Friday, 26 April 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம்



ஸ்ரீ சாயி சத்சரிதம்
TAMIL PDF & AUDIO FORMATS
To READ
Download PDF
Download AUDIO
அத்தியாயம் 20
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 21
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 22
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 23
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 24
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 25
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 26
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 27
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 28
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 29
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 30
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 31
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 32
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 33
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 34
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 35
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 36
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 37
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 38
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 39 & 50
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 40
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 41
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 42
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 43 & 44
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 45
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 46
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 47
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 48
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 49
DOWNLOAD pdf
DOWNLOAD audio
அத்தியாயம் 50
DOWNLOAD pdf
DOWNLOAD audio
முடிவுரை
DOWNLOAD pdf
DOWNLOAD audio
ஆரத்தி
DOWNLOAD pdf
DOWNLOAD audio






 




Thursday, 31 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - ஆரத்தி

ஜீவன்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் ஓ! சாயிபாபா, தங்களுக்கு தீப ஆராதனை செய்கிறோம்.  
தங்களுடைய சேவார்த்திகளும், பக்தர்க்களுமான எங்களுக்குத் தங்கள் பாதாரவிந்தங்களில் அமைதியைக் கொடுங்கள்.  ஆசைகளை அழித்து, எங்களது ஆத்மாவுக்குள்ளேயே தாங்கள் கலந்து, வேண்டுவோர்க்கு இறைவனைக் காட்டுகிறீர்கள்.  பேரார்வத்துடன் விரும்பினோர்க்குத் தாங்கள் அனுபவங்களையும் அல்லது உணர்வுகளையும் கொடுக்கிறீர்கள். 

 ஓ! அன்புள்ளம் கொண்டோரே, தங்கள் சக்தி அத்தகையது.  தங்கள் திருநாமஸ்மரணை எங்கள் சம்சார பயங்களைப் போக்குகிறது.  தங்களது லீலைகள் ஆழங்காண முடியாதவை.  எப்போதும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் அருள்கிறீர்கள்.  இந்தக் கலியுகத்தில் சர்வவியாபியான, தத்தாவாகிய தாங்கள் சகுணப் பிரம்மமாக உண்மையில் அவதரித்தீர்.  வியாழக்கிழமை தோறும் தங்களிடம் வரும் பக்தர்களைக் கடவுளின் திருவடிகளைக் காணச்செய்து அவர்களின் சம்சார பயங்களைப் போக்குங்கள்.

ஓ! இறைவனுக்கெல்லாம் இறைவனே!  எனது செல்வங்கள் யாவும் தங்களது சேவையில் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.  சாதகப் பறவைக்கு மேகங்கள் சுத்தமான நீரை அளிப்பதுபோல் இதைப் படிப்பவர்களுக்கு (இந்த ஆரத்திப் பாடல் சமகாலத்தில் வாழ்ந்த மாதவ் அட்கர் என்னும் அடியவரால் இயற்றப்பட்டது)  மகிழ்வுடன் உணவளித்துத் தங்கள் வாக்கை நிலைநிறுத்துங்கள்.  


ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்


Wednesday, 30 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - முடிவுரை

நாம் 51வது அத்தியாயத்தை முடித்துவிட்டு கடைசி அத்தியாயத்திற்கு (மூல நூலில் 52வது அத்தியாயம்) வருகிறோம்.  இதில் முடிவுரையாகச் சொல்லும்போது ஹேமத்பந்த் மராத்தியப் புனித நூல்களில் உள்ளபடி இதுவரை உள்ள அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பாடல்களாக அட்டவணைப்படுத்தி எழுதப்போவதாகக் கூறியிருந்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மாதிரி அட்டவணை ஹேமத்பந்தின் எழுத்துப் பிரதிகளில் இல்லை.

