் அனைவரது படங்களையும் கடலில் எறியச்செய்தார். 

இரண்டு மாதத்திற்குப்பின் அலிமுஹமது தன் வீட்டிற்குத் திரும்பியதும் சுவரில் பாபாவின் படம் முன்போலவே மாட்டியிருந்ததைக்கண்டு வியந்தார்.  அவரது மேதா இதைத் தவிர்த்து பிற படங்களை எங்ஙனம் எடுத்துவந்தார் என்பது அவருக்குப் புரியவில்லை.  அவரது மைத்துனர் அதைக் கண்டால், அதையும் வழக்கப்படி செய்துவிடுவார் என்று பயந்து உடனே அப்படத்தை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டார்.  யார் அப்படத்தை நன்றாக வைத்துக் காப்பாற்றுவார்கள்?  அதை என்ன செய்யவேண்டும் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கையில் மௌலானா இஸ்மு முஜாவர் என்பவரைச் சென்றுபார்த்து அவர் கூற்றுப்படி செய்யவேண்டும் என்று சாயிபாபாவே தெரிவித்ததுபோல் இருந்தது. 

தீவிர ஆலோசனைக்குப்பின் இருவரும் அப்படம் அண்ணா சாஹேபுக்கு (ஹேமத்பந்க்கு) அன்பளிப்புச் செய்யப்பட்டால் அவர் அதை நன்கு பாதுகாப்பார் என்று தீர்மானித்தார்.  பின்னர் இருவரும் ஹேமத்பந்த்தின் இல்லத்திற்குச் சென்று தக்க சமயத்தில் அதனை வெகுமதியாக அளித்தனர். 



கந்தல் துணி திருட்டும் ஞானேஷ்வரி பாராயணமும்

தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூவின் மம்லதார் B.V.தேவ் நெடுநாளாக
ஞானேஷ்வரியை (பகவத்கீதைக்கு ஞானேஸ்வர் எழுதிய புகழ்பெற்ற மராத்திய வியாக்கியானம்) மற்ற நூல்களுடன் பயிலவேண்டுமேன்று ஆர்வம் கொண்டிருந்தார்.  தினந்தோறும் அவருக்கு பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தையும் மற்ற புத்தகங்களின் சில பகுதிகளையும் படிக்க இயன்றது.  ஆனால் ஞானேஷ்வரியைக் கையில் எடுத்தவுடன் ஏதாவதொரு தடை ஏற்பட்டு அதைப்படிக்க முடியவில்லை.  மூன்றுமாத விடுமுறையில் ஷீர்டிக்குச் சென்று பின்னர் பவுண்டில் உள்ள தனது சொந்த வீட்டிற்குச் சென்றார்.  அங்கு அவர் மற்ற புத்தகங்களைப் படிக்க முடிந்தது.


