Friday, 31 August 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 28

•  ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்
•  1.  லக்ஷ்மிசந்த்
•  2.  புர்ஹாண்பூர் மாது
•  3.  மேகா





சாயி முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல.  எறும்பு, பூச்சிகள் முதற்கொண்டு பிரம்மாவரையுள்ள எல்லா ஜீவராசிகளிலும் அவர் உறைந்திருக்கிறார்.  அவர் சர்வவியாபி.  வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர்.  அங்ஙனமே ஆத்ம உணர்விலும்.  இவை இரண்டிலுமே அவர் வல்லவராகையால் சத்குருவாய் இருப்பதற்கு அவர் மிகப்பொருத்தமானவர்.  சீடர்களைத் தட்டியெழுப்பி, அவர்களை ஆத்ம உணர்வில் ஸ்தாபிக்க இயலாத யாரும், எவ்வளவு கற்றறிந்தவராக இருப்பினும் சத்குரு என்றழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவராகார்.  பொதுவாக இவ்வுடலை அன்னை ஈன்றெடுக்கிறாள்.  தவறாமல் வாழ்வை, சாவும் பின் தொடர்கிறது.  ஆனால் சத்குருவோ, வாழ்வு - சாவு இரண்டையுமே சத்குரு அழித்துவிடுகிறார்.  எனவே மற்றெவரைக் காட்டிலும் அதிகக் கருணையும், அன்பும் உடையவராவார்.

சாயிபாபா அடிக்கடி கூறுவதாவது:  "எனது ஆள் (பக்தன்) எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவியைப் போன்று ஷீரடிக்கு இழுக்கப்படுவான்".  இந்த அத்தியாயம் அம்மாதிரி மூன்று சிட்டுக்குருவிகள் இழுக்கப்பட்ட கதையைக் கூறுகின்றது. 



(1)  லாலா லக்ஷ்மிசந்த்

பம்பாயில்
ஸ்ரீ வெங்கடேஸ்வர் அச்சகத்தில் இம்மனிதர் பணியாற்றி வந்தார்.  பின்னர் ரயில்வே டிபார்ட்மெண்டிலும் அதன்பின் ராலி பிரதர்ஸ் & கம்பெனியிலும் இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றினார்.  1910ல் அவர் பாபாவின் தொடர்பு பெற்றார்.  கிறிஸ்துமஸுக்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக, தாடியுடன் கூடிய கிழவனார் ஒருவர் தம் பக்தர்கள் புடைசூழ நின்று கொண்டிருப்பதைத் தான் சாந்தாக்ருஸில் இருக்கும்போது கனவில் கண்டார்.  சிலநாட்களுக்குப் பின் தாஸ்கணுவின் கீர்த்தனையைக் கேட்பதற்காகத் தமது நண்பரான தத்தாத்ரேயா மஞ்சுநாத் பிஜூர் என்பவரின் வீட்டுக்குச் சென்றார்.  கீர்த்தனை செய்யும்போது மக்கள்முன் பாபாவின் படத்தை வைப்பது தாஸ்கணுவின் வழக்கமாகும்.  தான் கனவில் கண்ட கிழவனாரின் உருவ அமைப்புக்கள் எல்லாம் இப்படத்துடன் அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு லக்ஷ்மிசந்த் அதிசயப்பட்டார்.  தான் கனவில் கண்ட கிழவனார் சாயிபாபாவே என்ற முடிவிற்கு வந்தார்.

இச்சி
த்திரத்தின் தரிசனம், தாஸ்கணுவின் பாடல், அவர் உரை நிகழ்த்திய துகாராமின் வாழ்க்கை இவை அனைத்தும் அவர் மனதில் ஓர் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது.  அவர் ஷீர்டி போகத் தீர்மானித்தார்.  சத்குரு தேடும் படலத்திலும், ஆன்மிக முயற்சியிலும் கடவுள் எப்போதும் உதவி செய்கிறார் என்பது பக்தர்களின் அனுபவமாகும்.  அதனால் இரவு 8 மணியளவில் சங்கர் ராவ் என்ற அவரது நண்பர், வீட்டுக் கதவைத் தட்டி, ஷீர்டிக்குத் தன்னுடன் அவர் வருவாரா என்று கேட்டார்.  அவரது மகிழ்ச்சி கரை காணவில்லை.  உடனே அவர் ஷீர்டி செல்லத் தீர்மானித்தார்.  தனது மாமாவிடமிருந்து ரூ.15ஐ கடன் வாங்கிக்கொண்டு உரிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தான பிறகு அவர் ஷீர்டிக்குப் புறப்பட்டார்.  ரயிலில் அவரும் அவரது நண்பரும் சில பஜனைப் பாடல்களைப் பாடினர்.  ஷீர்டிக்கு அருகில் உள்ள தங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த, உடன் வந்த நான்கு முஹமதியப் பிரயாணிகளிடம் அவர்கள் இருவரும் சாயிபாபாவைக் குறித்து விசாரித்தனர்.

பல ஆண்டுகளாக ஷீர்டியில் வசித்துவரும் சாயிபாபா ஒரு பெரும் ஞானி என்று அவர்கள் எல்லோரும் கூறினர்.  அவர்கள் கோபர்காவனை அடைந்தபோது, பாபாவுக்குச் சமர்ப்பிப்பதற்காக சில பழங்களை லக்ஷ்மிசந்த் வாங்க விரும்பியிருந்தார்.  ஆனால் அங்குள்ள இயற்கைக் காட்சிகள், வேடிக்கை வினோதங்கள் இவற்றில் அவ்வளவு தூரம் கவரப்பட்டவராய் அதிலேயே ஆழ்ந்து மூழ்கி மேற்படிப் பழங்களை வாங்குவதை மறந்தே போய்விட்டார்.  ஷீர்டியை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் பழங்களைப் பற்றி அவருக்கு நினைவு வந்தது.  அதே சமயத்தில் தலையில் பழக்கூடையுடன் இருந்த கிழவி ஒருத்தி வண்டியைத் தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டார்.  வண்டி நிறுத்தப்பட்டது.  மகிழ்வுடன் சில பழங்களைப் பொறுக்கி அவர் வாங்கினார்.  அப்போது, "மீதமுள்ளவற்றையும் எடுத்துக்கொண்டு போய் என் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பியுங்கள்" என்றாள் அக்கிழவி.  பழங்களை அவர் வாங்க எண்ணியிருந்தது, அவர் அதை மறந்துபோனது, அக்கிழவியின் குறுக்கீடு, பாபாவின்பால் அவளது பக்தி, ஆகிய இந்த உண்மைகள் அனைத்தும் அந்த இரு நண்பர்களுக்கும் வியப்பையூட்டியது.

இந்தக் கிழவி, தான் கனவில் கண்ட கிழவனாருக்கு ஏதேனும் உறவுபோலும் என்று லக்ஷ்மிசந்த் நினைத்தார்.  பின்னர் மீண்டும் அவர்கள் சவாரி செய்து ஷீர்டிக்கருகில் வந்தனர்.  மசூதியில் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்டு அதற்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர்.  கையில் பூஜை சாமான்களுடன் மசூதிக்குச் சென்று உரியமுறையில் பாபாவை வழிபட்டனர்.  லக்ஷ்மிசந்த் பாபாவைக் கண்டதும் மிகவும் உருகி, அதிக மகிழ்ச்சியடைந்தார்.  நறுமணம் கமழும் தாமரை மலரால் தேனீ ஒன்று கவரப்படுவதுபோல் பாபாவின் திருவடிகளில் அவர் கவரப்படார்.

பின்னர் பாபா கூறினார்:  "வஞ்சகமான ஆசாமி!  வழியில் பஜனை செய்கிறான்.  மற்றவர்களை விசாரிக்கிறான்.  ஏன் மற்றவர்களைக் கேட்கவேண்டும்?  நமது கண்களாலேயே எலாவற்றையும் நாம் காணவேண்டும்.  மற்றவர்களைக் கேட்கவேண்டிய அவசியம் என்ன?  உனது கனவு மெய்யா, பொய்யா என்று நீயே எண்ணிப்பார்.  மார்வாடியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்காக வரவேண்டிய தேவையென்ன?  உள்ளத்தின் ஆசை இப்போது நிறைவடைந்ததா?"

இம்மொழிகளைக் கேட்டு பாபாவின் சர்வ வியாபித்துவத்தைக் கண்டு லக்ஷ்மிசந்த் அதிர்ச்சியடைந்தார். 
தனது வீட்டிலிருந்து தான் ஷீர்டிக்கு வரும் வழியில் நிகழ்ந்தது எல்லாவற்றையும் பாபா அறிந்தது எங்ஙனம் என்று திகைத்து நின்றார். 

தமது தரிசனத்தைப் பெறுவதற்காகவோ, எந்த ஒரு விழா நாட்களைக் கொண்டாடு
வதற்காகவோ, தீர்த்த யாத்திரை செய்வதன் பொருட்டோ மக்கள் கடனாளியாவது பாபாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதே இவ்விடத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.



சன்ஸா (கோதுமைப் பணியாரம்)

மத்தியான வேளையில் லக்ஷ்மிசந்த் உணவுக்காக அமர்ந்திருந்தபோது, ஒரு பக்தரிடமிருந்து பிரசாதமாகக் கொஞ்சம்
சன்ஸாவை அவர் பெற்றார்.  மறுநாளும் அதை அவர் எதிர்பார்த்தார்.  ஆனால் ஒன்றும் பெறவில்லை.  எனவே அதைப்பெற அவர் கவலையுற்றார்.  மூன்றாம் நாள் பாபாவிடம் ஆரத்தி நேரத்தின்போது என்ன நைவேத்யம் தான் கொண்டுவர வேண்டுமென ஜோக் கேட்டார்.  சன்ஸாவைக் கொண்டுவரும்படி பாபா கூறினார்.