எனவே பாபாவின் ஆசிபெற்ற சிறந்த பக்தரான தாணேவைச் சேர்ந்த மாஜி மம்லதார் திரு B.V.தேவ் என்பவர் அதை அமைத்து வழங்கினார்.  ஆங்கிலப் புத்தகங்களில் ஆரம்பத்தில் அட்டவணை கொடுத்து ஒவ்வொரு அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அதன் தலைப்பில் கொடுப்பதுபோல், இந்த அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அட்டவணையின் கடைசியாகக் கருதவேண்டாம்.  எனவே இதை முடிவுரையாகக் கருதுவோம்.  துரதிர்ஷ்டவசமாக இந்த அத்தியாயத்தின் கையெழுத்துப் பிரதியைச் சரிபார்த்து அச்சிடும் வரையில் ஹேமத்பந்த் உயிருடன் இல்லை.  அது அச்சகத்துக்கு அனுப்பப்படும் சமயம் தேவ் அவர்கள் அவற்றின் முடிவற்ற நிலையையும் சில இடங்களில் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் கண்டார்.  ஆயினும் அது அவ்வாறே பிரசுரிக்கப்பட வேண்டியதாயிற்று.  அவற்றின் முக்கியமான தலைப்புக்கள் இங்கு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 



சத்குரு சாயி மகிமை

விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக் கருதாதவரும், எவருக்கு பக்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறார்களோ, எவர் உயிரினங்கள் எல்லாவற்றிலும் எவ்வித பேதமுமின்றி கலந்து நிற்கிறாரோ, எவர் இந்த அண்ட சராசரங்களில் உள்ள அசையும் - அசையாப் பொருட்களை பகவான் பிரம்மனுடைய ரூபத்தில் உண்டாக்கி வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆகாயம் இவை யாவற்றையும் சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம்.

அவரை நினைத்தாலும், சரணடைந்தாலும் அவர் நமது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி நம்மை வாழ்வின் இலட்சியங்களை அடையச் செய்கிறார்.

லோகாயத இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக் கடப்பது மிகக் கடினம்.  மோகம் என்ற அலைகள் உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன. ஆதலால் நமது மன வலிமையாகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்படுகின்றன.  அஹங்காரமென்னும் காற்று கடுமையாக வீசி, கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள் பயமின்றித் திரிகின்றன. நான், எனது என்ற எண்ணங்களும் மற்ற சந்தேகங்களும் நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டிருக்கின்றன. திட்டுதல், வெறுத்தல், பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள் அங்கு விளையாடுகின்றன.

இவ்வளவு பயங்கரமானதாகவும், கொடுமையானதாகவும் இந்தக் கடல் இருந்தாலும் சத்குரு சாயி இதை அழிக்கவல்லவர்.  அவரது பக்தர்கள் இதைப்பற்றிப் பயமடைய வேண்டியதில்லை.  நமது சத்குரு இந்தக் கடலை பத்திரமாகக் கடப்பதற்கு வேண்டிய படகு போன்றவர்.



பிரார்த்தனை

இப்போது நாம் சாயிபாபாவின் முன்னே முழுவதுமாக வீழ்ந்து அவர் பாதகமலங்களைப் பற்றிக்கொண்டு கீழ்கண்டவாறு எல்லோரும் எல்லாவற்றிற்குமாகப் பிரார்த்திப்போம்.

"எங்களது மனம் கண்டவாறு அலையாமல் தங்களைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்கட்டும்.  இந்த சத்சரிதம் எல்லோருடைய இல்லங்களிலும் இருந்து தினசரி பாராயணம் செய்யப்படட்டும்.  இதைத் தினமும் முறையாகப் படிப்பவர்களின் துயரங்களைத் தீருங்கள்."



பலஸ்ருதி (பாராயண பலன்)

இச்சரிதம் படிப்பதால் நீங்கள் பெறும் நலன்களைப் பற்றிச் சில வார்த்தைகள்.  புனித கோதாவரி நதியில் குளித்துவிட்டு ஷீர்டியில் உள்ள சமாதி மந்திரிலுள்ள பாபாவின் சமாதியை வணங்கித் தரிசித்து இந்த சத்சரிதத்தைப் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும்.  இதைச் செய்தால் உங்கள் உடல், பொருள், ஆவியைத் தாக்கும் தீங்குகள் மறையும். தற்செயலாக சாயியின் கதைகளை நினைப்பதன் மூலம், உங்களை அறியாமலேயே நீங்கள் ஆன்மிக வாழ்வில் விருப்பம் கொள்வீர்கள்.  இச்சரிதத்தை ஆர்வமுடனும், பக்தியுடனும் படிப்பதால் உங்கள் பாவங்கள் அழிக்கபபடும். ஜனன மரணச் சுழலை ஒழிக்க நீங்கள் விரும்பினால் சாயியின் சரிதங்களைப் பாராயணம் செய்து, அவரை நினைத்து அவரது திருவடிகளில் உங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் சாயி சரித சாகரத்தில் மூழ்கி மேலெழுந்து அதன் இன்பத்தை மற்றவர்களுக்குக் கூறும்போது அவற்றின் புதுப்புது நித்ய சுகந்தத்தை உணர்ந்து மற்றவர்களையும் தொல்லைகளிலிருந்து காப்பீர்கள். 