ஆனால் ஞானேஷ்வரியைப்  பிரித்தபோது சில நூதனமான சம்பந்தமற்ற அல்லது தீய எண்ணங்கள் அவர் மனதில் திரளாகத் தோன்றி அவரது முயற்சியைத் தடைசெய்தன.  எவ்வளவு அதிகமாக முயற்சி செய்தபோதிலும் அப்புத்தகத்தின் சில வரிகளைக்கூட அவரால் எளிதாகப் படிக்கமுடியவில்லை.  எனவே பாபா அப்புத்தகத்தின் மீது தனக்கு அன்பு ஏற்படும்படி செய்து, படிக்கக் கட்டளை இடும்போதுதான் தாம் அதைப் பயில ஆரம்பிக்கவேண்டும் என்றும், அதுவரை அதைப் படிக்கக்கூடாது என்றும் தீர்மானித்தார்.  பின்னர் 1914ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்தம் குடும்பத்துடன் ஷீர்டிக்குச் சென்றார்.  அங்கு ஜோக், அவரைத் தினந்தோறும் ஞானேஸ்வரி படிக்கிறாரா என்று வினவினார்.  தேவ் தாம் அதைப் பயில்வதற்கு ஆர்வம் உள்ளவராக இருப்பினும் அதில் வெற்றிபெற இயலவில்லை என்றும், பாபா அவருக்குக் கட்டளையிடும்போதுதான் அதைப் படிக்க ஆரம்பிக்கப் போவதாகவும் கூறினார்.  அப்புத்தகத்தின் பிரதி ஒன்றை எடுத்துச்சென்று அதை பாபாவுக்கு அளித்து, அவரால் புனிதமாக்கப்பட்டுத் திருப்பி அளிக்கப்படும்போது அதைப் படிக்கலாம் என்று ஜோக் அறிவுரை பகர்ந்தார்.  பாபா அவரது உள்ளத்தை அறிவாராதலால் இந்தமாதிரி செய்ய தாம் விரும்பவில்லை என்று தேவ் பதிலளித்தார்.  அவரது ஆவலை சாயி அறியமாட்டாரா?  அதைப் படிக்கச் சொல்லித் தெளிவான உத்தரவை அவர் கொடுக்க மாட்டாரா?  பின்னர் தேவ் பாபாவைப் பார்த்து ஒரு ரூபாயைத் தஷிணையாகக் கொடுத்தார்.  பாபா இருபது ரூபாய் கேட்டார்.  தேவ் கொடுத்தார்.  இரவில் அவர் பாலக்ராம் என்பவரைப் பார்த்து அவர் எங்ஙனம் பாபாவின் அன்பையும், பக்தியையும் பெற்றார் என்று விசாரித்தார்.  பாலக்ராம் தாம் எல்லாவற்றையும் அடுத்தநாள் ஆரத்திக்குப்பின் தெரிவிப்பதாகக் கூறினார்.  தேவ் அடுத்தநாள் தரிசனத்திற்காகச் சென்றிருந்தபோது பாபா அவரை இருபது ரூபாய் கேட்டார்.  அதை அவர் விருப்புடன் கொடுத்தார்.  பின்னர் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனியாக மசூதியின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தார். 

பாபா அவரைத் தம் அருகில் வந்து அமைதியான மனத்துடன் அமரும்படி கூறினார்.  அங்ஙனமே அவர் செய்தார்.  பின்னர் மத்தியான ஆரத்தி முடிவடைந்தது.  மக்கள் எல்லோரும் கலைந்து சென்றதும், தேவ் மீண்டும் பாலக்ராமைச் சந்தித்து, பாபா அவருக்கு என்ன கூறினார்? எங்ஙனம் தியானம் செய்யக் கற்றுக்கொடுத்தார்? என்று அவரது முந்தைய சரித்திரத்தைக் கேட்டார்.  பதிலளிக்கும் தறுவாயில் பாபா, சந்துரு என்ற ஒரு தொழுநோய்கொண்ட அடியவரை, தேவ்வை அழைத்துவரும்படி அனுப்பினார்.  தேவ் பாபாவிடம் சென்றபோது, யாருடன் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் என்று பாபா கேட்டார்.  அவர் தாம் பாலக்ராமுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், பாபாவின் புகழைக் கேட்டதாகவும் கூறினார். 


பாபா அவரை மீண்டும் 25 ரூபாய் தஷிணை கேட்டார்.  அவரும் அதை மகிழ்வுடன் கொடுத்தார்.  பின்னர் பாபா அவரை உள்ளே அழைத்துச்சென்று கம்பத்தருகில் அமர்ந்துகொண்டு, "என்னுடைய கந்தல் ஆடைகளை எனக்குத் தெரியாமல் நீ திருடினாய்" என்று குற்றம் சாட்டினார்.  தேவ் கந்தல் ஆடைகள் பற்றி தமக்கு எதுவும் தெரியாதென்று மறுத்தார்.  ஆனால் பாபா அவரைத் தேடச் சொன்னார்.  தேடிய அவரால் ஒன்றையும் காண முடியவில்லை.  பாபா கோபமடைந்து, "இங்கு வேறு ஒருவரும் இல்லை.  நீயேதான் திருடன்.  தலை நரைத்து கிழவனாகியும் நீ இங்கு திருடுவதற்கு வந்திருக்கிறாய்" என்றார்.