பின் பக்தர்கள் இரண்டு பானை நிறைய
சன்ஸாவைக் கொண்டுவந்தனர்.  லக்ஷ்மிசந்த் மிகவும் பசியை இருந்தார்.  அவர் முதுகில் கொஞ்சம் வலி இருந்தது.  பாபா அப்போது, "நீ பசியாயிருப்பது நன்று. அதற்காகக்  கொஞ்சம் சன்ஸாவை உட்கொள்.  முதுகு வழிக்கு ஏதாவது மருந்து போட்டுக்கொள்" என்று அவரிடம் கூறினார்.  பாபா மீண்டும் தம் மனதைப் படித்து, அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை உணர்த்தியது குறித்து அவர் மீண்டும் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டார்.  எத்தகைய சர்வவியாபியாக பாபா இருக்கிறார்.



த்ருஷ்டி

இத்தருணத்தில் லக்ஷ்மிசந்த்
ஓர் இரவு சாவடி ஊர்வலத்தைக் கண்ணுற்றார்.  பாபா அப்போது இருமலால் மிகுந்த அல்லல் பட்டுக்கொண்டிருந்தார்.  பாபாவின் இத்தொல்லை சிலரின் த்ருஷ்டி பட்டதால் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.  மறுநாள் காலை அவர் மசூதிக்குச் சென்றபோது பாபா ஷாமாவிடம் "நேற்றிரவு நான் இருமலால் அவதியுற்றேன்.  அது த்ருஷடினாலோ?  சிலரின் த்ருஷடி என்மீது வேலை செய்கிறது.  எனவேதான் நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார்.  இவ்விஷயத்தில் லக்ஷ்மிசந்தின் உள்ளத்தில் இருந்ததை பாபா பேசினார். 

பாபாவின் சர்வ வியாபித்துவத்துக்கான இந்த நிரூபணங்களையெல்லாம் கண்டுவிட்டு பாபாவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "நான் தங்கள் தரிசனத்தால் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  எப்போதும் என்பால் அன்புகொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து இரட்சியுங்கள்.  தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கில்லை.  தங்கள் பஜனையின்பாலும், பாதகமலங்களின்பாலும் என் மனம் எப்போதும் இலயித்து இருக்கட்டும்.  இவ்வுலகில் துன்பங்களிலிருந்து தங்களின் அருள் எங்களைப் பாதுகாக்கட்டும்.  நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும்.  மகிழ்வுடன் இருக்கவேண்டும்" என்று வேண்டினார்.

பாபாவின் உதியையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு மிகவும் அகமகிழ்ந்து, திருப்தியுற்று வழியெல்லாம் பாபாவின் புகழைப் பாடியவண்ணம் தன் நண்பனுடன் வீடு திரும்பினார்.  அது முதற்கொண்டு பாபாவின் தீவிர பக்தராக அவர் இருந்தார்.  ஷீர்டிக்குச் செல்லும் எந்த நண்பனிடமும் பூமாலைகள், தட்சிணை, கற்பூரம் இவைகளை அவர் கொடுத்தனுப்புவார். 



புர்ஹாண்பூர் அம்மையார்

இப்போது மற்றுமொரு குருவியிடம் திரும்புவோம். (பக்தனுக்கு பாபா அழைக்கும் பெயர்)
புர்ஹாண்பூரில் உள்ள ஒரு மாது, சாயிபாபா தன் வீட்டுக்கு வந்து அவர்தம் உணவுக்காக கிச்சடி (உப்பு, பருப்பு கலந்த சாதம்) கேட்டுக்கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள்.  விழித்துப் பார்க்கையில் வாசற்படியில் யாரையும் காணோம் என்றபோதும் அக்காட்சியால் அவள் மனம் மிக நெகிழ்ந்து தனது கணவன் உள்ளிட்ட அனைவருக்கும் கூறினாள்.  தபால் இலாகாவில் அவர் பணியாற்றி வந்தார்.  அவர் அகோலாவுக்கு மாற்றப்பட்டபோது பக்தர்களான கணவனும், மனைவியும் ஷீர்டிக்குப் போவதெனத் தீர்மானித்தனர்.  ஒரு பொருத்தமான நாளில் இருவரும் புறப்பட்டு வழியில் கோமதி தீர்த்துக்குச் சென்றுவிட்டு ஷீர்டியை அடைந்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கினர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் மசூதியை அடைந்து பாபாவை வழிபட்டு, காலத்தைச் சந்தோஷமாகக் கழித்தனர்.  அவ்விருவரும் கிச்சடியை நைவேத்யமாக சமர்ப்பிக்க ஷீரடிக்கு வந்தனர்.  ஆனால் முதல் பதினான்கு தினங்களுக்கு என்ன காரணத்தினாலோ அதை சமர்ப்பிக்க அவர்களுக்கு இயலவில்லை.  அப்பெண்மணிக்கு இந்தக் காலதாமதம் பிடிக்கவில்லை.  பின் பதினைந்தாவது நாள் அவள் தனது கிச்சடியுடன் மசூதிக்கு வந்தாள்.  பாபாவும் மற்றவர்களும் ஏற்கனவே சாப்பாட்டுக்காக அமர்ந்துகொண்டிருப்பதையும் திரை தொங்கவிடப்பட்டதையும் கண்டாள்.  ஆனால் அவளால் பொறுக்க இயலவில்லை.  திரையைக் கையால் விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள்.  அப்பலகாரத்துடன் அவள் வந்ததும் பாபா மிகவும் மகிழ்ந்து கரண்டி - கரண்டியாகப் பச்சடியை உண்டார்.  இவ்விஷயத்தில் பாபாவின் ஊக்கத்தைக் கண்டு எல்லோரும் அதிசயமடைந்தனர்.  இந்தக் கிச்சடிக் கதையைக் கேட்பவர்களுக்கெல்லாம் பக்தர்கள்பால் பாபா கொண்டிருந்த அசாதாரண அன்பு உறுதியாயிற்று.



மேகா

இப்போது நாம் மூன்றாவதும், பெரியதுமான சிட்டுக்குருவியிடம் போவோம்.  ராவ்பஹதூர் ஹரிவிநாயக் சாதேவின் பிராமணச் சமையல்காரனான வீரம்காவனைச் சேர்ந்த மேகா என்பவன் எளிமை மிகுந்தவன், படிக்காதவன்.  அவன் ஒரு சிவபக்தன்.  'நமசிவாய:' என்ற பஞ்சாஷரத்தை அவன் சதாகாலமும் ஸ்மரித்து வந்தான்.  சந்தியாவைப் பற்றியோ அதன் முக்கிய மந்திரமான காயத்ரியைப் பற்றியோ அவனுக்கு எதுவும் தெரியாது.  சாதே அவனிடம் ஆர்வம் பூண்டு அவனுக்கு சந்தியாவையும், காயத்ரியையும் கற்பித்தார்.  ஷீர்டி சாயிபாபா சிவனின் அவதாரம் என்று அவனுக்குக் கூறி ஷீரடிக்கு அவனைப் புறப்படச் செய்தார்.  ப்ரோச் ரயில் நிலையத்தில் சாயிபாபா ஒரு முஹமதியர் என்று கேள்விப்பட்டான்.  அவனது வைதீகமான எளிய மனம் ஒரு முஹமதியர் முன் வணங்குவதைக் குறித்து மிகவும் குழப்பமடைந்ததால் தன்னை அங்கு அனுப்ப வேண்டாமென தனது எஜமானரை வேண்டிக்கொண்டான்.  ஆனால் அவரோ போகவேண்டியத்தை வற்புறுத்தி அவ்விடமிருந்த தனது மாமனாரான கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கருக்கு ஒரு கடிதம் கொடுத்து அவனை சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்துமாறு அனுப்பினார்.

அவன் ஷீர்டிக்குச் சென்று மசூதியை அடைந்தபோது பாபா மிகவும் கோபமாய் இருந்தார்.  அவனை மசூதிக்குள் நுழைய விடவில்லை.  "அந்த ராஸ்கலை வெளியே தள்ளு" என்று கர்ஜித்தார்.  "நீ உயர்ந்த ஜாதி பிராமணன், நான் கீழான முஹமதியன்.  இங்கு வருவதால் நீ உனது ஜாதியை இழந்துவிடுவாய்.  எனவே நீ போய்விடு" என்று அவனை நோக்கி உரைத்தார்.  இவ்வுரைகளைக் கேட்டதும் மேகா நடுங்கத் தொடங்கினான்.  தன் மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா எங்ஙனம் அறியலானார் என்பது குறித்து அவன் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தான்.

அவன் அங்கு சில நாட்கள் தங்கி பாபாவுக்குத் தனக்கே உரியமுறையில் சேவை செய்துகொண்டிருந்தான்.  ஆனால் இன்னும் பக்குவமடையவில்லை.  பின்னர் வீட்டிற்குச் சென்றுவிட்டு த்ரயம்கேஸ்வரத்தில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் ஷீர்டிக்கு வந்தான்.  இம்முறை தாதா கேல்கரின் குறுக்கீட்டால் மசூதிக்குள் நுழையவும், ஷீர்டியில் தங்கவும் அனுமதிக்கப்பட்டான்.  மேகாவுக்கு பாபா உதவியது வாய்மொழிக் குறிப்புக்கள் எதனாலும் அல்ல.  மேகாவின்மேல் அவர் மானசீகமான அருள் செய்தார்.  இதனால் மேகா பெருமளவு மாறுதலுற்று நன்மை அடைந்தான்.  பின்னர் சாயிபாபாவை சிவனின் அவதாரமாகவே அவன் கருதலானான்.  சிவனை வழிபடுவதற்கு வில்வ இலைகள் தேவையாய் இருந்ததால் மேகா ஒவ்வொருநாளும் அவைகளைக் கொணர்வதற்காக மைல் கணக்கில் நடந்துசென்று தனது சிவனை (பாபாவை) வழிபடுவான்.

