Thursday, 26 January 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 6

அத்தியாயம் 6

•  குருவின் கை தீண்டலினால் ஏற்படும் பயன்
•  ஸ்ரீ ராமநவமித் திருவிழா 
•  அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன 
•  மசூதி பழுது பார்த்தல்

ராமநவமித் திருவிழாவையும், மசூதி பழுத்பார்த்தலையும்  பற்றி விவரிப்பதற்கு முன்னால் சத்குருவைப் பற்றி முன்னோடிக் குறிப்புக்கள் சிலவற்றை ஆசிரியர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.



குருவின் கை தீண்டலினால் ஏற்படும் விளைவு (பயன்)

எங்கே உண்மை அல்லது 'சத்குரு' வழிகாட்டியாக இருக்கிறாரோ, அங்கே இவ்வுலகப் பெருங்கடலுக்கு அப்பால் நம்மைப் பத்திரமாகவும், எளிதாகவும் அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார்.  சத்குரு என்னும் சொல்லானது நமது மனத்திற்கு சாயிபாவைக் கொணர்கிறது.  எனக்கு முன்னால் அவர் நின்றுகொண்டிருப்பது போன்றும், உதி என்னும் திருநீற்றை எனது நெற்றியில் இடுவதைப் போன்றும், அவரது ஆசிகள் நல்கும் கரத்தை என் தலைமீது வைப்பதைப் போன்றும் தோன்றுகிறது.  எனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது.  அன்பு எனது கண்களில் இருந்து பொங்கி வழிகிறது.

குருவின் கரம் தீண்டலின் சக்தியானது வியக்கத்தக்கதாகும்.  உலகை அழிக்கும் நெருப்பால் அழிக்கப்படாத (எண்ணங்களும், ஆசைகளும் உடைய) இந்த நுட்பமான உடம்பு, குரு சாதாரணமாக கரம் தீண்டுவதாலேயே அழிக்கப்படுகிறது.  முந்தைய பல பிறவிகளில் உண்டான பல பாவங்களும் சுத்தமாக அடித்துச் செல்லப்படுகின்றன.  மதங்கள், கடவுளைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டவுடனேயே சஞ்சலப்படுபவர்களின் பேச்சுக்கூட அமைதியடைகிறது.  சாயிபாபாவின் சுந்தரரூபத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சியால் நமது தொண்டை அடைக்கிறது.  கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.  உணர்ச்சிகள் உள்ளத்தை வெல்கின்றன.  நானே பிரம்மம் என்னும் உணர்வை அது எழுப்பிவிடுகிறது.  தன்னையறிதலின் ஆனந்தத்தை ஸ்தாபிக்கிறது.  நான், நீ என்னும் வேறுபாட்டைக் கரைத்து அவ்வப்போதே நம்மை உச்சத்துடன் (ஒரே உண்மையுடன்) ஒன்றாக்குகிறது.

புனித நூல்களை யான் பயிலத் தொடங்குந்தோறும் ஒவ்வோர் அடியிலும் எனது சத்குருவால் ஞாபகமூட்டப்படுகிறேன்.  சாயிபாபாவே ராமனும், கிருஷ்ணனுமாகி என்னை அவரின் கதைகளைக் கேட்கச் செய்கிறார்.  உதாரணமாக நான் பாகவதம் கேட்கத் தொடங்கும் முன்பாக, தலையிலிருந்து கால்வரை சாயிபாபா கிருஷ்ணராகிவிடுவார்.  அவரே பாகவதத்தையோ, உத்தவ கீதையையோ (கிருஷ்ணபரமாத்மா தன் சீடர் உத்வருக்கு அளித்த உபதேசங்கள்) மக்களின் நன்மைக்காகப் பாடுகிறார் என்றும் நினைக்கிறேன்.

நான் உரையாடத் துவங்கும்போது, உடனே சாயிபாபாவின் கதைகள், உரிய விளக்கங்கள் தருவதற்கு ஏதுவாக என் நினைவிற்கு வருகின்றன.  எதையாவது நான் எழுதத் தொடங்கும்போது சில வார்த்தைகளையோ, சில வாக்கியங்களையோ என்னால் எழுதமுடியாது.  ஆனால் அவராகவே என்னை எழுதச்செய்யும்போது நான் எழுதுகிறேன், எழுதிக்கொண்டே இருக்கிறேன்.  சீடனின் அஹங்காரம் தலையெடுக்கும்போது, அவர் தமது கரங்களால் அதைக் கீழே அழுத்தி, தமது சக்தியைக் கொடுத்து, அவனது குறிக்கோளை எய்தும்படி செய்கிறார்.  இவ்வாறாகத் திருப்திப்படுத்தி ஆசீர்வதிக்கிறார்.  "சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்ப்பிகிறானோ, அவன் வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம்(தருமம்), பொருள்(செல்வம்), இன்பம்(ஆசை), வீடு(முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்".

கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன.  இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும், எனவே கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது.  ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச்செல்கிறது.  இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார்.  அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார்.  

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது.  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழுஇதயத்துடன் வழிபாடுசெயும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு.  கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா இதையேதான் கூறியிருக்கிறார்.  எனவே உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள்.  உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால், கடவுளிடம் இரந்து கேளுங்கள்.  இவ்வுலக கௌரவத்தை விட்டுவிடுங்கள்.  கடவுளின் அருளையும், ஆசியையும் பெறமுயலுங்கள்.  அவரின் சந்நிதானத்தில் கௌரவம் அடையுங்கள்.  உலக கௌரவங்களால் வழி தவறிவிடாதீர்கள்.  இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்படவேண்டும்.  புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப்படும்.  வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.  உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொண்டிருப்பதிலேயே மனதை ஸ்திரப்படுத்துங்கள்.  அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.  நல்ல பழக்கங்களில் மனம் ஈடுபட்டிருப்பதற்கு இதுவே அடையாளம்.  மனம் அலையும் தன்மை உடையதாய் இருந்தால் அது நன்றாக ஒன்றிவிட்டது என்று கூறமுடியாது."

இம்மொழிகளைக் குறிப்பிட்ட பிறகு, ஷீர்டியில் நடக்கும் ராமநவமித் திருவிழாவின் கதையை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.  ஷீர்டியில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களில் ராமநவமியே மிகப் பெரியதாகையால், சாயிலீலா சஞ்சிகையில் (வருடம் 1925, பக்கம் 197) பதிப்பான மற்றொரு முழுவிபரமும் இதில் குறிக்கப்பட்டு இரண்டு நிகழ்ச்சிகளின் கூட்டுவிபரமும் இங்கே கொடுக்கப்படுகிறது.


தோற்றம்

கோபர்காவனின் நில அளவுத்துறையில் சர்வேயராக இருந்தவர் கோபால்ராவ் குண்ட் ஆவார்.  அவர் பாபாவின் பெரும் அடியவர்.  அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தையும் இல்லை.  சாயிபாபாவின் அருளால் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.  அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு ஒரு திருவிழா அல்லது உருஸ்(முஸ்லிம் ஞானியரின் நினைவுதினம்) கொண்டாடும் எண்ணம் உதிர்ந்தது.  தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், மாதவ்ராவ் தேஷ்பாண்டே போன்ற மற்ற ஷீர்டி அடியவர்களிடம், கோபால்ராவ் தனது எண்ணத்தை வெளியிட்டார்.  அவர்கள் எல்லோரும் இந்த யோசனைக்கு உடன்பட்டு, சாயிபாபாவின் அனுமதியையும், ஆசியையும் பெற்றனர்.  இவ்விழாவைக் கொண்ட்டாடுவாதற்கு கலெக்டரின் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.  ஆனால் கிராம குல்கர்ணி (அதிகாரி) திருவிழா நடத்துவதற்கு எதிரிடையாகத் தகவல் கொடுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் சாயிபாபா அதை ஆசீர்வதித்திருப்பதால், அவர்கள் மறுபடியும் முயன்று, முடிவாக வெற்றிபெற்றனர்.  

சாயிபாபாவிடம் கலந்தாலோசித்த பிறகு உருஸ் தினம் ராமநவமியன்று இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.  பாபா தமது நோக்கத்தில் ஏதோ ஒரு முடிவு வைத்திருந்ததாகத் தோன்றுகிறது.  அதாவது ராமநவமி, உருஸ் என்ற இரண்டு பண்டிகைகளை இணைப்பதென்பது இரண்டு இந்து, முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக ஆகும்.  இக்குறிக்கோளை அடைந்ததைப் பிற்கால நிகழ்சிகள் காட்டுகின்றன.

திருவிழாவுக்கு அனுமதி கிடைத்தது.  ஆனால் மற்ற கஷ்டங்கள் முளைத்தன.  ஷீர்டி ஒரு கிராமம்.  அங்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது.  ஷீர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன.  உபயோகப்படுத்திய ஒரு கிணற்றில் நீர் வற்றிவிட்டது.  மற்றொன்று உப்புத் தண்ணீர்.  இந்த உப்புத் தண்ணீரானது சாயிபாபா மலர்களை வீசியதன்மூலம் இனிமை பொருந்தியதாக மாற்றப்பட்டது.  இக்கிணற்றுத் தண்ணீர் போதாமையால் நெடுந்தூரத்திலிருந்து தோல் சாக்குகளில் கிணற்றிலிருந்து நீர் கொண்டுவருவதற்குத் தாத்யா பாடீல் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.  தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு மல்யுத்தச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

கோபால்ராவ் குண்டிற்கு அஹமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா காஸார் என்ற ஒரு நண்பர் இருந்தார்.  அவர் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்தும், பிள்ளையில்லாக் குறையில் அம்மாதிரியே மகிழ்ச்சியற்றவராய் இருந்தார்.  அவரும் சாயிபாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு புதல்வர்களை அடைந்தார்.  திருவிழாவின் ஊர்வலத்திற்காக ஒரு சாதாரணக் கொடி தயாரித்துக் கொடுக்கும்படி இவரை குண்ட் தூண்டினார்.  நானா சாஹேப் நிமோண்கரை மற்றொரு எம்ப்ராய்டரி வேலை  (சரிகைவேலை) செய்யப்பட்ட கொடி தயாரித்துக் கொடுக்கும்படி தூண்டி, அதில் வெற்றியும் பெற்றார்.  கிராமத்தில் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு த்வாரகாமாயி என்று சாயிபாபாவினால் அழைக்கப்பட்ட மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன.  இது இன்றளவும் நடைபெற்று வருகிறது. 


சந்தனக்கூடு ஊர்வலம்

இத்திருவிழாவில் மற்றொரு ஊவலமும் தொடக்கப்பட்டது.  கொரலாவின் முஹமதிய பக்தரான அமீர் ஷக்கர் தலால் அவர்களால் இச்சந்தன ஊர்வலத்தின் எண்ணம் உருவானது.  பெரும் முஹமதிய ஞானியரைக் கௌரவிக்கும் முகமாக இவ்வூர்வலம் நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் 'தாலி' என்னும் தட்டுக்களில் இடப்பட்டு, பேண்டு (சங்கீத இசைக் கூட்டம்) வாத்தியம் மற்றும் இசை முழங்கிவர நறுமணப் பொருட்கள் முன்னால் புகைந்துகொண்டு செல்ல கிராமத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.  மசூதிக்குத் திரும்பியபின்னர் தட்டுக்களில் உள்ளவை நிம்பார் என்னும் தொழுகைமாடத்தில் தெளிக்கப்பட்டு மசூதியின் சுவரில் கைகளால் பூசப்பெற்றது.  முதல் மூன்று ஆண்டுகளில் அமீர் ஷக்கர் அவர்களால் இவ்வேலை மேற்பார்வையிடப்பட்டது.  பின்னர் அவரது மனைவியால் பார்க்கப்பட்டது.  எனவே ஒரே நாளில் முஹமதியரால் சந்தனக்கூடும், இந்துக்களால் கொடிகளும் அருகருகில் சென்றன.  இப்போதும் எவ்வித இடையூறுமின்றி அங்ஙனமே நடந்துகொண்டிருக்கிறது.  


ஏற்பாடு

சாயிபாபாவின் அடியவர்களுக்கு இந்தநாள் புனிதமானதும் மிகவும் பிரியமானதுமாகும்.  பெரும்பாலான அடியவர்கள் கூடி விழாவை நிர்வகிப்பதில் பங்கு வகித்தனர்.  எல்லா வெளி ஏற்பாடுகளையும் தாத்யா கோதே பாடீல் பார்த்துக்கொண்டார்.  உள்நிர்வாகம் முழுவதும் சாயிபாபாவின் பக்தையான ராதாகிருஷ்ணமாயிடமே ஒப்புவிக்கப்பட்டது.  அவ்விழாவின்போது அவளது இருப்பிடம் விருந்தாளிகளால் நிறைந்து இருந்தது.  அவர்களது தேவைகளையும், விழாவிற்குத் தேவையான ஏற்பாட்டையும் அவள் கவனித்தாக வேண்டும்.  மசூதி முழுவதும் அதன் சுவர், தரை முதலியவைகளைக் கழுவி சுத்தம்செய்து, சாயிபாபாவின் அணையா விளக்கான துனியினால் கரிபிடித்து கறுத்துப் போயிருக்கும் மசூதிச் சுவர்களை எல்லாம் வெள்ளையடிப்பதும் அவள் விருப்பமுடன் செய்த மற்றொரு வேலை ஆகும்.  இவ்வேலையை ஒருநாள் விட்டு ஒருநாள் சாயிபாபா சாவடிக்குத் தூங்கப்போயிருக்கும் முந்தைய இரவில் செய்வாள்.  துனி (அணையா நெருப்பு) உட்பட எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கசடறக் கழுவி மசூதிச் சுவரை வெள்ளையடித்த பின்னர் முன்போல் திருப்பி வைத்துவிடவேண்டும்.  இத்திருவிழாவில் சாயிபாபாவிற்கு மிகவும் பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதலும் ஒரு பெரும் நிகழ்ச்சியாகும்.     ராதாகிருஷ்ணமாயின் இருப்பிடத்தில் பெருமளவில் சமையலும், பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், இனிப்புப் பதார்த்தங்களும் தயாரிக்கப்பட்டன.  பல்வேறு செல்வந்தர்களான பக்தர்கள் இந்நிகழ்சிகளில் பெரும் பங்கு வகித்தனர்.  


