Thursday, 29 March 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 15

•  நாரத இசைமுறை
•  சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர் 
•  இரண்டு பல்லிகள்


ஷீர்டியில் ராமநவமித் திருவிழாவைப் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டதை நூலைக் கற்போர் நினைவு கூர்ந்தறியலாம்.  எவ்விதம் அத்திருவிழா முதன்முதலாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது, எவ்வாறு ஆரம்ப வருடங்களில் அவ்விழாவின்போது கீர்த்தனைகள் பாடுவதற்கான ஒரு ஹரிதாசைப்(பாடகர்) பெறுவது மிகக்கடினமாய் இருந்தது, எவ்வாறு தாஸ்கணுவிற்கே இவ்விழாவினுடைய கீர்த்தனைப் பொறுப்பை நிரந்தரமாக பாபா ஒப்படைத்தது, அதிலிருந்து தாஸ்கணு அதனை எவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறார் ஆகியவைகளை நினைவு கூர்ந்தறியலாம்.



நாரத இசை - பத்ததி 

பொதுவாக நமது ஹரிதாசர்கள் கீர்த்தனைகள் செய்யும்போது, மகிழ்வுநாள் உடைகளையும், முழு உடைகளையும் அணிகிறார்கள்.  ஃபேடாவோ, டர்பனோ ஏதோ ஒரு தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள்.  நீளமான அலைமோதும் கோட், உள்ளே ஒரு சட்டை, தோள்களில் அங்கவஸ்திரம், இடுப்புக்குக் கீழே வழக்கமான நீள வேட்டி ஆகியவற்றை அணிகிறார்கள்.  ஷீர்டி கிராமத்தில் ஒரு கீர்த்தனைக்காக தாஸ்கணு ஒருமுறை இவ்வாறாக உடையணிந்து, பாபாவிடம் வணங்குவதற்காகச் சென்றார்.  பாபா "நல்லாயிருக்கு மாப்பிளே!  இவ்வளவு அழகாக உடையணிந்து நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.  "கீர்த்தனை செய்வதற்கு" என்று பதில் வந்தது.  

அப்போது பாபா, "இச்சிறு அலங்காரப் பொருட்கள் எல்லாம் எதற்கு? கோட்டு, அங்கவஸ்திரம், குல்லாய் முதலிய எல்லாவற்றையும் எனக்கு முன்னால் கழற்றிவிடு" என்று கூறினார்.  தாஸ்கணு உடனே அவற்றை எடுத்து பாபாவின் பாதத்தடியில் வைத்தார்.  அதிலிருந்து கீர்த்தனை செய்யும்போது தாஸ்கணு இடுப்புக்குமேல் ஒன்றும் அணிவதில்லை.  கைகளில் ஒரு ஜதை சப்ளாக் கட்டை, கழுத்தில் மாலை இவற்றுடனேயே எப்போதும் இருந்தார்.  எல்லாப் பாடகர்களும் கைக்கொள்ளும் முறையுடன் இது ஒத்ததாய் இல்லை.  ஆனால் இதுவே மிகச்சிறந்த, மிகத்தூய வழியாகும்.  கீர்த்தனை பத்ததிகளை படைத்துருவாக்கிய நாரத ரிஷியே மேல் உடம்பிலும், தலையிலும் ஏதும் அணியவில்லை.  தம் கையில் வீணையேந்தி இடந்தோறும் அலைந்து திரிந்து கடவுளின் புகழைப் பாடினார்.



சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர்

புனே, அஹமத்நகர் ஜில்லாக்களில் பாபா அறிந்துகொள்ளப்பட்டார்.  ஆனால் நானா சாஹேப் சாந்தோர்கர் தனது சொந்த தனிப்பட்டமுறையிலான உரையாடல்களாலும், தாஸ்கணு தனது மிக உயர்வான கீர்த்தனைகளாலும் கொங்கணத்தில் (பம்பாய் ராஜதானி) பாபாவின் புகழைப் பரப்பினார்கள்.  உண்மையில் தாஸ்கணுதாம் - அவரைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக, தமது அழகிய ஒப்புவமையற்ற கீர்த்தனைகளால் அங்கேயிருந்த ஏராளமான மக்களை பாபாவினால் பயனுறும்படி செய்தார்.

கீர்த்தனைகளைக் கேட்கவந்த மக்கள் வெவ்வேறு சுவையுள்ளவர்களாய் இருப்பர்.  சிலர் ஹரிதாசின் அறிவாழத்தை அல்லது புலமையை விரும்புபவர்.  சிலர் அவரது அபிநயங்களையும், சிலர் அவரது பாடலையும், சிலர் அவரது விகட நகைச்சுவைகளையும், சிலர் அவரது துவக்க வேதாந்த வியாக்கியானங்களையும், மற்றும் சிலர் அவரது முக்கிய கதைகளையுமாக பலர் பலவிதமாக ஆர்வம் கொண்டிருப்பர்.  அவர்களுக்குள் மிகச்சிலரே கீர்த்தனைகளைக் கேட்பதன் வாயிலாக ஞானிகளிடத்தோ, கடவுளிடத்தோ, நம்பிக்கையும், பக்தியும் பெறுகிறார்கள்.  ஆயினும் தாஸ்கணுவின் கீத்தனைகளைக் கேட்கும் அவையோர்களது மனங்களின் விளைவு மின்சாரமாகும்.  அது அங்ஙனமே இருந்தது.  கீழ்கண்ட ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறோம்.  

தாஸ்கணு ஒருமுறை தாணேவில் கௌபினேஷ்வர் கோவிலில் சாயிபாபாவின் புகழைப்பாடி கீர்த்தனை செய்துவந்தார்.  அவையோர்களுள் சோல்கர் என்பவர் சிவில் கோட்டில் ஒரு தற்காலிக ஊழியராக வேலைபார்த்துவந்த ஒரு ஏழை ஆவார்.  மிகவும் கவனத்துடன் தாஸ்கணுவின் கீர்த்தனையை அவர் கேட்டுப் பெரிதும் உருகிப்போனார்.  அவர் அங்கேயே, அப்போதே மனத்தினால் பாபாவுக்கு வணக்கம் செலுத்தி விரதம் எடுத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்.

"பாபா, நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத ஓர் ஏழை.  தங்களுடைய அருளினால் நான் இலாகாவிற்குரிய தேர்வில் வெற்றிபெற்று, நிரந்தர உத்தியோகம் பெற்றால் ஷீர்டிக்குச் சென்று, தங்கள் பாதங்களில் வீழ்ந்து, தங்கள் நாமத்தினால் கற்கண்டை வினியோகிப்பேன்."  இது நிறைவேறுவதற்குரிய நல்ல அதிஷ்டம் இருந்ததால், சோல்கர் பரீட்ஷையில் தேர்வு பெறவே செய்தார்.  எவ்வளவு விரைவோ, அவ்வளவு நலம் என்பதாக, தனது விரதத்தை நிறைவேற்றுவது ஒன்றே அவருக்கு எஞ்சியிருந்தது.  பெருங்குடும்பத்தைத் தாங்கவேண்டிய ஏழை மனிதர் சோல்கர், அவரால் ஷீர்டி பயணத்திற்கு நேரும் செலவைத் தாங்குதல் இயலாது.  தாணே ஜில்லாவில் உள்ள நாணே காட்டையா அல்லது சஹ்யாத்ரி மலைத்தொடரையோகூட ஒருவன் எளிதில் கடந்துவிடலாம்.  உம்பரேகாட்டை, அதாவது வீட்டின் தலைவாயிலை, ஓர் ஏழை மனிதன் கடப்பது என்பது மிகமிகக் கடினமானது.

எவ்வளவு விரைவில் தனது விரதத்தைப் பூர்த்திசெய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் பூர்த்திசெய்ய ஆவலும், கவலையுமுற்ற சோல்கர் தனது செலவைக் குறைத்துச் சிக்கனப்படுத்தி பணத்தைச் சேகரிக்கத் தீர்மானித்தார்.  தனது உணவிலும், தேநீரிலும் சர்க்கரை உபயோகிப்பதில்லை என முடிவுசெய்து, தேநீரைச் சர்க்கரை இன்றியே அருந்தத் தொடங்கினார்.  இவ்வாறாக அவர் சிறிது பணம் சேகரிக்க இயன்றதும், ஷீர்டியை வந்தடைந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.  அவர் பாதங்களில் வீழ்தார்.  இரு தேங்காயை அர்ப்பணித்தார்.  தனது விரதப்படி அந்தக்கரண சுத்தியுடன் கற்கண்டை விநியோகித்தார்.

பாபாவிடம், அவரது தரிசனத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், அன்றைய தினத்தில் அவரது ஆசைகள் பூர்த்தியாயின என்றும் கூறினார்.  தன்னுடைய உபசரிப்பளராகிய பாபு சாஹேப் ஜோகுடன், சோல்கர் மசூதியில் இருந்தார்.  விருந்து உபசரிப்பாளரும், விருந்தினருமாகிய இருவரும் எழுந்து மசூதியை விட்டுப் புறப்படப் போனபோது, பாபா, ஜோகிடம் பின்வருமாறு கூறினார்.  "அவருக்கு (விருந்தினருக்கு) சர்க்கரை நிறை முழுமையாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுப்பீர்".  இத்தகைய உட்கருத்து வளஞ்செறி சொற்களைக் கேட்டு சோல்கர் மிகவும் மனதுருகிப் போனார்.  வியப்பால் செயலிழந்தார்.  அவரின் கண்கள் கண்ணீரால் பனித்தன.  மீண்டும் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  தனது விருந்தினருக்கு அழிக்கபடவேண்டிய தேநீரைப்பற்றிய வழிநெறியைக் கேட்டு ஜோகும் ஆச்சரியமடைந்தார்.

தமது சொற்களின் மூலம் சோல்கரின் மனத்தில் நம்பிக்கையையும், பக்தியையும் தோற்றுவிக்க பாபா விரும்பினார்.  அவருடைய விரதப்படி தாம் கற்கண்டைப் பெற்றுக்கொண்டதையும், உணவில் சர்க்கரை பயன்படுத்தக் கூடாது என்ற அவரது இரகசியத் திட்டத்தையும் தாம் முழுமையாக அறிந்திருப்பதாக, அங்ஙனம் இருந்தபடியே, பாபா குறிப்பிட்டார்.  பாபா கூறியதன் பொருளாவது, "என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால், உடனேயே இரவும், பகலும் உங்களுடன் கூடவே நான் இருக்கிறேன்.  இவ்வுடம்பால் நான் இங்கேயே இருப்பினும், ஏழ்கடலுக்கப்பால், நீங்கள் செய்வதையும் நான் அறிவேன்.  இந்த பரந்த உலகின்கண் நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.  நான் உங்களுடனேயே இருக்கிறேன்.  உங்களது இதயமே எனது இருப்பிடம்.  நான் உங்களுக்குள்ளேயே இருக்கிறேன்.  உங்களது இதயத்துள்ளும், அதைப் போன்ற சகல ஜீவராசிகளின் இதயங்களினுள்ளும் இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக!  என்னை இங்ஙனமாக அறிபவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும், அதிஷ்டசாலியும் ஆவர்".

இவ்வாறாக, எவ்வித அழகிய முக்கியமான நீதி பாபாவினால் சோல்கருக்கு உபதேசிக்கபட்டது!



இரண்டு பல்லிகள் 

இரண்டு சிறிய பல்லிகளின் கதையுடன் இவ்வத்தியாயத்தை முடிப்போம்.  ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தார்.  ஒரு பக்தரும் அவர் முன்னர் அமர்ந்திருந்தார்.  ஒரு பல்லி, 'டிக்!.. டிக்!... " துடிப்பை விளைவித்தது.  ஆச்சரியத்தால் உந்தப்பட்ட அடியவர், பல்லியின் இத்துடிப்பு, ஏதேனும் பின்விளைவு காட்டுதல் குறித்ததா? அது நல்ல அடையாளமா அல்லது தீய சகுனமா என்று பாபாவைக் கேட்டார்.  அப்பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஓளரங்காபாத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாயும், அதனால் அப்பல்லி மிகவும் மகிழ்ச்சியுற்றிருக்கிறது என்றும் பாபா கூறினார்.  பாபா சொல்லுவதன் அர்த்தம் புரியாமல் அவர் மௌனமாய் அமர்ந்து இருந்தார்.  உடனேயே   ஓளரங்காபாத்திலிருந்து குதிரையில் ஒரு பெருந்தகை பாபாவைப் பார்க்க வந்தார்.