கிராமத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்னர் மசூதிக்கு வந்து பாபாவின் ஆசனத்திற்கு வணக்கம் செலுத்திய பின்னர் அவன் பாபாவை வழிபட்டு, சில சேவைகளைச் (பாபாவின் பாதங்களைப் பிடித்துவிடுவது) செய்து பின்பு பாபாவின் பாதங்களைக் கழுவிய தீர்த்ததைப் பருகுவது ஆகியவை அவனது வழக்கம்.  ஒருமுறை கண்டோபா கோவிலின் கதவு சாத்தியிருந்ததால் அவன் அந்தக் கடவுளை வழிபடாமலே மசூதிக்கு வந்தான்.  பாபா அவனது வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கதவு திறந்திருக்கிறது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.  மேகா அங்கு சென்று கதவு திறந்தது கண்டு கண்டோபாவை வணங்கிய பின் வழக்கம்போல் பாபாவிடம் திரும்பி வந்தான்.



கங்கா ஸ்நானம் 
  

ஒரு மகர சங்கராந்தி தினத்தன்று பாபாவின் உடலில் சந்தானம் பூசி அவரைக் கங்கை நீரால் குளிப்பாட்ட மேகா விரும்பினான்.  இந்த செயல்முறைக்கு உடன்பட முதலில் பாபா மனதில்லாதவராய் இருந்தார்.  ஆனால் அவனது தொடர்ந்த வேண்டுதல்களின் காரணமாக சம்மதித்தார்.  கோமதி ஆற்றிலிருந்து புனிதநீர் கொணர்வதற்காக அவன் 24 மைல் நடந்து போய்வர வேண்டும்.  அவ்வாறு நீர் கொண்டுவந்து மத்தியான ஸ்நானத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, பாபாவை அதற்காகத் தயாராய் இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.

ஒரு பக்கிரி என்ற முறையில் தனக்கும் கங்கை நீருக்கும் ஒன்றும் தொடர்பு இருக்கவில்லை என்றுகூறி மீண்டும் அவனிடம் இந்தக் குளியலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டினார்.  ஆனால் மேகா அதற்குச் செவி சாய்க்கவில்லை.  கங்கை நீர் அபிஷேகத்தால் சிவபெருமான் மகிழ்கிறார் என்று அவனுக்குத் தெரியும்.  அந்த நல்ல நாளன்று அவனது சிவனுக்கு (பாபா) அந்த அபிஷேகத்தைச் செய்தாக வேண்டும்.  பின்னர் பாபா சமதித்துக் கீழிறங்கி வந்து ஆசனப் பலகையில் அமர்ந்து தலையை முன்னால் நீட்டிக்கொண்டு "ஓ! மேகா, இதையாவது தயவு செய்வாயாக, தலையே உடம்பின் பிரதான பாகமாதலால் தலைமேல் மட்டும் நீர் ஊற்று.  உடம்பு முழுவதும் குளிப்பதற்கு அது சமமாகும்" என்றார்.  "அப்படியே என்றான் மேகா.  அபிஷேக கலயத்தை மேலே தூக்கி தலையின்மேல் ஊற்றத் தொடங்கினான்.  ஆனால் அப்படி செய்துகொண்டிருக்கும்போது அன்பால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "ஹர்...
ஹர்... கங்கே!" என்று கூவிக்கொண்டே அவர் உடல் முழுவதும் நீரை ஊற்றிவிட்டான்.  கலயத்தைப் புறத்தில் வைத்துவிட்டுப் பாபாவைப் பார்க்கத் தொடங்கினான்.  அவனது வியப்புக்கும் ஆச்சரியத்துக்கும் ஏற்ப பாபாவின் தலை மட்டுமே நனைந்திருந்தது.  உடம்பு ஈரமில்லாமலே இருந்தது.



திரிசூலமும் லிங்கமும்

பாபாவை மேகா இரண்டு இடங்களில் வழிபட்டான்.  மசூதியில் நேரடியாகவும், வாதாவில் நானா சாஹேப் சாந்தோர்கர் அளித்த பாபாவின் பெரிய படத்தின் மூலமாகவும் பூஜித்து வந்தான்.  இதை அவன் ஓராண்டுகாலம் செய்துவந்தான்.  பின்னர் அவனது பக்தியை மெச்சி அவனது நம்பிக்கையை உறுதி செய்வதற்காக பாபா அவனுக்கு ஒரு காட்சி நல்கினார்.  ஒருநாள் அதிகாலையில், மேகா இன்னும் படுக்கையைவிட்டு எழாமலிருக்கையில் ஆனால் கண்கள் மூடியிருந்த நிலையில் (விழிப்புடன்), பாபாவின் உருவத்தை அவன் தெளிவாகக் கண்டான்.

அவன் விழித்திருப்பதை அறிந்து பாபா அவன்மீது அக்ஷதையை வீசியெறிந்து "மேகா! திரிசூலம் வரை" என்று உரைத்து மறைந்துவிட்டார்.  இவ்வார்த்தைகளைக் கேட்டு அவன் ஆவலுடன் கண்களைத் திறந்தான்.  ஆனால் அங்கு பாபாவைக் காணவில்லை.  அக்ஷதை மட்டும் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டான்.  பின்னர் பாபாவிடம் சென்று காட்சியைப்பற்றிக் கூறி ஒரு திரிசூலம் வரைவதற்கு அவரின் இசைவையும் கேட்டான்.

பாபா:  திரிசூலம் வரையும்படி நான் உன்னைக் கேட்ட மொழிகளை நீ கேட்கவில்லையா?  எனது மொழிகள் எப்போதும் பொருள் என்னும் சூல் கொண்டிருக்கின்றன.ஒருபோதும் வேருமையானதல்ல.

மேகா:  என்னைத் தாங்கள் எழுப்பியதாகக் கருதினேன்.  ஆனால் எல்லாக் கதவுகளும் மூடியிருந்ததால் அதை ஒரு காட்சியாக நினைத்தேன்.

பாபா:  நான் நுழைவதற்கு எனக்கு எவ்விதக் கதவும் தேவையில்லை.  எனக்கு எவ்வித உருவமோ, நீளமோ கிடையாது.  எப்போதும் எங்கும் நான் வசிக்கிறேன்.  என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டதைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்.  
 

மேகா, வாதாவுக்குத் திரும்பிவந்து பாபாவின் படத்தருகே சிவப்பு திரிசூலம் ஒன்றைச் சுவரில் வரைந்தான்.  மறுநாள் புனேவில் ஒரு ராம்தாஸி பக்தர் வந்து பாபாவை வணங்கி அவருக்கு ஒரு லிங்கத்தைச் சமர்ப்பித்தார்.  இச்சமயத்தில் மேகாவும் அவ்விடம் வந்தான்.  பாபா அவனிடம், "பார், சங்கர் வந்துவிட்டார்.  இப்போது அவரைக் காப்பாற்று (அதாவது வழிபடு).  சூலத்தை, லிங்கம் உடனே தொடர்ந்து வந்தது கண்டு மேகா அதிசயமடைந்தான்.  வாதாவிலும் கூட காகா சாஹேப் தீஷித் குளித்தபின் கையில் துவட்டிய துண்டுடன் நின்று சாயியை நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மனக்காட்சியில் ஒரு லிங்கத்தைக் கண்டார்.  இது குறித்து அவர் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் மேகா அவரிடம் வந்து, பாபா தனக்கு பரிசளித்த லிங்கத்தை அவரிடம் காட்டினான்.  தான் சில நிமிட நேரங்களுக்கு முன் காட்சியில் தரிசித்த லிங்கம் இதனுடன் அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு அவர் மிகவும் மகிழ்வுற்றார்.  சில நாட்களில் திரிசூலம் வரைவதும் முடிவடைந்தது.  பாபா அந்த லிங்கத்தை, மேகா வழிபட்டுக்கொண்டிருந்த பெரிய படத்தின் அருகில் ஸ்தாபித்தார்.  சிவா பூஜை செய்வது மேகாவுக்கு மிகவும் பிடித்தமானது.  திரிசூலம் வரையச் செய்வித்தும், அதனருகில் லிங்கத்தை ஸ்தாபித்தும் பாபா அவனது நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தார்.

பல ஆண்டுகள் தொடர்ந்த சேவைக்குப் பின்னர், ஒவ்வொரு நாள் மத்தியானமும், மாலையும் வழக்கமான வழிபாட்டையும், ஆரத்தியையும் செய்த பின்பு, 1912ல் மேகா சிவபதம் சேர்ந்தான்.  பின்னர் பாபா தனது கைகளை அவனது உடல்மீது தடவி, "இவன் என் உண்மை பக்தன்" என உரைத்தார்.  தமது சொந்த செலவிலேயே வழக்கமான சாப்பாடு பிராமணர்களுக்குச் செய்துவைக்க ஆணையிட்டார்.  இது காகா சாஹேப் தீஷித்தால் நிறைவேற்றப்பட்டது.