'உருஸ்'ஐ ராமநவமித் திருவிழாவாக மாற்றுதல்

இவ்வாறாக விஷயங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தன.  1912ஆம் ஆண்டுவரை இவ்விழா படிப்படியாக முக்கியத்துவம் அடைந்துவந்து பிறகு ஒரு மாறுதல் நிகழ்ந்தது.  அந்த ஆண்டு கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மர் (சாயி சகுணோபாசனா என்ற சிறு புத்தகத்தின் ஆசிரியர்), அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயுடன் திருவிழாவிற்கு வந்து முந்தைய தினம் தீஷித் வாதாவில் தங்கியிருந்தார்.  அவர் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டிருந்தபோது லக்ஷ்மண்ராவ் என்ற காகா மஹாஜனி, மசூதிக்குப் பூஜை சாமான்களுடன் போய்க்கொண்டு இருந்தார்.  அப்போது பீஷ்மாவுக்கு ஒரு புது எண்ணம் தோன்றியது.  அவர் காகாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்.

"ஷீர்டியில் 'உருஸ்' அல்லது 'சந்தனத் திருவிழா', ராமநவமியன்று கொண்டாடப்படும் உண்மைக்கு ஏதோ ஒரு தெய்வ ஏற்பாடு இருக்கிறது.  இந்துக்களுக்கு ராமநவமி தினம் மிகவும் முக்கியமானது.  பின்னர் ஏன் இந்த நாளில் ராமநவமிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கக்கூடாது?"  காகா மஹாஜனி இக்கருத்தை விரும்பினார்.  பாபாவின் அனுமதியை இவ்விஷயத்தில் பெறுவது என முடிவுசெய்யப்பட்டது.  அத்திருவிழாவில் கீர்த்தனை செய்யும் (கடவுளின் புகழைப் பாடும்) ஹரிதாஸை(பாடகர்) எங்கனம் அடைவது என்பது முக்கியமான விஷயமாகும்.  ராமர் பிறந்ததைப் பற்றி தன்னுடைய பாடல்களான 'ராம அக்யன்' தயாராய் இருப்பதாகவும், தானே இக்கீர்த்தனைகளைப் பாடுவதாகவும் கூறி, பீஷ்மா இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.  காகா மஹாஜனி, அப்போது ஹார்மோனியம் வாசிக்கவேண்டும்.  ராதாகிருஷ்ணமாயியால் தயாரிக்கப்பட்ட சுண்ட்வடா(சர்க்கரை கலந்த இஞ்சிப்பொடி) பிரசாதமாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  பின்பு அவர்கள் பாபாவின் அனுமதியைப் பெறுவதற்குச் சென்றனர்.  அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும் அறிந்திருந்த பாபா, "வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது" என்று மஹாஜனியிடம் வினவினார்.  குழப்பமடைந்த மஹாஜனி கேள்வியின் அர்த்தத்தை அறியமுடியாமல் அமைதியாக இருந்தார்.  பின்னர் பாபா, பீஷ்மாவை அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டார்.

ராமநவமித் திருவிழா கொண்டாடுவதன் கருத்தை அவர் தெரிவித்துப் பாபாவின் அனுமதியைக் கோரினார்.  பாபாவும் உடனே அனுமதி கொடுத்தார்.  எல்லோரும் மகிழ்ச்சியுற்று ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினர்.  மறுநாள், மசூதி துணி ஜோடனையால் அலங்கரிக்கப்பட்டது.  ராதாகிருஷ்ணமாயியால் ஒரு தொட்டில் கொடுக்கப்பட்டது.  பாபாவின் ஆசனத்தின் முன்னர் அது வைக்கப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாயின.  பீஷ்மா கீர்த்தனைக்காக முன்னால் எழுந்து நின்றார்.  மஹாஜனி ஹார்மோனியம் வாசித்தார்.  மகாஜனியைக் கூப்பிடும்படி சாயிபாபா ஒரு ஆளை அனுப்பினார்.

பாபா நிகழ்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பாரா என ஐயம் கொண்டு மஹாஜனி போகத் தயங்கிக்கொண்டிருந்தார்.  ஆனால் அவர் போனபின்பு பாபா அவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றும், தொட்டில் ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார்.  அவர் (மஹாஜனி) ராமநவமித் திருவிழா தொடக்கப்படிருக்கிறது என்றும், தொட்டில் அதற்காக வைக்கப்படிருக்கிறது என்றும் கூறினார்.  அப்போது பாபா நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து அவர் கழுத்திலிட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையை அனுப்பினார்.  கீர்த்தனை துவங்கியது.  அது முடிவடைந்ததும் 'ஸ்ரீ ராமருக்கு ஜெயம்' என்ற கோஷம் வானைப் பிளந்தது.  குலால் என்ற சிகப்புப் பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும் தூவப்பட்டது.  

எல்லோரும் பெருமகிழ்ச்சியுற்றிருக்கையில் ஒரு கர்ஜனை கேட்டது.  கண்டபடி தூவப்பட்ட சிகப்புப் பொடியானது பாபாவின் கண்களுக்குள் சென்றுவிட்டது.  பாபா கோபாவேசம் அடைந்து, பெருங்குரலில் திட்டவும், கடிந்துகொள்ளவும் ஆரம்பித்தார்.  இக்காட்சியால் மக்கள் பீதியடைந்து ஓட ஆரம்பித்தார்கள்.  பாபாவை நன்கு அறிந்த அவருடைய நெருங்கிய பக்தர்கள் பாபாவின் கடிந்துரைகளையும், திட்டல்களையும் வேஷமிடப்பட்ட ஆசீர்வாதங்கள் என்று எடுத்துக்கொண்டனர்.  

ராமர் அவதரித்ததும், இராவணனையும் - அஹங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலிய அவனுடைய அரக்கர்களையும் கொல்வதற்காக, பாபா கடுமையான கோபாவேஷம் அடைந்ததும் முறையே என அவர்கள் நினைத்தனர்.  மேலும் ஷீர்டியில் ஏதாவது ஒரு புதிய வேலை ஆரம்பிக்கப்படுமானால், பாபா கடுமையாக கோபம்கொள்வது வழக்கம்.  எனவே அவர்கள் அமைதியாய் இருந்தார்கள்.  பாபா, தமது தொட்டிலை உடைத்து விடுவார் என்று  ராதாகிருஷ்ணமாயி பயந்துபோய் மகாஜனிஜிடம் தொட்டிலை எடுத்து வந்துவிடும்படி கூறினாள்.  அவர் சென்று தொட்டிலைத் தளர்த்தி கழற்றப்போன சமயம், பாபா அவரிடம் சென்று தொட்டிலை அகற்றவேண்டாம் என்று கூறிவிட்டார்.  பின்னர் சற்று நேரத்தில் பாபா சாந்தமடைந்தார்.  பின்பு மகாபூஜை, ஆரத்தி உள்ளிட்ட அந்நாளைய நிகழ்சிகள் எல்லாம் நிறைவேறின.  பிறகு மகாஜனி, பாபாவிடம் தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டார்.  இன்னும் விழா முடியவில்லை எனக்கூறி பாபா மறுத்துவிட்டார்.  அடுத்த நாள் கீர்த்தனையும், கோபால்காலா விழாவும் நடைபெற்றன.  (கீர்த்தனைக்குப் பிறகு தயிரும், பொறி அரிசியும் கலந்த ஓர் மண்பானை உடைப்பதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும், கிருஷ்ண பரமாத்மா தன் நண்பர்களான கோபாலர்களுக்குச் செய்ததையொப்ப, அதனுள் இருப்பவை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்)  அதன் பின்னரே பாபா, தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதித்தார்.

இவ்வாறாக ராமநவமித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பகலில் இரண்டு கொடி ஊர்வலமும், இரவில் சந்தனக்கூடு ஊர்வலமும் வழக்கமான கோலாகலத்துடனும், அனைவரின் ஆராவாரத்துடனும் நல்லமுறையில் நடைபெற்றன.  இத்தருணத்திலிருந்து பாபாவின் உருஸ் விழாவானது, ராமநவமித் திருவிழாவாக மாற்றப்பட்டது.  

அடுத்த ஆண்டிலிருந்து (1913) ராமநவமியின் நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன.  ராதாகிருஷ்ணமாயி சித்திரை முதல் தேதியிலிருந்து நாம சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள்.  எல்லோரும் முறை வைத்துப் பங்கெடுத்துக்கொண்டனர்.  அவளும் சிலநாட்கள் அதிகாலையில் கலந்துகொண்டாள்.  நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ராமநவமி கொண்டாடப்படுவதால் ஹரிதாஸை(பாடகர்) பெரும் கஷ்டமானது மீண்டும் உணரப்பட்டது.  ஆனால் விழாவிற்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குமுன் நவீன துகாராம் என்றறியப்பட்ட பாலபுவாமாலியைத் தற்செயலாக மகாஜனி சந்தித்தார்.  அவரை அவ்வாண்டு கீர்த்தனை புரியச்செய்தார்.  அடுத்த ஆண்டு (1914) சாதாரா ஜில்லா, பிர்ஹாட்ஸித்த கவடே நகரைச் சேர்ந்த பாலபுபா சாதார்கர் என்பவர் தமது நகரில் பிளேக் (ஒரு கொடிய பக்டீரியா தொற்றுநோய்) பரவியிருந்த காரணத்தால் அங்கு ஹரிதாஸாக இயங்கமுடியவில்லை.  எனவே, ஷீர்டிக்கு வந்து, காகா சாஹேப் மூலம் பெற்ற அனுமதியுடன் கீர்த்தனை செய்தார்.  அவரது முயற்சிக்குப் போதுமான அளவு சன்மானம் கொடுக்கப்பட்டது.  முடிவாக ஒவ்வோர் ஆண்டும் புதிய "ஹரிதாஸ்" ஒருவர் கிடைக்கப்பெறும் சிரமத்தை 1914ன் பின் தாஸ்கணு மஹராஜை இப்பணியில் சாயிபாபா நிரந்தரமாக நியமித்ததன் மூலம் தீர்த்தார்.  அந்நாளிலிருந்து தற்போது வரைக்கும் அவ்வேளையைத் தாஸ்கணு வெற்றிகரமாயும், சிறப்பானமுறையிலும் நிறைவேற்றி வருகிறார்.

1912ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா படிப்படியாக வளரத் தொடங்கியது.  சித்திரை 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை ஷீர்டி, தேன் கூட்டைப்போல் மக்கள் திரளாகக் காட்ச்சியளித்தது.  கடைகள் அதிகரிக்கத் தொடங்கின.  மல்யுத்தப் போட்டிகளில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு எடுத்துக்கொண்டனர்.  முன்னைவிடப் பெரியஅளவில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது.

ராதாகிருஷ்ணமாயியின் பேருழைப்பு, ஷீர்டியை ஒரு சமஸ்தானமாக்கியது.  அதற்குத் தேவையான பொருட்கள் சேர்க்கப்பட்டன.  ஓர் அழகான குதிரை, பல்லக்கு, ரதம், வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்கள், பானைகள், வாளிகள், படங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் முதலியவை அன்பளிப்பாக சமர்ப்பிக்கப்பட்டன.  இங்ஙனம் தமக்காக உள்ள பொருட்கள் எல்லாம் ஏராளமாக அதிகரித்த போதிலும் சாயிபாபா அவைகளை எல்லாம் மதிக்காது, தமது எளிமையை முன்போலவே பாதுகாத்து வந்தார்.  இரண்டு ஊர்வலங்களிலும் இந்துக்களும், முஹமதியர்களும் ஒன்றாக வேலை செய்துவந்தும் அவர்களிடையே இதுவரை எவ்விதச் சச்சரவோ, இடையூறோ இருந்ததேயில்லை.  ஆரம்பத்தில் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் மக்கள்வரை கூடுவது வழக்கமாக இருந்தது.  அனால் அவ்வெண்ணிக்கை சில ஆண்டுகளில் எழுபத்தைந்தாயிரமாக அதிகரித்தது.  எனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விதத்தில் எவ்விதத் தொற்றுவியாதியோ, கலகமோ கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டதேயில்லை.


மசூதி பழுபார்த்தல்

கோபால் ராவ் குண்டிற்கு மற்றொரு முக்கிய எண்ணமும் உதித்தது.  உருஸ் அல்லது சந்தனக்கூடு விழாவை அவர் தொடக்கியதைப் போன்றே, மசூதியைத் தாம் ஒழுங்குபடுத்த வேண்டும் என எண்ணினார்.  எனவே பழுபார்க்கக் கற்களைச் சேகரித்து அதன் பக்கங்களைச் சமப்படுத்தவும் செய்தார்.  ஆனால் இப்பணி அவருக்கு அளிக்கப்பட்டதல்ல.  இது நானா சாஹேப் சாந்தோர்கருக்கும், தாழ்வாரத்தின் வேலை காகா சாஹேப் தீஷித்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.  ஆனால் முதலில் பாபா, இவ்வேலைகளைச் செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்க மனமில்லாதவராய் இருந்தார்.  ஆனால் மஹல்ஸாபதி என்ற உள்ளூர் அடியவரின் குறுக்கீட்டினால் அவர்களுக்கு அனுமதி கிடைத்து.