இதன்பின் பாபா பொறுமை இழந்து, கடுமையாக கோபமுற்று பலவிதமாக திட்டவும், குற்றம் சாட்டவும் ஆரம்பித்தார்.  தேவ் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக்கொண்டு தனக்கு அடியும் கூடக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.  சுமார் ஒரு மணிநேரத்திற்குப்பின் பாபா அவரை வாதாவுக்குப் போகச்சொன்னார்.  அவர் வாதாவுக்குத் திரும்பிவந்து பாலக்ராமிடமும், ஜோகிடமும் நடந்தவை அனைத்தையும் கூறினார்.  பின்னர் மாலையில் பாபா, தேவ்வையும் மற்ற எல்லோரையும் கூப்பிட்டனுப்பினார்.  தமது வார்த்தைகள் கிழவரைத் துன்புறுத்தி இருக்கலாமென்றும் ஆயினும் அவர் திருடியிருப்பதால் தம்மால் வெளியே சொல்லாமல் இருக்க முடியவில்லை என்றும் கூறினார்.  பின்னர் பாபா மீண்டும் பன்னிரண்டு ரூபாய் அவரிடம் கேட்டார்.  தேவ் அதைச் சேகரித்து கொடுத்து அவர்முன் சாஷ்டாங்கமாகப் பணிந்தார்.

பாபா கூறினார்:  போதியை (ஞானேஸ்வரி) தினமும் படித்துக்கொண்டிரு, வாதாவில் போய் அமர்ந்து தினந்தோறும் ஒழுங்காக கொஞ்சமாவது படி, அவ்வாறு படிக்கையில் நீ படித்த பகுதியை அனைவர்க்கும் அன்புடனும், பக்தியுடனும் விளக்கிச் சொல்.  நான் இங்கு உனக்குத் தங்கச்சரிகை போட்ட மதிப்புமிக்க சால்வை அளிப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறேன்.  அப்படியிருக்க மற்றவர்களிடம் நீ ஏன் கந்தலைத் திருடுகிறாய்?  ஏன் திருட்டுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்?

பாபாவின் மொழிகளைக் கேட்டு தேவ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  ஏனெனில் அவர் போதியைப் படிக்கச் சொல்லிவிட்டார்.  தாம் விரும்பியதைப் பெற்றுவிட்டதாக அவர் நினைத்தார்.  இனி அந்நூலை எளிதில் படிக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டார். 
மீண்டும் அவர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தாம் பாபாவிடம் சரணாகதி அடைந்திருப்பதாகக் கூறித் தம்மை ஒரு குழந்தையைப்போல் பாவிக்குமாறும், தனது பாராணயத்தின்போது உதவி செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.  'கந்தலைத் திருடுவது' என்று பாபா கூறியதன் பொருளை அவர் உணர்ந்தார்.  பாலக்ராமிடமிருந்து அவர் கேட்டதெல்லாம் கந்தல் என்று பொருள் கொள்ளப்பட்டது.  இந்நடத்தை பாபாவுக்குப் பிடிக்கவில்லை.  எக்கேள்விக்கும் பாபா தாமே விடையளிக்கத் தயாராய் இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் அவர் விரும்பவில்லை.  எனவே பாபா அவரைத் திட்டித் தண்டனைக்குள்ளாக்கினார்.  உண்மையில் பாபா அவரைத் துன்புறுத்தவோ, திட்டவோ இல்லையென்றும், பாபா தமது ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களைக் கேட்டுத் தெரிவது பயனில்லையெனத் தனக்குப் போதித்ததாகவும் நினைத்தார்.  தேவ் இத்திட்டல்களையெல்லாம் புஷ்பங்களாகவும், ஆசீர்வாதமாகவும் கருதி திருப்தியுடனும், மனநிறைவுடனும் வீடுக்குச் சென்றார்.


இவ்விஷயம் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை.  பாபா படிப்பதற்கு உத்தரவு செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை.  அந்த வருடத்திற்குள் அவர் தேவ்விடம் சென்று அவரின் முன்னேற்றத்தைப் பற்றி வினவினார்.  1914 ஏப்ரல் 2ம் தேதி வியாழக்கிழமை காலை பாபா அவருக்கு 'தெய்வீகக் காட்சி' ஒன்றை அளித்தார்.  மேல் திண்ணையில் அமர்ந்துகொண்டு தேவ் போதியைப் புரிந்துகொண்டாரா என்று கேட்டார்.

தேவ்:  இல்லை

பாபா:  பின் எப்போது நீ புரிந்துகொள்ளப் போகிறாய்?

தேவ்:  (அழுகை
பொங்க) நீங்கள் உங்கள் அருளைப் பொழிந்தாலன்றி பாராயணம் ஒரு தொந்தரவாகவும் புரிந்துகொள்ளுதல் கஷ்டமாகவும் இருப்பது நிச்சயம்.