சாயியின் உருவையே நீங்கள் தொடர்ந்து தியானித்தால் நாளடைவில் உருவம் மறைந்து உங்கள் தன்னுணர்விலேயே கலந்துவிடும்.  தன்னையறிதலும், பிரம்மத்தை உணர்தலும் மிகக் கடினம்.  ஆனால் சகுண பிரம்மாவாகிய சாயியின் உருவத்தின் மூலம் வழிபட்டால் உங்கள் பிரம்ம உணர்வின் முனேற்றம் எளிதாகும். பக்தனானவன் தன்னை சாயியிடம் பரிபூர்ண சரணாகதியாக்கிவிட்டால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஐக்கியமாகி கடலுடன் நதி சங்கமிப்பது போல் அவருடன் ஒன்றாகிறான்.  கனவிலோ,  உறக்கத்திலோ அல்லது விழித்திருக்கும் நிலையிலோ இவ்வாறு அவருடன் இரண்டறக் கலந்தால், நீங்கள் சம்சார பந்தத்தை ஒழிக்கிறீர்கள்.  யாராயினும் குளித்துவிட்டு அன்புடனும், உண்மையுடனும் இதை ஒரு வாரத்திருக்குள் படித்தால் அவர்களைப் பிடித்த கேடுகள் மறையும்.  படிக்கக் கேட்பவர்களுக்கு வரும் அபாயங்களும் நீக்கப்படும்.  

இதைப் பாராயணம் செய்து செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், நல்ல வியாபாரிகள் வியாபாரத்தில் வெற்றியையும் அடைவர்.  உண்மைக்கும், பக்திக்கும் தகுந்தவாறே பலன்களும் அமையும்.  இவைகளின்றி எவ்விதமான அனுபவமும் இல்லை.  இச்சரிதத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும், ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார். கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும்.  தது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ, அவன் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்.  தொடரும் பிறவிகளில் ஒவ்வொரு பிறவியிலும் எப்போதும் சந்தோஷமாக அவன் சாயியை நினைப்பான். முக்கியமாக குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, ராமநவமி, நவராத்திரி (பாபா சமாதியான விஜயதசமி) தினங்களில் இச்சரிதம் வீடுகளில் பாராயணம் செய்யப்படவேண்டும்.  இதைக் கவனமுடன் படித்தால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படும்.  

அவர் பாதகமலங்களை உங்கள் மனத்தால் நினைப்பதால் சம்சார சாகரத்தைச் சுலபமாகக் கடப்பீர்கள்.  இதைக் கற்பதால் நோயாளிகள் குமுற்று திடகாத்திரமடைவர். ஏழைகள் செல்வம் அடைவர்.  கீழ்நிலையில் உள்ளோரும், நசுக்கப்பட்டோரும் உன்னத நிலை பெறுவர்.  மனம் சலனங்களிலிருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்.  

நல்ல அன்பும், பக்தியுமுள்ள வாசகர்களே, கேட்போரே! உங்களை வணங்குகிறோம்.  வணங்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.  தினமும், மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள்.  நீங்கள் எவ்வளவு ஆவலுடன் படிக்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குச் சேவை செய்வதில் உதவியாக இருப்போம்.  இதன் ஆசிரியர், வாசகர் இருவரும் ஒத்துழைத்து உதவிசெய்து மகிழ்ச்சியுற வேண்டும். 



ப்ரசாத் யாசனா - பிரசாதம் கோரல்

கீழ்கண்ட பிரசாதம் அல்லது உதவிகோரிப் பிரார்த்தித்து இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம். 

வாசகரும், பக்தர்களும் சாயியின் பாதகமலங்களை சர்வ பக்தி பூர்வமாக நினைக்கட்டும்.  சாயியின் உருவம் அவர்கள் கண்களில் நிலைக்கட்டும்.  அவர்கள் சாயிபாபாவை எல்லா உயிர்களிலும் காணட்டும்.