மசூதியில் ஒரே இரவில் தாழ்வாரப்பணி முடிவடைந்ததும், பாபா தமது வழக்கமான ஆசனமான சாக்குத் துண்டை விட்டொழித்து தாம் அமர்வதற்கென ஒரு சிறு ஆசனம் அமைத்துக்கொண்டார்.  1911ல் சபாமண்டபம் பெரும் உழைப்புடனும், கடின முயற்சியுடனும் ஒழுங்குபடுத்தப்பட்டது.  மசூதிக்கு முன்னாள் இருந்த திறந்த வெளியானது சிறியதாகவும், அசௌகரியமுள்ளதாகவும் இருந்தது.  காகா சாஹேப் தீஷித் அதை விசாலப்படுத்தி அதற்கு மேற்கூரை போடவிரும்பினார்.  பெருஞ்செலவில் இரும்புத் தூண்கள், கம்பங்கள், துணிகள் முதலியவற்றை வரவழைத்து வேலையை ஆரம்பித்தார்.  இரவில் எல்லா அடியவர்களும் கடினமாக உழைத்து, கம்பங்களை ஊன்றினார்கள்.  ஆனால் மறுநாள் காலை சாயிபாபா சாவடியிலிருந்து திரும்பிவந்தபோது எல்லாவற்றையும் வேருடன் பிடுங்கி வெளியே எறிந்தார்.  ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது.  அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு கம்பத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அதை அசைத்து வெளியே எடுக்க ஆரம்பித்து, மற்றொரு கையால் தாத்யா பாடீலின் கழுத்தைப் பற்றினார்.  தாத்யாவின் முண்டாசை வலிந்து பற்றியிழுத்து ஒரு நெருப்புக் குச்சியைக் கொழுத்தி அதைப் பற்றவைத்துக் குழியில் தூக்கி எறிந்தார்.  அச்சமயத்தில் பாபாவின் கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலிருந்தன.  ஒருவருக்கும் அவரைப் பார்க்கும் தைரியம் இல்லை.  எல்லோரும் பயங்கரமாக அஞ்சினார்கள்.

பாபா தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, அதை ஒரு புனித நிகழ்ச்சியின் நிவேதனம்போல் அங்கே விட்டெறிந்தார்.  தாத்யாவும் மிகவும் பயந்துபோனார்.  யாருக்கும் தாத்யாவுக்கு என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை.  ஒருவருக்கும் தலையிடத் தைரியம் இல்லை.  பாபாவின் குஷ்டரோகி அடியவனான பாகோஜி ஷிண்டே என்பவன் கொஞ்சம் முன்னேறத் துணிந்தான்.  ஆனால் அவன் பாபாவால் தள்ளப்பட்டான்.  மாதவ்ராவுக்கும் அதைப்போன்ற மரியாதையே கிடைத்தது.  அவர் கற்களால் அடிக்கப்பட்டார்.  ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் பாபாவின் கோபம் தணிந்து குளிர்ந்தது.  கடைக்காரனிடம் ஆள் அனுப்பி பூவேலை செய்த ஒரு முண்டாசு வாங்கி வரச்செய்து, தாத்யாவுக்கு ஒரு சிறப்பான கௌரவம் செய்வதைப்போல் தாமே அவர் தலையில் கட்டிவிட்டார்.  பாபாவின் இவவினோதக் குணத்தைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டனர்.  அவ்வளவு வேகமாகப் பாபாவைக் கோபமடையச் செய்தது எது?  தாத்யா பாடீலுக்கு உதை கொடுக்கும்படி செய்தது எது? என்பதை அவர்கள் எல்லோரும் அறிந்துகொள்ள இயலவில்லை.  சிலவேளைகளில் பாபா மிகவும் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்தார்.  இனிமையான விஷயங்களை அன்புடன் பேசினார்.  பின்னர் உடனே சின்னப் பொய்க்காரணம் இருந்தோ, இல்லாமலோ கோபாவேசம் அடைந்தார்.  அத்தகைய பல சம்பவங்களை இங்கே கூறலாம்.  ஆனால் எனக்கு எதைச்சொல்வது, எதைவிடுவது என்று தெரியவில்லை.  எனவே அவைகளை எனக்கு தோன்றியபோது கூறுகிறேன்.

அடுத்த அத்தியாயத்தில், பாபா ஒரு முஹமதியரா, இந்துவா என்னும் வினா எடுத்துக்கொள்ளப்படும்.  அவரின் யோகப்பயிற்சி, சக்தி மற்றும் பல விஷயங்களும் விவரிக்கப்படும்.


ஸ்ரீ சாயியைப் பணிக  
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

Thursday, 19 January 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 5

அத்தியாயம் 5

•  சாந்த்பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை
•  வரவேற்கப்பட்டு சாயி என அழைக்கப்படுதல்
•  மற்ற ஞானிகளுடன் தொடர்பு
•  அவருடைய உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதிகளும்
•  பாதுகைகளின் கதை
•  மொஹிதினுடன் மல்யுத்தப்பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும்
•  தண்ணீரால் விளக்கெரித்தல் 
•  போலி குரு ஜவ்ஹர் அலி 



சாந்த்பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபா திரும்புதல்

சென்ற அத்தியாத்தில் குறிப்பிட்டபடி இப்போது முதலில் சாயிபாபா காணாமற்போன பிறகு ஷீரடிக்கு எங்ஙனம் திரும்பிவந்தார் என விவரிக்கிறேன்.  

நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஓளரந்கபாத் ஜில்லாவிலுள்ள தூப்காவன் என்கிற கிராமத்தில் சாந்த்பாடீல் என்ற வசதியுள்ள முஹமதியப் பெருந்தகை ஒருவர் இருந்தார்.  அவர்      ஓளரந்கபாத்துக்குப் போய்க்கொண்டிருக்கையில் ஒரு பெண்குதிரயைத் தொலைத்துவிட்டார்.  இரண்டு மாதங்கள் பிரயாசையுடன் தேடினார்.  ஆனாலும் காணாமல்போன அக்குதிரையைப் பற்றி கொஞ்சமும் தகவல்பெற இயலவில்லை.  ஏமாற்றத்துடன் குதிரைச் சேணத்தை தன் தோளில் போட்டுக்கொண்டு   ஓளரந்கபாத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்.  நாலரை காததூரம் பிரயாணம் செய்தபின்னர் ஒரு மாமரத்தினருகில் வந்தார்.  அதன் அடியில் ஒரு பக்கிரி (விசித்திர மனிதர்) உட்கார்ந்து இருந்தார்.  அவரது தலையில் ஒரு குல்லாய் இருந்தது.  கஃப்னி என்னும் நீண்ட ஆடை தரித்திருந்தார்.  ஹூக்கா குடிப்பதற்குத் தயார் செய்துகொண்டிருந்தார்.  

சாந்த்பாடீல் அவ்வழியே போவதைக் கண்டு அவரைத் தன்னிடத்திற்குக் கூப்பிட்டுப் புகைபிடிக்கவும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளவும்  சொன்னார்.  அவ்விசித்திர மனிதர் அல்லது பக்கிரி குதிரைச் சேணத்தைப் பற்றி வினவினார்.  சாந்த்பாடீல் தனது தொலைந்துபோன குதிரையின் சேணம் அது என்று கூறினார்.  அதற்கு அவர் அவரிடம் அருகாமையில் உள்ள சோலை ஒன்றில் தேடும்படி கேட்டுக்கொண்டார்.  அவர் அங்கே சென்றார்.  ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  அவர் தன்னுடைய குதிரையைக் கண்டுபிடித்துவிட்டார்.  அந்த பக்கிரி ஒரு சாதாரண மனிதரல்ல.  ஆனால் ஓர் அவலியா (பெரும் ஞானி) என்று எண்ணினார்.  குதிரையுடன் பக்கிரியிடம் திரும்பி வந்தார்.

ஹூக்கா குடிப்பதற்குத் தயாராகியது.  ஆனாலும் இரண்டு பொருட்கள் தேவைப்பட்டன.  குழாயைப் பற்றவைப்பதற்கு நெருப்பு, சாபி - புகை இழுப்பதற்குப் பயன்படும் ஒரு துண்டுத் துணியை நனைப்பதற்குத் தண்ணீர்.  பக்கிரி தனது கத்தியை எடுத்து அதை வலிய நிலத்தில் நுழைத்தார்.  அதிலிருந்து எரியும் ஒரு நிலக்கரித் துண்டம் வந்தது.  அதை அவர் குழாய் வழி இட்டார்.  பிறகு தமது சட்காவைத் தரையில் அடித்தார்.  அவ்விடத்திலிருந்து நீர் கசியத் தொடங்கியது.  சாபி நனைக்கப்பட்டு பிறகு பிழியப்பட்டுக் குழாயில் சுற்றப்பட்டது.  

இங்ஙனம் எல்லாம் முடிந்தபின்னர் பக்கிரி ஹூக்கா குடித்துவிட்டு சாந்த்பாடீலுக்கும் புகைக்கக் கொடுத்தார்.  இவற்றையெல்லாம் கண்ணுற்ற சாந்த்பாடீல் வியப்புற்றார்.  பின்பு அவர் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து தனது விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளும்படி சொன்னார்.  மறுநாள் அவர் பாடீல் வீட்டிற்குச் சென்று சிலநாள் தங்கியிருந்தார்.  பாடீல், தூப்காவன் கிராமத்தின் அதிகாரி.  அவருடைய மனைவியின் சகோதரரது புதல்வன் கல்யாணம் செய்யப்படவிருந்தான்.  ஷீர்டியிலிருந்து மணப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள்.  எனவே ஷீர்டிக்கு புறப்படுவதற்கு பாடீல் ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினார்.  பக்கிரியும் கல்யாண கோஷ்டியுடன் கூடவந்தார்.  கல்யாணமும் எவ்விதச் சிரமமும் இன்றி முடிவடைந்து கோஷ்டியும் தூப்காவனிற்குத் திரும்பியது.  ஆனால் பக்கிரி மாத்திரம் ஷீர்டியிலேயே இருந்தார்.  பின்னர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கினார்.



சாயி என்னும் பெயரை பக்கிரி எப்படி அடைந்தார்?

கல்யாண கோஷ்டி ஷீர்டியை அடைந்ததும் கண்டோபா கோவிலுக்கு அருகிலுள்ள ஓர் ஆலமரத்தடியில் வந்து தங்கினர்.  கண்டோபா கோவிலின் பரந்தவெளியில் வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டன.  கோஷ்டியில் உள்ளவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக இறங்கினர்.  பக்கிரியும் கீழே இறங்கினார்.  இளம் பக்கிரி இறங்கிக்கொண்டிருப்பதை பகத் மஹல்ஸாபதி கண்ணுற்றார்.  உடனே "யா சாயி" (சாயி வரவேண்டும்!) என்று கூவினார்.  அதிலிருந்து மற்றவர்களும் அவரை சாயி என்று அழைத்தார்கள்.  அதிலிருந்து அவர் 'சாயிபாபா' என்னும் பெயரால் அறியப்பட்டார்.         



மற்ற ஞானிகளுடன் தொடர்பு

சாயிபாபா மசூதியில் தங்கத் தொடங்கினார். தேவிதாஸ் என்ற ஒரு ஞானி, பாபா வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஷீர்டியில் தங்கியிருந்தார்.  பாபா அவர்தம் நட்பை விரும்பினார்.  அவருடன் மாருதி கோவிலிலும், சாவடியிலும் தங்கியிருந்தார்.  சில சமயங்களில் தனியாகவும் இருந்தார்.  பிறகு ஜானகிதாஸ் என்று மற்றொரு ஞானியும் வந்தார்.  பாபா அவருடன் பேசிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தார்.  அன்றி ஜானகிதாஸ் பாபா தங்கியிருந்த இடத்திற்குச் செல்வார்.  அங்ஙனமே புண்தாம்பேயினின்று இல்லறத்திலிருந்த வைசிய ஞானியான கங்காகீர் எப்போதும் ஷீர்டிக்கு வந்தார்.
சாயிபாபா தம் இரு கைகளாலும் தண்ணீர்க் குடத்தைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக எடுத்துச் சென்றபோது முதன்முதலாக அவரைக் கண்ட கங்காகீர் ஆச்சர்யப்பட்டு வியந்து கூறியதாவது, "ஷீர்டி ஆசீர்வதிக்கப்பட்டது.  அது விலைமதிக்க முடியாத வைரத்தைப் பெற்றிருக்கிறது.  இம்மனிதர் இன்று தண்ணீர் சுமந்து கொண்டிருக்கிறார்.  ஆனாலும் அவர் சாதாரண மனிதர் அல்ல.  இந்நிலம் (ஷீர்டி) அதிஷ்டமும், புண்ணியமும் உடையதாதலின் அஃது ஓர் வைரத்தைப் பெற்றது".  அங்ஙனமே யேவலா மடத்தைச் சேர்ந்த ஆனந்த்நாத் என்பவர் புகழ்பெற்ற ஞானியும், அக்கல்கோட் மஹராஜின் சீடரும் ஆவார்.  அவர் ஷீர்டி மக்கள் சிலருடன் ஷீர்டிக்கு வந்திருந்தார்.  அவர் சாயிபாபாவைத் தன்முன் கண்டபோது வெளிப்படையாகப் பின்வருமாறு கூறினார்.  "இது உண்மையிலேயே விலைமதிக்க முடியாத இரத்தினமாகும்.  அவர் ஒரு சாதாரண மனிதர் போன்று தோன்றினாலும், அவர் ஒரு சாதாரணக் கல் அல்ல.  ஒரு வைரக்கல், கூடிய விரைவில் நீங்கள் இதை உணர்வீர்கள்".  இதைக்கூறிய பின்னர் அவர் யேவலாவுக்குத் திரும்பிவிட்டார்.  இது சாயிபாபா இழைஞனாய் இருக்கும்போது சொல்லப்பட்டது.