பாபா:  படிக்கும்போது துரிதமாகப் படி.  எனது சந்நிதானத்தில் என்முன் படி.

தேவ்:  எதை நான் படிக்கவேண்டும்?

பாபா:  அத்யாத்மிகம் (ஆன்மிகம்) படி

தேவ் நூலைக் கொணர்வதற்காகச் சென்றபோது காட்சியிலிருந்து விடுபட்டு முழு விழிப்புணர்வு எய்தினார்.  தேவ் பெற்ற அளவற்ற மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் கற்பனைசெய்து பார்த்தலை நமது வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

Thursday, 22 November 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 40

பாபாவின் கதைகள்

(1)  திருமதி தேவின் 'உத்யாபன்' விழாவிற்கு 

      ஒரு சந்நியாசி போல் மற்ற இருவருடன் 
      செல்லுதல்

(2)  ஒரு சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின் 

       வீட்டுக்குச் செல்லுதல்



முன்னுரை
 


தம் அடியவர்களுக்கு லௌகிக, ஆன்மிக விஷயங்களில் அறிவுரை பகரும் ஸ்ரீ சமர்த்த சாயி புனிதமானவர். 
தங்கள் வாழ்வின் இலட்சியத்தை அவர்கள் எய்தும் வண்ணம் அவர்களை ஊக்குவித்து மகிழ்வடையச் செய்கிறார்.  அவர்களின் தலையில் தம் கையால் ஆசீர்வதிக்கும்போது தமது சக்தியை அவர்களிடம் மாற்றி, பேதப்படுத்தும் உணர்ச்சியை அழிக்கிறார்.  த்வைத உணர்வின்றி, வித்தியாசமின்றி பக்தர்கள் கீழே வீழ்ந்து வணங்கும்போது அவர்களை அரவணைத்து எட்டி அடையமுடியாத பொருளாகிய தம்மையே அவர்களுக்குக் கொடுக்கிறார்.

மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் அவர் ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அந்தஸ்தையும் அளிக்கிறார்.  கடவுளின் லீலைய மட்டும் பாடிக்கொண்டிருப்போருக்கு நிகராக அல்லது அவர்களைக் காட்டிலும் கடவுளின் அடியவர்களின் லீலா வினோதங்களைப் பாடுவோர் பாபாவுக்குப் பிரியமானவர்கள் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது.  தற்போது இவ்வத்தியாயத்தின் கதைகளுக்குத் திரும்புவோம்.



திருமதி தேவின் உத்யாபன் விழா

தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூ மம்லதார் திரு B.V.தேவ், அவரது தாயார் 25 - 30 விதமான பிரார்த்தனைகளை அனுஷ்டித்ததன் முடிவாக ஒரு உத்யாபன் (பூர்த்தி) விழாவை நடத்த இருந்தார்.  நூறு அல்லது இருநூறு அந்தணர்களுக்கு உணவளிப்பதும் இவ்விழாவுடன் சேர்ந்தவொரு அம்சமாகும்.  தேவ், விழாவுக்கு ஒரு நாளை நிச்சயித்தார்.  சாயிபாபாவின் விஜயத்தாலன்றி விழா உரியமுறையில் பூர்த்தி அடையாதாகையால், விழா விருந்தில் கலந்துகொள்ள அவரின் சார்பில் பாபாவை வேண்டிக்கொள்ளுமாறு பாபு சாஹேப் ஜோகிற்கு  ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  பாபாவிடம் பாபு சாஹேப் ஜோக் அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார்.  பாபா, தேவின் தூய்மையான, உள்ளபூர்வமான அழைப்பினை கவனத்துடன் கருத்திற்கொண்டு கூறினார், "என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது
விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன்.  நம்மில் மூன்றுபேர் (மூவர்) நான், நீ, மற்றும் ஒருவன் சென்று அவ்விழாவில் கலந்துகொள்வதாக அவருக்கு ஒரு மகிழ்வான பதில் எழுது" என்றார்.

ஜோக், பாபா கூறியதை தேவிடம் தெரியப்படுத்தினார்.  பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராயினும், பாபா தாமே நேரிடையாக ராஹதா, ரூய், நீம்காவன் முதலிய இடங்களைத் தவிர வேறு இடங்களுக்குச் சென்றதில்லை என்று அவருக்குத் தெரியும்.  பாபா சர்வவியாபியாய் இருப்பதால் அவரால் இயலாதது ஒன்றும் இல்லை என்றும், அவர் விரும்பினால் எந்த ரூபத்திலும் திடீரென்று வந்து தமது சொற்களை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினார். 