அவர் மேற்கொண்டு பயணத்தைத் தொடர விரும்பினார்.  ஆனால் அவரது குதிரை பசியாய் இருந்தபடியால், நகர்வதாக இல்லை.  அதற்குக் கொள்ளு தேவைப்பட்டது.  கொள்ளு கொண்டு வருவதற்காகத் தனது தோளில் இருந்து ஒரு பையை எடுத்தார்.  தூசியைப் போக்குவதற்காகத் தரையில் அடித்தார்.  அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது.  

எல்லோர் முன்னிலையிலும் அது சுவரில் ஏறியது.  கேள்விகேட்ட பக்தரிடம் அப்பல்லியை நன்றாகக் கவனிக்கும்படி பாபா கூறினார்.  அது உடனே தனது பெருமையான நடையுடன் தன் சகோதரியை நோக்கிச் சென்றது.  நீண்ட காலத்திற்குப் பின்னர் இரண்டும் சந்தித்தன.  ஒன்றையொன்று முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கொண்டன.  சுற்றிச்சுற்றி ஓடி வந்து அன்பால் நடனம் ஆடின.  ஷீர்டி எங்கே இருக்கிறது?  ஓளரங்காபாத் எங்கே இருக்கிறது?  குதிரையிலிருந்த மனிதர் எங்ஙனம் ஓளரங்காபாத்திலிருந்து வந்தார்?  இரண்டு சகோதரிகள் சந்திக்கப்போவதை எங்ஙனம் பாபா முன்னாலேயே தீர்க்க தரிசனம் செய்தார்?  இவையெல்லாம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானதும், பாபாவின் எங்குநிறை பேரறிவையும், அனைத்தையும் உணரும் ஆற்றலையும் மெய்ப்பிப்பதுமாகும்.  



பிற்சேர்க்கை

எவரொருவர் இவ்வத்தியாயத்தை பக்தியுடன் படிக்கிறாரோ அல்லது தினமும் கருத்தூன்றிப் பயில்கிறாரோ, சத்குரு சாயிபாபாவின் அருளால் அவரது அனைத்து ஆழ்துயர் நிலைகளும் அகற்றப்படும்.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
                    

Thursday, 22 March 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 14

•  நாந்தேடைச் சேர்ந்த 
   ரத்தன்ஜி வாடியா
•  மௌலா சாஹேப் முனிவர்
•  தட்ஷிணை சாஸ்திரம் 
•  மீமாம்ஸா

பாபா சொல்லும், கருணையும் எங்ஙனம் குணமாக்க முடியாத வியாதிகளையும் குணமாக்கியது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம்.  இப்போது பாபா எங்ஙனம் ரத்தன்ஜி வாடியாவை ஆசீர்வதித்துக் குழந்தையை அருளினார் என்பதை விவரிப்போம்.

இயற்கையிலேயே ஞானியினது வாழ்க்கையானது உள்ளும் - புறமும் இனிமையானதாய் இருக்கிறது.  அவரது பல்வேறு செயல்கள் சாப்பிடுதல், நடத்தல், அவரின் இயற்கையான மொழிகள் எல்லாம் இனிமை வாய்ந்தவை.  அவர்தம் வாழ்க்கையோ பேரானந்தம் மானிட உருப்பெற்றதாகும்.  தம்மைத் தமது அடியவர்கள் நினைப்பதற்கு வழிமுறையாக சாயி அதனை வெளியிட்டார்.  கடமை, செயல் இவற்றைப்பற்றி பல்வேறு கதைகளை அவர்கட்குச் சொன்னார்.  அது கடைமுடிவாக அவர்களை உண்மையான மதத்திற்கு இட்டுச்சென்றது.  இவ்வுலகில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.  ஆனால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  வாழ்க்கையின் நோக்கத்தை அவர்கள் பெறவேண்டும்.  அதாவது ஆத்மானுபூதியை.  

முந்தைய ஜென்மங்களிலுள்ள நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்றிருக்கிறோம்.  பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியைக்கொண்டு பெறுவது தகுதியுடையதாகும்.  எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்கவேண்டும்.  நமது குறிக்கோளையும், நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும்.

நீங்கள் தினந்தோறும் சாயி லீலைகளைக் கேட்பீர்களானால், அவரை எப்போதும் காண்பீர்கள்.  நீங்கள் இவ்வண்ணமாக சாயிலீளைகளை நினைவூட்டிக் கொள்வீர்களானால், உங்கள் மனது அடிக்கடி மாறி ஓடித்திரிதலின்றி விடுபடும்.  இவ்விதமாகவே சென்றுகொண்டிருந்தால், அது முடிவாகச் சுத்த ஞானத்தில் இரண்டாகக் கலந்துவிடும்.  



நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி

இப்போது இவ்வத்தியாயத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான கதைக்கு வருவோம்.  நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேடில், ஒரு பார்சி மில் காண்ட்ராக்டரும், வியாபாரியுமான ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் வசித்து வந்தார்.  அவர் பெருமளவு செல்வம் சேகரித்து வயல்களையும், நிலங்களையும் பெற்றிருந்தார்.  ஆடு, மாடு, குதிரை, போக்குவரத்து வசதிகள் இவ்வளவையும் பெற்று மிகவும் சுபிட்சத்துடன் இருந்தார்.  புறத்தோற்றங்கள் அனைத்திற்கும் மிகவும் திருப்தி வாய்ந்தவராகவும், சந்தோஷமுடையவராகவும் காணப்பட்டார்.  ஆனால் அந்தரங்கமாகவும், உண்மையாகவும் அவர் அங்ஙனம் இருக்கவில்லை.  எவரும் முழுமையும் செல்வந்தராகவும், மகிழ்ச்சியுற்றவராகவும் இருக்கக்கூடாதென்பது பரலோகத் தீர்ப்பாய் இருக்கிறது.  ரத்தன்ஜியும் இதற்கு விதிவிலக்கல்ல.

அவர் தாரளமானவராயும், தான தர்மசீலராயும், ஏழைகட்கு உணவு, உடையளித்தும் அனைவருக்கும் பல்லாற்றானும் உதவிபுரிந்தார்.  மக்கள் அவரை நல்லவர், மகிழ்ச்சி நிரம்பியவர் என்று கருதினர்.  ஆனால் நெடுநாளாகத் தனக்கு ஆணோ, பெண்ணோ எக்குழந்தையுமே இல்லாததனால் தமக்குள்ளேயே அவர் மிக்க துயர் கொண்டவரானார்.  அன்பும் பக்தியுமின்றிப் பாடப்பெறும் இறைவன் புகழ் குறித்த கீர்த்தனை போன்றும், பக்க வாத்தியங்களற்ற இசையைப் போன்றும், பூணூல் அற்ற பிராமணனைப் போன்றும், பொது அறிவின்றிக் கலைகளில் பெற்ற சிறப்பறிவைப் போன்றும், பாவத்திற்காகக் கழிவிரக்கமின்றிச் செய்யும் தீர்த்த யாத்திரையைப் போன்றும், அட்டிகை அற்ற ஆபரண அணிமணிகள் போன்று அழகற்றதாகவும், பயனற்றதாகவும் இருப்பதைப் போன்றே ஆண் குழந்தையற்ற இல்லறத்தானுடைய நிலையுமாம்.

இவ்விஷயத்தைப் பற்றியே ரத்தன்ஜி சதா சிந்தித்து, எனக்கொரு புத்திரனைக் கடவுள் எப்போதாவது மகிழ்ந்தருளுவாரா? என்று ஏங்கினார்.  இவ்வாறாக அவர் கலகலப்பின்றியும், முகவாட்டத்துடனும் காணப்பட்டார்.  உணவில் அவருக்குச் சுவை ஈடுபாடு இல்லை.  தான் ஒரு புதல்வனுக்காக ஆசீர்வதிக்கப்படுவோமோ என்று அவர் அல்லும் பகலும் இதே கவலையால் பீடிக்கப்பட்டார்.  தாஸ்கணு மகராஜிடம் அவருக்கு மரியாதை அதிகம்.  அவரைக் கண்டு தன் உள்ளத்தை வெளியிட்டார்.  தாஸ்கணுவும் அவரை ஷீர்டிக்குப் போகும்படியும், பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர்தம் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்று குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தினார்.  ரத்தன்ஜிக்கு இக்கருத்துப் பிடித்தது.  ஷீர்டிக்குப் போகவும் தீர்மானித்தார்.

சில நாட்களுக்குப் பின்னர் அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதங்களில் வீழ்ந்தார்.  பிறகு தம் கூடையைத் திறந்து ஒரு அழகிய பூமாலையை எடுத்து, அதை பாபாவின் கழுத்திலிட்டுக் கூடைநிறையப் பழங்களையும் சமர்ப்பித்தார்.  பாபாவுக்கு அருகில் மிக்க மரியாதையுடன் அவர் அமர்ந்து பின்வருமாறு வேண்டத்தொடங்கினார்.  "இக்கட்டான நாட்களில் இருக்கும்போதே அநேகர் தங்களிடம் வருகிறார்கள்.  தாங்கள் அவர்களின் துன்பங்களை உடனே துடைக்கிறீர்கள்.  இதைக்கேட்டு நான் தங்களது பாதகமலத்தை அடைக்கலம் புகுந்தேன்.  ஆகவே தயவுசெய்து என்னை ஏமாற்றாதீர்கள்".

பாபா ரத்தன்ஜி கொடுக்க இருந்த ரூ.5 ஐக் கேட்டார்.  ஆனால் ரூ. 3.14 ஐத் தாம் முன்னரே வாங்கிக்கொண்டதாகவும், மீதத்தையே கொடுக்கவேண்டும் என்றார்.  ரத்தன்ஜி பெரிதளவில் குழப்பமடைந்தார்.  பாபா என்ன கூறினார் என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை.  அவர் ஷீர்டிக்குச் செல்வது இதுவே முதல்முறை.  முன்னமே ரூ. 3.14 ஐ தாம் வாங்கிக்கொண்டதாக பாபா கூறியது எங்ஙனம் என்று அவர் நினைத்தார்.  அவரால் புதிரை விடுவிக்க இயலவில்லை.  ஆனால் அவர் பாபாவின் பாதத்தடியில் அமர்ந்து, கேட்கப்பட்ட மீதமுள்ள தட்ஷிணையை அளித்தார்.

பாபாவிடம் தாம் வந்த காரணத்தை முழுமையும் விளக்கிக்கூறி, அவருடைய உதவியைக் கோரினார்.  தமக்கு ஒரு புத்திரனை பாபா ஆசீர்வதித்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். 

பாபாவும் மனதுருகி, அவரைக் கவலைப்படாமல் இருக்கும்படியும், அதிலிருந்து அவரின் கஷ்டமான நாட்கள் முடிந்துவிட்டன என்றும் கூறினார்.  பினார் அவருக்கு உதியை அளித்து, அவரது தலையில் கையை வைத்து, அல்லா அவரது உள்ளத்தின் ஆசையைப் பூர்த்திசெய்வார் என்றும் கூறினார்.