பாபாவின் உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதியும்

சாயிபாபா இளம் பருவத்தில் தமது தலையில் முடி வளர்த்தார்.  தலைமுடியை ஒழுங்குபடுத்துவதே இல்லை.  விளையாட்டு வீரனைப் போன்று அவர் உடையணிந்திருந்தார்.  அவர் ரஹாதாவிற்கு சென்றிருந்தபோது சாமந்தி, மல்லிகை, முல்லை ஆகியவற்றின் சிறிய புஷ்பங்களைக் கொணர்ந்து, தரையைச் சுத்தப்படுத்தி, காய்ந்த நிலத்தைக் கொத்தி, அவற்றை நட்டு தண்ணீர் விட்டார்.  வாமன் தாத்யா என்னும் அடியவர் அவருக்குத் தினந்தோறும் இரண்டு பானைகள் கொடுத்தார்.  இவற்றைக்கொண்டு பாபா தமது செடிகளுக்குத் தண்ணீர் விடுவது வழக்கம்.  கிணற்றிலிருந்து நீர் இறைத்து மட்குடங்களைத் தாமே தோளில் தூக்கிச்செல்வார்.  
மாலை நேரங்களில் மண் பானைகள் வேப்பமரத்தடியில் வைக்கப்படிருக்கும்.  அவை வெறும் பச்சை மண்ணால் செய்யப்பட்டு சுடப்படாத காரணத்தால் அங்ஙனம் வைக்கப்பட்ட உடனேயே உடைந்துவிடும்.  அடுத்தநாள் தாத்யா வேறு இரண்டு புதுப்பானைகள் கொடுப்பார்.  இந்நிகழ்ச்சி மூன்று ஆண்டுகள் நடந்தது. சாயிபாபாவின் கடினப்பயிற்சி, உழைப்பு ஆகியவற்றினால் ஒரு பூந்தோட்டம் வளர்ந்தது.  இந்த நிலத்தில் தற்போது பாபாவின் 'சமாதிமந்திர்' என்னும் ஓர் பெரிய மாளிகை இருக்கிறது.  இது தற்போது பல பக்தர்களால் அடிக்கடி விஜயம் செய்யப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.


வேப்பமரத்தடியில் உள்ள பாதுகைகளின் கதை

பாயி கிருஷ்ணாஜி அலிபாகர் என்பவர் அக்கல்கோட் மஹராஜின் அடியவர்.   அக்கல்கோட் மஹராஜின் உருவப்படத்தை வழிபட்டார்.  அவர் ஒருமுறை  அக்கல்கோட்டிற்கு (ரேலாப்பூர் ஜில்லா) சென்று மஹராஜின் பாதுகைகளைத் தரிசனம் செய்துகொண்டு, தனது நேர்மையான வழிபாட்டைச் செலுத்திவர நினைத்தார்.  அவர் அங்கு செல்வதற்குமுன் கனவில் ஒரு காட்சியைக் கண்டார்.  அக்காட்சியில் அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரிடம், "இப்போது ஷீர்டியே எனது இருப்பிடம்.  அங்குசென்று உனது வழிபாட்டைச் செலுத்து", என்றார்.  எனவே பாயி தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து பாபாவை வழிபட்டு, ஆறுமாதங்கள் அங்கு தங்கி மகிழ்ச்சியடைந்தார்.  

அவருடைய காட்சி முதலியவற்றின் ஞாபகார்த்தமாக அவர் பாதுகைகளைத் தயாரித்து, அதை சக வருடம் 1834ல் (1912) ஆவணி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று தாதா கேல்கர், உபாஸனி முதலியோர் நடத்திய உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் வேப்பமரத்தடியில் ப்ரதிஷ்டை செய்தார்.  அதன் வழிபாட்டுக்கு ஓர் அந்தணர் நியமிக்கப்பட்டார்.  அதனுடைய நிர்வாகம் சகுண் மேரு நாயக் என்ற அடிவரிடம் ஒப்புவிக்கப்பட்டது.  


இக்கதையின் முழுவிவரம்

தாணேவைச் சேர்ந்த திரு B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதார், சாயிபாபாவின் ஒரு பெரிய பக்தர்.  இவர் இந்த விஷயத்தைப்பற்றி  சகுண் மேரு நாயக், கோவிந்த் கமலாகர் தீஷித் இவர்களிடமிருந்து விசாரித்து பாதுகைகளைக்கொண்ட ஒரு கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 2 , எண். 1, பக்கம் 25) பதிப்பித்துள்ளார்.  அது கீழ்கண்டவாறு,

சகவருடம் 1834ல் (1912) பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோதாரி, ஒருமுறை ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்கு வந்தார்.  அவரது கம்பவண்டரும், அவரது நண்பர் பாயி கிருஷ்ணாயி அலிபாகரும் அவருடன் வந்தார்கள்.  கம்பவுண்டரும், பாயியும், சகுண் மேரு நாயக் உடனும், கோவிந்த் கமலாகர் தீஷித் உடனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.  சில விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஷீர்டிக்கு சாயிபாபா முதல் விஜயம் செய்தது புனித வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்தது, இவ்வுண்மைகளின் ஞாபகார்த்தம் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள்.  பாபாவின் பாதுகைகளைப்  ப்ரதிஷ்டை செய்வதற்கு எண்ணி, அவற்றைச் சாதாரணக் கல்லில் செய்வதற்கு இருந்தனர்.  அப்போது பாயின் நண்பரான கம்பவுண்டர் தனது எஜமானரான டாக்டர் ராமதேவ் கோதாரியிடம் இதைத் தெரிவித்தால், அருமையான பாதுகைகளை அவர் வடிவமைப்பார் என்று யோசனை கூறினார்.  அனைவரும் இந்த யோசனையை விரும்பினர்.  

டாக்டர் கோதாரியிடமும் இதைப்பற்றி தெரிவித்தனர்.  அவரும் ஷீர்டிக்கு வந்து பாதுகைகளின் திட்டத்தை வரைந்தார்.  கண்டோபா கோவிலில் உள்ள உபாஸனி மஹராஜிடம் அவர் சென்று தனது திட்டத்தைக் காண்பித்தார்.   உபாஸனி அதில் பல முன்னேற்றத் திருத்தங்கள் செய்து தாமரைப் புஷ்பங்கள், சங்கு, சக்கரம், மனிதன் முதலியவற்றை வரைந்து, வேப்பமரத்தின் உயர்வைப் பற்றியும், பாபாவின் யோகசக்தியைப் பற்றியும் உள்ள பின்வரும் சுலோகத்தை அதில் பொறிக்கலாம் என்றும் யோசனை கூறினார். 

அந்த ஸ்லோகம் பின்வருமாறு:
ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரிதயம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம்  ஸாதயந்தம்
நமாமீஷ்வரம் சத்குரும் சாயிநாதம்
 (நான் சாயிநாத் பிரபுவை வணங்குகிறேன்.  வேப்பமரம் கசப்பாகவும், இனிமையற்றதாகவும் இருப்பினும் அவரது நிரந்தர இருக்கையினால் அமிர்தத்தைக் கசிகிறது.  கல்ப விருக்ஷத்தைவிடச் சிறந்தது.  (அம்மரத்தின் கசிவு, அமிர்தம் என்று அதன் குணப்படுத்தும் தன்மையால் அழைக்கப்படுகிறது)


உபாஸனியின்  யோசனைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  பாதுகைகள் பம்பாயில் செய்யப்பட்டு ஷீர்டிக்கு கம்பவுண்டர் மூலம் அனுப்பப்பட்டன.  பாபா அவற்றை, ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று ப்ரதிஷ்டை செய்யவேண்டும் என்று சொன்னார்.  அத்தினத்தன்று காலை 11:30 மணிக்கு பாதுகைகளை கண்டோபா கோவிலிருந்து த்வாரகாமாயிக்கு (மசூதி) G.K.தீஷித் ஊர்வலமாகத் தனது தலையில் எடுத்து வந்தார்.  பாபா அப்பாதுகைகளைத் தொட்டு, இவைகள் பிரபுவின் பாதங்கள் என்றும், அவற்றை வேப்பமரத்தடியில் ப்ரதிஷ்டை செய்யும்படியும் கூறினார்.
அதற்கு முதல்நாள் பஸ்தா சேட் என்ற பம்பாயைச் சேர்ந்த பார்சி பக்தர் ரூ.25 மணியார்டர் செய்திருந்தார்.  பாபா இத்தொகையைப் ப்ரதிஷ்டை செய்யக் கொடுத்துவிட்டார்.  ப்ரதிஷ்டையின் மொத்தச் செலவு  ரூ.100 ஆகியது.  அதில் ரூ.75 நன்கொடைகளினால் சேர்க்கப்பட்டது.  முதல் ஐந்து ஆண்டுகள் G.K.தீஷித் அவர்களால் பாதுகைகள் வழிபாடு செய்யப்பட்டது.  பின்னர் இவ்வழிபாடு ஜக்கடியைச் சேர்ந்த லக்ஷ்மண் காகேஷ்வரால் செய்யப்பட்டது.  முதல் ஐந்து ஆண்டுகளில் டாக்டர் கோதாரி விளக்கேற்றுவதற்காக, மாதம் ரூ.2 அனுப்பி வைத்தார்.  பாதுகைகளைச் சுற்றிப் போடுவதற்கு வேலியும் அனுப்பினார்.  ஸ்டேஷனிலிருந்து அவ்வேலியை ஷீர்டிக்குக் கொண்டுவரும் செலவையும் (ரூ.7-8-0) கூரையும் சகுண் மேரு நாயக்கினால் கொடுக்கப்பட்டது.  தற்போது ஜாகடி (நாநாபூஜாரி) வழிபாட்டைச் செய்கிறார்.  சகுண் மேரு நாயக் நைவேத்யம், மாலை விளக்கேற்றுதல் முதலியவைகளைச் செய்கிறார்.

பாயி கிருஷ்ணாஜி என்பவர் முதலில் அக்கல்கோட் மஹராஜின் அடியவராவார்.  சகவருடம் 1834ல் பாதுகைகள் ப்ரதிஷ்டை செய்யப்படும் சமயத்தில்     
அக்கல்கோட் போகும் வழியில் ஷீர்டிக்கு வந்தார்.  பாபாவின் தரிசனம் ஆனபிறகு அக்கல்கோட்டுக்குப் போகவிரும்பி பாபாவின் அனுமதியை இதற்காக வேண்டினார்.  பாபா அவரிடம், "அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது, நீ ஏன் அங்கு போகவேண்டும்?  அக்கல்கோட் மஹராஜ் இங்கேயே (என்னுடன் ஒன்றி) இருக்கிறார்!", என்றார்.  இதைக்கேட்டு பாயி அக்கல்கோட் செல்லவில்லை, பாதுகைகளின் ப்ரதிஷ்டைக்குப் பின் ஷீர்டிக்கு அடிக்கடி வந்தார்.

ஹேமத்பந்திற்கு இவ்விபரங்கள் தெரியாதென்று B.V.தேவ் முடிக்கிறார்.  அவர் அங்ஙனம் அறிந்திருப்பாராயின் அதைத் தன்னுடைய சத்சரிதத்தில் சேர்க்கத் தவறியிருக்கமாட்டார்.  



மொஹிதினுடன் மல்யுத்தப்பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும்

பாபாவின் மற்ற கதைகளுக்குத் திரும்புவோம்.  ஷீர்டியில் மொஹிதின் தம்போலி என்னும் பெயருடைய ஓர் மல்யுத்தச் சண்டைக்காரன் இருந்தான்.  பாபாவுக்கும், அவனுக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை.  இருவரும் மல்யுத்தம் செய்யத் தொடங்கினர்.  இதில் பாபா தோற்கடிக்கப்பட்டார்.  அதிலிருந்து பாபா தம்முடைய உடைமையையும், வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்துக்கொண்டார்.  மேலாடையாக கஃப்னி அணிந்தார்.  லங்கோடு (இடுப்புப் பட்டை) அணிந்து தன் தலையை ஓர் துண்டுத் துணியால் மூடினார்.  தம்முடைய ஆசனத்திற்கு ஒரு சாக்குத் துணியையும், படுக்கைக்கு ஒரு சாக்குத் துணியையுமே உபயோகித்தார்.  கிழிந்த கசங்கிய கந்தல் உடைகளை அணிவதிலேயே திருப்தியடைந்தார்.  அவர் எப்போதும் "ஏழ்மை அரசுரிமையைவிட நன்று, இறைமையைவிட மிகமிக நன்று, கடவுள் ஏழைகளின் நிரந்தர நண்பராவார்" என்று கூறிக்கொண்டார். 

கங்காகீரும் மல்யுத்தம் செய்வதில் மிக்க விருப்பமுள்ளவர்.  அவர் ஒருமுறை மல்யுத்தம் செய்யும்போது ஒரு ஆசையற்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது.  அப்போது ஓர் குரல் அவரிடம், அவரது உடம்பைத் துறந்து கடவுளுடன் நிரந்தரமாக ஈடுபடும்படி கூறுவது கேட்டது.  எனவே, அவரும் சம்சாரத்தைத் துறந்து கடவுளை நோக்கித் திரும்பினார்.  புண்தாம்பேக்கு அருகிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார்.

சாயிபாபா மக்களுடன் கலந்து பேசுவதில்லை.  அவரை யாராவது கேள்வி கேட்டபோது மட்டுமே அதற்குப் பதில் கூறினார்.  பகற்பொழுதில் எப்போதும் வேப்பமரத்தடியிலேயே  உட்கார்ந்திருந்தார்.  சில சமயங்களில் கிராம எல்லையில் வாய்க்காலுக்கு அருகிலுள்ள ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.  மாலை நேரங்களில் அவர் குறிக்கோள் இன்றி நடப்பது வழக்கம்.  சில நேரங்களில் நீம்காவன் போவார்.  அங்கு த்ரயம்பக் டேங்க்லேயின் வீட்டிற்குப் போவார்.  பாபா அவரை விரும்பினார்.  அவரின் (பாபா சாஹேபின்) தம்பியான நானா சாஹேபுக்கு இரண்டாவது திருமணம் செய்தும் குழந்தைகள் ஏதும் இல்லை.  பாபா சாஹேப், நானா சாஹேபை பாபாவின் தரிசனத்திற்காக அனுப்பினார்.  சில காலத்திற்குப் பிறகு பாபாவின் அருளால் நானா சாஹேப் ஒரு புதல்வனைப் பெற்றார்.  அதிலிருந்து சாயிபாபாவை பார்க்க மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர்.  அவருடைய புகழ் பரவி, அஹமத் நகரை எட்டியது.  அதிலிருந்து நானா சாஹேப் சாந்தோர்க்கரும், கேசவ சிதம்பரும் மற்றும் பலரும் ஷீர்டிக்கு வரத்தொடங்கினர்.