இதற்கு சில நாட்களுக்கு முன்னர் 
வங்காள உடையிலுள்ள ஒரு சந்நியாசி, பசுக்களைப் பாதுகாத்தாலே தனது குறிக்கோள் எனக் கூறிக்கொண்டு டஹாணு ஸ்டேஷன் மாஸ்டரிடம் நிதி வசூலிக்க வந்தார்.  பின்னவர் அவரை ஊருக்குள் சென்று மம்லதார் தேவ்வைப் பார்த்து அவரின் உதவியால் நிதி சேகரிக்கச் சொன்னார்.  அத்தருணம் மம்லதார் அங்குவர நேர்ந்தது.  ஸ்டேஷன் மாஸ்டர் சந்நியாசியை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.  இருவரும் மேடையில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். 

தேவ், வேறு தர்மத்திற்காக ஒரு நிதி வசூல் ஏற்கனவே ராவ் சாஹேப் நரோத்தம் ஷெட்டி என்ற பெரிய மனிதர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பிறிதொரு நிதி வசூலைத் தற்போது ஆரம்பிப்பது நன்றல்லவென்றும் அவர் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவ்விடத்துக்கு விஜயம் செய்தால் நல்லதென்றும் அவரிடம் கூறினார்.  இதைக்கேட்டு அத்துறவி அவ்விடத்தைவிட்டு அகன்றார். 

ஒரு மாதத்திற்குப் பின்னர் அத்துறவி ஒரு குதிரை வண்டியில் காலை சுமார் 10 மணியளவில் வந்து தேவ்வின் வீட்டின்முன் நின்றார்.  தேவ் அவர் நிதிக்காக வந்திருப்பதாக நினைத்தார்.  விழாவுக்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அத்துறவி தாம் பணத்துக்காக வரவில்லையென்றும் உணவிற்காக அங்கு வந்திருப்பதாகவும் கூறினார். 

தேவ்:  மிக்க நன்று.  மிக்க மகிழ்ச்சி.  உங்களுக்கு நல்வரவு.  இவ்வீடு தங்களுடையது. 

துறவி:  என்னுடன் மற்றும் இருவர் இருக்கிறார்கள்.

தேவ்:  நல்லது, அவர்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.

விருந்து நடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருந்ததால், எங்கு சென்று அவர்களை அழைத்து வரவேண்டுமென தேவ் கேட்டார்.  "அது தேவையில்லை.  குறிப்பிட்ட நேரத்தில் நானே அவர்களுடன் வருவேன்" என்றார்.  தேவ் அவரை நடுப்பகலில் வரும்படி கூறினார்.  சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு அம்மூவரும் வந்து விருந்தில் பங்கேற்று, விருந்து உண்டபின் சென்றுவிட்டனர். 

விழா முடிந்ததும் தேவ், பாபாவின் வாக்குறுதி மீறலைக் குறித்து வருந்தி பாபு சாஹேப் ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.  ஜோக் பாபாவிடம் அக்கடிதத்துடன் சென்று அதைத் திறக்கும் முன்னரே பாபா, "ஆ! நான் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவன் கூறுகிறான்.  விருந்துக்கு நான் மற்ற இருவருடன் செல்லவே செய்தேன்.  ஆனால் அவன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை.  பின்னர் எதற்காக என்னை அழைக்கவேண்டும்?  சந்நியாசி நிதி கேட்க அவனிடம் வந்திருப்பதாக அவன் எண்ணினான்.  அதுபற்றி அவனது ஐயத்தை நான் நீக்கவில்லையா?  மற்றும் இருவருடன் வருவதாக நான் கூறவில்லையா?  மூவரும் உரிய நேரத்தில் வந்து உணவு உட்கொள்ளவில்லையா? 

பார், எனது மொழிகளைக்
காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன்.  எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்" என்றார்.  இப்பதில் ஜோக்கின் உள்ளத்தை மகிழ்வடையச் செய்தது.  இவை அனைத்தையும் தேவ்வுக்குத் தெரிவித்தார்.