பின்னர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு நாந்தேடுக்குத் திரும்பி, ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும் தாஸ்கணுவுக்குக் கூறினார்.  அங்கு எல்லாம் நன்றாகவே நிறைவேறியதாகவும், தாம் பாபாவின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும், பிரசாதத்துடன் பெற்றதாகவும், ஆனால் அவரால் ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.  பாபா அவரிடம் தாம் ஏற்கனவே  ரூ 3.14 ஐ வாங்கிக்கொண்டதாகக் கூறினார்.  இக்குறிப்பினால் பாபா என்ன கூறுகிறார் என்பதைத் தயவுசெய்து விவரியுங்கள்.  நான் ஷீர்டிக்குப் போனதேயில்லை.  பிறகு பாபாவிடம் அத்தொகையை நான் எவ்விதம் கொடுத்திருக்க முடியும் என்று தாஸ்கணுவிடம் கூறினார்.  தாஸ்கணுவுக்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது.  அதைப்பற்றிப் பெரிதும் அவர் நீண்ட நேரம் சிந்தித்தார்.  சிறிது நேரத்திற்குப் பிறகு பின்வரும் நிகழ்ச்சி அவர் கவனத்திற்கு வந்துற்றது.  சில நாட்களுக்கு முன் ரத்தன்ஜி, மௌலா சாஹேப் என்ற ஒரு முஹமதிய முனிவரை வரவேற்று, அவரின் வரவேற்பு உபசாரணைக்காக கொஞ்சம் பணம் செலவழித்தார்.  

மௌலா சாஹேப், நாந்தேட் மக்கள் நன்றாக அறிந்த ஒரு முனிவர்.  (சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர்)  ரத்தன்ஜி ஷீர்டிக்குப் போகத் தீர்மானித்தபோது, இந்த மௌலா சாஹேப் தற்செயலாய் ரத்தன்ஜியின் வீட்டிற்கு வந்தார்.  ரத்தன்ஜி அவரை அறிந்திருந்தார்.  அவரிடம் அன்பு செலுத்தினார்.  எனவே அவரைக் கௌரவிக்குமுகமாக ஒரு விருந்து கொடுத்தார்.  தாஸ்கணு, ரத்தன்ஜியிடமிருந்து விருந்து உபசாரத்துக்கான செலவுக் குறிப்புக்களை வாங்கிப் பார்த்தார்.  எல்லாம் சரி நுட்பமாக ரூ 3.14 ஆகியிருந்தது.  அதற்குக் கூடவோ, குறையவோ இல்லாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் செயலிழந்தனர்.  அவர்கள் பாபா எங்கும் நிறை பேரறிவுடையார் என்பதை அறியத் தலைப்பட்டார்கள்.  ஷீர்டியில் வாழ்ந்தாலும், ஷீர்டியிலிருந்து நெடுந்தூரம் உள்ள வெளியிடங்களில் நடப்பதையும் அவர் அறிந்திருந்தார்.  

உண்மையில் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிந்திருந்தார்.  எவருடைய நெஞ்சத்தினுள்ளும், ஆவியினுள்ளும் தம்மை அவர் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.  மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மௌலா சாஹேபிடம் தம்மைக் காணாமலும், அவருடன் தாம் ஒன்றாகவும் இல்லாதிருப்பின் ரத்தன்ஜி மௌலா சாஹேபுக்குக் கொடுத்த வரவேற்பு பற்றியும், அதற்கு அவர் செலவழித்த தகையைப் பற்றியும் பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?

ரத்தன்ஜி தாஸ்கணுவின் விளக்கத்தால் திருப்தியுற்றார்.  பாபாவிடம் அவருக்குள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுப் பல்கிப் பெருகியது.  பின்னர் உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஆசீர்வதிக்கப்பட்டது.  அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.  அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் மொத்தத்தில் பிறந்தன என்றும் அதில் நான்கே உயிர் பிழைத்தன என்றும் கூறப்படுகிறது.

இவ்வத்தியாயத்தின் அடிக்குறிப்பில் பாபா, ராவ்பகதூர் ஹரி விநாயக் சாதே என்பவரை, அவர் முதல் மனைவி இறந்த பின்னர் மீண்டும் மணம் செய்துகொள்ளும் படியும், அவருக்கு மகன் பிறப்பான் என்றும் கூறினார்.  சாதே இரண்டாவது மணம் புரிந்துகொண்டார்.  இம்மனைவி மூலம் அவருக்குப் பெண் குழந்தைகளே பிறந்தன.  எனவே அவர் மிகவும் மனத்தளர்வடைந்தார்.  ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாகப் பிறந்தது.  பாபாவின் சொற்கள் உண்மையாயின.  அவரும் திருப்தியுற்றார்.



தட்ஷிணை - மீமாம்ஸம் (தட்ஷிணை பற்றிய தத்துவம்)

தட்ஷிணையைப் பற்றிய சில குறிப்புக்களுடன் இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்.  பாபாவைப் பார்க்கச் சென்றவர்களிடத்து அவர் தட்ஷிணை கேட்டார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.  சிலர் பாபா ஒரு பக்கிரியாகவும் அறவே பற்றன்றியும் இருந்தால், அவர் ஏன் தட்ஷிணை கேட்கவேண்டும்? ஏன் பணத்தைப்பற்றி இலட்சியம் செய்யவேண்டும்? என்று வினவலாம்.  இவைகளை இப்போது விளக்கமாகக் கவனிப்போம்.  

ஆரம்பத்தில் நெடுநாட்களுக்கு பாபா எதையுமே கேட்கவில்லை.  அவர் எரிக்கப்பட்ட தீக்குச்சிகளைச் சேமித்து தம் பைகளில் வைத்துக்கொண்டார்.  எவரிடமிருந்தும், அவர் அடியவராக இருப்பினும் பாபா எதையும் ஒருபோதும் கேட்கவில்லை.  யாராவது ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோ அவர் முன்னால் வைத்தால், அவர் எண்ணெயோ அல்லது புகையிலையோ வாங்கினார்.  அவர் புகையிலையின் மீது விருப்பமுடையவராக இருந்தார்.  ஏனெனில் அவர் எப்போதும் பீடி அல்லது சில்லிம் (புகைபிடிக்கும் ஒரு மண்குழாய்) குடித்தார்.

பின்னர் சில ஞானிகள் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என நினைத்தனர்.  எனவே அவர்கள் பாபாவின் முன்னால் சில செப்புக் காசுகளை வைத்தனர்.  ஒரு பைசா கொடுக்கப்பட்டால் அதை அவர் பைக்குள் போட்டுக்கொள்வார்.  இரண்டு பைசா நாணயமாக இருப்பின் அது உடனே திருப்பிக் கொடுக்கப்படும்.  பாபாவின் புகழ் திக்கெங்கும் பரவிய பின்னர், மக்கள் அவரிடம் பெருந்திரளாக மண்டத் தொடங்கினர்.  அவர்களிடம் பாபா தட்ஷிணை கேட்கத் தொடங்கினார்.  ஒரு தங்கக் காசு வைக்கப்படாலன்றி கடவுளர்களின் பூஜை பூர்த்தியாவதில்லை என்று ஸ்ருதி (வேதங்கள்) பகர்கின்றது.  கடவுள்களின் பூஜைக்குக் காசு தேவைப்பட்டிருந்தால், ஞானிகளின் பூஜைக்குக் கூட ஏன் அது அங்ஙனம் இருக்கக்கூடாது?  முடிந்த சார்பாக ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைப் பார்க்கும்போது வெறும் கையுடன் போகலாகாது என்று விதிக்கப்பட்டது.  அவன் காசோ, பணமோ எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.  இது சம்பந்தமாக உபநிஷதங்கள் சிபாரிசு செய்த கருத்தை நாம் கவனிக்கலாம்.  பிருதாரண்ய உபநிஷதம் பிரஜாபதிக் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் இவைகளை 'த' என்ற ஒரே எழுத்தால் விளித்ததாகப் பகர்கின்றது.  இச்சொல்லால்,
  1. தேவர்கள் தாங்கள் தமா (தன்னடக்கம்) பழகவேண்டுமென்று புரிந்துகொண்டனர்.  
  2. மனிதர்கள் தானம் அல்லது தர்மம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர்.
  3. பேய்கள் தயை அல்லது பரிவு செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டன.
எனவே மனிதர்கள் தர்மம் அல்லது ஈகை செய்யவேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது.  தைத்ரீய உபநிஷத்தின் குரு தனது மாணவர்களை தர்மத்தையும், மற்ற நல்ல பண்புகளையும் பயிலும்படி ஊக்குவித்து உபதேசிக்கிறார்.  தர்மத்தைப்பற்றி அவர், நம்பிக்கையுடன் கொடுங்கள், அது இல்லாமலும் கொடுங்கள், பெருந்தன்மையுடன் கொடுங்கள், அதாவது தாராளமாகக் கொண்டுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.  

தான தர்மத்தை அடியவர்களுக்குப் போதிப்பதற்கும், பணத்தில் அவர்களுக்கு உள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும், பாபா அவர்களிடமிருந்து தட்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார்.  ஆனால் அதில் இவ்விசித்திரம் இருந்தது.  "அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தாக வேண்டும்".  இவ்வாறாகப் பல இடங்களில் நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஒன்று சொன்னால், பிரசித்திபெற்ற நடிகரான கணபதிராவ் போடஸ் தனது மாராத்திய சுயசரிதையில், பாபா தம்மைத் திரும்ப திரும்ப தட்ஷிணை கேட்டதாகவும், தனது பணப்பையையே அவர் முன்னர் காலியாக்கியதாகவும், இதன் விளைவாகப் பிற்கால வாழ்வில் தமக்கு ஏராளமாகப் பணம் வந்ததால் பணத் தேவையே இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.  

பல சந்தர்ப்பங்களில் தட்ஷிணைக்கு பாபா பணவகை சார்ந்தவற்றையே விரும்பிக் கேட்காத மறைபொருளும் உண்டு.  இரண்டு நிகழ்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.  

பேராசிரியர் G.G.நார்கேயிடமிருந்து பாபா தட்ஷிணையாக ரூ. 15  கேட்டார்.  நார்கே தன்னிடம் பைசாகூட இல்லையென்று பதிலளித்தார்.  அதற்குப் பாபா கூறியதாவது, "உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன்.  யோக வசிஷ்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள்.  அதிலிருந்து எனக்கு தட்ஷிணை கொடுங்கள்".  தட்ஷிணை அழிப்பது என்பதற்கு இந்த சந்தர்ப்பத்தின் பொருளாவது, நூலிலிருந்து நீதிகளை உய்த்துணர்ந்து அவைகளை பாபா வாசம் செய்கிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்திக்கொள்ளுதலேயாம்.

இரண்டாவது சந்தர்ப்பத்தின்போது, திருமதி தர்கட் என்ற அம்மையாரிடம் ரூ.6 தட்ஷிணையாகக் கொடுக்கும்படி பாபா கேட்டார்.  ஏதும் அவள் கொடுக்க இயலவில்லை என்று மன வருத்தம் அடைந்தாள்.  பின்னர் அவளது கணவர், பாபா ஆறு உட்பகைவர்களையே (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம்) தம்மிடத்துச் சமர்ப்பிக்கும்படி கேட்டார் என்று அம்மையாருக்கு விளக்கினார்.  பாபா இவ்விளக்கத்துக்கு உடன்பாடு தெரிவித்தார்.   

தட்ஷிணையின் மூலம் பாபா ஏராளமாகப் பணம் சேகரித்தார் என்பதும், அவ்வளவு பணத்தையும் அதே நாளில் பகிர்ந்தளித்து விடுவார் என்பதும், அடுத்த நாள் காலை வழக்கம்போல் அவர் ஒரு ஏழைப் பக்கிரியாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏறக்குறையப் பத்து வருடங்களாக ஆயிரம் ஆயிரம் ரூபாய்களைத் தட்ஷிணையாகப் பெற்றுவந்த பாபா, பின்னர் மஹாசமாதி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன.  

சுருக்கமாகத் துறவையும், தூய்மையையும் போதிப்பதே அவர்களிடமிருந்து தட்ஷிணை பெற்றதன் முக்கிய காரணமாகும்.  