பாபா பகற்பொழுதில் தமது அடியவர்களால் சூழப்பட்டிருந்தார்.  இரவில் உதிர்ந்துகொட்டும் ஒரு பழைய மசூதியில் படுத்தார்.  பாபாவிடம் இந்த நேரத்தில் ஹூக்கா, புகையிலை, ஒரு டம்ளர் (தகர டப்பா), நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டுத்துணி, ஒரு சட்கா (குச்சி) முதலிய சிறுசிறு உடைமைகள் இருந்தன.  இவைகள் எல்லாம் பாபா எப்போதும் வைத்திருந்தார்.  தலையிலுள்ள அச்சிறு துணி, நன்கு முறுக்கப்பட்ட முடியைப்போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது.  இது பல வாரங்களாகத் துவைக்கப்படாதது.  அவர் எவ்வித பூட்ஸோ, காலணியோ அணியவில்லை.

நாட்களின் பெரும்பகுதிக்கு ஒரு சாக்குத்துணியே அவரின் ஆசனமாகும்.  ஒரு கௌபீனத்தை அவர் அணிந்திருந்தார்.  குளிரை விரட்ட எப்போதும் துனியின் (புனித நெருப்பின்) முன்னால் இடது கையை மரக்கட்டைப் பிடியின்மீது வைத்தவாறு தெற்கு நோக்கி அமர்ந்திருந்தார்.  அந்தத் துனியில் அஹங்காரம், ஆசைகள், எல்லாவித எண்ணங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகப் போட்டார்.  'அல்லா மாலிக்' (கடவுளே ஒரே உரிமையாளர்) என்று கூறினார்.

எல்லா பக்தர்களும் வந்து அவரைத் தரிசித்ததும், அவர் அமர்ந்திருந்ததுமான மசூதியானது இரண்டு அறைகளின் அளவே இருக்கும்.  1912க்குப் பிறகு ஒரு மாற்றம் நிகழ்ந்தது.  பழைய மசூதி பழுபார்க்கபட்டு ஒரு தாழ்வாரம் எழுப்பப்பட்டது.  இம்மசூதியில் பாபா தங்கவருவதற்குமுன் தகியா என்ற இடத்தில் (முஸ்லிம் ஞானியரின் இருப்பிடம்) வசித்து வந்தார்.  அங்கேதான் பாபா கால்களில் சலங்கை கட்டி, அழகாக நடனம் செய்துகொண்டு அன்புடன் பாடினார்.  



தண்ணீரால் விளக்கெரித்தல் 

சாயிபாபாவுக்கு விளக்குகள் என்றால் அதிக விருப்பம்.  அவர் கடைக்காரர்களிடமிருந்து எண்ணெய் வாங்கி மசூதியிலும், கோவிலிலும் இரவு முழுவதும் விளக்குகளை எரியவிடுவது வழக்கம்.  பின்பு எண்ணெய் இலவசமாக அளித்துவந்த வணிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இனிமேல் எண்ணெய் கொடுப்பதில்லை என முடிவுசெய்தனர்.  வழக்கம்போல் பாபா அவர்களிடம் எண்ணெய் கேட்கப்போனபோது அவர்கள் எல்லோரும் தீர்மானமாக எண்ணெய் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள்.  

இதைக்கேட்டுக் குழப்பமடையாத பாபா, மசூதிக்குத் திரும்பி வந்து காய்ந்த திரிகளை விளக்குகளில் இட்டார்.  வணிகர்கள் மசூதிக்கு வந்து என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருன்தனர்.  பாபா, மிகக் கொஞ்சம் (சில துளிகள்) மட்டுமே எண்ணெய் இருந்த தகரக் குவளையை எடுத்தார்.  தண்ணீரை அதில் ஊற்றிக் குடித்தார்.  இவ்விதமாக அதை நிவேதனம் செய்தபிறகு தகர டப்பாவில் தண்ணீரை மறுபடியும் எடுத்து எல்லா விளக்குகளிலும் அதனையே நிரப்பிக் கொளுத்தினார்.  வணிகர்களுக்கு ஆச்சர்யத்தையும், பயத்தையும் விளைவிக்கும்படியாக விளக்குகள் எரியத் தொடங்கின.  இரவு முழுவதும் எரிந்துகொண்டிருந்தன.  

வணிகர்கள் தங்கள் செய்கைக்கு மனம் வருந்தி பாபாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.  பாபா அவர்களை மன்னித்து, எதிர்காலத்தில் அதிக உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.  



போலி குரு ஜவ்ஹர் அலி

மேலே குறிப்பிட்ட மல்யுத்தம் நடந்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், 'ஜவ்ஹர் அலி' என்னும் பெயருடைய பக்கிரி தன சீடர்களுடன் அகமத்நகரிலிருந்து, ராஹாதாவுக்கு வந்து வீரபத்திர ஸ்வாமி கோவிலுக்கு அருகிலுள்ள பக்கலில் (விசாலமான அறை) தங்கினார்.  இப்பக்கிரி படித்தவர்.  குரான் முழுவதையும் ஒப்பிக்கும் ஆற்றல் உடையவர்.  இனிமையான நா உடையவர்.  கிராமத்தைச் சேர்ந்த பல மதப்பற்றும், பக்தியும் உடைய மக்கள் அவரிடம் வந்து மரியாதை செய்யத் தொடங்கினர்.  அவர் அந்தக் கிராம மக்கள் உதவியுடன் வீரபத்திரர் கோவிலுக்கு அருகில் ஓர் ஈத்கா (ஈத் தினத்தன்று முஹமதியர் தொழும் இடத்தின் முன்புள்ள சுவர்) கட்டத் தொடங்கினார்.  இவ்விஷயத்தைப் பற்றி சில சர்ச்சைகள் உண்டானதால், ஜவ்ஹர் அலி   ராஹாதாவை விட்டுப் புறப்பட வேண்டியதாயிற்று.

பிறகு அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவுடன் மசூதியில் தங்கினார்.  அவருடைய இனிமையான வாக்குகளால் மக்களைக் கவர்ந்தார்.  பாபாவைத் தன்னுடைய சீடர் என்று கூறத் தொடங்கினார்.  பாபா அதை மறுக்கவில்லை.  அவரை சீராக இருக்கச் சம்மதித்தார்.  குரு, சீடர் இருவரும்  ராஹாதாவுக்குத் திரும்பி அங்கு வசிக்க முடிவு செய்தனர்.  குரு, சீடரின் மதிப்பை அறிந்திருக்கவே இல்லை.  ஆனால் சீடர், குருவின் குற்றங்களை உணர்ந்திருந்தார்.  எனினும் அவரை மதிக்காமல் இருந்ததில்லை.  பாபா தமது கடமைகளை கவனத்துடன் ஆற்றிக்கொண்டு வந்தார்.  தமது குருவிற்குப் பல்வேறு விதங்களில் பணிபுரிந்தும் வந்தார்.  ஷீர்டிக்கு அவர்கள் அடிக்கடி வருவது வழக்கம்.  ஆனால் அவர்களின் முக்கிய இருப்பிடம் ராஹாதாவாகும்.  

ஷீர்டியிலுள்ள பாபாவின் அன்புச் சீடர்கள், பாபா அவர்களைவிட்டு ராஹாதாவில் தங்கியிருப்பதை விரும்பவில்லை.  எனவே அவர்கள் ஓர் கூட்டமாக  ராஹாதாவுக்குச் சென்று, பாபாவை ஈத்காவுக்கு அருகில் சந்தித்து, தாங்கள் வந்த காரணத்தைக் கூறினார்கள்.  பாபா அவர்களிடம், "பக்கிரி ஒரு கோபக்கார குணங்கெட்ட மனிதர் என்றும், தான் அவரை விட்டு வரமுடியாது என்றும், தான் அவரை விட்டு வரமுடியாது என்றும், எனவே பக்கிரி வருவதற்குள் எல்லோரும் திரும்பிவிடுவது நல்லது" என்றும் கூறிக்கொண்டிருந்தார்.  அப்போது பக்கிரி திரும்பிவந்து, தனது சீடனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முயன்றதாக அவர்களைக் கோபித்தார்.  சில விவாதங்களும், தகராறுகளும் நிகழ்ந்தன.  முடிவில் குரு, சீடர் இருவரும் ஷீர்டிக்குத் திரும்பும்படி தீர்மானிக்கப்பட்டது.  எனவே அவர்கள் ஷீர்டிக்குத் திரும்பிவந்து வசிக்கத் தொடங்கினர்.  

சில நாட்களுக்குப் பிறகு குரு, தேவிதாசரால் சோதிக்கப்பட்டு முழுமைக்குத் தேவையுள்ளவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டார்.  பாபா ஷீர்டிக்குக் கல்யாண கோஷ்டியுடன் வருவதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேவிதாசர் பத்து அல்லது பதினொரு வயதுப் பாலகனாக மாருதி கோவிலில் வசித்து வந்தார்.  தேவிதாசருக்குப் பல சிறப்பான அம்சங்களும், சிறப்பான கண்களும் அமைந்திருந்தன.  

அவர் அவாவின்மையின் அவதாரமும், ஞானியும் ஆவார்.  தாத்யா கோதே, காஷிநாத் போன்ற பலர் அவரைத் தமது குருவாக நினைத்திருந்தனர்.  அவர்கள் ஜவ்ஹர் அலியை, தேவிதாஸ் முன்னிலையில் கொண்டுவந்தனர்.  அவர்கள் தொடர்ந்த விவாதத்தில் ஜவ்ஹர் அலி தோற்கடிக்கப்பட்டார்.  பின்பு ஷீர்டியை விட்டு ஓடி பீஜப்பூர் சென்று தங்கினார்.  பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பிவந்து சாயிபாபாவின் முன்னர் வீழ்ந்து வணங்கினார்.  அவர் குரு என்றும், சாயிபாபா சீடர் என்றும் காணப்பட்ட தோற்றம் தெளிவாக்கப்பட்டது.  அவர் தன் குற்றத்திற்காக வருத்தப்பட்டிருகையில், சாயிபாபா அவரை மரியாதையுடன் நடத்தினார்.  

இவ்விஷயத்தில் உண்மையான ஒழுக்கத்தால் சாயிபாபா எவ்வாறு அஹங்காரத்தைக் களைந்து சீடனது கடமைகளை ஒழுங்காகச்செய்து, உயர்ந்த பதவியை (தன்னையுணர்த்தல்) அடைவது என்பதைக் காட்டியுள்ளார்.  இக்கதை மஹல்ஸாபதி (சாயிபாபாவின் ஒரு பெருந்தகை அடியவர்) என்னும் சீடரால் கூறப்பட்டுள்ளபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.  

அடுத்த அத்தியாயத்தில் ராமநவமித் திருவிழா, மசூதியின் முந்தைய நிலை, அதன் பழுதுபார்ப்பு ஆகியவற்றைக் காண்போம்.  

  
ஸ்ரீ சாயியைப் பணிக  அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும் 

  

   
 

Thursday, 12 January 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 4

அத்தியாயம் 4 

•  ஷீர்டிக்கு சாயிபாபாவின் முதல் விஜயம்
•  ஞானிகளின் வருகை
•  ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம்
•  சாயிபாபாவின் தோற்றம்
•  கௌலிபுவாவின் கருத்து
•  விட்டலின் பிரசன்னம்
•  ஹூர்சாகரின் கதை
•  பிரயாகையில் தாஸ்கணுவின் குளியல்
•  சாயிபாவின் அயோனி ஜன்மமும் 
    அவரின் முதல் ஷீர்டி விஜயமும்
•  மூன்று சத்திரங்கள்

முந்தைய   அத்தியாயத்தில், சாயி சத்சரிதத்தை எழுதத் தூண்டிய சூழ்நிலைகளை விவரித்தேன்.  இப்போது ஷீர்டிக்கு சாயிபாபாவின் முதல் விஜயம் பற்றிக் கூறுகிறேன்.



ஞானிகளின் வருகை

கீதையில் கண்ணபிரான் கூறுகிறார், (அத். 4 : ஸ்லோகம் 7, 8) "தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் என்னை நானே அவதரித்துக்கொள்கிறேன்.  நல்லோரைக் காத்துத் தீயோரை அழிக்க யுகந்தோறும் அவதரிக்கிறேன்".

இதுவே பகவானின் அவதார நோக்கம்.  பகவானின் சார்பாக ரிஷிகளும், ஞானிகளும், இப்பூவுலகில் தக்கதருணத்தில் தோன்றி, அவதார நோக்கம் நிறைவேறுமுகமாகத் தமக்கே உரித்தானமுறையில் உதவி செய்கிறார்கள்.

உதாரணமாக, இருமுறை பிறப்பவர், அதாவது பிராமணர்கள், ஷத்திரியர்கள்,  வைசியர்கள் தங்கள் கடமைகளைப் புறக்கணிக்கும்போதும், மேற்குலத்தவரின் உரிமைகளைத் தவறான முறையில் பறிக்கச் சூத்திரர்கள் முயலும்போதும், ஆன்மஞான போதகர்கள் மதிக்கப்படாமல் அவமதிக்கப்படும்போதும் தன்னைத் தான் (ஒவ்வொருவனும்) மெத்தப்படித்தவன் என்று எண்ணும்போதும், தடுக்கப்பட்ட ஆகாராதிகளையும், போதை தரும் குடிபொருளையும் ஜனங்கள் உட்கொள்ளும்போதும், மதமென்னும் போர்வையில் தகாத காரியங்களைச் செய்யும்போதும், பல்வேறு இனத்து மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போதும், மறையவர் சந்தியாவந்தனம், மற்றும் தங்கள் மதப் பழக்கவழக்கங்களைச் செய்யத் தவறும்போதும், யோகிகள் தியானத்தைப் புறக்கணிக்கும்போதும், மனைவி மற்றும் மக்கட்செல்வமே தங்கள் கருத்துக்குரிய ஒன்றே ஒன்று என்று மக்கள் கருதத் தலைப்பட்டு முக்தி என்னும் உண்மை நெறியினின்று வழிதவறிப்போகும்போதும், ஞானிகள் தோன்றவே செய்கிறார்கள்.  தங்கள் மொழி, செயல்வழிகளால் காரியங்களை நெறிப்படுத்துகிறார்கள்.  