அதை அவர் படித்தவுடனே ஆனந்தக் கண்ணீர் விட்டார்.  வீணாக பாபாவைக் குற்றம் கூறியதற்காக தம்மைத்தாமே கடிந்துகொண்டார்.  துறவியின் முந்தைய வருகையினால், தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பதையும், உணவுக்காக தாம் இருவருடன் வருவதாகக் கூறிய துறவியின் கூற்றிலுள்ள குறிப்பை தான் எங்ஙனம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்பதையும் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார். 

அடியவர்க
ள் தாங்களே முழுமையாக சத்குருவிடம் சரணாகதி அடையும்போது, அவர்தம் வீட்டில் நடைபெறும் மதச்சடங்குகள் உரியமுறையில், தேவையான சம்பிரதாயங்களுடன் நடத்தப்படுகின்றனவா என்று அவர் கவனிக்கிறார் என்பதை இக்கதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. 



ஹேமத்பந்தின் ஹோலிப்பண்டிகை  விருந்து

பாபா தமது சித்திர ரூபத்தில் தோன்றி தமது அடியவரின் ஆவலைப் பூர்த்தி செய்தார் என்பதைக் கூறும் மற்றொரு கதையைக் காண்போம். 

1917ம் ஆண்டு பங்குனி மாதம் பௌர்ணமி
ஹோலிப்பண்டிகையன்று காலை ஹேமத்பந்த்க்கு ஒரு காட்சி தோன்றியது.  பாபா அவரது கனவில் நன்றாக உடையணிந்த ஒரு துறவியைப்போன்று தோன்றி அவரை எழுப்பி அன்று உணவுக்காக அவரிடம் வருவதாகக் கூறினார்.  கண்விழித்து எழுந்த அவர் துறவியையோ அல்லது சாயியையோ காணவில்லை.  ஆனால் அவர் கனவு நினைவுகூரத் தொடங்கியபோது, கனவில் துறவி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகத்தில் கொணர்ந்தார்.

ஏழு ஆண்டுகளாக பாபாவுடன் அவர் தொடர்புடையவராக இருந்தாலும், பாபாவையே எப்போதும் தியானித்தபோதிலும் பாபா உணவுக்காகத் தம் வீட்டுக்கு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.  ஆயினும் பாபாவின் மொழிகளால் மனம் மகிழ்ந்து தமது மனைவியிடம் சென்று அன்று ஒரு புனிதமான நாளாக இருப்பதால் ஒரு துறவி விருந்தாளி உணவுக்காக வருகிறார் என்றும், அதிகமான உணவு தயார் செய்யவேண்டுமென்றும் கூறினார்.  அவள் விருந்தாளியைப் பற்றி யார்?  எப்போது வருகிறார்கள்? எனக் கேட்டாள்.  தமது மனைவியை அலைக்கழிக்காத நியதியின் பொருட்டும், தப்பு எண்ணத்தைத் தவிர்த்தற்காகவும் உண்மையை அதாவது கனவினைப் பற்றி அவளிடம் கூறினார்.


பாபா, அவ்விடத்திற்கு (பாந்த்ரா) ஷீர்டியிலிருந்து அங்குள்ள நேர்த்தியான உணவை விடுத்து சாதாராணமான தங்கள் வீட்டு உணவை ஏற்க வருவாரா என்று அவள் ஐயத்துடன் கேட்டாள்.  ஹேமத்பந்த் அவளுக்கு, பாபா நேரிடையாக வரமாட்டார் என்றும், ஒரு விருந்தினர் ரூபத்தில் வருவார் என்றும் உறுதியளித்து இன்னும் சற்று அதிகமாக சாதம் வடிப்பதினால் அவர்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் கூறினார். 

இதன்பின்னர் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு 
மதியத்திற்குள் அது தயாராகியது.  ஹோலி வழிபாடும் செய்யப்பெற்று இலை போடப்பட்டது.  அதைச் சுற்றிலும் கோலமிடப்பட்டது.  நடுஸ்தானம் விருந்தாளிக்கெனவும் மற்றவர்களுக்கு இரண்டு வரிசைகளிலும் இலைகள் போடப்பட்டன.  குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும், மகன்கள், பேரன்கள், புத்திரிகள், மருமகன்கள் அனைவரும் வந்து தத்தமது இடங்களில் அமர்ந்தனர்.  பல்வேறுவித உணவுவகைகள் பரிமாறப்பட்டன.  இது நிகழ்ந்துகொண்டிருக்கையில் அனைவரும் விருந்தாளிக்காக எதிர்பார்த்திருந்தனர்.     