ததாஸ்து - அப்படியே நடக்கட்டும் 

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்


Thursday, 24 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 50

•   காகா சாஹேப் தீஷித்
•   ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
•   பாலாராம் துரந்தர்
    ஆகியோரின் கதைகள்


சத்சரிதம் மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருள் 39ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது.  ஆதலால் இந்த அத்தியாயத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது 51வது அத்தியாயம் இங்கே 50ஆம் அத்தியாயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.  இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகளைக் கூறுகிறது.


முன்னுரை

பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ! சாயி, எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன.  மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன. வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன.  அது போலவே சாயிபாபாவின் கதைகள் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன. பாபாவின் கதைகளை எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் மற்றும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன.

நூற்றுக்கணக்கான பயிற்சிகளையும் செயல்முறைகளையும் நாம் கடைப்பிடித்தும், ஒரு சத்குரு அவர்தம் அருளால் நம்மை ஆசீர்வதித்தாலன்றி, நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமாட்டோம்.  இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக் கேளுங்கள்.



காகா சாஹேப் தீஷித் (1864 - 1926)

ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் 1846ல் வத்நாகர நகர், காண்ட்வாவில் (மத்திய மாகாணம்) பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.  அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார்.  மேற்படிப்புக்காக பம்பாய் வந்து வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார்.  1883இல் பட்டம் பெற்ற பிறகு அவர் L.L.B. யிலும் வக்கீல் பரீட்சையிலும் தேறி, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில் & கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

1909ஆம் ஆண்டுக்கு முன்னர் சாயிபாபாவின் பெயர், காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்குப்பின் அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார். லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது.  பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர்.  காகா சாஹேப், தாம் லண்டனில் ஒரு டிரெயினில் போய்க்கொண்டிருக்கும்போது எங்ஙனம் ஒரு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்று அவருக்கு விளக்கினார். நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை.

 நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால் தனது சத்குரு சாயிபாபாவிடம் செல்லவேண்டும் என்றார்.  மேலும் சாயிபாபாவைப்பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து சாயிபாபாவின் மஹாவாக்கியமான "எனது மக்களை நெடுந்தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.

பாபாவின் ஆளாயில்லாவிட்டால் அவர் பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும் அவர் தெளிவாக்கினார். இவைகளையெல்லாம் கேட்க காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று.  தாம் பாபாவிடம் போவதாகவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும் ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார்.  காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்னும் கோபர்காவனின் மம்லதார், அச்சமயத்தில் அஹமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும்பொருட்டு வந்தார்.  தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் ஷீர்டி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய இரு மிரீகர்களும், அவருடன் அனுப்புவதற்கு ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக்கொண்டிருந்தனர்.

ஷீர்டியில் சாயிபாபா அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.  ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அஹமத்நகர் வரவேண்டுமென்றும் ஒரு தந்தி வந்தது.  ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியார் முன்னைவிட இப்போது நலமாகி வருவதைக் கண்டார்.  நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து ஷீர்டிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.  காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது.  மாலையில் ஷாமா மிரீகர்களிடம் வந்தார்.  அவரை அவர்கள் காகா சாஹேப் தீஷித்துக்கு அறிமுகப்படுத்தினர்.  

ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி ரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது.  இது முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது.  பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார்.  யாரைப் பார்க்க ஷீர்டிக்குப் போகப் போகிறாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.  அவர் மிகவும் மனமுருகி படத்தின்முன் வீழ்ந்துபணிந்தார்.  அப்படம் மேகாவுடையது.  அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது.  தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமாவிடமும், காகா சாஹேபுடனும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டனர்.  ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாதிருப்பதையும் அறிந்தனர்.  அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் கார்டு, காகா சாஹேபின் நண்பராக இருந்தார்.  அவர்களை முதல் வகுப்பில் அமர்த்தினார்.  இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள்.  ஷீர்டிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

காகா சாஹேபும், நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.  பிறகு புனித கோதாவாரியில் நீராடிய பின்னர் அவர்கள் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.  அங்கு போய்ச்சேர்ந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடன் காகா சாஹேபின் மனது உருகியது. அவர் கண்கள் குளமாயின. அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்.  
பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும், அவரை வரவேற்பதற்காகவே ஷாமாவை முன்னால் அனுப்பியதாகவும் கூறினார்.