அவர்கள கலங்கரை விளக்கையொப்ப சேவை செய்து நமக்கு மெய்நெறியைக் காண்பிக்கிறார்கள்.  இவ்வாறாகப் பல ஞானிகள் நிவ்ருத்தி, ஞானதேவ், முக்தாபாய், நாமதேவ், கோரா, கொனாயி, ஏக்நாத், துகாராம், நரஹிரி, நர்சிபாயி, சஜன்கசாயி, சவதா, ராம்தாஸ், மற்றும் பலர் பற்பல காலங்களில் மக்களுக்கு மெய்நெறியைக் காண்பிக்கத் தோன்றவே செய்தனர்.  இவ்வகையில் இறுதியாக ஷீர்டி சாயிபாபாவும் விஜயம் செய்தார்.


ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம்

அஹமத்நகர் ஜில்லாவில் உள்ள கோதாவரி ஆற்றங்கரை மிகவும் அதிஷ்டம் படைத்ததாகும்.  ஏனெனில் அது அனேக ஞானிகளை ஈன்றும், புரந்தும், அடைக்கலம் கொடுத்தும் இருக்கிறது.  அவர்களுள் முக்கியமானவர் ஞானேஸ்வர்.  ஷீர்டியும் அகமத்நகர் ஜில்லாவில் உள்ள கோபர்காவன் தாலுக்காவில்தான் இருக்கிறது.  கோபர்க்காவனில் உள்ள கோதாவரி ஆற்றைக் கடந்தவுடன் நீங்கள் ஷீர்டிக்குள்ள வழியை அடைகிறீர்கள்.  ஒன்பது மைல்கள் சென்றதும் நீம்காவன் அடைகிறீர்கள்.  அவ்விடத்தினின்று ஷீர்டி தெரிகிறது.

கிருஷ்ணா ஆற்றங்கரையிலுள்ள கனகாபூர், நரசிம்ஹவாடி, ஓளதும்பர் போன்ற மற்ற புனித ஷேத்திரங்களைப் போன்று ஷீர்டியும் அறிமுகமானதும், புகழ் பெற்றதும் ஆகும்.  தாமாஜி செழித்து விளங்கியதும், ஆசீர்வதித்ததுமான பண்டரீபுரத்திற்கு அருகில் உள்ள மக்கள்வோடாவைப் போன்றும், சமர்த்த ராம்தாஸ் சஜ்ஜன்கட்டில் விளங்கியதைப் போன்றும், சாயிநாத் ஷீர்டியில் செழித்து விளங்கி அஃதை வாழ்த்தினார்.


சாயிபாபாவின் சத்வ குணரூபம்

சாயிபாபாவினால் ஷீர்டி முக்கியத்துவம் பெற்றது.  சாயிபாபா எத்தகைய பண்புள்ளவர் என்பதைக் காண்போம்.  கடப்பதற்க்கு மிகவும் கடினமாக இவ்வாழ்வை அவர் வென்றார்.  சாந்தி அல்லது மனஅமைதியே அவரின் அணிகலன்.  விவேகத்தின் பெட்டகம்.  அவர் வைணவ அடியார்களின் தாயகமாவார்.  அவர் கர்ணனையொப்ப வள்ளல்களுள் எல்லாம் தலைசிறந்த வள்ளலாக விளங்கினார்.  சாராம்சம் அனைத்தினின்றும் பெற்ற சாராம்சமாகவும் இருந்தார்.  அவருக்கு அழியும் பொருட்கள் மீது ஆசை இல்லை.  அவருடைய ஒரே ஈடுபாடான ஆன்ம உணர்விலேயே எப்போதும் கவரப்பட்டார்.  இவ்வுலகப் பொருட்களிலோ அல்லது இவ்வுலகத்தைக் கடந்தவற்றிலோ அவர் மகிழ்ச்சியடையவில்லை.  அவரின் அந்தரங்கம் (உள்ளம்) ஒரு கண்ணாடி போன்று தூய்மையானது.  அவரின் மொழிகள் எப்போதும் அமுதத்தைப் பெய்தன.  

பணக்காரர், ஏழை யாவரும் அவருக்கு ஒன்றே.  புகழ்ச்சி, இகழ்ச்சி இவற்றை அவர் அறிந்திருக்கவில்லை அல்லது மதிக்கவில்லை.  அவரே எல்லா உயிர்கட்கும் இறைவன் ஆவார்.  அவர் சரளமாகப் பேசி அனைவருடனும் பழகினார்.  நடிப்பையே தொழிலாகக்கொண்ட குமரிகளின் நடிப்பையும், நாட்டியத்தையும் கண்டார்.  கஜல் (தெம்மாங்கு) பாடல்களையும் கேட்டார்.  ஆயினும் இம்மியளவும் சமாதி நிலையிலிருந்து அவர் விலகவில்லை.

அல்லாவின் நாமம் அவர் நாவில் எப்போதும் இருந்தது.  இவ்வுலகம் விழித்திருக்கும்போது அவர் தூங்கினார்.  இவ்வுலகம் தூங்கும்போது அவர் சுறுசுறுப்பாய் இருந்தார்.  அழ்ந்த கடலையொப்ப அவர் மனம் அமைதியாய் இருந்தது.  அவரது இருப்பிடம் தீர்மானிக்க இயலாததாய் இருந்தது.  அவர் ஓரிடத்தில் வாழ்ந்தார் எனினும் இவ்வுலகின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவர் அறிவார்.  அவரின் தர்பார் கவர்ச்சிகரமானது.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான கதைகளைத் திருவாய் மலர்ந்தார்.  ஆனாலும் மௌன விரதத்திலிருந்து இம்மியளவும் பிறழவில்லை.  மசூதியில் உள்ள சுவரின்மீது எப்போதும் சாய்ந்துகொண்டிருந்தார் அல்லது காலை, மதியம், மாலை, இவ்வேளைகளில் லெண்டி (பூந்தோட்டம்), சாவடி (சயன அறை) ஆகியவற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தார்.  எப்போதும் ஆன்ம உணர்வில் கருத்துள்ளவராகவே இருந்தார்.  சித்தராயினும் சாதகரைப் போன்று நடித்தார்.  அவர் எளிமையாகவும், தாழ்மையாகவும், அஹங்காரமற்றும் இருந்து எல்லோரையும் மகிழ்வித்தார்.  இவரே நமது சாயிபாபா, ஷீர்டி மண் சாயிபாபாவின் திருவடிகளால் மிதிபட்டதால் அசாதாரண முக்கியத்துவம் பெற்றது.  ஆலந்தியை ஞானேஸ்வரும், பைடணை ஏக்நாத்தும் உயர்த்தியதையொப்ப ஷீர்டியை சாயி உயர்த்தினார்.

ஷீர்டியின் புல்லின் அரும்புகளும், கற்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைகள்.  ஏனெனில், அவைகள் எளிதாக சாயியின் திருவடிகளை முத்தமிட முடியும்.  திருவடித்தூளிகளை தமது தலையில் ஏற்றிக்கொள்ள முடியும்.  நமது அடியவர்களுக்கு ஷீர்டி மற்றுமொரு பண்டாரீபுரம், ஜகந்நாதம், த்வாரகை, காசி, ராமேஸ்வரம், பத்ரி, கேதாரம், நாசிக், த்ரயம்பகேஸ்வரம், உஜ்ஜயினி, மகாகாளேஸ்வர் அல்லது மஹாபலேஸ்வர கோகர்ணம் போன்று ஆகியது.  ஷீர்டியில் சாயிபாபாவுடன் தொடர்புகொள்வதே நமது வேதமும், தந்திரமும்.  அஃது இவ்வுலக உணர்வைத் தணித்து, தன்னுணர்வை எளிதில் வழங்குகிறது.

சாயிபாபாவின் தரிசனமே நமது யோகசாதனம்.  அவருடன் பேசுவது நமது பாவங்களைக் கழித்துறச் செய்யும்.  அவரின் திருவடிகளுக்கு நறுமண எண்ணெய் தேய்ப்பதே நமது திருவேணிப் பிரயாகை நீராடல், அவரின் திருவடித் தீர்த்தத்தை அருந்துவதனால் நமது ஆசைகள் அற்றுவிடும்.  அவரின் ஆணையே வேதம்.  அவர் உதியையும் (திருநீற்றுச்சாம்பல்), பிரசாதத்தையும் உண்ணலே எல்லாவற்றையும் தூய்மையாக்கும்.  நமக்கு ஆறுதல் அளித்த அவரே நமது கிருஷ்ணர், ராமர், அவரே நமது பரப்பிரம்மம் (பரிபூரணத்துவம்).  அவர் தாமே மாறுபட்ட இருவினைகளுக்கு அப்பாற்பட்டவராய்  தாழ்த்தப்படாமலும் உயர்த்தப்படாமலும் இருந்தார்.  எப்போதும் ஆன்மாவில் சத்து - சித்து - ஆனந்தமாகக் கவரப்பட்டார்.  அவரின் இருப்பிடம் ஷீர்டியானாலும், அவரின் செயல் இலக்குகள் பரந்து பஞ்சாப், கல்கத்தா, வட இந்தியா, குஜராத், தக்காணம், கன்னடம் ஆகியவரைக்கும் விரிந்திருந்தது.  

இவ்வாறாகத் திக்கெட்டும் நெடுந்தூரம் சாயியின் புகழ் பரவி எல்லாப் பகுதிகளிலிருந்தும் அடியவர் திருக்கூட்டம் அவரின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காக வந்தது.  அவருடைய தரிசனம் ஒன்றினாலேயே மக்களின் மனம் சுத்தமாக இருப்பினும், இல்லாவிட்டாலும் கணத்தில் அமைதியடையும்.  பண்டரீபுர விட்டல் ரகுமாயியை சேவித்த அதே ஈடு இணையற்ற மகிழ்ச்சியை அவர்கள் பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது.  இது போன்ற ஓர் அடியவர் சொல்வதைக் கேளுங்கள்.


கௌலிபுவாவின் பிரகடனம்

ஏறக்குறைய தொண்ணூற்றைந்து வயதுடைய கௌலிபுவா என்னும் ஒரு பக்தர் பண்டரீபுரத்துக்கு வருடந்தோறும் சென்று வருபவர்.  அவர் பண்டரீபுரத்தில் எட்டு மாதங்கள் தங்கினார்.  கங்கைக்கரையில் ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை வரை நான்கு மாதங்கள் தங்கினார்.  மூட்டைகளைச் சுமப்பதற்காக ஒரு கழுதையைத் தன்னுடனும், ஒரு சீடனைத் துணைவனாகவும் வைத்திருந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் தனது பண்டரீபுர விஜயத்தைச் செய்துவிட்டு, ஷீர்டிக்கு தான் மிகவும் அன்பு செலுத்திய சாயிபாபாவைப் பார்க்க வருவார்.  அவர் பாபாவை உற்றுநோக்கி இவ்வாறாகக் கூறுவது வழக்கம்.  "இவரே ஏழைகளிடத்தும், தீனர்களிடத்தும் கருணை காட்டும் கடவுளான பண்டரிநாத விட்டலின் அவதாரமாவார்."   கௌலிபுவா, விட்டலின் முதிய அடியவர்.  பண்டரிக்கு அநேகமுறை விஜயம் செய்தார்.  சாயிபாபா பண்டரிநாதரே என்பதைப் பிரகடனம் செய்தார்.


விட்டல் தாமே தோன்றினார்

இறைவனது நாமத்தை நினைத்துக் கொண்டிருத்தலிலும், பாடுதலிலும் சாயிபாபா மிகவும் விருப்பமுள்ளவர்.  அவர் எப்போதும் 'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்றார்.  தனது முன்னிலையில் மற்றவர்களை கடவுளது நாமத்தை இரவும், பகலும் தொடர்ந்து ஏழு நாட்கள் பாடும்படி செய்தார்.  இதற்கு நாம சப்தாஹம் என்று பெயர்.  ஒருமுறை அவர் தாஸ்கணு மஹராஜை நாம சப்தாஹம் செய்யும்படி சொன்னார்.  ஏழாவது நாளின் முடிவில் விட்டல் பிரசன்னமாவதற்கு உறுதியளித்தால் தான் அதைச் செய்வதாக அவர் கூறினார்.  அதற்கு பாபா தமது நெஞ்சின்மேல் கைவைத்து நிச்சயம் விட்டல் பிரசன்னம் ஆவார் என் உறுதியழித்து, "ஆனால் அந்த பக்தன் ஊக்கமுடையவனாகவும், பக்தியுடையவனாகவும் இருக்கவேண்டும்" என்று கூறினார்.  டாகூர்நாத்தின் டங்கபுரி (தகூர்), விட்டலின் பண்டரி, ரஞ்சோடின் (கிருஷ்ணனின்) த்வாரகை எல்லாம் இங்கே (ஷீர்டியில்) இருக்கின்றன.  த்வாரகையைப் பார்க்க எவரும் வெகுதூரம் செல்லவேண்டியதில்லை.  இவ்வாறாக அன்பாலும், பக்தியாலும் பக்தன் பொங்கிக்கொண்டிருக்கும்போதுதான் விட்டல் தாமே இங்கு (ஷீர்டியில்) பிரசன்னமாவார்.