பின்னுரை

B.V.தேவ் என்பவர் ஓய்வுபெற்ற மம்லதாரும், பாபாவின் பெரும் அடியவர்களுள் ஒருவரும் ஆவார்.  அவர் சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7, எண். 25, பக்கம் 26) தட்ஷிணையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

"பாபா எல்லோரிடமிருந்தும் தட்ஷிணை கேட்கவில்லை.  கேட்காமலேயே சிலர் தட்ஷிணை அளித்தால் அவர் அதைச் சிலசமயங்களில் ஏற்றுக்கொண்டார்.  மற்ற நேரங்களில் மறுத்துவிட்டார்.  சில குறிப்பிட்ட அடியவர்களிடமே அவர் அதைக் கேட்டார்.  பாபா தங்களிடம் அதற்காகக் கேட்கவேண்டும், அப்போதே தாம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவர்களிடம் அவர் கேட்டதேயில்லை.  பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதைச் சமர்ப்பித்தால், அவர் தொடுவதில்லை.  அந்த அடியவர் அஃதை அங்கேயே வைத்திருந்தாள், அதை அப்பால் எடுத்துக்கொள்ளும்படி பாபா அவரைக் கேட்டார்.  பக்தர்களின் விருப்பம், பக்தி, சௌகர்யம் இவைகளுக்கேற்றவாறு அவர் சிறிய, பெரிய தொகைகளைக் கேட்டார்.  எல்லாச் செல்வந்தர்களையும் கேட்கவில்லை.  அன்றி எல்லா ஏழைகளிடமும் கேட்கவுமில்லை.

தட்ஷிணை கேட்டு கொடுக்காதவர்களிடம் பாபா கோபம் அடைந்ததே இல்லை.  யாரேனும் நண்பன் மூலம் தட்ஷிணை அனுப்பப்பட்டு, அவன் அதை பாபாவிடம் கொடுக்க மறந்துவிட்டானாயின், அவர் அவனுக்கு அதை எப்படியோ ஞாபகமூட்டி அவனைக் கொடுக்கும்படி செய்தார்.  சில சந்தர்ப்பங்களில் தட்ஷிணையாகக் கொடுத்த பணத்தில் கொஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதைப் பாதுகாக்கும்படியோ  அல்லது வழிபாட்டிற்காக அவரது பூஜை அறையில் வைக்கும்படியோ கேட்டுகொள்வார்.

இம்முறையானது பணம் அளித்தவருக்கோ அல்லது அந்த பக்தருக்கோ எல்லையற்ற அளவு நன்மையளித்தது.  தான் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாக யாரேனும் கொடுத்தால், அவர் அதிகப்படியான மீதமுள்ள தொகையைத் திரும்ப அளித்துவிடுவார்.  சிலரிடம் தாங்கள் முதலில் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாகவும், அப்படி அவர்களிடம் பணம் இல்லையானால் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ அளிக்கச் சொன்னார்.  சிலரிடம் அவர் ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தட்ஷிணை கேட்டார்.  

தட்ஷிணையாகச் சேர்ந்த பணத்திலிருந்து அவர் தமக்காக மிகவும் கொஞ்சமே செலவழித்தார்.  அதாவது சில்லிம் என்ற புகைக் குழாய் வாங்குவதற்கும், துனி என்ற புனித அடுப்புக்கு எரிபொருள் வாங்குவதற்கும் செலவழித்து மிச்சமனைத்தையும் பல்வேறு மனிதர்களுக்கு வேறுபடும் விகிதங்களில் தர்மமாகப் பகிர்ந்து அளித்தார்.  ஷீர்டி சமஸ்தானத்தின் சிறுசிறு பொருட்களெல்லாம் அப்போது இருந்த பணக்கார அடியவர்களால் ராதாகிருஷ்ணமாயின் வேண்டுகோள், யோசனையின் பேரில் வாங்கி அளிக்கப்பட்டவை.  விலைமதிப்புள்ள, செல்வமிகு பொருட்களை யாரேனும் கொணர்ந்தால் பாபா சீற்றமடைந்து அவர்களைக் கடிந்துகொள்வார்.  நானா சாஹேப் சாந்தோர்கரிடம் தமது உடைமைகள் ஒரு கௌபீனம், ஒரு துண்டு, ஒரு கஃப்னி, ஒரு தகரக்குவளை என்றும் அவரைப் பலர் தேவையற்ற, பயனற்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் கொண்டுவந்து தொல்லைப்படுத்துவதாகவும் கூறினார்.

நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும், செல்வமும்.  பாபா ஷீர்டியில் இரண்டு நிலையான அமைப்புமுறைகளை ஏற்படுத்தினார்.  அதாவது தட்ஷணையும், ராதாகிருஷ்ணமாயியும் ஆகும்.  எனவே பக்தர்கள் அவரிடம் வந்தபோதெல்லாம் அவர்களிடம் தட்ஷணை கேட்டார்.  பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார்.  பள்ளிக்கூடமென்பது  ராதாகிருஷ்ணமாயியின் வீடு.  அவர்கள் இவ்விரண்டு சோதனைகளில் நன்றாகத் தேறினார்களேயானால், அதாவது செல்வத்துக்கும், பெண்ணுக்குமுள்ள பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்கள் என்று தெளிவுபடுத்துவார்களேயானால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் துரிதமானது.  பாபாவின் அருளாலும், ஆசிகளாலும் உறுதியளிக்கப்பட்டது.

தேவ், கீதை உபநிஷதங்களிளிருந்து புண்ணிய க்ஷேத்திரத்தில் புண்ணிய ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்ட தர்மமானது கொடுத்தவருக்கு அதிக பலன் அளிக்கிறது என்பதை ஸ்லோகங்கள் மூலம் எடுத்துக் காண்பித்து இருக்கிறார்.  ஷீர்டியில் அதில் உறையும் தெய்வவுமான சாயிபாபாவையும் தவிர புனிதமானது என்ன இருக்க முடியும்?!

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்


       

Thursday, 15 March 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 13

மேலும் பல சாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கப்படுதல் 
1.  பீமாஜி பாடீல் 
2.  பாலா ஷிம்பி
3.  பாபு சாஹேப் பூட்டி 
4.  ஆலந்தி ஸ்வாமி
5.  காகா மஹாஜனி
6.  ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்



மாயையின் அளவறியா சக்தி    
   
பாபாவின் மொழிகள் எப்போதும் சுருக்கமானவை,  மிருதுவானவை,  ஆழமானவை,  பொருள் செறிந்தவை, திறமையானவை, நன்றாகச் சமநிலைப் படுத்தப்பட்டவை.  அவர் எப்போதும் திருப்தியடைந்தவராய் இருந்தார்.  எதற்கும் கவலைப்படவில்லை.  அவர் சொன்னார், "நான் ஒரு பக்கிரியானபோதும், எனக்கு வீடோ, மனைவியோ இல்லாதிருப்பினும் எல்லாக் கவலைகளையும் விட்டொழித்து நான் ஒரே இடத்தில் வசித்தாலும் தடுக்கமுடியாத மாயை என்னை அடிக்கடி துரத்துகிறாள்.  என்னை மறந்தாலும், அவளை மறக்கமுயயவில்லை.  அவள் என்னை எப்போதும் சூழ்ந்துகொள்கிறாள்.  பரமாத்மா ஸ்ரீ ஹரியினுடைய (தோற்ற சக்தி) பிரம்மா, மற்றவர்களையும் துரத்துகிறது.  பின் என்னைப்போன்ற ஏழைப் பக்கிரியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?  பரமாத்மாவிடம் சரண் புகுவோர், அவரது அருளால் அவளது பந்தங்களினின்றும் விடுவிக்கபடுவர்."

மாயையின் சக்தியைப் பற்றி இம்மொழிகளால் பாபா பேசினார்.  கிருஷ்ண பரமாத்மா ஞானிகள் தமது உயிருள்ள ரூபங்கள் என்ற பாகவதத்தில் உத்தவருக்கு உபதேசித்திருக்கிறார்.  பாபா தமது அடியவர்களின் நலனுக்காக யாது கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்:  "யார் அதிஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள்.  'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன்.  இம்மொழிகளை நம்புங்கள்.  நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள்.  வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை.  எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்".  தம்மைத்தாமே முழுவதுமாக சரணடைவோர்களின் தோழரான சாயி, அவர்களின் நன்மைக்காக என்ன செய்தார் என்பதைத் தற்போது படியுங்கள்.  



பீமாஜி பாடீல் 

புனே ஜில்லா, ஜுன்னர் தாலுக்கா நாரயண்காவனைச் சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும், நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார்.  முடிவில் அது கயரோகமாக மாறியது.  அவர் எல்லாவித சிகிச்சைகளையும் முயன்று ஒரு பிரயோசனமுமில்லை.  எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, முடிவாகக் கடவுளை நோக்கி அவர் வேண்டிக்கொண்டார்.  "ஓ! நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக் குணப்படுத்தும்".  சூழ்நிலைகள் எல்லாம் நன்றாய் இருக்கையில் நாம் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை.  கேடும், துரதிஷ்டமும் நம்மைத் தாக்கும்போது நாம் அவரை நினைக்கிறோம்.  எனவே பீமாஜி இப்போது கடவுளை நோக்கித் திரும்பினார்.  இவ்விஷயத்தில் பாபாவின் பெரும் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்க்கரைக் கலந்தாலோசிக்க அவருக்குத் தோன்றியது.  தனது துன்பமனைத்தையும் கூறி அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய கருத்தைத் தெரிவிக்கக் கேட்டிருந்தார்.

நானா தமது பதிலில் ஒரேஒரு வழிதான் இருக்கிறது.  அதாவது பாபாவின் பாதங்களினின்று உதவி பெறுவதேயாகும் என்று கூறினார்.  ஷீர்டிக்கு அவர் அழைத்துவரப்பட்டு பாபாவின் முன்னர் அமர்த்தப்பட்டார்.  நானா சாஹேப்பும், ஷாமாவும் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) அங்கு இருந்தனர்.  முன்னைய தீய கர்மங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக்காண்பித்து முதலில் இதில் தலையிடத் தீமானம் இல்லாதவராய் இருந்தார்.  நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும், அவர்தாம் கடைசி கதியென்றும், கருணை காட்டும்படியும் கூறி அலறத் தொடங்கினார்.  அப்போது பாபாவின் உள்ளம் உருகியது.  அவர் கூறியதாவது,  "பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர ஏறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.  ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு, வேதனைப்பட்டவனாக இருப்பினும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.  இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர்.  அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார்.  எல்லோரையும் அன்புடனும், ஆசையுடனும் பாதுகாப்பார்".  ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நோயாளி இரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.  ஆனால் பாபாவின் சந்நிதானத்தில் எவ்வித வாந்தியும் இல்லை.  நம்பிக்கையும், கருணையும் கொண்ட மொழிகளை பாபா உதித்த அதே தருணத்திலிருந்தே வியாதி குணமடையும் நிலைக்குத் திரும்பியது.  அசௌகரியமும், சுகாதாரக் குறைவுமுள்ள பீம்பாயின் வீட்டில் தங்கும்படி பாபாவால் கேட்கப்பட்டார்.  ஆனால் பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும்.  அவர் அங்கு தங்கியிருக்கையில் பாபா அவரை இரண்டு கனவுகள் மூலம் குணப்படுத்தினார்.

முதல் கனவில் தன்னை ஒரு பையனாகவும், மராட்டிச் செய்யுள் ஒப்பிக்காததற்காக உபாத்தியாயரின் கடுமையான பிரம்படியை வாங்கிக் கஷ்டப்படுவதைப் போன்றும் கண்டார்.  இரண்டாவது கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தனது நெஞ்சின்மீது மேலும் கீழும் உருட்டிக் கடுமையான வலியையும், வேதனையையும் உண்டாக்குவதாகக் கண்டார்.  கனவில் அவர்பட்ட இக்கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்து அவர் வீடு திருப்பினார்.  பின்னர் அடிக்கடி ஷீர்டி வந்து பாபா தனக்குச் செய்ததை நன்றியுடன் நினைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

பாபாவும் நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை.  மகாராஷ்டிர மக்கள் பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை தங்களது இல்லங்களில் சத்யநாராயண பூஜையை எப்போதும் செய்கிறார்கள்.  ஆனால் தனது கிராமத்திற்கு திரும்பியபோது பீமாஜி பாடீல் புதிய சத்யசாயி விரத பூஜையை, சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக தனது இல்லத்தில் ஆரம்பித்தார்.