ஸ்ரீ சாயியைப்  பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

Thursday, 23 August 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 27

•  விஷ்ணு ஸஹஸ்ரநாமம், 
   ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைக் 
   கொடுத்து அனுகூலம் செய்தல்
•  தீஷித்தின் விட்டல் காட்சி
•  கீதா ரஹஸ்யம்
•  கபர்டே குடும்பம்



பாபா தமது ஸ்பரிசத்தால்
புனிதப்படுத்தி, மத சம்பந்தமான நூல்களைப் பாராயணத்துக்காகவும், இதர விஷயங்களுக்காகவும் பக்தர்களுக்கு அளித்து எங்ஙனம் அனுகூலம் செய்தார் என்பதை இவ்வத்தியாயம் கூறுகிறது.  



முன்னுரை

ஒரு மனிதன் கடலில் மூழ்கும்போது, எல்லா தீர்த்தங்களிலும், புனித ஆறுகளிலும் நீராடிய புண்ணியம் அவனை வந்தெய்துகிறது.  அதே மாதிரியாக ஒரு மனிதன் சத்குருவின் பாதங்களில் அடைக்கலம் புகும்போது, மூவரையும் (பிரம்மா, விஷ்ணு, மஹாதேவர்), பரப்பிரம்மத்தையும் வணங்கும் பேறு அவனுக்கு உண்டாகிறது.  கற்பகத் தருவும், ஞானசாகரமும் நமக்கு ஆன்ம உணர்வை அளிப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும்.

ஓ! சாயி, தங்களது கதைகள்பால் எங்களுக்கு ஆர்வம் உண்டாகச் செய்யுங்கள்.  சாதகப் பறவை மேகங்களினுள் உறையும் நீரைப் பருகி இன்பமடையும்.  இதைக் கற்போரும், கேட்போரும் அதே மன நிறைவுப் பாங்கில் இவைகளை ஆர்வத்துடன் பருகட்டும்.  தங்களது கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களும், அவர்களது குடும்பமும் சாத்வீக உணர்வுகள் அனைத்தையும் பெறட்டும்.  அதாவது மனம் உருகி கண்களில் நீர் நிறைய அவர்கள் மூச்சு ஒரே சீராக அமைந்து அவர்கள் மனம் அமைதியடைந்து, மயிர்க்கூச்செறிந்து, அழுது, தேம்பி உடல் குலுங்கட்டும்.  எங்கள் பகைமையும் வித்தியாசங்களும், பெரியனவாயினும் சிறியனவாயினும் மறைந்தொழியட்டும்.

இவைகள் எல்லாம் நடந்தால்,
குருவின் கிருபை அவன்மீது மலர்ந்திருக்கிறது என்பது பொருள்.  இத்தகைய உணர்வுகள் உன்பால் எழும்போது குரு மிகமிக மகிழ்கிறார்.  ஆத்ம உணர்வு என்னும் இலட்சியத்தில் குரு உனக்கு நிச்சயமாக வழிகாட்டுவார்.  பாபாவிடம் முழுமையான, இதயபூர்வமான சரணாகதி எய்துதலே மாயையின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும்.  மாயைக்கு அப்பால் வேதங்களால் உன்னை எடுத்துச்செல்ல முடியாது.  சத்குரு ஒருவரே அங்ஙனம் செய்யமுடியும்.  பரம்பொருளை எல்லா ஜீவராசிகளிடமும் காணமுடியும்.



புனிதமாக்கப்பட்ட நூலை அளித்தல்       

பாபா உபதேசம் அளிக்கும் பலமுறைகளை முந்தைய அத்தியாயங்களில் நாம் முன்னரே கண்டிருக்கிறோம்.  அவற்றில் ஒருமுறையை இங்கு காண்போம்.  தாங்கள் சிறப்பாகப் பாராயணம் செய்ய விரும்பிய சில மத சம்பந்தமான நூல்களை பாபாவிடம் எடுத்துச்சென்று அவரது திருக்கரங்கள்பட்டு புனிதம் ஆக்கப்பட்டபின் அவைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வது சிலரின் வழக்கமாக இருந்து வந்தது.

அத்தகைய நூல்களை அவர்கள் தினந்தோறும் படிக்கும்போது பாபா அவர்களுடன் இருப்பதாக உணர்ந்தனர்.  ஒருமுறை காகா மஹாஜனி ஏக்நாத் பாகவதம் புத்தகம் ஒன்றுடன் ஷீர்டிக்கு வந்தார்.  ஷாமா இந்நூலைப் படிப்பதற்காக மசூதிக்கு எடுத்துச் சென்றார்.  பாபா அதை அவரிடமிருந்து வாங்கி இங்கும் அங்குமாக சில பக்கங்களைப் புரட்டிவிட்டு ஷாமாவிடம் திரும்ப அளித்து, "இதை நீ வைத்துக்கொள்" என்றார்.

ஷாமா: அது காகாவுடையது.  அவருக்கு அதைத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும்.

பாபா: இல்லையில்லை.  நான் உனக்கு அளித்தால் நன்மைக்காக உன்னிடமே வைத்துக்கொள்.  உனக்கு அது பயன்படும்.

இவ்விதமாகப் பல நூல்கள் ஷாமாவிடம் ஒப்படைக்கப்பட்டன.  காகா இன்னமும் சில நாட்களில் மற்றொரு பாகவதத்துடன் வந்து அதை பாபாவின் கரங்களில் அளித்தார்.  பாபா அவருக்கு அதைப் பிரசாதமாகத் திரும்ப அளித்து, அதை நன்றாகப் பாதுகாக்கும்படியும் அது அவரை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்றும் கூறினார்.  காகாவும் அதை வணக்கத்துடன் பெற்றுக்கொண்டார்.



ஷாமாவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்

ஷாமா, பாபாவின் மிக நெருங்கிய பக்தர்.  விஷ்ணு
ஸஹஸ்ரநாமத்தின் ஒரு பிரதியை அவருக்கு அளிப்பதன் மூலம் பாபா அவருக்கு அருள் செய்ய விரும்பினார்.  ஒருமுறை ஒரு ராம்தாஸி பக்தர் ஷீர்டிக்கு  வந்து அங்கு சில காலம் இருந்தார்.  அவர் தினந்தோறும் பின்பற்றிய ஒருமுறை ஒழுங்குமுறை கீழ்வருமாறு.  அதிகாலையில் அவர் எழுந்திருந்து முகம் கழுவி, குளித்துவிட்டு, காவி ஆடை உடுத்திக்கொண்டு, திருநீற்றை உடலில் தரித்துக்கொண்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அத்யாத்ம ராமாயணம் ஆகிய புனித நூல்களை நம்பிக்கையுடன் படிப்பார்.  அவர் இவற்றை அடிக்கடி பலமுறை படித்தார்.

சில நாட்களுக்குப் பின்னர் பாபா விஷ்ணு
ஸஹஸ்ரநாமத்தை ஷாமாவுக்கும் ஆரம்பித்து வைத்து, அவருக்கு அருள்செய்ய நினைத்தார்.  எனவே ராம்தாஸியைத் தன்னருகில் அழைத்து, "நான் தாங்கமுடியாத வயிற்றுவழியால் அல்லலுறுகிறேன்.  சூரத்தாவாரை (sennapods - மிதமான பேதி மருந்து) உட்கொண்டாலன்றி வலி நிற்காது.  எனவே கடை வீதிக்குப் போய் இம்மருந்தை வாங்கி வா" என்றார்.  பின்னர் தமது யதாஸ்தானத்திலிருந்து இறங்கி ராம்தாஸி படித்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துத் தமது இடத்துக்கு வந்து ஷாமாவிடம், "ஓ! ஷாமா, இப்புத்தகம் மிகவும் பயனுள்ளது, பலனுள்ளது, எனவே இதை உனக்குப் பரிசளிக்கிறேன்.  ஒருமுறை நான் தீவிரமாகக் கஷ்டப்பட்டேன்.  என் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது.  அத்தகைய தருணத்தில் நான் இந்நூலை எனது மார்போடு வைத்து அணைத்துக்கொண்டேன்.  அப்போது, அது எத்தகைய ஆறுதலை அளித்தது.  அல்லாவே என்னைக் காப்பாற்றக் கீழிறங்கி வந்தாரென்று நினைத்தேன்.  எனவே இதை உனக்குக் கொடுக்கிறேன்.  மெதுவாகப் படி.  தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு நாமத்தையாவது படி, அது உனக்கு நன்மை செய்யும்".

ஷாமா: அது எனக்கு வேண்டாம்.  அதன் சொந்தக்காரனான ராம்தாஸி ஒரு பைத்தியம், பிடிவாதக்காரன், கோபக்காரன்.  நிச்சயம் என்னுடன் சண்டைக்கு வருவான்.  மேலும் நான் ஒரு பட்டிக்காட்டான்.  ஆதலால் எனக்கு இந்நூலிலுள்ள சமஸ்கிருத எழுத்துக்கள் படிக்கத் தெரியாது.

ஷாமா, பாபா தமது இச்செய்கையின் மூலம் தன்னை
ராம்தாஸிக்கு எதிராகக் கிளப்பிவிடுவதாக நினைத்தார்.  பாபா அவருக்காக என்ன நினைத்தார் என்ற எண்ணமே அவருக்கு இல்லை.  ஷாமா ஒரு பட்டிக்காடாக இருந்தபோதும், அவருடைய நெருங்கிய பக்தராகையால் இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை அவர் கழுத்தில் சூட்டி உலகத் துபங்களினின்று அவரைக் காக்க பாபா எண்ணியிருக்க வேண்டும்.