சப்தாஹம் பூர்த்தியானதும் விட்டல் கீழ்கண்ட விதமாகப் பிரசன்னமாகவே செய்தார்.  வழக்கம் போல குளித்து முடித்தபின் காகா சாஹேப் தீஷித் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவர் ஒரு காட்சியில் விட்டலைக் கண்டார்.  மத்தியானம் பாபாவின் தரிசனத்துக்காகச் சென்றபோது பாபா ஐயமற அவரை நோக்கி, "விட்டல் பாடீல் வந்தாரா?  நீர் அவரைக் கண்டீரா?  அவர் விளையாட்டுப் பிள்ளை போன்றவர்.  அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்.  இல்லாவிடில் நீர் சிறிதே கவனக் குறைவாக இருப்பினும் தப்பித்துவிடுவார்", எனக் கூறினார்.  இது காலையில் நிகழ்ந்தது.  மத்தியானம் மற்றுமொரு விட்டல் தரிசனம்.  வெளியிலிருந்து ஒரு ஹக்கர் (பொருட்களை கையில் எடுத்துச்சென்று வீதியில் விற்பவர்) 25 அல்லது 30 விட்டோபா படங்களை விற்றுக்கொண்டு வந்தான்.  அப்படம் காகா சாஹேபின் காட்சியில் தோன்றிய உருவத்துடன் ஒத்து இருந்தது.  இதைக் கண்டும், பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்தும், காகா சாஹேப் தீஷித் ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியுற்றார்.  ஒரு படத்தை வாங்கி தனது பூஜை அறையில் வழிபாட்டுக்காக வைத்தார்.


பகவந்த்ராவ் ஹுர்சாகரின் கதை

பகவந்த்ராவ் ஹுர்சாகரின் கதை, பாபா விட்டல் வழிபாட்டில் எவ்வளவு ஆர்வமுள்ளவராக இருந்தார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  பகவந்த்ராவின் தந்தையார் விட்டோபாவின் உருவம் பக்தர்.  பண்டரீபுரத்த்துக்கு வருடாந்திரப் பயணம் செய்யும் பழக்கமுடையவர்.  தமது வீட்டிலும் விட்டோபாவின் உருவம் வைத்து அவர் வழிபட்டார்.  அவர் இறந்தபின் அவரது மகன் வருடாந்திரப் பயணம், வழிபாடு, ஸ்ரார்த்தம் முதலியவை அனைத்தையும் நிறுத்திவிட்டார்.  பகவந்த்ராவ் ஷீர்டிக்கு வந்தபோது, பாபா அவரது தந்தையை நினைவு கூர்ந்து கூறியதாவது, "அவரது தந்தை எனது சிநேகிதன்.  எனவே நான் அவரை இங்கு இழுத்தேன்.  அவர் நைவேத்யம் படைக்காது விட்டலையும், என்னையும் பட்டினி போட்டார்.  எனவே அவரை நான் இங்கு கொணர்ந்தேன்.  அவருடன் வாதாடி வழிபாடு செய்ய வைப்பேன்".


தாஸ்கணுவின் பிரயாகைக் குளியல்

கங்கையும், யமுனையும் சந்திக்கும் இடங்களிலுள்ள பிரயாகை என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது மிகவும் பாக்கியமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் குறிப்பிட்ட காலங்களில் புண்ணிய ஸ்நானத்திற்காக அவ்விடம் செல்கிறார்கள்.  ஒருமுறை தாஸ்கணு, தான் ஸ்நானம் செய்வதற்காக பிரயாகை போகவேண்டுமென்று நினைத்தார்.  பாபாவிடம் அங்ஙனமே செய்வதற்கு அனுமதி வேண்டிவந்தார்.  பாபா அவருக்குச் சொல்லிய பதில், "அவ்வளவு தூரம் போகவேண்டிய அவசியமில்லை.  நமது பிரயாகை இங்கேயே இருக்கிறது.  என்னை நம்பு" என்றார்.  அப்போது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!  தாஸ்கணு தனது தலையை பாபாவின் அடிகளில் வைத்ததும் கங்கை, யமுனை ஆறுகளின் புனிதநீர் பாபாவின் இரண்டு காற்கட்டை விரல்களிலிருந்து சீராக வெளிப்பட்டது.  

இவ்வாச்சரியத்தைக் கண்ணுற்ற தாஸ்கணு அன்பு ஆழ்ந்த மரியாதை உணர்ச்சியால் பெரிதும் கவரப்பட்டார்.  அவர் கண்கள் நீரால் நிறைந்தன.  அந்தரங்கத்தில் அவர் உணர்ச்சியால் உந்தப்பட்டார்.  அவருடைய பேச்சு, பாபாவின் புகழையும் அவரின் லீலைகளையும் குறிப்பிடும் கவிதையாகப் பொங்கி வெளிப்பட்டது.  


சாயிபாபாவின் அயோனி ஜன்மமும் அவரின் முதல் ஷீர்டி விஜயமும் 

சாயிபாபாவின் பெற்றோர், பிறந்த இடம் இவற்றைப்பற்றி ஒருவருக்கும் தெரியாது.  பல விசாரணைகள் செய்யப்பட்டன.  பாபாவிடமும், மற்றவர்களிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன.  ஆனால் திருப்தியான பதிலோ செய்திகளோ கிடைக்கவில்லை.  வழக்கத்தில் இவைகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது.  சாதாரண மனிதர்களையொப்ப நாமதேவர், கபீர் முதலியோர் பிறக்கவில்லை.  அவர்கள் சிசுக்களாக, முத்துக்களின் தாயினிடத்தில் (ஆற்றில்) காணப்பட்டார்கள்.  நாமதேவ், கோணாயியால் பிம்ராதி ஆற்றிலும் - கபீல், தமால் என்பவரால் பாகீரதி ஆற்றிலும் கண்டெடுக்கப்பட்டார்கள்.  சாயிபாபாவின் விஷயமும் அதையொத்ததாகும்.  பக்தர்களுக்காக ஒரு வேப்பமரத்தடியில் 16 வயது இளையனாகத் தாமே முதலில் தோன்றினார்.  அப்போதே பிரம்மஞானத்தால் நிரம்பியவராகக் காணப்பட்டார்.  கனவிலும் இவ்வுலகப் பொருட்களின் ஆசை அவர்க்கு இல்லை.  மாயையை அவர் உதைத்துத் தள்ளினார்.  முக்தி அவர்தம் காலடியில் பணி செய்தது.  ஷீர்டியைச் சேர்ந்தவரும் நாநாசோப்தாரின் தாயாருமாகிய ஒரு பாட்டி அவரைக் கீழ்கண்டவிதமாக வர்ணிக்கிறார்.

அழகும், சுறுசுறுப்பும், மிகுந்த சுந்தரமும் உடைய இவ்விளைஞன் முதலில் வேப்பமரத்தின் அடியில் ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு காணப்பட்டான்.  அக்கிராமத்து மக்கள், இத்தகைய இளம் வயது உடையவன் வெப்பத்தையோ, குளிரையோ பொருட்படுத்தாது அத்தகைய கடினப் பயிற்சி பழகுவதைக் கண்ணுற்று ஆச்சரியத்தால் தாக்கப்பட்டனர்.  பகலில் ஒருவருடனும் பழகுவதில்லை.  இரவில் ஒருவருக்கும் அஞ்சுவதில்லை.  இவ்விளைஞன் எங்கிருந்து வந்தான் என்று மக்கள் ஆச்சர்யப்பட்டுக் கேட்டுக்கொண்டனர்.  ஒரு சாதாரண கவனிப்பே, அவன்மீது எல்லோரும் அன்பு கொள்ளும் அளவிற்க்கு அவனுடைய உருவாம்சங்களெல்லாம் அத்தகைய சுந்தரம் பொருந்தியதாக இருந்தது.  அவன் ஒருவர் வீட்டிற்கும் செல்வதில்லை.  எப்போதும் வேப்பமரத்தடியே உட்கார்ந்திருந்தான்.  வெளித்தோற்றத்திற்கு இளைஞனாகக் காணப்பட்டான்.  ஆயினும் அவன் செய்கைகள் உண்மையிலேயே அவன் ஒரு பரமாத்மா என்பதை வெளியிட்டன.  அவன் வேண்டுதல் - வேண்டாமையின் பருப்பொருளாகவும் அனைவருக்கும் ஓர் மர்மமாகவும் இருந்தான்.  ஒருநாள் கண்டோபா கடவுள் ஒரு அடியவனிடம் "சாமி" பிடித்தது.  ஜனங்கள் அவரை, "தெய்வமே இவ்விளைஞனின் தந்தை யார்?  அவன் எப்போது வந்தான் என்பதை நீர் தயவுசெய்து விசாரியும்" எனக் கேட்கத் துவங்கினர்.

கண்டோபா அவர்களை ஒரு மண்வெட்டி கொணரச் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்டச் சொன்னார்.  அங்ஙனமே தோண்டப்பட்டபோது செங்கற்கள் காணப்பட்டன.  அதற்கடியில் சமதளகல் ஒன்றும் இருந்தது.  இந்தக்கல் அப்புறப்படுத்தப்பட்டதும் ஒரு நிலக்கதவு தெரிந்தது.  அதில் நான்கு சமயி (ஐந்துமுக விளக்குகள்) எரிந்துகொண்டிருந்தன.  அது ஒரு நிலவறைக்கு அழைத்துச் சென்றது.  அதில் ஜபமாலைகள், அவற்றை வைத்து ஜபம் செய்யும் பசுமுக உருவப் பைகள், மரப்பலகைகள் முதலியவை காணப்பட்டன.  கண்டோபா கடவுள் கூறியதாவது, "இவ்விளைஞன் இங்கு 12 ஆண்டுகளாகப் பயிற்சி செய்தான்".  பிறகு ஜனங்கள் அவ்விளைஞனிடம் இதைப்பற்றிக் கேட்கத் துவங்கினர்.  அவன் அவர்களை திசைதிருப்பி, அது தன்னுடைய குருவின் இடம் (குருஸ்தான்) என்றும் அவருடைய புனிதமான 'வாதன்' என்றும் அதை நன்றாகப் பாதுகாக்கும்படியும் வேண்டிக்கொண்டான்.  ஜனங்கள் அப்போது கதவை முன்பிருந்தபடியே மூடிவிட்டனர்.  அரசமரமும், அத்திமரமும் புனிதமாய் இருப்பதுபோல் பாபா வேப்பமரத்தையும் அதே அளவில் புனிதமாகக் கருதி, அதையே பெரிதும் விரும்பினார்.  மஹல்ஸாபதியும் மற்ற அடியவர்களும் இவ்விடத்தை பாபாவின் குருநாதர் சமாதியடைந்த இடமாகக் கருதி சாஷ்டாங்க சரணம் செய்தனர்.


மூன்று வாதாக்கள் 

  1. வேப்பமரம் இருக்குமிடமும், அதைச் சுற்றியுள்ள இடமும் ஹரிவிநாயக் சாதே அவர்களால் வாங்கப்பட்டு சாதியின் வாதா என்ற பெயரில் ஒரு பெரிய கட்டிடம் எழுப்பப்பட்டது.  அங்கு திரண்ட புனித யாத்ரீகர்களுக்கு அது ஒன்றே தங்கும் இடமாய் இருந்தது.  ஒரு 'பார்' (மேடை) வேப்பமரத்தைச் சுற்றி கட்டப்பட்டது.  தங்கும் இடமும் படிக்கடுகளுடன் அமைக்கப்பட்டது.  படிக்கட்டுகளின் அடியில் ஒரு இருப்பிடம் இருக்கிறது.  பக்தர்கள் அம்மேடையில் வடக்கு நோக்கி அமர்கிறார்கள்.

    வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மாலைநேரங்களில் அங்கு வாசனைப் பொருட்களை எரிப்பவர்கள் கடவுள் கிருபையால் மகிழ்ச்சியுடன் இருப்பர்.  இந்த வாதா பழமையானது.  உதிர்ந்துகொட்டும் தன்மை உடையதாகவும், பழுதுபார்க்க வேண்டியதாகவும் இருந்தது.  அதற்கு தேவையாயிருந்த பழுதுபார்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாறுபாடுகள் எல்லாம் சமஸ்தானத்தால் செய்யப்பட்டன.
  2. சில ஆண்டுகளுக்குப்பின் தீஷித் என்ற பம்பாய் வக்கீல் இங்கிலாந்து சென்றிருந்தார்.  அங்கு நேரிட்ட ஒரு விபத்தில் தனது காலை முறித்துக்கொண்டார்.  இக்காயம் எந்த விதத்திலும் குணப்படும் வழியைக் காணவில்லை.  நானா சாஹேப் சாந்தோர்கர், சாயிபாபாவிடம் முயற்சிக்கும்படி அறிவுறுத்தினார்.  எனவே 1909ல் சாயிபாபாவைக் கண்டு தனது கால் ஊனத்தைவிட, தனது மன ஊனத்தைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்.  சாயிபாபாவின் தரிசனத்தால் மகிச்சியுற்று ஷீர்டியிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.  எனவே தனக்காகவும், அடியவர்களுக்காகவும் ஒரு வாதாவை எழுப்பினார்.  10.02.1910  அன்று அக்கட்டிடத்திற்கு அஸ்திவாரம் இடப்பட்டது.

    இந்த நாளில் மற்ற இரு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

    (I)  தாதா சாஹேப் கபர்டே தனது வீடு திரும்புவதத்க் அனுமதி அளிக்கப்பட்டார்.


    (II) சாவடியில் இரவு ஆரத்தி தொடங்கியது.  இந்த வாதா கட்டி முடிக்கப்பட்டு 1911ல் ராமநவமி தினத்தில் உரிய மரியாதைகளுடனும், சம்பிதாயங்களுடனும் பிரவேசம் செய்யப்பட்டது.

  3.  நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற லட்சாதிபதியான பூட்டி அவர்களால் மற்றொரு வாதா அல்லது அரண்மனை மாளிகையும் எழுப்பப்பட்டது.  ஏராளமாக பணம் இக்கட்டிடத்திற்கு செலவிடப்பட்டது.  ஏனெனில், சாயிபாபாவின் உடல் இவ்விடத்தில்தான் அடக்கும் செய்யப்பட்டு இருக்கிறது.  இது தற்போது சமாதி கோவில் (சமாதிமந்திர்) என வழங்கப்படுகிறது.  இவ்விடத்தில் பாபா தண்ணீர்விட்டு கவனித்து வந்த ஓர் பூந்தோட்டம் இருந்தது.  முன்னர் ஒன்றுமே ஒன்றுமே இல்லாத இடத்தில் மூன்று வாதாக்கள் எழும்பின.  இவை எல்லாவற்றிலும் ஆரம்பகாலத்தில் அனைவருக்கும் சாதேவின் வாதாவே நிரம்பப் பயன்பட்டது.  