மதியம் கடந்துவிட்டபோதிலும் ஒருவரும் வரவில்லை.  பின்னர் கதவு சாத்தப்பெற்று தாளிடப்பட்டது.  பின் அன்னசுத்தி (நெய்) விடப்பட்டது.  இதுவே உண்ண ஆரம்பிப்பதற்கு அடையாளம்.  அக்கினிக்கு முறையான சமர்ப்பணமும், கிருஷ்ணருக்கு நைவேத்தியமும் கூட ஆயிற்று.  குடும்பத்தினர் உண்ண ஆரம்பிக்கும் அதே தறுவாயில் வாசலில் காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது.  ஹேமத்பந்த் உடனே சென்று கதவைத் திறந்தார்.  அலி முகமது, மௌலான இஸ்மு முஜாவர் ஆகிய இருவரைக் கண்டார்.  உணவு தயாராக இருப்பதையும், குடும்பத்தினர் உண்ணத் தயாராக இருப்பதையும் அவ்விருவரும் கண்டு ஹேமத்பந்த்திடம் மிகுந்த வருத்தம் தெரிவித்துத் தங்கள் குறுக்கீட்டுக்கு மன்னிப்புக் கோரினர்.

அவர்கள், "எங்களுக்காக நீங்கள் இருக்கையைவிட்டு எழுந்து ஓடி வந்திருக்கிறீர்கள்.  மற்றவர்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  எனவே தயவுசெய்து இந்த உங்கள் பொருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  நாங்கள், அதன் வியத்தகு கதை முழுவதையும் தங்களுக்குச் சௌகரியப்ப்படும்போது பின்னர் விவரிப்போம்" என்று கூறினார்கள்.  இவ்வாறு கூறிக்கொண்டே பழைய செய்தித்தாள் ஒன்றை மேசையின்மேல் வைத்தார்கள்.  ஹேமத்பந்த் அதனைப் பிரித்துப் பார்க்கையில், அவருக்குப் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் விளைவிக்கும் வகையில் சாயிபாபாவின் பெரிய அழகிய படம் (Bas-Relief) ஒன்றைக் கண்டார்.  உடம்பு முழுவதும் மயிர்க்கூச்செறிய, கண்களில் நீர்வழிய மிகவும் மனமுருகி தனது தலையைத்தாழ்த்தி படத்திலுள்ள பாபாவின் பாதங்களில் வைத்துக்கொண்டார்.  பாபா இத்தகைய ஆச்சர்ய லீலையால் தம்மை ஆசீர்வதித்திருப்பதாக நினைத்தார்.  அறிவதற்கு ஆர்வம் மேலிட, அப்படத்தை அவர்கள் எப்போது வாங்கினார்கள் என்று கேட்டார்.


அலி முஹமது தாம் அதை ஒரு கடையிலிருந்து வாங்கியதாகவும் எல்லோரும் காத்திருப்பதால் அப்படத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் பிறிதொரு சமயம் சொல்லுவதாகவும் மற்றவர்களுடன் அவரை உண்ணச் செல்லுமாறும் கூறினார்.  ஹேமத்பந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவிட்டுச் சாப்பிட வந்தார்.  பின்னர் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் படம் வைக்கப்பட்டு நைவேத்தியம் உரியமுறையில் செய்தான பிறகு அனைவரும் உண்ணத் தொடங்கினார்கள்.  படத்திலுள்ள அழகிய ரூபத்தைக்கண்டு அனைவரும் மிகமிக சந்தோஷமடைந்தனர்.  இவையெல்லாம் எங்ஙனம் நிகழ்ந்தன என்பது குறித்து வியந்தனர்.

ஹேமத்பந்த்தின் கனவில் கூறிய மொழிகளை பாபா இவ்வாறாக நிறைவேற்றினார்.  எல்லா விவரங்களுடன் கூடிய அப்படத்தின் கதை அதாவது எங்ஙனம் அலி முஹமது அதை பெற்றார்?  ஏன் அதை அவர் வாங்கினார்?  ஹேமத்பந்த்திடம் பின் ஏன் அதைக் கொடுத்தார்? என்பவை எல்லாம் அடுத்த அத்தியாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்