கடவுள் நாமத்தின் சக்தி யாவரும் அறிந்ததே.  அது நம்மை எல்லாப் பாவங்களினின்றும் காப்பாற்றி, பிறப்பு - இறப்புச் சுழலிநின்றும் நம்மை விடுதலையாக்குகிறது.  இதைவிடச் சுலபமான சாதனம் வேறெதுவும் இல்லை.  நம் மனதை மிகச்சிறந்த முறையில் அது தூய்மைப்படுத்துகிறது.  அதற்கு எவ்வித சடங்குமுறைகளோ, தடையோ கிடையாது.  அது அவ்வளவு சுலபம், அவ்வளவு பயனுள்ளது.  ஷாமா இந்த சாதனையில் ஆர்வம் கொள்ளாதவராய் இருப்பினும் பாபா இதைத்தான் ஷாமாவைச் செய்யும்படி விரும்பினார்.  எனவே பாபா அதை அவர்மேல் திணித்தார்.

ஏக்நாத் மஹராஜ் இம்மாதிரியாகவே ஒரு ஏழைப்பிராமணனிடம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத் திணித்து அவனைக் காப்பாற்றினார் என்று வெகு நாட்களுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது.  விஷ்ணு 
ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதும் மனதைத் தூய்மைப்படுத்துகின்ற திறந்த அகலமான வழியாகும்.  எனவேதான் பாபா இதை ஷாமாவிடம் திணித்தார்.

ராம்தாஸி சூரத்தாவாரை விதைகளுடன் உடனே திரும்பினார்.  அங்கிருந்த அண்ணா சிஞ்சணீ கர் நாரதர் வேலை செய்யவிரும்பி நடந்ததையெல்லாம் அவரிடம் உரைத்தார்.  ராம்தாஸி உடனே கோபத்தால் குதித்தார்.  தனது முழு வெறியுடன் ஷாமாவிடம் இறங்கி வந்தார்.  தனக்கு வயிற்றுவலி என்ற பெயரில் மருந்து வாங்கிவர அவரை அனுப்பும்படி பாபாவைத் தூண்டிவிட்டது ஷாமாதான் என்றும் இவ்வாறாக அவரது புத்தகத்தை எடுத்துக்கொண்டார் என்றும் கூறினார்.  ஷாமாவை அவர் திட்டவும் செய்து அவர் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லையானால் அவர்முன் தன் மண்டையை உடைத்துக்கொள்ளப் போவதாகக் கூறினார்.  ஷாமா அமைதியாக அவருடன் எதிர்த்துப் பார்த்தார்.  அது பயனளிக்கவில்லை.  பின் பாபா அன்புடன் அவரைநோக்கி "ஓ! ராம்தாஸி, என்ன விஷயம்?  ஏன் இவ்வளவு கலங்கிப் போயிருக்கிறாய்?  ஷாமா நம் பையன் இல்லையா?  வீணாக அவனை ஏன் திட்டுகிறாய்?  இவ்வளவு சண்டைபோடும் ஆளாக நீ எப்படி இருக்கிறாய்?  மிருதுவான, இனிமையான மொழிகளைப் பேச உன்னால் முடியாதா?  நீ தினந்தோறும் இந்தப் புனித நூல்களைப் படிக்கிறாய், எனினும் உன் மனது தூயமையற்றதாயும், உனது உணர்வுகள் கட்டுப்பாடில்லாமலும் இருக்கின்றன!  நீ என்ன ராம்தாஸி போ!  இவைகள் எல்லாவற்றிலும் நீ பற்றற்று கவனமின்றி இருக்கவேண்டும்.

இந்தப் புத்தகத்தை நீ இவ்வளவு அதிகமாக விரும்புவது வியப்பாயில்லை?  உண்மையான ராம்தாஸிக்கு 'மமதா' (பற்று) இருக்கக்கூடாது, ஆனால் 'சமதா' (எல்லோரையும் ஒன்று எனப்பாவிக்கும் பண்பு) இருக்கவேண்டும்.  ஷாமா பையனுடன் ஒரு புத்தகத்துக்காக நீ இவ்வளவு சண்டை செய்துகொண்டிருக்கிறாய், போ!  உன் இடத்தில் அமர்ந்துகொள்.  பணம் கொடுத்தால் ஏராளமாகப் புத்தகங்கள் கிடைக்கும்.  ஆனால் மனிதர்கள் கிடைக்கமாட்டார்கள்.  நன்றாக நினைத்துப் பார்.  நன்றாக நினைத்துப் பார்த்துத் தயவுள்ளவனாய் இரு.  உன் புத்தகம் என்ன மதிப்புப் பெறும்?  ஷாமாவுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.  நான்தான் அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.  உனக்கு அது மனப்பாடமாகத் தெரியும்.  ஷாமா அதைப் படித்துப் பலனடைய வேண்டும் என்று நான் எண்ணினேன்.  எனவேதான் அதை அவனிடம் கொடுத்தேன்" என்றார். 

பாபாவின் மொழிகள் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன.  அவைகளின் பலன் ஆச்சரியமானது.  ராம்தாஸி அமைதியானார்.  ஷாமாவிடம் அதற்குப் பதிலாக பஞ்சரத்னி கீதை ஒன்று எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.  ஷாமா அதிக சந்தோஷமடைந்து, "ஒன்று ஏன்? பதிலாக உனக்குப் பத்துப் பிரதிகள் தருகிறேன்" என்று கூறினார். 

முடிவாக இவ்விஷயம் சமாதானத்துக்கு வந்தது.  எந்தக் கடவுளை அறியவேண்டுமென்று அவர் கவலைப்பட்டது கிடையாதோ அவரைப் பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ள பஞ்சரத்னி கீதையை ராம்தாஸி கேட்டது ஏன்?  தினந்தோறும் மசூதியில் பாபாவின்முன் மதப் புத்தகங்களைப் படித்த ராம்தாஸி, ஷாமாவிடம் அவர் முன்னிலையிலேயே சண்டை செய்வானேன்? என்ற கேள்விகளையெல்லாம் கருதுங்கால் பழியை யாரிடம் ஒதுக்குவது என்பதையும், யாரைத் திட்டுவது என்பதையும் நாம் அறியோம்.  இந்நிகழ்ச்சி நடந்திராவிட்டால் ஈஸ்வர நாமத்தின் மகிமை, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஆகிய விஷயங்களெல்லாம் ஷாமாவின் அறிவிற்கு எட்டியிருக்காது என்பதை மட்டும் நாம் அறிவோம்.  எனவே பாபாவின் கற்பிக்கும் முறையும் ஆரம்பித்துவைக்கும்  முறையும் விசேஷமானது என்று நாம் காண்கிறோம்.  
இவ்விஷயத்தில் ஷாமா அந்நூலைப் படிப்படியாகக் கற்கவே செய்தார்.  புனே இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியரும் ஸ்ரீமான் பூட்டியின் மருமகனுமான பேராசிரியர் G.G.நார்கே M.A., M.Sc., என்பவருக்கு அதை விவரித்துச் சொல்லும் அளவுக்கு அதில் வல்லமை பெற்றார்.



விட்டல் காட்சி

ஒருநாள் காகா சாஹேப் தீஷித் ஷீர்டியில் உள்ள தனது வாதாவில் காலைக் குளியலுக்குப்பின் தியானம் செய்துகொண்டிருக்கும்போது விட்டலின் தெய்வீகக் காட்சி ஒன்று கிடைத்தது. 
அதன் பின்பு பாபாவை அவர் காணச் சென்றபோது, "விட்டல் பாடீல் வந்தாரா?  நீர் அவரைக் காணவில்லையா?  அவர் மிகவும் நழுவேல் பேர்வழி.  இறுக்க அவரைப் பிடித்துக்கொள்ளும், இல்லாவிட்டால் உமக்கு 'டேக்கா' கொடுத்துவிட்டு ஓடிப்போய் விடுவார்" என்று கூறினார் பாபா.  பின்னர் மத்தியான வேளையில் பண்டரீபுரத்து விட்டலின் 20-25 படங்களுடன் ஒரு வியாபாரி வந்தான்.  தான் தியானத்தில் கண்ட விட்டலின் உருவத்துடன் இது அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு தீஷித் அதிசயமடைந்தார்.  பாபாவின் மொழிகளை நினைவு கூர்ந்து, மிகுந்த விருப்பத்துடன் ஒரு படத்தை வாங்கி, தனது பூஜையறையில் வழிபாட்டுக்காக வைத்தார்.



கீதா ரஹஸ்யம்

பிரம்ம வித்தையைக் கற்பவர்களை பாபா எப்போதும் நேசித்தார். 
அவர்களை ஊக்குவித்தார்.  உதாரணத்துக்கு ஒன்று, ஒருமுறை பாபு சாஹேப் ஜோக் ஒரு பார்சலைப் பெற்றார்.  லோகமான்ய திலகர் எழுதிய கீதாரஹஸ்யத்தின் ஒரு பிரதி அதனுள் இருந்தது.  தனது அக்குளில் அதை வைத்தவாறு மசூதிக்கு வந்து அவர் பாபாவின் முன் வீழ்ந்து பணிந்தபோது பார்சல் பாபாவின் பாதத்தில் சென்று விழுந்தது.  பாபா அது என்ன என்று விசாரித்தார்.  அவ்விடத்திலேயே பார்சல் உடைக்கப்பட்டு அப்புத்தகம் பாபாவின் கரத்தில் வைக்கப்பட்டது.  இங்குமங்குமாக அதன் சில பக்கங்களை அவர் புரட்டிவிட்டுத் தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மீது வைத்து, அதை ஜோகிடம் அளித்து, "இதை முழுமையும் படி, உனக்கு நன்மை விளையும்" என்றார்.  