     
வாமன் தாத்யாவின் உதவியுடன் சாயிபாபா கவனித்த தோட்டத்தின் கதை, சாயிபாபா ஷீர்டியில் தற்காலிகமாக இல்லாதிருந்து சாந்த்பாடீலின் கல்யாண ஊர்வலத்துடன் மீண்டும் வருகை.  தேவிதாஸ், ஜானகிதாஸ், கங்காகீர் இவர்களின் பழக்கம்.  மொஹிதின் தம்போலியுடன் பாபாவின் மல்யுத்தப் போட்டி. மசூதியில் இருப்பிடம்.  டேங்க்லே மற்ற அடியவர்களின் அன்பு, மற்ற பிற விஷயங்கள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்.

ஸ்ரீ சாயியைப் பணிக  அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும் 

  
  

   

Thursday, 5 January 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 3

அத்யாயம் - 3 
சாயிபாபாவின் அனுமதியும் வாக்குறுதியும் - அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் - பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் - அவரின் தாயன்பு - ரோஹிலாவின் கதை - பாபாவின் சுவையும் அமுதமுமான மொழிகள். 

முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டபடி சாயிபாபா தமது பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கூறியதாவது,
"சத்சரிதம் எழுதுவதைப் பற்றி நான் உம்முடன் முழுமையாகச் சம்மதிக்கிறேன்.  நீர் உமது கடமையைச் செய்யும்.  சிறிதளவும் அஞ்சாதீர்.  என் மொழிகளில் நம்பிக்கை வையும், என்னுடைய லீலைகள் எழுதப்படுமானால் அறியாமை அகலும், அவைகள் கவனத்துடனும், பக்தியுடனும் கேட்கப்படுமானால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து, பக்தி - அன்பு ஆகியவற்றின் வலிமையான அலைகள் மேலெழும்பும்.  என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் முழுகுவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை எடுப்பான்."

இதைக்கேட்டு இந்நூல் ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.  உடனே தன்னம்பிக்கை உடையவராயும், பயமற்றவராயும் ஆனார்.  இப்பணி வெற்றிகரமாக நிறைவேறியே தீரவேண்டும் என்றும் எண்ணினார்.  பிறகு ஷாமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே) திரும்பி பாபா கூறியதாவது, "ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிப்பானாகில் நான் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன்.  என் வாழ்க்கையையும் செயல்களையும் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லாத் திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன்.  என்னிடம் உள்ளத்தையும் உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ்வெய்துவர்.  நம்பிக்கையுடன் என் லீலைகளை எவனாவது இசைப்பானாயின் அவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கி என்றும் நிலைத்திருக்கும் திருப்தியை அளிப்பேன்.


எவன் என்னிடம் பூரண சரணாகதி அடைகிறானோ, எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகிறானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் புரிகிறானோ அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.  என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், எனது வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ணி இவ்வாறாக என்னை நினைவில் இருத்தி இருப்பவர்கள் எங்ஙனம் உலகப் பொருட்கள், உணர்ச்சிகள் இவைகளில் கவனம் உள்ளவர்களாக இருக்க முடியும்?  சாவின் வாயினின்று அடியவர்களை நான் வெளியே இழுத்து விடுவேன்.

எனது கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும்.  எனது கதைகளை மரியாதையுடன் கேட்டு அவற்றை எண்ணித் தியானம் செய்து கிரகித்துக்கொள்ளுங்கள்.  இதுவே மகிழ்ச்சிக்கும் திருப்திக்குமான மார்க்கமாகும்.  என் அடியவர்களின் பெருமையும், அகம்பாவமும் அற்றுவிடும்.  கேட்பவரின் மனம் அமைதிப்படுத்தப்படும்.  அன்றியும் அது இதயபூர்வமும் முழுமையுமான பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சியுடன் ஒன்றாகி விடும்.  'சாயி சாயி' என்று சாதரணமாக ஞாபகமூட்டிகொள்வதே பேசுவதில், கேட்பதில் உள்ள பாவங்களைத் தீர்க்கும்."



அடியார்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகள்

ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கிறார்.  சிலர் கோவில், மடம் ஆகியவற்றை கட்டுவதற்கும் சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கும் நியமிக்கப்படுகிறார்கள்.  சிலர் ஷேத்ராடன  யாத்திரைக்கு அனுப்பப்படுகிறார்கள்.  ஆனாலும் எனக்கு சத்சரிதம் எழுதும் வேலை ஒப்படைக்கப்பட்டது.  எல்லாம் சிறிது தெரிந்து ஒன்றும் முழுமையாகத் தெரியாதவனைப் போன்ற நான் இப்பணிக்குக் கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன்.  பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மே
ற்கொள்ள  வேண்டும்.  எவரே சாயிபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்?  சாயிபாபாவின் அருள் ஒன்றுமட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும்.  எனவே நான் எனது பேனாவைக் கையில் எடுத்தபோது சாயிபாபா எனது அஹங்காரத்தை அகற்றிவிட்டு அவரே தமது நிகழ்ச்சிகளையெல்லாம் வரையலனார்.  ஆதலின் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் விவரிப்பதன் பெருமை அவரையே அடைகிறது.  என்னையல்ல!

பிறப்பில் மறையவனாக இருப்பினும் ஸ்ருதி, ஸ்
ம்ருதி  என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன்.  எனவே சத்சரிதத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன்.  ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது.  முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது.  அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார்.  புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்புகிறது என்பதை அறியா.  இது அவற்றை வாசிப்பவனையே சார்ந்தது.  சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே.  அவற்றின் தன்மையால் அல்ல.


கலங்கரை விளக்காக பாபாவின் கதைகள்

படகுக்காரர்கள்- பாறைகள், அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி பத்திரமாக பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது.  சம்சாரம் என்னும் சாகரத்தில் சாயிபாபாவின் கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன.  அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டுகின்றன.  நமது உலகப் பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன.  ஞானிகளின் கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள்.  நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள் புகும்போது சரீராபிமானம் அல்லது அஹங்காரம், த்வைத உணர்ச்சி ஆகியவை மறைகின்றன.  நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப்ப்படுமானால் சந்தேகம் பறந்தோடும், சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும்.  ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும்.  பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும்.  க்ருதயுகத்தின் ஆன்மீகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), த்ரேதாயுகத்திற்கு தியாகம், த்வாபரயுகதிற்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவதுமாகும்.  கடைசிப் பயிற்சியானது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த எல்லார்க்கும் உரியதாகும்.  மற்றைய பயிற்சிகளான யோகம், தியாகம், தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை.  இறைவனது (சாயிபாபா) புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும்.  நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும்.  கதைகளைக் கேட்பதும், கீர்த்தனையாகப் பாடுவதும் புலனுணர்வுப் பொருட்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழிநடத்திச் செல்லும்.  இக்குறிக்கோளையே கருத்திற்கொண்டு சாயிபாபா 'சத்சரிதாம்ருதா' என்னும் அவரது கதைகளை எழுதச்செய்தார், அல்லது உதவி செய்தார்.  அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப் படிக்கவோ, கேட்கவோ செய்யலாம்.  அங்ஙனம் செய்யும்போது அவரைத் தியானம் செய்க.


 சாயிபாபிவின் தாயன்பு

தன் இளங்கன்றை பசு எங்ஙனம் நேசிக்கிறது என்பதை யாவரும் அறிவர்.  அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கிறது.  கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது.  அங்ஙனமே தாயாரும் தக்க தருணத்தில் தன் குழந்தையின் பசியறிந்து முலையமுது தந்து ஊட்டுகிறாள்.  அதற்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும், சிறப்புச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறாள்.  குழந்தை எதைப்பற்றியும் அறிவதுமில்லை, கவலையுறுவதுமில்லை.  ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கபட்டிருப்பதைக்  கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை.  தாயன்பு விசித்திரமானது, அசாதாரணமானது, பற்றில்லாதது, இணையில்லாதது.  தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்கள்.  இத்தகைய அன்பே சாயிபாபா என்னிடம் கொண்டிருந்தது.  அதைப் பற்றிய நிகழ்ச்சியே கீழ்வருமாறு:

நான் அரசாங்க வேலையிலிருந்து 1916ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.  கௌரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட பென்ஷன் போதவில்லை.  குருபூர்ணிமா அன்று நான் ஷீர்டிக்குச் சென்றிருந்தேன்.  அங்கு அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பாபாவிடம் எனக்காக வேண்டினார்.  "தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள்.  அவர் பெறும் பென்ஷன் அறவே போதாது.  அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது.  அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள்.  அவரது சிந்தா குலந்தனைத் தீர்த்து அவரை மகிழச்செயுங்கள்."


பாபா பதில் அளித்தார், "அவர் வேறு ஏதாவது வேலை பெறுவார்.  ஆயின், இப்போது எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.  அவரது உணவு எப்போதும் நிறைந்திருக்கும்.  ஒருபோதும் காலியாய் இராது.  அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நாத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள்  இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும், அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும், உயிராலும் என்னை வணங்க வேண்டும்.  இதைச் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார்."


எவருடைய வழிபாடு உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த நான் என்பது யார் என்னும் வினாவுக்கு சாயிபாபா என்பது யார் என்னும் குறிப்பில் முன்னமே இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. 




ரோஹிலாவின் கதை

எல்லோரையும் அரவணைக்கும் சாயிபாபாவின் அன்பை ரோஹிலாவின் கதை நமக்குக் காட்டுகிறது.  உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவனாகவுமுள்ள ரோஹிலா என்பவன் ஷீர்டிக்கு வந்தான்.  நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தான்.  பாபாவிடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தான்.  இரவும், பகலும் கலிமாவை (திருக்குரானின்) பாடல்கள் சத்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து 'அல்லாஹு அக்பர்' (கடவுள் பெரியவர்) என்று கத்துவான்.  ஷீர்டியின் பெரும்பாலான மக்கள் பகலெல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும்போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள்.  அவர்கள் தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகரியமும் அடைந்தனர்.  மௌனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் இத்துயரம் படமுடியாது என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டனர்.  

பாபா அவர்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை.  மாறாக அவர்களைக் கடிந்தார்.  அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும், ரோஹிலாவைக் கவனிக்கவேண்டாம் என்றும் கூறினார்.  அவர் மேலும் ரோஹிலாவுக்கு மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும் அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும், தம்மையும் தொந்தரவு செய்வதையும் ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ள நுழையத் துணியவில்லையென்றும் ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.  உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது.  அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும்.  ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும், முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பாபா விரும்பினார்.  அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல்களையும், கூக்குரல்களையும் பொறுத்துக்கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்.




பாபாவின் இனியதும் அமுதத்தினையொத்த வார்த்தைகளும் 

ஒருநாள் மத்தியானம் ஆரத்தி முடித்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.  அப்போது பாபா கீழ்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார்.


"நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்.  என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.  ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும்.  நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்.  இந்த உலகின்கண்  அசையும் - அசையா சர்வஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.  இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே, முக்குணங்களின் கூட்டுறவும் நானே.


நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்.  என்பால் கவனத்தை திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது.  ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.  எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய , அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்."


இத்தகைய அழகான விலைமதிப்பற்ற மொழிகளைக் கேட்டு, இனிமேல் என் குருவைத் தவிர வேறு யாருக்கும் நான் பணிவிடை செய்யப்போவதில்லை என்று என் மனதில் நான் தீர்மானித்தேன்.  அண்ணா சிஞ்சணீகரிடம் பாபா விடுத்த பதில் (உண்மையில் அது எனக்கானதாகும்)  அதாவது நான் ஒரு வேலை பெறுவேன் என்ற எண்ணம் என் மனதில் சுழன்றது.  நான் அங்ஙனம் நிகழுமா என்று எண்ணிக்கொண்டிருதேன்.  எதிர்கால நிகழ்சிகளைக் காணுறும் போது பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின.  நான் ஓர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றேன்.  ஆனால் குறுகியகால அளவுடையது.  பிறகு நான் சுதந்திரம் அடைந்தேன்.  என் குரு சாயிபாபாவினுடைய சேவைக்கு என்னைப் பூரணமாகச் சமர்ப்பித்தேன்.


இவ்வத்தியாயத்தை முடிக்கும் முன்பாக பல்வேறு இடைஞ்சல்களான தூக்கம், சோம்பல், மனது அலைதல் , உணர்வுகளுடன் உறவு இவற்றை விட்டொழித்துவிட்டுத் தங்களுடைய முழுமையும், சிதைவுமற்ற கவனத்தை சாயிபாபாவின் கதைகளுக்கு அளிக்கும்படி இந்நூலைப் பயில்வோரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.  அவர்களது அன்பு இயற்கையானதாக இருக்கட்டும்.  பக்தியின் ரகசியத்தை அவர்கள் அறியட்டும்.  மற்ற பல சாதனைகள் புரிந்து களைப்படைய வேண்டாம்.  ஓர் எளிய மருந்தை அவர்கள் பற்றட்டும்.  அதாவது சாயிபாபாவின் கதைகளைக் கேட்பது.  இது அவர்களின் அறியாமையை அழித்து அவர்களுக்கு முக்தி நல்கும்.  ஓர் உலோபி பல்வேறு இடங்களில் தங்கினாலும், தன்னுடைய புதைக்கப்பட்ட செல்வத்திலேயே சதா சிந்தனை உள்ளவனாக இருப்பதைப்போல், சாயிபாபா நம் அனைவரின் உள்ளமெனும் அரியாசனத்தில் வீற்றிருக்கட்டும்.


அடுத்த அத்தியாயத்தில் சாயிபாபாவின் ஷீர்டி விஜயத்தைப் பற்றிக் கூறுகிறேன்.


ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்