பாலா கண்பத் ஷிம்பி 

பாபாவின் மற்றொரு பக்தரான பாலா கண்பத் ஷிம்பி என்பவர், கொடியவிதத்தைச் சேர்ந்த மலேரியாவினால் மிகவும் கஷ்டப்பட்டார்.  எல்லாவித மருந்துகளையும், கஷாயங்களையும் உபயோகித்தார், பலனேதுமில்லை.  ஜூரம் சிறிதளவும் குறைந்தபாடில்லை.  அவர் ஷீரடிக்கு ஓடி பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  பாபா இவ்விஷயத்தில் ஒரு நூதனமான செயல்முறையை அனுசரிக்கச் செய்தார்.  கொஞ்சம் சாதத்தைத் தயிருடன் கலந்து, லக்ஷ்மி கோவிலுக்கு முன்னால் உள்ள கருப்பு நாய்க்குக் கொடுக்கும்படி கூறினார்.  பாலாவுக்கு இதை எங்ஙனம் நிறைவேற்றுவதென்று புதிராக இருந்தது.  ஆனால் அவர் வீட்டிற்குப் போனவுடனேயே, தயிரையும் சாதத்தையும் கண்டார்.  அவை இரண்டையும் கலந்து லக்ஷ்மி கோவிலுக்கு அருகில் கொணர்ந்தார்.  அப்போது ஒரு கருப்பு நாய் வாலையாட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டார்.  நாயின் முன்னர் தயிருடன் கலந்த சாதத்தை வைத்தார்.  நாயும் அதை உட்கொண்டது.  ஆச்சர்யமாகவே, பாலா கண்பத் ஷிம்பி மலேரியாவிலிருந்து விடுபட்டார்.



பாபு சாஹேப் பூட்டி 

ஸ்ரீமான் பூட்டி, ஒருமுறை வாந்தியெடுத்தல், வயிற்றுப்போக்கு முதலியவற்றால் அவதியுற்றார்.  அவருடைய அலமாரி மருந்து, மாத்திரைகளால் நிறைந்து இருந்தது.  ஆயினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை.  வாந்தியெடுத்து வயிற்றுப்போக்கு ஆனதன் காரணமாக பாபு சாஹேப் மிகவும் தளர்ச்சி அடைந்தார்.  எனவே பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்லக்கூட அவரால் இயலவில்லை.  பாபா அப்போது அவரைக் கூட்டனுப்பி, அவரைத் தன்முன் உட்காரச் செய்து, "இப்போது கவனி, இனிமேல் நீ வெளியேறக்கூடாது" என்று கூறி, தமது ஆட்காட்டி விரலை ஆட்டி, மேலும் "வாந்தியெடுத்தலும் நிற்கவேண்டும்" எனக் கூறினார்.  இப்போது பாபாவின் சொற்களில் உள்ள சக்தியைக் கவனியுங்கள்.  இரண்டு வியாதிகளும் ஓடிவிட்டன.  பூட்டியும் குணமானார்.  

மற்றோர்முறை காலராவால் அவர் தாக்கப்பட்டு கடினமான தாகத்தால் அல்லலுற்றார்.  டாக்டர் பிள்ளை எல்லாவித சிகிச்சைமுறைகளைக் கையாண்டும் குணமளிக்க முடியவில்லை.  பின்னர் அவர் பாபாவிடம் சென்று தனது தாகத்தைத் தணித்துத் தன்னைக் குணமாக்கும் ஒரு பானத்தைப் பற்றிக் கலந்தாலோசித்தார்.  பாபா அவருக்கு, சர்க்கரை கலந்த பாலில் வேகவைக்கப்பட்ட கலவைக்கூழாகிய பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, பிஸ்தா பருப்பு  இவற்றைச் சாப்பிடுவதைத் தேர்ந்து அருளினார்.  எந்த வைத்தியராலும் இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று கருதப்படும்.  ஆனால் பாபாவின் கட்டளையை அறவே கீழ்ப்படியும் குணத்தால் இவை உட்கொள்ளப்பட்டு அதிசயப்படும் வகையில் குணமாக்கவும் பட்டது.


ஆலந்தி ஸ்வாமி 

பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய ஒரு சாமியார் ஆலந்தியிலிருந்து ஷீர்டிக்கு வந்தார்.  தன் காதிலுள்ள கடுமையான வலியால் அவர் அல்லலுற்றார்.  அது அவரைத் தூங்க விடாமல் தடை செய்தது.  இதற்க்காக அவர் ரணசிகிச்சை செய்யப்பட்டார்.  ஆனால் அது அவருக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை.  இவ்வலி மிகவும் கடினமானதாய் இருந்தது.  அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  அவர் திரும்பிச் செல்லும்போது பாபாவின் அனுமதியைப் பெற வந்தார்.  அப்போது ஷாமா, ஸ்வாமிகளின் காது வலிக்கு ஏதாவது செய்யுமாறு பாபாவை வேண்டினார்.  "அல்லா அச்சா கரேகா!" எனக் கூறித் தேற்றினார்.  பிறகு ஸ்வாமிகள் புனேவுக்குத் திரும்பினார்.  ஒருவாரம் கழித்து ஷீர்டிக்குக் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்.  அதில் தனது காதுவலி மறைந்துவிட்டது என்றும், வீக்கம் இருந்தது என்றும், அவ்வீக்கத்தைப் போக்குவதற்காக பம்பாய்க்கு, ரணசிகிச்சை செய்துகொள்ளச் சென்று இருந்ததாகவும், ஆனால் டாக்டர் காதைச் சோதித்துவிட்டு ரணசிகிச்சை தேவையில்லை எனக்கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  பாபாவின் மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தது.



காகா மஹாஜனி 

பாபாவின் மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர் ஒருமுறை வயிற்றுப்போக்கால் அவதியுற்றார்.  பாபாவுக்குத் தனது சேவை தடைப்படாமல் இருக்க, ஒரு மூலையில் பானையில் தண்ணீரை வைத்துவிட்டு, பாபா கூபிடும்போதேல்லாம் செல்வார்.  சாயிபாபா அனைத்தையும் அறிந்தவராயிருப்பதால் தனது வியாதியையும் அவர் சீக்கிரம் குணப்படுத்துவார் என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம் தெரிவிக்கவில்லை.  மசூதிக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் தாழ்வாரத்தின் வேலை, பாபாவால் அனுமதியளிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் உண்மையில் வேலை தொடங்கியவுடன் பாபா கொந்தளிப்புற்று பலமாகக் கூச்சலிடத் தொடங்கினார்.  எல்லோரும் ஓடினார்கள்.  காகாவும் ஓடினார்.  பாபா அவரைப் பிடித்து அங்கேயே உட்கார வைத்தார்.  

பின்னர் நேரிட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய நிலக்கடலைப் பையை விட்டு ஒடியிருந்தார்.  பாபா கைநிறையக் கடலைப் பருப்புக்களை எடுத்து தமது கைகளால் அவற்றைத் தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப் பருப்புக்களை காகாவிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.  திட்டுவது, கடலையச் சுத்தம் செய்வது, காகாவைச் சாப்பிடச் சொன்னது என்பன சமகாலத்தில் நடைபெற்றன.  பாபா தாமே சிலவற்றைச் சாப்பிட்டார்.  பையில் உள்ளவை தீர்ந்ததும், பாபா அவரைத் தாம் தாகமாய் இருப்பதால் தண்ணீர் கொணரச் சொன்னார்.  பின்னர் பாபா சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, காகாவைத் தண்ணீர் குடிக்கும்படி கூறினார்.  பாபா அப்போது, "உனது வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது.  நீ இனிமேல் தாழ்வாரத்தின் வேலையைக் கவனிக்கலாம்" என்று கூறினார்.

இதற்கு இடையில் ஓடிப்போனவர்கள் எல்லாம் திரும்பிவந்தனர்.  தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும் திரும்பி வந்து வேலையில் கலந்துகொண்டார்.  நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து?  நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரிக்கும்.  அதைக் குணப்படுத்தாது.  பாபாவின் மொழிகளே இவ்விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் உள்ள உண்மையான சிகிச்சையாகும்.



ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் 

ஹர்தாவிலிருந்து வந்த தத்தோபந்த் என்னும் பெருந்தகை பதினான்கு ஆண்டுகளாக வயிற்றுவலியால் அல்லலுற்றார்.  எவ்விதச் சிகிச்சையும் அவருக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.  பின்னர், பாபா பார்வையாலேயே வியாதியைக் குணப்படுத்துகிறார் என்ற அவரின் புகழைக் கேள்விப்பட்டு ஷீர்டிக்கு ஓடிவந்து பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  பாபா அவரை அன்புடன் நோக்கி ஆசீர்வாதங்கள் அளித்தார்.  பாபா தமது கரத்தை அவரது தலையின்மீது வைத்து ஆசீர்வாதத்தையும், உதியையும் அளித்தபின் அவர் குணமடைந்தார்.  அதற்கப்பால் இவ்வியாதியைப் பற்றி எவ்விதத் தொந்தரவும் இல்லை.  இந்த அத்தியாயத்தின் முடிவில் மூன்று நிகழ்ச்சிகள் அடிக்குறிப்பில் காணப்படுகின்றன.

(1)  மாதவ்ராவ் தேஷ்பாண்டே மூல வியாதியால் அல்லலுற்றார்.  பாபா அவருக்கு சோனமுகியின் (சூரத்தாவாரை - மிதமான பேதி மருந்து)  கஷாயத்தைத் தேர்ந்து கொடுத்தார்.  இது அவரைக் குணமாக்கியது.  இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இத்தொந்தரவு மீண்டும் தலையெடுத்தது.  மாதவ்ராவ் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் அதே மருந்தை உட்கொண்டார்.  பெருமளவிற்கு இது வியாதியை அதிகப்படுத்தியது.  ஆனால் பின்னர் அது பாபாவின் அருளால் குணமாக்கப்பட்டது.

(2)  கங்காதர் பந்த் என்ற காகா மகாஜனியின் அண்ணன் பல ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதியுற்றுக்கொண்டிருந்தார்.  பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு ஷீர்டிக்கு வந்து தன்னைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்.  பாபா அவரின் வயிற்றைத் தொட்டு "கடவுள் குணமாக்குவார்" என்று கூறினார்.  அது முதற்கொண்டு அவருக்கு வயிற்றுவலி ஏதுமில்லை.  அவர் முழுவதுமாகக் குணமாக்கப்பட்டார்.  

(3)  ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கரும் கடுமையான வயிற்றுவலியால் அல்லலுற்றார்.  இரவு, பகல் முழுவதும் அவரால் இருப்புக்கொள்ள முடியவில்லை.  டாக்டர்கள் ஊசி போட்டும் பலனளிக்கவில்லை.  பின்னர் அவர் பாபாவை அணுகினார்.  பின்னர் அவரை பர்ஃபி என்ற இனிப்புப் பண்டத்தை நெய்யுடன் உண்ணச் சொன்னார்.  இச்செயல்முறையைப் பின்பற்றியதும் அவர் முழுக்கக் குணமடைந்தார்.

பாபாவின் சொற்களும் கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக் குணப்படுத்திய உண்மையான மருந்தாகும் என்று இக்கதைகள் நமக்குக் காட்டுகின்றன.  மருந்துகளோ மாத்திரைகளோ அல்ல.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

                

Thursday, 8 March 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 12

சாயி லீலைகள் 
  1.  காகா  மகாஜனி 
  2.  வக்கீல் துமால்
  3.  திருமதி நிமோண்கர்
  4.  முலே சாஸ்திரி 
  5.  ஒரு டாக்டர் 
ஆகியோரின் அனுபவங்கள்

இந்த அத்தியாயத்தில் பக்தர்கள் பாபாவினால் எவ்வாறு வரவேற்கப்பட்டு நடத்தப்பட்டார்கள் என்பதைக் காண்போம். 