கபர்டே குடும்பம்

கபர்டேயைப் பற்றிய விளக்கங்களுடன் இவ்வத்தியாயத்தை நாம் முடிப்போம். 
ஒருமுறை தாதா சாஹேப் கபர்டே தன் குடும்பத்துடன் ஷீர்டிக்கு வந்து சில மாதங்கள் தங்கியிருந்தார்.  (அவர் தங்கியிருந்ததன் நாட்குறிப்பு சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7) ஆங்கிலத்தில் பதிக்கப்பட்டு, தற்போது தமிழில் "கபர்டே டைரி"யாக மொழிபெயர்க்கப்பட்டு சமஸ்தானத்தால் வெளியிடப்பட்டுள்ளது.)

தாதா சாஹேப் சாதாரண மனிதரல்ல.  அவர் அமராவதியின் மிகப்பெரிய பணக்காரர், மிகவும் புகழ்பெற்ற அ
ட்வகேட்டும், டெல்லி கவுன்சிலின் அங்கத்தினர்களுள் ஒருவரும் ஆவார்.  மிகுந்த புத்திசாதுர்யமுடையவரும், மிகச்சிறப்பான பேச்சாளருமாவார்.  ஆயினும் பாபாவின் முன் வாய்திறக்க அவருக்குத் தைரியமில்லை.  பெரும்பாலான பக்தர்கள் பாபாவுடன் அடிக்கடி பேசி விவாதித்தனர்.  ஆனால் கபர்டே, நூல்கர், பூட்டி ஆகிய மூவர் மட்டும் எப்போதும் மெளனமாக இருந்தனர்.  அவர்கள் சாந்தம், எளிமை, பொறுமை, நற்பண்பு வாய்க்கப்பெற்றவர்கள்.  தாதா சாஹேப் மற்றவர்களுக்கு பஞ்சதசியை (புகழ்பெற்ற வித்யாரண்யாரால் இயற்றப்பெற்ற அத்வைத தத்துவத்தைப் பற்றிய பிரசித்தமான சம்ஸ்கிருத நூல்) படித்து விளக்கம் செய்யும் வல்லமை உடையவர்.  அவர் மசூதிக்கு பாபாவின்முன் வந்தபிறகு ஒருவார்த்தைகூடப் பேசமாட்டார். 


 
வேதங்களில் கூட ஒருவன் எவ்வளவுதான் கற்றுத் தேறியிருப்பினும் பிரம்மத்தை அறிந்தவன்முன் உண்மையிலேயே மங்கிவிடுகிறான்.  ஆன்ம அறிவின்முன் கல்வி பிரகாசிக்க முடியாது.  தாதா சாஹேப் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார்.  ஆனால் அவர் மனைவியோ ஏழு மாதங்கள் தங்கியிருந்தாள்.  இருவரும் தங்களின் ஷீர்டி வாசத்தைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.  திருமதி கபர்டே பாபாவின்பால் விசுவாசம், பக்தி, ஆழ்ந்த அன்பு இவைகளைக் கொண்டிருந்தாள்.  ஒவ்வொரு மதியமும் மசூதிக்கு அவளே பாபாவுக்கு நைவேத்தியத்தை எடுத்து வருவாள்.  அது பாபாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்புதான் அவள் உண்ணச் செல்வாள்.  அவளது நிதானமான, உறுதியான பக்தியை பாபா மற்றவர்களுக்குக் காட்ட விரும்பினார்.  ஒருநாள் அவள் சன்ஸா (கோதுமை பலகாரம்), பூரி, சாதம், சூப், சர்க்கரைப் பொங்கல், வற்றல் இவைகளுடன் மசூதிக்கு வந்தாள்.  வழக்கமாக மணிக்கணக்கில் காக்கும் பாபா உடனே எழுந்திருந்து தனது சாப்பாட்டு இடத்துக்குச் சென்று, பாத்திரத்தின் மூடியை எடுத்துவிட்டு ஊக்கத்துடன் அவைகளை உண்ணத் தொடங்கினார். 

ஷாமா:  ஏன் இந்தப் பாரபட்சம்?  மற்றவர்களின் உணவை வீசியெறிந்துவிட்டு, அவைகளைக் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும் கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள்.  ஆனால் இதையோ தாங்களே ஊக்கத்துடன் வாங்குகிறீர்கள்.  அதற்கு நியாயம் செய்யுங்கள்.  இப்பெண்மணியின் பலகாரங்கள் மட்டும் ஏன் அவ்வளவு இனிமையாக இருக்கின்றன?  இது எங்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

பாபா:  உண்மையிலேயே இவ்வுணவு அசாதாரனமானதுதான்.  முந்தைய பிறவியில் இவள், ஒரு வியாபாரியின் கொளுத்த பசுவாக அதிக பால் கொடுத்து வந்தாள்.  பின்னர் அவள் மறைந்து ஒரு தோட்டக்காரன் குடும்பத்திலும், பின்னர் ஒரு ஷத்திரியக் குடும்பம் ஒன்றிலும் பிறந்து, ஒரு வணிகனைத் திருமணம் செய்துகொண்டாள்.  பின்னர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தாள்.  மிக நீண்ட காலத்துக்குப் பின் நான் அவளைக் காண்கிறேன்.  அவளது பாத்திரத்திலிருந்து சில அன்புக் கவளங்களை நான் உண்பேன்.  இவ்வாறு கூறிக்கொண்டே அவளது பலகாரத்துக்குரிய முழுத் தீர்ப்பையும் வழங்கி, தமது வாய், கை முதலியவற்றைக் கழுவிக்கொண்டு மனநிறைவின் அறிகுறியாக ஏப்பம் விட்டுத் தமது இருக்கையில் அமர்ந்தார்.
 

பின்னர் அவள் வணங்கி அவர் கால்களைப் பிடித்துவிடத் தொடங்கினாள்.  பாபா ஆவலுடன் பேசத்தொடங்கி தம் கைகளைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்த கையை ஆதரவாகப் பிடித்துவிடத் தொடங்கினார்.  இந்தப் பரஸ்பர சேவையைக் கண்டுவிட்டு ஷாமா வேடிக்கை செய்ய ஆரம்பித்தார்.  "இது நன்றாக இருக்கிறது.  கடவுளும் - பக்தையும் ஒருவருக்கொருவர் சேவை செய்து கொள்வதைக் காண்பது அற்புதக் காட்சியாகும்" என்றார்.  அவளது விசுவாசமான சேவையைக்கண்டு பாபா அவளை, மெதுவான, மிருதுவான அற்புதமான குரலில் 'ராஜாராமா...! ராஜாராமா...!" என்று அப்போதிலிருந்து எப்போதும் ஸ்மரிக்கும்படியாகக் கூறி "இதை நீ செய்துவந்தால், உனது வாழ்க்கையின் நோக்கத்தை எய்துவாய்.  உனது மனம் சாந்தி பெற்று பெருமளவு நீ பயனடைவாய்" என்றார்.  ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பழக்கமில்லாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றும்.  உண்மையில் அது அவ்வாறில்லை.  'சக்தி-பாத்' என்றழைக்கப்படும் குருவின் சக்தியை சீடனுக்கு மாற்றிவிடுவதாகும்.  பாபாவின் மொழிகள் எவ்வளவு வல்லமை வாய்ந்தவைகளாகவும், பலனுள்ளவையாகவும் இருக்கின்றன.  ஒரே வினாடியில் அவைகள் அவளது உள்ளத்தைத் துளைத்து அங்கே இடம் பிடித்துக்கொண்டன.

குருவுக்கும், சீடனுக்கும் இருக்கவேண்டிய உறவுத் தன்மையைப் பற்றி இந்நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.  இருவரும் ஒருவருக்கொருவர் அன்புகூர்ந்து சேவை செய்யவேண்டும்.  அவர்களிடையே எவ்விதப் பாகுபாடும், வித்தியாசமும் இல்லை.  இருவரும் ஒருவரே.  ஒருவரில்லாமல் மற்றவர் வாழ முடியாது.  சீடன் குருவின் பாதங்களில் தனது தலையை வைப்பது புறத்தோற்றமே.  உண்மையில் அந்தரங்கமாக அவர்கள் ஒன்றேயாம்.  அவர்களிடையே எவ்விதப் பாகுபாட்டையும் காண்பவன் இன்னும் பக்குவமடையாதவன், ஒழுங்கற்றவன்.


ஸ்ரீ சாயியைப்  பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
   

Thursday, 9 August 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 26

(1)  பகத் பந்த்
(2)  ஹரிச்சந்திர பிதலே
(3)  கோபால் ஆம்டேகர் 
      ஆகியோரின் கதைகள்



முன்னுரை 

இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் யாவும் மாயையின் விளையாட்டே.  கடவுளின் ஆக்கும் ஆற்றலே.  இவைகள் உண்மையில் இருப்பவை அல்ல.  உண்மையான பரப்பிரம்மமே நிச்சயமாக இருக்கிறது.  இருளின் காரணமாக ஒரு கயிற்றையோ, ஒரு மாலையையோ பாம்பாக நாம் எண்ணிக்கொள்வதைப் போலவே, புறத்தோற்றத்தை மட்டுமே நாம் காண்கிறோம்.  காணக்கூடிய பொருட்களிலெல்லாம் உள்ளுறைந்து கிடக்கும் மெய்ப்பொருளை நாம் காண்பதே இல்லை.