பின்னர் காகா சாஹேப் பல சந்தோஷமான வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார்.  ஷீர்டியில் அவர் ஒரு வாதா(சத்திரம்) கட்டினார்.  ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார்.  பாபாவிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலால் அவைகளை எல்லாம் கூறுவதற்கு இங்கு இடமில்லை.  இது குறித்து சாயிலீலா சஞ்சிகை (தொகுப்பு 12, எண் 6,7,8,9) 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஒரே ஒரு உண்மையைக் கூறி இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம்.  பாபா அவரை "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார்.  (அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல்) இது உண்மையாயிற்று.  1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரயிலில் செல்லும்போது சாயிபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.  அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார்.  திடீரெனத் தமது கழுத்தை ஹேமத்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார்.

ஸ்ரீ தேம்பே ஸ்வாமி

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் அடுத்த கதைக்கு வருவோம்.  ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி என்பார் ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார்.  அவர் பக்தியும் வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார்.  நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார்.  அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஷீர்டி, சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன.

பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயியிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள்.  என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார்.  மேலும் "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார்.  புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார்.  பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமி அழைப்பது சரியே.  ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்துவந்ததைப் போலவே பாபாவும் அக்னிஹோத்ரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார்.  ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும் மற்றவர்களும் தேங்காயுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர்.  தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர்.  வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர்.  அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார்.  சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துகொண்டனர்.  துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது.

அவர்கள் ஷீர்டியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை வெகுவருத்ததுடன் அறிந்தார்.  பயந்து நடுங்கிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து சாயிபாபாவைப் பார்த்தார்.  பாபா முன்னமேயே தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்.
பாபா தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார்.  அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தமது குற்றத்தையும் கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார்.  மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுவதாகக் கூறினார்.  ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணக் காயைக் காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார்.  மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை.  எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது.  செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்?
நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே.  எல்லாவற்றிலும் முழுமையாக அஹங்காரமற்று இரு.  அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார்.  எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தியிருக்கிறார்!   




பாலாராம் துரந்தர் (1878 - 1925)

பாலாராம் துரந்தர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர்.  அவர் பம்பாய் ஹைகோர்ட்டின் வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் (Law School) தலைவராகவும் பணியாற்றினார்.  துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது.  பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார்.  அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.

பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார். கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார். அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர்.  பாபாவுடன் 1912ல் தொடர்பு கொண்டார்.  அதற்கு ஆறு மாதங்களுக்குமுன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற அவரின் இரு சகோதரர்களும் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர்.  வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர்.  அதன் பின்னர் அவர்களெல்லோரும் சாயிபாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் ஷீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகிறார்கள்" என உரைத்தார்.  துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.  மற்றவர்கள் எல்லோரும் பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.  பாபா அவர்களிடம் "நான் முன்னரே குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம் ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கிறோம்" என்றார்.  அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும், பணிவுடனும் உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர். கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின.

அவர்களெல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.  பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர்.  பாபாவுக்கு, பாலாராம் அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார்.  பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம்.  ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்.  இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை.  ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது.  இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும். 

அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமையாதலால் துரந்தர் நண்பர்கள் சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுகளிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்.  சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார்.  மறுநாள் காலை காகட் ஆரத்தியின்போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான  பாண்டுரங்கரின் ஜோதி பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்.

 பாலாராம் துரந்தர் மராத்தியில் மகாராஷ்ட்ர ஞானி  துகாராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார்.  ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடனிருக்கவில்லை. பின்னர் 1928இல் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது.  பாலாராமின் வாழ்க்கையைப்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது.  பாலாராமைப் பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
(அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க)



ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

To download an MP3 version of this chapter please follow below link:
http://rapidshare.com/files/3524550718/Ch.50-Shri%20Sai%20Satcharitra.mp3

To download a PDF version of this chapter please follow below link:
http://rapidshare.com/files/1342439921/ShriSaiSatchritra%20-%20Ch50.pdf
(enhanced for iPad)