நல்லோரைக் காத்துக் கொடியோரை அழிப்பதே தெய்வ அவதாரத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் என்பதை முன்னரே கண்டோம்.  ஞானிகளின் இறையருட்கட்டளைப் பணியோ முற்றிலும் மாறுபாடானது.  அவர்கட்கு நல்லோரும், கொடியோரும் ஒன்றே.  தீது செய்பவர்க்காக வருந்தி அவர்களை நெறிப்படுத்துகிறார்கள்.  அவர்கள் பவசாகரத்தைக் (இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலை) குடிக்கும் அகஸ்தியர் அல்லது அறியாமை இருளை ஒழிக்கும் ஆதவன் ஆவார்கள்.  ஞானிகளிடம் கடவுள் வசிக்கிறார்.  உண்மையில், அவரிடமிருந்து அவர்கள் வேறானவர்கள் அல்லர்.  பக்தர்கள் நன்மைக்காக அவதரிக்கும் இத்தகையவர்களுள் ஒருவரே நமது சாயி ஆவார்.

ஞானத்தின் உச்சக்கட்டத்தில் தெய்வீக ஒழி சூழப்பட்டு எல்லா ஜந்துக்களையும் சமமாக நேசித்திருந்தார்.  அவர் பற்றற்றவர்.  பகைவர்களும், நண்பர்களும், அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே.  அவருடைய அசாதாரணத் திறமையைச் செவிமடுங்கள்.  அடியவர்களுக்காகத் தமது தகைமைக் களஞ்சியத்தைச் செலவிட்டார்.  அவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் விழிப்பாய் இருந்தார்.  ஆனால் அவராக அடியவர்களை வரவேற்க எண்ணினாலொழிய ஒருவரும் அவரை அணுக இயலாது.  அவர்களது முறை வரவில்லையானால் பாபா அவர்களை நினைப்பதில்லை.  அவருடைய லீலைகளும் அவர்களின் காதை எட்டவியலாது.  பிறகு அவர்கள் எங்ஙனம் அவரைப் பார்க்க எண்ணமுடியும்?

சிலர் சாயிபாபாவைப் பார்க்க விரும்பினர்.  ஆயினும் அவரின் மஹாசமாதிவரை அவரின் தரிசனத்தைப்பெற அவர்களுக்கு வாய்ப்பேதும் கிடைக்கவில்லை.  பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய பலரின் விருப்பமானது இங்ஙனம் நிறைவேறாமல் போயிற்று.  அவர்மீது நம்பிக்கை கொண்ட இத்தகையோர் அவரது லீலைகளைச் செவிமடுப்பாராயின் பாலுக்கான (தரிசனத்திற்கான) அவர்களது ஏக்கமானது வெண்ணெயினால் (லீலைகளால்) பெருமளவு திருப்திப்படுத்தப்படும்.

வெறும் அதிஷ்டத்தினாலேயே ஷீர்டி சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்ற சிலர், நீண்ட நாட்கள் அங்கு தங்க இயலுமா? இயலாது.  ஒருவரும் தாமாகவே ஷீர்டி செல்லமுடியாது.  தாம் நினைத்தபடி அங்கு நீண்டநாட்கள் இருக்கமுடியாது.  பின்னர், அவர்களுக்கு அனுமதி கொடுத்த நாட்கள் வரைக்குமே அவர்கள் தங்கவேண்டும்.  பாபா அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கேட்டதும் அவ்விடத்தைவிட்டுப் போய்விடவேண்டும்.  எனவே அனைத்தும் பாபாவின் சங்கல்பத்தையே சார்ந்து இருந்தன.  



காகா மகாஜனி 

ஒருமுறை காகா மகாஜனி ஷீர்டிக்கு பம்பாயிலிருந்து சென்றார்.  அவர் அங்கு ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார்.  பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது வீட்டிற்குத் திரும்பப்போகிறாய்?" எனக் கேட்டார்.  அவர் இத்தகைய வினாவினால் ஆச்சரியமே அடைந்தாரெனினும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, பாபா தம்மை அங்ஙனம் செய்ய எப்போது ஆணையிடுகிறாரோ அப்போதே தாம் வீட்டிற்குப் போகப் போவதாகக் கூறினார்.  பாபா, "நாளைக்குப் போ!" எனக் கூறினார்.

பாபாவின் மொழிகளே சட்டமானதால், அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.  எனவே உடனே காகா மஹாஜனி ஷீர்டியை விட்டுப் புறப்பட்டார்.  பம்பாயில் தனது அலுவலகத்திற்குச் சென்றபின்னர், தனது எஜமானர் தன்னுடைய வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார்.  எனவே காகாவின் வரவு அவருக்குத் தேவைப்பட்டது.  ஷீர்டியில் காகாவுக்கு ஓர் கடிதம் அனுப்பியிருந்தார்.  பம்பாய்க்கு அது திருப்பி அனுப்பப்பட்டது.  



வக்கீல் பாவ் சாஹேப் துமால் 

இப்போது மாறுபாடான ஒரு கதையைக் கேளுங்கள்.  ஒருமுறை பாவ் சாஹேப் துமால் ஒரு விசாரணைக்காக நிபாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.  வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று உடனே  நிபாட்டிற்குச் செல்ல விரும்பினார்.  ஆனால் பாபா அவரை அங்ஙனம் செய்ய அனுமதிக்கவில்லை.  ஒரு வாரமோ, அல்லது அதற்கு மேலோ அவரை ஷீர்டியில் தங்கவைத்தார்.  இதே நேரத்தில் நிபாட்டில் உள்ள நியாயாதிபதி அடிவயிற்றில் ஏற்பட்ட வலியினால் மிகவும் துன்புற்றார்.  எனவே, விசாரணை ஒத்திப்போடப்பட்டது.  துமால் அங்கு சென்றபின்னரே விசாரணை தொடர்ந்தது.  முடிவில் துமால் வெற்றி பெற்றார்.  அவரது கட்சிக்காரர் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கபட்டார்.  



திருமதி நிமோண்கர்

நிமோணின் வாடண்டர் (சேவையாகச் செய்யும் கௌரவபதவி - Honorary Magistrate) நானா சாஹேப் நிமோண்கர், தமது மனைவியுடன் ஷீர்டியில் தங்கியிருந்தார்.  நிமோண்கரும் அவரது மனைவியும் மசூதியில் பாபாவுடன் பெரும்பாலான நேரத்தைக் கழித்து அவருக்குச் சேவை செய்துவந்தனர்.  பெலாபூரில் அவர்களது மகன் நோய்வாய்ப்பட்டான்.  பாபாவின் சம்மதத்துடன், பெலாபூர் சென்று மகனையும், மற்ற உறவினர்களையும் கண்டு அங்கு சில நாட்கள் தங்கிவரலாம் என்று அன்னை தீர்மானித்தாள்.

ஆனால் நானா சாஹேப் அடுத்த நாளே அவளைத் திரும்பி வரும்படி கூறினார்.  அன்னைக்கு ஒன்றும் புரியவில்லை.  என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  ஆனால் அவளுடைய இறைவன் சாயி அவளுக்கு உதவிட வந்தார்.  ஷீர்டியை விட்டுப் புறப்படும்போது, அவள் சாதேவின் வாதாவுக்கு முன்னால் நானா சஹேப்புடனும் மற்றவர்களுடனும் நின்றுகொண்டிருந்த பாபாவின் முன்சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து புறப்படுவதற்கு அனுமதி கேட்டாள்.  பாபா அவளிடம், "போ, சீக்கிரம் போ, அமைதியாகவும், குழப்பமடையாமலும் இரு.  நான்கு நாட்களுக்கு பெலாபூரில் சௌகரியமாக இரு.  உனது உறவினர்களை எல்லாம் கண்டபின் ஷீர்டிக்குத் திரும்பு" என்று உரைத்தார்.  பாபாவின் மொழிகள் எத்தகைய அதிஷ்டம் படைத்தது.  நானா சாஹேபின் தீர்மானம் பாபாவின் தீர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டது.  



நாசிக் முலே சாஸ்திரி 

ஜோசியம், கைரேகை முதலியவற்றில் கரைகண்டவரும், ஆறு சாஸ்திரங்களைக் கற்றறிந்தவருமாகிய நாசிக்கைச் சேர்ந்த வைதீகமான அக்னிஹோத்ரி அந்தணர் முலே சாஸ்திரி ஒருமுறை நாக்பூரின் புகழ்பெற்ற கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டியைச் சந்திக்க ஷீர்டிக்கு வந்தார்.  அவரைச் சந்தித்தபின்னர், அவரும் மற்றவர்களும் பாபாவைக் காண மசூதிக்குச் சென்றனர்.  பாபா தம்முடைய சொந்தப் பணத்திலேயே வெவ்வேறு பழங்களையும், மற்றப் பொருட்களையும் விற்பனையாளரிடமிருந்து வாங்கி மசூதியிலுள்ள மக்களுக்கு விநியோகித்தார்.

பாபா மாம்பழத்தை அதன் எல்லாப் பக்கங்களிலும் மிகத் திறமையாக அழுத்துவது வழக்கம்.  ஒருவன் பாபாவிடமிருந்து அதை வாங்கி உறிஞ்சுவானேயாகில், எல்லா சதைப்பற்றையும் உடனே தன வாயில் உறிஞ்சிக்கொண்டு கொட்டையையும், தோலையும் உடனே தூக்கி எறிந்துவிட முடியும்.  வாழைப் பழங்களை உரித்து சதைப்பற்றை அடியவர்க்கு விநியோகித்து, தோலை பாபா தமக்காக வைத்துக்கொள்வார்.  கைரேகை சாஸ்திரி என்ற முறையில் முலே சாஸ்திரி, பாபாவின் கையைப் பரிசோதிக்க விரும்பினார்.  பாவிடம் கையைக் காண்பிக்கக் கோரினர்.  பாபா அவருடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.  அவருக்கு நான்கு வாழைப்பழங்களைக் கொடுத்தார்.  எல்லோரும் வாதாவுக்குத் திரும்பினர்.

முலே சாஸ்திரி குளித்துப் புனித ஆடைகள் அணிந்து அக்னிஹோத்ரம் போன்ற தன நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்ய ஆரம்பித்தார்.  பாபா வழக்கம்போல் லெண்டியை நோக்கிப் புறப்பட்டார்.  "கொஞ்சம் ஜெரு எடு, (குங்குமப்பூ நிறத்தில் துணியைச் சாயம் போடுவதற்கான சிவப்பு மண்ணைப்போன்ற ஒரு பொருள்) நாம் இன்று குங்குமப்பூ நிற உடை உடுத்தலாம்" என்று பாபா கூறினார்.  பாபா என்ன சொல்கிறார் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை.  சிறிது நேரம் கழித்து, பாபா திரும்பி வந்தார்.  மத்தியான ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.  

பாபு சாஹேப் ஜோக், முலே சாஸ்திரியிடம் அவர் தன்னுடன் ஆரத்திக்கு வருகிறாரா என்று கேட்டார்.  மாலையில் தாம் பாபாவைப் பார்க்கப்போவதாக அவர் பதிலளித்தார்.  இதற்குச் சிறிது நேரத்திற்குப்பின் பாபா தமது ஆசனத்தில் அமர்ந்தார்.  அடியவர்களால் வழிபடப்பட்டார்.  ஆரத்தியும் துவங்கியது.  பிறகு பாபா "புது பிராமணனிடமிருந்து தட்ஷனை வாங்கி வா" எனக் கூறினார்.  பூட்டி தாமே தட்ஷனை வாங்கச் சென்றார்.  பாபாவின் செய்தியை முலே சாஸ்திரியிடம் தெரிவித்தபோது அவர் சொல்லப்பெறாத அளவு குழப்பம் அடைந்தார்.  "நான் தூய அக்னிஹோத்ரி பிராமணன்.  நான் ஏன் தட்ஷனை கொடுக்கவேண்டும்?  பாபா பெரிய முனிவராக இருக்கலாம்.  நான் அவரது சீடனல்ல!" என நினைத்தார்.  ஆனால் சாயிபாபாவைப் போன்ற ஞானி, பூட்டியைப் போன்ற கோடீஸ்வரரிடம் தட்ஷனை கேட்டனுப்பியிருப்பதனால் அவரால் மறுக்க இயலவில்லை.  எனவே தனது அனுஷ்டானத்தைப் பூர்த்தியாக்காமல் உடனே பூட்டியுடன் மசூதியை நோக்கிச் சென்றார்.