நமது அறிவுக் கண்களை சத்குரு மட்டுமே திறந்துவிடுகிறார். 
பொருட்களை அவைகளின் தோற்றத்தில் காணப்படுவதுபோல் பாராமல் உண்மையான ஒளியில் அவைகளைக் காணுமாறு நம்மை ஊக்குவிக்கிறார்.  எனவே நாம் சத்குருவை வணங்கி, உண்மையான காட்சியை அதாவது கடவுள் காட்சியை நமக்கருள வேண்டிநிற்போம்.



ஒரு நூதன வழிபாட்டை ஹேமத்பந்த் நமக்குக் கொடுத்திருக்கிறார்.  சத்குருவின் பாதாம்புயத்தைக் கழுவும் நன்னீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை நம்பிக்கை என்னும் உடையை அவர் மேனிக்கு உடுத்தி, நமது எட்டு விதமான சாத்வீக உணர்ச்சிகள் என்னும் அஷ்ட கமலங்களையும் 'ஒருமை மனது' என்னும் கனியையும் அவருக்குச் சமர்ப்பிப்போம்.  பக்தி என்னும் நறுமணக் கரும்பொடியை அவர் தலைக்கு இட்டு, பற்று என்னும் வேட்டியைக் கட்டிவிட்டு நமது தலையை அவர் பாதங்களில் வைப்போம்.


இத்தகைய எல்லா அணிமணிகளாலும் சத்குருவை அலங்கரித்துவிட்டு, நமதனைத்தையும் அவரிடம் சமர்ப்பித்து விடுவோம்.  உஷ்ணத்தைப் போக்குவதற்குப் பக்தி என்னும் சாமரம் கொண்டு வீசுவோம்.  இத்தகைய பேரானந்த வழிபாட்டுக்குப் பின் அவரை இங்ஙனம் வேண்டுவோம். 

"எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள்.  அந்தர்முகமாகச் செய்யுங்கள்.  நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்மா உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள். 

ஆன்மாவையும், உடலையும் (உடலுணர்வு, மற்றும் அகங்காரம்) உம்மிடம் ஒப்புவித்தோம்.  எங்களுடைய கண்களைத் தங்களது ஆக்குங்கள்.  அதன்மூலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம்.  தங்கள் சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள்.  தங்கள் பாதாம்புஜத்தில் எங்களது மனம் ஆறுதல் பெறட்டும்."

இப்போது இந்த அத்தியாயத்தின் கதைகளுக்கு வருவோம்.



பகத் பந்த்

மற்றொரு சத்குருவின் சீடரான பந்த் என்பவர் ஷீரடிக்கு வரும் நல்லதிர்ஷ்டம் பெறநேர்ந்தது.  அவருக்கு ஷிர்டிக்குச் செல்லும் எண்ணமில்லை.  ஆயின் மனிதன் ஒரு விதமாக எண்ணக் கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுகிறார்.  அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருக்குபோது ஷிர்டிக்குப் போய்க்கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும் காண நேர்ந்தது.  அவர்கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர்.  அவரால் இயலாதென்று சொல்ல முடியவில்லை.  அவர்கள் எல்லோரும் பம்பாயில் இறங்கினர்.  பந்த் விராலில் இறங்கினார்.
   

பின்னர் ஷீர்டி விஜயத்திற்காகத் தனது சத்குருவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் அக்கோஷ்டியுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டார்.  எல்லோரும் மறுநாள் ஷீர்டியை அடைந்து மசூதிக்குச் சுமார் 11 மணிக்குச் சென்றனர்.  பாபாவின் வழிபாட்டுக்காகக் குழுமியுள்ள பக்தர்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருப்பதைக் கண்ட அவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தனர்.  ஆனால் பந்த் திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக் கீழே சாய்ந்தார்.  அவர்கள் எல்லோரும் பீதியடைந்தனர்.  எனினும் அவரைத் திரும்ப உணர்வுக்குக் கொண்டுவர தங்களால் இயன்றதைச் செய்தனர்.  பாபாவின் அருளாலும், அவர் தலைமீது தெளிக்கப்பட்ட நீராலும் பிரக்ஞைக்கு  வந்து, அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் எழுந்து உட்கார்ந்தார்.

மற்றொரு குருவின் சீடர் அவர் என்று அறிந்துகொண்ட சர்வாந்தர்யாமியான பாபா அஞ்சாமலிருக்கும்படி அவருக்கு உறுதிகூறி, அவரது சொந்தக் குருவின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கீழ்கண்டவாறு அவரிடம் கூறினார்.  "வருவது வரட்டும், விட்டு விடாதே.  உனது ஆதாரத்தையே (குருவையே) உறுதியாகப் பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும், சதாகாலமும் அவருடன் ஒன்றியும் இருப்பாய்".

இம்மொழிகளின் குறிப்பை பந்த் உடனே அறிந்துகொண்டார்.  இவ்விதமாக அவர் சத்குருவை நினைவுகூர்ந்தார்.  பாபாவின் இந்த அன்பை அவர்தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை.



ஹரிச்சந்திர பிதலே

பம்பாயில்
ஹரிச்சந்திர பிதலே என்னும் பெயருள்ள மனிதர் ஒருவர் இருந்தார்.  காக்காய் வலிப்பால் அவதியுறும் ஒரு மகன் அவருக்கு இருந்தான்.  பல அலோபதி ஆயுர்வேத வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமேதும் ஏற்படவில்லை.  ஒரே ஒரு வழிதான் பாக்கி இருந்தது.  அதாவது ஞானிகளிடம் அடைக்கலம் புகுவது.  தாஸ்கணு தமது மிகச்சிறந்த, அற்புதமான கீர்த்தனைகளால் பம்பாய் ராஜதானி எங்கும் பாபாவின் புகழைப் பரவச் செய்தார் என்று அத்தியாயம் 15ல் முன்னரே குறிக்கப்பட்டுள்ளது.  பிதலே இக்கீர்தனைகள் சிலவற்றை 1910ல் கேட்டார்.

அதிலிருந்து மற்றவர்கள் மூலமாகவும் பாபா தமது ஸ்பரிசத்தாலும், வெறும் பார்வையாலும் மட்டுமே அனேக தீர்க்க முடியாத வியாதிகளைக் குணப்படுத்தியிருப்பதாக அறிந்தார்.  அதனால் சாயிபாபாவைக் காண அவர் மனதில் ஆர்வம் எழுந்தது.  எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, வெகுமதிகளையும், பழக்கூடைகளையும் எடுத்துக்கொண்டு, பிதலே குடும்பத்துடன் ஷீர்டிக்கு வந்து சேர்ந்தார்.  பின்னர் அவர்களுடன் மசூதிக்குச் சென்று பாபாவின்முன் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு தனது நோயாளிப் புதல்வனைப் பாபாவின் பாதங்களில் வைத்தார்.  பாபா அக்குழந்தையைக் கண்ட அத்தருணத்திலேயே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது.  கண்களைச் சுற்றிக்கொண்டு அப்புதல்வன் உணர்வற்றுக் கீழே விழுந்தான்.  அவனது வாய் நுரைதள்ளி, உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது.  உயிரை விட்டுவிட்டான் போல் தோன்றியது.  இதைக் கண்டு பெற்றோர் மிகவும் படபடத்து உணர்ச்சி வசப்பட்டனர்.  பையனுக்கு அடிக்கடி வலிப்பு வருமாயினும் இந்த வலிப்பு நீண்டதாகத் தோன்றியது.

தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிட்டாள்.  கொள்ளைக்காரனுக்குப் பயந்து ஒரு வீட்டில் ஒளிந்த ஒருவன் மீது அவ்வீடு சரிந்து விழுந்துவிட்டதைப் போலவும், புலிக்குப் பயந்து ஓடிய பசு ஒன்று கசாப்புக் கடைக்காரன் கையில் அகப்பட்டுக்கொண்டதைப் போலவும், வெப்பம் தாங்காது ஒரு மரத்தடியில் ஒதுங்கிய ஒரு வழிப்போக்கன் மீது அம்மரமே சாய்ந்து விழுந்துவிட்டதைப் போன்றும், பக்தியுள்ள ஒருவன் கோவிலுக்கு வழிபடச் சென்றபோது அக்கோவிலே அவன்மீது இடிந்து விழுந்துவிட்டதைப் போன்றும் தனது நிலையிருப்பதாகக் கூறி அவள் ஓலமிடத் தொடங்கினாள்.
 

பின் பாபா அவளை நோக்கி, "இம்மாதிரி ஓலமிடாதே.  கொஞ்சம் பொறு.  அமைதியாய் இரு.  உன் இருப்பிடத்துக்கு இவனை எடுத்துச் செல்.  அரைமணி நேரத்தில் அவன் சுவாதீனத்துக்கு வருவான்" என்று கூறித் தோற்றினார்.  பாபா கூறியபடியே அவர்கள் செய்தனர்.  பாபாவின் மொழிகள் உண்மையானதைக் கண்டனர்.  வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே பையன் குணமடைந்தான்.  பிதலேயின் குடும்பத்தவர் அனைவரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.  அவர்கள் ஐயம் அழிந்தது.

பின் பிதலே தன மனைவியுடன் பாபாவைக் காணவந்தார்.  அவர்முன் மிகப்பணிவாகவும், மரியாதையாகவும் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறே, மனதில் பாபாவின் உதவிக்கு நன்றி செலுத்தினார்.  பாபா புன்சிரிப்புடன், "உமது எல்லா எண்ணங்களும், சந்தேகங்களும், கருத்துக்களும் இப்போது சாந்தப்படுத்தப்பட்டனவா?  நம்பிக்கையும், பொறுமையும் உடையோரையே ஹரி காப்பாற்றுகிறார்" என்றார்.  பிதலே வசதியுள்ள பணக்கார மனிதர்.  பெருமளவில் அவர் இனிப்புக்களை விநியோகித்து பாபாவுக்கு மிகச்சிறந்த பழங்களையும், வெற்றிலை பாக்கையும் அளித்தார்.  பிதலேயின் மனைவி மிகச்சிறந்த பண்புடையவள்.  எளிமை, அன்பு, நம்பிக்கை உடையவள்.  தூணுக்கு அருகில் அமர்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய பாபாவையே உற்றுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.  அவளது நட்பும், அன்புமுள்ள குணத்தைக் கண்டு பாபா மிகவும் சந்தோஷமடைந்தார்.  முழு மனத்தோடும், முழு ஆத்மாவோடும் தம்மிடம் சரணடைந்து வழிபடுவோர்பால் ஞானிகளும், கடவுளரும் சார்ந்திருக்கின்றனர் அன்றோ!  பாபாவின் சந்நிதானத்தில் சில இன்பமான நாட்களைக் கழித்த பின்னர் அக்குடும்பத்தினர் புறப்படுவதற்குப் பாபாவின் அனுமதியைப் பெற மசூதிக்கு வந்திருந்தனர்.  உத்தியையும், ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு பாபா அளித்த பின்பு பிதலேயை அருகே அழைத்தார்.  "பாபு நான் உனக்கு முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறேன்.  இப்போது மூன்று ரூபாய் தருகிறேன்.  இதை உனது பூஜை அறையில் வைத்துக்கொள்.  நீ நன்மையடைவாய்" என்று கூறினார். 

இவைகளைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர்முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, அவரது ஆசீர்வாதத்துக்காக வேண்டி நின்றார்.  ஷீர்டிக்கு இதுவே தமது முதல் விஜயமாதலால் பாபா தாம் முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியது தமக்கு விளங்கவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது.  இப்புதிர் விடுபடுவதற்கு அவர் ஆவலாய் இருந்தார்.  ஆனால் பாபா மெளனமாக இருந்துவிட்டார்.  பிதலே பம்பாய்க்குத் திரும்பியபின் தனது கிழத்தாயாருக்கு
ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும், பாபா அவருக்கு முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொன்ன புதிரையும் கூறினார்.

அந்தக் கிழவிக்கும் அப்புதிர் புரியவில்லை.  ஆனால் இதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபின், நினைவுக்கு வந்த ஒரு பழைய சம்பவம் அப்புதிரை விடுவித்தது.  "உனது மகனோடு இப்போது நீ சாயிபாபாவைப் பார்க்கச் சென்றதுபோல், பல ஆண்டுகளுக்குமுன் உனது தந்தையும் உன்னை அக்கல்கோட்டுக்கு அப்பெருமானின் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றார்.  அப்பெருமான்கூட ஒரு சித்தர், பரிபூரண யோகி, சர்வவியாபி, தாராள மனதுடையவர்.  உனது தந்தை தூயவர், பக்தியுடையவர்.  அவரது வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அவர் உனது தந்தைக்கு இரண்டு ரூபாய்களைப் பூஜையறையில் வைத்து வழிபடுவதற்காக அளித்தார்.  உனது தந்தை, தான் சாகும்வரை அதை முறைப்படி வழிபட்டு வந்தார்.  ஆனால் அதற்குப்பின் வழிபாடு புறக்கணிக்கப்பட்டு அந்த ரூபாய்கள் தொலைந்துபோயின.  சில ஆண்டுகளுக்குப் பின் அவற்றின் நினைப்பும் மறந்துபோயின.  தற்போது நீ அதிஷ்டசாலியாக இருந்ததால், சாயிபாபாவின் ரூபத்தில் அக்கல்கோட் மஹராஜ் உனது கடமைகள், வழிபாடு இவற்றை நினைவூட்டவும், அபாயங்களை அகற்றிவிடவும் தோன்றியிருந்தார்.


இனிமேலாவது ஜாக்கிரதையாக எல்லா ஐயங்களையும் கெட்ட எண்ணங்களையும் அகற்றிவிடு.  உனது மூதாதையர் வழிநின்று நன்றாக நடந்துகொள்.  குடும்ப தெய்வங்களையும், காசுகளையும் வணங்கி, நன்றாக எடைபோட்டு, ஞானிகளின் ஆசிகளில் பெருமைகொள்.  உனது பக்தி உணர்ச்சிக்கு சமர்த்த சாயி அன்புடன் புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார்.  உனது நன்மைக்காக அதைப் பயிர் செய்வாய்" என்று கூறினாள்.  தாயாரின் இம்மொழிகளைக் கேட்டு பிதலே மிகவும் ஆச்சரியப்பட்டார்.  பாபாவின் சர்வவியாபித்துவத் தன்மையை அவர் அறிய தலைப்பட்டு, அதில் உறுதியானார்.  பாபாவின் தரிசனத்தின் முக்கியத்துவத்தையும் அவர் அறிந்தார்.  அதிலிருந்து அவர் குணத்தைப் பற்றி சர்வ ஜாக்கிரதையுடையவரானார்.



ஆம்ப்டேகர்

புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் ஆம்ப்டேகர் என்பவர் பாபாவின் பக்தர். 
அவர் பத்து ஆண்டுகளுக்கு தாணே ஜில்லாவிலும், பின் ஜவ்கர் ஜில்லாவிலும் எக்ஸெய்ஸ் டிபார்ட்மென்டில் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார்.  வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர் முயற்சித்தார்.  ஆனால் முடியவில்லை.  மற்ற கேடுகளால் அவர் தாக்கப்பட்டு அவரது நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே வந்தது.  இதே நிலைமையில் ஷீர்டிக்கு ஒவ்வோர் ஆண்டும் சென்று தனது கவலைகளை பாபாவின்முன் சமர்ப்பிப்பதுமாக ஏழாண்டுகள் கழித்தார்.  1916ல் அவரது நிலைமை மோசமாகி, ஷீர்டியிலேயே தற்கொலை செய்துகொள்வது எனத் தீர்மானித்தார். 

எனவே தன் மனைவியுடன் ஷீரடிக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்.  ஒருநாள் தீஷித் வாதாவின் முன்னால் உள்ள மாட்டு வண்டியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் குதித்துத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் தீர்மானித்துவிட்டார்.  அவர் ஒரு மாதிரியாக எண்ண, பாபா வேறொருவிதமாக நடப்பித்தார்.  இந்த இடத்துக்குச் சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டல் முதலாளியும், பாபாவின் அடியவருமான சகுண் என்பவர் வெளியே வந்து அவரிடம், "அக்கல்கோட் மஹராஜின் இச்சரிதத்தை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.  ஆம்ப்டேகர் அவரிடமிருந்து அந்நூலை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்.  எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாகக் கீழ்கண்ட ஒரு கதையை அவர் படிக்கத் தொடங்கினார்.

அக்கல்கோட் மஹராஜின் அடியவன் ஒருவன் தீர்க்கப்படமுடியாத ஒரு வியாதியால் மிகவும் அல்லலுற்றுக்கொண்டிருந்தான்.  அந்த வேதனையை மேற்கொண்டு தாங்கமுடியாமற்போகவே அவன் மனம் உடைந்து தனது தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் குதித்துவிட்டான். 

உடனே மஹாராஜ் அங்குவந்து அவனைத் தன் கரங்களாலேயே வெளியே எடுத்து, "நல்லதோ, கெட்டதோ உன் முந்தைய கர்மத்தின் பயனை நீ அடைந்தாக வேண்டும்.  அதன் அனுபவித்தல் பூரணமெய்தவில்லையானால் தற்கொலை உனக்கு உதவியளிக்காது.  மீண்டும் ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தையே அடையவேண்டும்.  எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப் பதிலாக ஏன் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து, முந்தைய கர்மத்தின் பலன்களை எல்லாம் முழுவதுமாக தீர்த்துவிடக்கூடாது?" என்றார்.

இந்தப் பொருத்தமான, தக்க சமயத்தில் கிடைத்த கதையைப் படித்துவிட்டு ஆம்ப்டேகர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
  உள்ளம் உருகினார்.  பாபாவின் குறிப்பை இக்கதையின் மூலம் அவர் பெற்றிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்.  பாபாவின் சர்வ வியாபித்துவத்தையும், தயாளத்தையும் கண்டு, பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, பாபாவின் பெரும் பக்தராகிவிட்டார்.  அவர் தந்தையார் அக்கல்கோட் மஹராஜின் பக்தராக இருந்தவர்.  சாயிபாபா அவரையும் அவர் தந்தையார் சென்ற அடிச்சுவட்டிலேயே சென்று அவரிடம் பக்தி பூண்டவராகத் தொடர்ந்திருக்கும்படி விரும்பினார்.  பின்னர் பாபாவின் ஆசீர்வாதம் பெற்றார்.  அவரின் எதிர்காலம் சிறப்புறத் தொடங்கியது.  பின்னர் ஜோதிடம் படித்து, அதில் திறமை பெற்றுத் தனது செல்வத்தைப் பெருக்கினார்.  போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால் இயன்று, தனது பிற்கால வாழ்வை சௌகரியமாகவும், வசதியாகவும் கழித்தார்.


ஸ்ரீ சாயியைப்  பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்