தம்மைத் தூயவராகவும், புனிதமானவராகவும், மசூதியை வேறுவிதமாகவும் கருதிய அவர் சற்று தூரத்தில் இருந்தே கைகளைச் சேர்த்து பாபாவின்மீது புஷ்பங்களை வீசினார்.  அப்போது ஆஹா! திடீரென்று ஆசனத்தில் அவர் பாபாவைக் காணவில்லை.  காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமியையே அங்கு கண்டார்.  ஆச்சரியத்தால் அவர் செயலிழந்தார்.  இது கனவாயிருக்குமோ?  அல்ல, அங்ஙனமன்று!  அவர் அகல விழித்திருந்தார்.  காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமி எங்ஙனம் அங்கு இருக்கமுடியும்?  சிறிதுநேரம் அவர் பேச்சற்றுவிட்டார்.  தன்னையே கிள்ளிவிட்டுக்கொண்டார்.  திரும்பவும் நினைத்தார்.  ஆனால் காலஞ்சென்ற தனது குரு மசூதியில் இருக்கும் உண்மையை அவரால் ஏற்கமுடியவில்லை.  முடிவில் எல்லா ஐயங்களையும் களைந்துவிட்டுத் தெளிந்தநிலையில் தனது குருவின் அடிகளில் பணிந்து, கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்.  

மற்ற எல்லோரும் ஆரத்தி பாடுகையில் முலே சாஸ்திரி தனது குருவின் பெயரை இரைந்து கூக்குரலிட்டார்.  இனப்பெருமை, புனிதத்தன்மை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி எறிந்துவிட்டு தனது குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்களை மூடிக்கொண்டார்.  எழுந்திருந்தபோது பாபா தட்ஷணை கேட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்.  பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு முலே சாஸ்திரி தன்னையே மறந்தார்.  எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.  ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.  திரும்பவும் பாபாவை வணங்கி தட்ஷணை கொடுத்தார்.  தனது சந்தேகம் நீங்கிவிட்டதாகவும், தன் குருவையே கண்டதாகவும் அவர் கூறினார்.  

பாபாவின் இந்த லீலையைக் கண்ணுற்ற அனைவரும், முலே சாஸ்திரி உட்பட, மிகவும் மனதுருகிப்போயினர்.  "ஜெரு எடு, நாம் இன்று குங்குமப்பூ வண்ண உடை உடுத்தலாம்" என்ற பாபாவின் பொன்மொழிகளை இப்போது புரிந்துகொண்டனர்.  சாயிபாபாவின் லீலை அத்தகைய அற்புதம் வாய்ந்ததாகும்.



ஒரு டாக்டர்

ஒருமுறை ஒரு மம்லதார் தனது டாக்டர் நண்பருடன் ஷீர்டிக்கு வந்தார்.  தனது தெய்வம் ராமர் என்றும், தான் ஒரு முஹமதியர் முன் பணியப் போவதில்லை என்றும் கூறி, ஷீர்டிக்கு வர விருப்பமில்லாதவராய் இருந்தார்.  மம்லதார் அவரிடம், அவரைப் பணியும்படி ஒருவரும் கேட்கவோ, வற்புறுத்தவோ மாட்டார்கள் என பதில் உரைத்தார்.  எனவே தோழமைக் கூட்டின் மகிழ்ச்சியை நல்குதற்காக அவரும் உடன் வருதல் வேண்டும்.  அவ்வாறாக அவர்கள் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.  டாக்டர் முன்னால் சென்று வணங்குவதைக் கண்ணுற்ற அனைவரும் ஆச்சரியத்தால் செயலிழந்தனர்.  

அவர் எங்ஙனம் தனது தீர்மானத்தை மறந்து முஹமதியர் முன் பணிந்தார் என்று அனைவரும் அவரைக் கேட்டனர்.  தனது அன்பிற்குரிய தெய்வம் ராமரையே ஆசனத்தில் பார்த்ததாகவும், எனவே தாம் சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் கூறினார்.  இதை அவர் சொல்லும்போதே சாயிபாபாவை மீண்டும் அங்கே கண்டார்.  திகிலுற்ற அவர், "இது கனவா? எங்ஙனம் அவர் முஹமதியராக இருக்கமுடியும்?  அவர் ஒரு மாபெரும் யோகநிறை (யோகசம்பன்ன) அவதாரம் ஆவார்" என நினைத்தார்.

அடுத்தநாள், தான் உண்ணாமல் விரதம் இருப்பதென்று சபதம் எடுத்துக்கொண்டார்.  மசூதிக்குப் போவதைத் தவிர்த்து, பாபா தன்னை ஆசீர்வதிக்கும்வரை அங்கு போவதில்லை எனத் தீர்மானம் செய்துகொண்டார்.  மூன்று நாட்கள் கடந்தன.  நான்காவது நாள் கான்தேஷிலிருந்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார்.  அவருடன் பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றார்.  வணக்கதிற்குப்பின் "ஓ! டாக்டரா, உம்மை இங்கு அழைத்துவர கான்தேஷிலிருந்து யார் வந்தது என்று எனக்கு முதலில் சொல்லும்?" என்று பாபா அவரைக் கேட்டார்.  இந்த முக்கியமான வினாவைக்கேட்டு டாக்டர் மனதுருகினார்.  அன்றிரவே அவர் பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டார்.  தூக்கத்தில் பேரானந்தப் பெருநிலையை (Bliss Supreme) அனுபவித்தார்.  இங்ஙனம் சாயிபாபாவிடம் அவரது பக்தி பன்மடங்காகப் பெருகியது.

வேறு எவ்விடத்திலும் இல்லாமல், நாம் நம்முடைய குருவினிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராய் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதைகளின், முக்கியமாக முலே சாஸ்திரியின் கதையினுடைய நீதியாகும்.  அடுத்த அத்தியாயத்தில் இன்னும் அதிக லீலைகள் விவரிக்கப்படும்.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

 

Thursday, 1 March 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 11

•  சகுணப் பிரம்மமாக சாயி
•  டாக்டர் பண்டிட்டின் வழிபாடு
•  ஹாஜி சிதிக்ஃபால்கே
•  பஞ்சபூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு


இந்த அத்தியாயத்தில் பிரம்மத்தின் அவதாரமான (சகுணப் பிரம்மமான) சாயியை விளக்குவோம்.  அவர் எங்ஙனம் வழிபட்டார்.  எங்ஙனம் அவர் பஞ்சபூதங்களை (இயற்கைச் சக்திகளை) கட்டுப்படுத்தினார் என்பதையும் காண்போம்.



சகுணப் பிரம்மமாக சாயி 

கடவுளுக்கு அல்லது பிரம்மத்திற்கு இரண்டுவிதமான வழிபாடுகள் உண்டு. 
1.  அவதரிக்காத நிர்குண வழிபாடு
2.  அவதரித்த 'சகுண வழிபாடு'

இரண்டும் ஒரே பிரம்மத்தைக் குறித்தாலும் நிர்குணம் உருவமற்றது.  சகுணம் உருவமுள்ளது.  சிலர் முன்னதையும், சிலர் பின்னதையும் வழிபடுவதை விரும்புகிறார்கள்.  கீதையில் (அத். 12) கூறியதைப்போன்று சகுணப் பிரம்மவழிபாடு எளிதானதானதும், ஆரம்பகாலத்திற்கு உகந்ததுமாகும்.  மனிதனுக்கு உருவம் இருப்பதைப்போன்று (உடம்பு, உணர்வுகள் முதலியன) உருவத்துடன் கூடிய கடவுளை வழிபடுவது அவனுக்கு இயற்கையானதும், எளிதுமாகிறது.  சகுணப்பிரம்மத்தை சில குறிப்பிட்ட காலக்கூறுவரை வணங்கினாலொழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியுறாது.  நாம் முன்னேறும்போது அது நம்மை நிர்குணப் பிரம்மத்தை வழிபட (தியானிக்க) இட்டுச்செல்கிறது.

எனவே, நாம் சகுண வழிபாட்டுடன் ஆரம்பிப்போமாக!  உருவம், யாககுண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்குரியவை.  எனினும், சத்குருவே இவை எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவர்.  பற்றின்மையும், அவதாரமும், முழு மனதார்ந்த தமது அடியவர்களின் உறைவிடமுமான சாயியை இத்தருணத்தில் நினைவு கூர்வோமாக.  அவர் மொழிகளில் நமக்குள்ள நம்பிக்கையே ஆசனமாகும்.  நமது சங்கல்பமாவது (பூஜையை ஆரம்பிக்கும்போது சொல்லும் தெளிந்த தீர்மானம்) நமது ஆசைகள் அனைத்தையும் உதறித் தள்ளுதலாகும்.  சிலர், சாயி ஒரு பாகவதபக்தர் (கடவுளின் அடியவர்) என்று கூறுகின்றனர்.  மற்றும் சிலர், மஹாபாகவத் (பெரும் அடியவர்) என்றும் பகர்கின்றனர்.  ஆனால் நமக்கு அவர் கடவுளின் அவதாரமாவார்.  அவர் எல்லையற்ற அளவு மன்னிப்பாரகவும், கோபமற்றவராகவும், நேர்மையுள்ளவராகவும், மென்மையாளராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும், இருந்தார்.  அவர் உருவமுள்ளவராகத் தோன்றினாலும், உண்மையில் உருவம் அற்றவராகவும், உணர்ச்சி வேகமற்றவராகவும், பற்றற்றவராகவும், அந்தரங்கமாய் சுதந்திரமாகவும் இருந்தார்.  
 
கங்கை நதி, தான் கடலுக்குச்செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்குக் குளிர்ச்சியளித்து, புதுக்கிளர்ச்சியூட்டி, பயிர்களுக்கும், மரங்களுக்கும் உயிரையளித்து, பலரின் தாகத்தையும் தணிக்கிறது.  இதைப்போன்றே சாயி போன்ற புண்ணிய புருஷர்கள் (ஆத்மாக்கள்) வாழ்ந்துகொண்டிருக்குபோதே அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் நல்கிறார்கள்.  கிருஷ்ண பரமாத்மாவும், "ஞானி எனது ஆத்மா, எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம்" என்று கூறியிருக்கிறார்.  சத்து - சித்து - ஆனந்தம் என அறியப்படும் இந்த விவரிக்க இயலாத ஆற்றல் அல்லது கடவுளின் சக்தியே ஷீர்டியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.

ஸ்ருதி (தைத்திரீய உபநிஷதம்) பிரம்மத்தை ஆனந்தம் என விவரித்திருக்கிறது.  இதை நாம் தினந்தோறும் நூல்களில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம்.  ஆனால் இப்பிரம்மத்தை அல்லது பேரானந்தத்தை ஷீர்டியில் பக்த மஹாஜனங்கள் அனுபவிக்கிறார்கள்.  அனைவருக்கும் ஆதாரமான அவருக்கு எவரிடமிருந்தும் ந்த ஆதாரமும் தேவையிருக்கவில்லை.  ஒரு சாக்குத்துண்டையே எப்போதும் தமது ஆசனமாகக் கொண்டிருந்தார்.  பக்தர்களால் அது ஒரு மெல்லிய மெத்தைகொண்டு மூடப்பட்டிருந்தது.  அவர் சாய்ந்துகொள்ள முதுகிற்கு ஒரு திண்டும் அவர்களாலேயே வைக்கப்பட்டது.

பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார்.  அவர்கள் விருப்பப்படியே தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார்.  அவர் முன்னிலையில் சிலர் சாமரம் அல்லது விசிறி வீசினர்.  சிலர் இசைக் கருவிகள் வாசித்தனர்.  சிலர் அவரின் கைகளையும், கால்களையும் கழுவினர்.  இன்னும் சிலர் வெற்றிலை, பாக்கு மற்றும் பல பொருட்களையும் நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர்.  ஷீர்டியில் அவர் வாழ்ந்ததுபோல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார்.  அவரின் எங்குநிறை தன்மையை அவருடைய பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள்.  இவ்வாறாக எங்கணும் வியாபித்திருக்கின்ற (சர்வாந்தர்யாமி) சத்குருவுக்கு நமது பணிவான சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.



டாக்டர் பண்டிட்டின் வழிபாடு

ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் என்பவர் ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார்.  பாபாவை வணங்கியபின் மசூதியில் அவர் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார்.  பாபா, அவரைத் தாதாபட் கேல்கரிடம் செல்லுமாறு பணித்தார்.  தாதாபட்டிடம் அவர் சென்றார்.    தாதாபட் அவரை நன்கு வரவேற்றார்.  தாதாபட் பூஜைக்காக தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டார்.  அவருடன் டாக்டர் பண்டிட்டும் சென்றார்.  தாதாபட் பாபாவை வழிபாடு செய்தார்.  இதுகாறும் எவரும் பாபாவின் நெற்றிக்குச் சந்தனம் பூசத் துணிந்ததில்லை.  

 மகால்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம்.  ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட் பூஜைப்பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்துப்போய் அதிலிருந்து பிசையப்பட்ட சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார்.  பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.

அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக்கொண்டிருந்தாலும் இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்?" என்று கேட்டார்.  இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மை (பாபாவை) அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் என்று நம்பியிருந்ததாகவும், அவர் குருவுக்கு செய்துகொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார்.  எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை.  டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவைத் தனது குரு காகாபுராணிக் என்று கருதியதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார்.  எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திரிபுந்த்ரத்தை பாபாவின் நெற்றியிலும் இட்டார்.

பக்தர்கள் விரும்பியவாறே தம்மை வழிபட பாபா அவர்களை அனுமதித்தார்.  எனினும் சில சமயங்களில் அவர் விநோதமானமுறையில் நடந்துகொண்டார்.  சில சமயங்களில் பூஜைத்தட்டைத் தூக்கியெறிந்து சீற்றமே அவதரித்ததுபோல் நின்றிருப்பார்.  அப்போது அவரை எவரே அணுக முடியும்?  சில சமயங்களில் அவர் பக்தர்களைக் கடிந்தார்.  சில சமயங்களில் மெழுகைக்காட்டிலும் மென்மையாய் இருந்தார்.  சாந்தத்துக்கும், மன்னிப்புக்குமான ஓர் உருவமாய் இருந்தார்.  கோபத்தால் அவர் குலுங்குவதுபோல் தோன்றினாலும், அவரது சிவந்த கண்கள் சுற்றிச்சுற்றி உருண்டாலும் அவர் அந்தரங்கமாக, பாசத்தின் தாரையாக, தாயன்பு உடையவராக இருந்தார்.

உடனே தமது அடியவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் தாம் ஒருபோதும் கோபமாக இருந்ததே இல்லை எனக்கூறி, தாயார் தங்களது குழந்தைகளை உதைத்தார்களானால், கடலானது ஆறுகளைப் புறக்கணித்ததென்றால் தாமும் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் எனவும் பகர்ந்தார்.  தமது பக்தர்களின் அடிமையான அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதையும், அவர்கள் தம்மை அழைக்கும்போதெல்லாம் மறுமொழி கூறி அவர்களின் அன்பைப் பெறுவதற்குமே எப்போதும் அவர் பெரிதும் விரும்பினார்.  



ஹாஜி சிதிக்ஃபால்கே

பாபா எப்போது ஓர் அடியவரை ஏற்றுக்கொள்வார் என்பதை அறியமுடியாது.  அது அவரது இனிய சங்கல்பத்தையே பொறுத்தது.  இக்கூற்றுக்கு சிதிக்ஃபால்கேயின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.  கல்யாணைச் சேர்ந்த சிதிக்ஃபால்கே என்ற ஒரு முஹமதியப் பெருந்தகை மெக்கா, மெதீனாவுக்குப் புனித யாத்திரை செய்துவிட்டு ஷீர்டிக்கு வந்தார்.  வடக்கு நோக்கிய சாவடியில் அவர் வாழ்ந்தார்.  மசூதியின் திறந்த வெளியில் அவர் அமர்ந்தார்.  ஒன்பது மாதங்கள் பாபா அவரைப் பொருட்படுத்தவில்லை.  அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை.  பால்கே மிகவும் தேற்றவியலாத நிலையை எய்தி என்னசெய்வதென்று புரியாமலிருந்தார்.  யாரோ ஒருவர் அவரை ஏமாற்றமடைய வேண்டாமென்றும், பாபாவின் மிக நெருங்கிய, அருகில் உள்ள அடியவரான ஷாமா (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) மூலம் பாபாவை அணுக முயற்சிக்கும்படியும் ஆலோசனை கூறினார்.  சிவபெருமான், அவரது சேவகரும், பக்தருமான நந்தியின் மூலம் அணுகப்படுதலைப்போல, ஷாமாவின் மூலம் பாபா அணுகப்படுதல் வேண்டும் என்றும் கூறினார்.  ஃபால்கே இந்த யோசனையை விரும்பி, ஷாமாவைத் தனக்காக மன்றாடிக் கெஞ்சிக் கேட்குமாறு வேண்டினார்.

ஷாமாவும் சமத்தித்து, பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பாபாவிடம், "பாபா, பலர் இம்மசூதிக்குள் தாராளமாய் வந்து தங்கள் தரிசனத்தைப் பெற்றுப் போகும்போது, தாங்கள் ஏன் அந்த முதிர்ந்த ஹாஜியை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது?  அவரை ஒருமுறை ஆசீர்வதித்தருளலாகாதா?" என்று அவரைப்பற்றிப் பேசினார்.  அதற்கு பாபா, "ஷாமா, நீ விஷயங்களையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவு முதிர்சியற்றவனாய் இருக்கிறாய்.  ஃபக்கீர் (அல்லா) அனுமதிக்கவில்லைஎன்றால் நான் என்ன செய்யமுடியும்?  அவரது அருளின்றி யாரே மசூதியில் ஏற வல்லார்?  நன்று, அவரிடம் சென்று நாளை பார்வி கிணற்றுக்கருகிலுள்ள குறுகிய ஒற்றையடிப்பாதைக்கு வருவாரா எனக்கேட்டுவா" என்றார்.  ஷாமா சென்று உடன்பாட்டு விடையுடன் திரும்பிவந்தார்.

மீண்டும் அவரிடம் பாபா, "எனக்கு நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் கொடுக்கச் சம்மதிப்பாரா எனக் கேள்" என்றார்.  சாமா சென்று, நாற்பது இலட்சம் ரூபாய்கள் கூடத் தர அவர் சம்மதிப்பதான பதிலுடன் திரும்பிவந்தார்.  மீண்டும் பாபா, "நாங்கள் ஒரு ஆட்டை மசூதியில் வெட்டப்போகிறோம், அவரை அதன் மாமிசம், தொடை, விதை இவைகளில் எது வேண்டுமெனக்கேள்" என்று கூறினார்.  ஹாஜி, பாபாவின் கோலாம்பாவிலிருந்து (மட்பாண்டத்திலிருந்து) ஏதாவது ஒரு சிறுதுணுக்கை பெற்றுக்கொள்வதிலேயே மகிழ்வதாகவும் ஷாமா பதில் கொண்டுவந்தார்.

இதைக்கேட்டு பாபா உணர்ச்சிவசப்பட்டு, தமது கையால் மட்கூஜாக்களையும், கோலாம்பாவையும் விட்டெறிந்துவிட்டு, நேராக ஹாஜிடம் சென்று தமது கஃப்னியை கைகளால் பிடித்துக்கொண்டு "ஏன் உன்னை நீயே தற்பெருமைப்படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப்போல் பாவனை செய்துகொண்டிருக்கிறாய்.  குர்ஆனை நீ இவ்விதமாகத்தான் கற்றுணர்ந்தாயா?  நீ உனது மெக்கா தலயாத்திரை குறித்துப் பெருமை கொள்கிறாய்.  ஆனால் நீ என்னை அறியவில்லை" என்றார்.  இவ்வாறு கடிந்துகொள்ளப்பட்டதும் ஹாஜி குழப்பமடைந்தார்.  பாபா பின்னர் மசூதிக்குச் சென்று ஒரு கூடை மாம்பழங்களை வாங்கி ஹாஜிக்குக் கொடுத்தனுப்பினார்.  பின்னர் மீண்டும் ஹாஜியிடத்துச் சென்று தம் பையிலிருந்து ரூ.55 ஹாஜியின் கைகளில் கொடுத்தார்.  அதிலிருந்து பாபா ஹாஜியை விரும்பினார்.  உணவுக்கு அவரை அழைத்தார்.  பாபா ஹாஜியை விரும்பியபோதெல்லாம் மசூதியினுள் அழைத்தார்.  பாபா சில சமயங்களில் அவருக்கு சில ரூபாய்கள் அளித்தார்.  இவ்வாறாக பாபாவின் தர்பாரில் ஹாஜியும் சேர்க்கப்பட்டார்.



பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு 

பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் ஆணைக்கு ஈண்டு உதாரணமாக இரண்டு நிகழ்சிகளைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிப்போம்.

(1)  ஒருநாள் மாலைநேரத்தில் ஷீர்டியில் பயங்கரமான புயல் வீசியது.  கருமேகங்களால் வானம் திரையிடப்படிருந்தது.  காற்று பலமாக வீசத்தொடங்கியது.  மேகங்கள் கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது.  மழை வெள்ளமாய்ப் பொழியத் தொடங்கியது.  சிறிதுநேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளக்காடாகியது.  ஷீர்டியிலிருந்த சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதியடைந்து திரளாக மசூதியில் தஞ்சமடைந்தனர்.  ஷீர்டியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன.  ஆனால் அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை.  எனவே அவர்கள் எல்லோரும் தங்களது பக்தியின்பால் பற்றுமீதூறும் தங்களது கடவுளான பாபாவை, அவர் குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டினர்.  பாபா மிகவும் மனது உருகினார்.  பாபா மசூதியிலிருந்து வெளிப்போழ்ந்து அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடிமுழக்கம் போன்ற குரலில் புயலை நோக்கி, "நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு" எனக் கூறினார்.  சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது.  பின்னர் சந்திரன் வானத்தில் உதயமாகி, மக்கள் நன்றாக மகிழ்வெய்தி வீடிட்ற்குத் திரும்பினர்.

(2)  மற்றொரு சந்தர்ப்பத்தில் மத்தியான நேரத்தில் மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது.  அதனுடைய சுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது.  மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை.  தண்ணீரை அதன்மீது ஊற்றும்படியோ,அல்லது சுவாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்யும்படியாகவோ பாபாவைக் கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை.  ஆனால் சிறிதுநேரத்தில் பாபா, என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டார்.  தமது சட்காவை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின்மீது ஓங்கியடித்து, "கீழிறங்கு, அமைதியாய் இரு" என்றார்.  ஒவ்வொரு அடிக்கும் சுவாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும், சாதாரணமாகவும் ஆகியது.  

இவரே நமது சாயி - கடவுளின் அவதாரமாவார்.  தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்.  தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்.

இதுமட்டுமன்று, எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகுவிரைவில் கடவுள்காட்சியைப் பெறுவார்.  எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்.


ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்