Thursday, 22 March 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 14

•  நாந்தேடைச் சேர்ந்த 
   ரத்தன்ஜி வாடியா
•  மௌலா சாஹேப் முனிவர்
•  தட்ஷிணை சாஸ்திரம் 
•  மீமாம்ஸா

பாபா சொல்லும், கருணையும் எங்ஙனம் குணமாக்க முடியாத வியாதிகளையும் குணமாக்கியது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம்.  இப்போது பாபா எங்ஙனம் ரத்தன்ஜி வாடியாவை ஆசீர்வதித்துக் குழந்தையை அருளினார் என்பதை விவரிப்போம்.

இயற்கையிலேயே ஞானியினது வாழ்க்கையானது உள்ளும் - புறமும் இனிமையானதாய் இருக்கிறது.  அவரது பல்வேறு செயல்கள் சாப்பிடுதல், நடத்தல், அவரின் இயற்கையான மொழிகள் எல்லாம் இனிமை வாய்ந்தவை.  அவர்தம் வாழ்க்கையோ பேரானந்தம் மானிட உருப்பெற்றதாகும்.  தம்மைத் தமது அடியவர்கள் நினைப்பதற்கு வழிமுறையாக சாயி அதனை வெளியிட்டார்.  கடமை, செயல் இவற்றைப்பற்றி பல்வேறு கதைகளை அவர்கட்குச் சொன்னார்.  அது கடைமுடிவாக அவர்களை உண்மையான மதத்திற்கு இட்டுச்சென்றது.  இவ்வுலகில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.  ஆனால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  வாழ்க்கையின் நோக்கத்தை அவர்கள் பெறவேண்டும்.  அதாவது ஆத்மானுபூதியை.  

முந்தைய ஜென்மங்களிலுள்ள நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்றிருக்கிறோம்.  பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியைக்கொண்டு பெறுவது தகுதியுடையதாகும்.  எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்கவேண்டும்.  நமது குறிக்கோளையும், நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும்.

நீங்கள் தினந்தோறும் சாயி லீலைகளைக் கேட்பீர்களானால், அவரை எப்போதும் காண்பீர்கள்.  நீங்கள் இவ்வண்ணமாக சாயிலீளைகளை நினைவூட்டிக் கொள்வீர்களானால், உங்கள் மனது அடிக்கடி மாறி ஓடித்திரிதலின்றி விடுபடும்.  இவ்விதமாகவே சென்றுகொண்டிருந்தால், அது முடிவாகச் சுத்த ஞானத்தில் இரண்டாகக் கலந்துவிடும்.  



நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி

இப்போது இவ்வத்தியாயத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான கதைக்கு வருவோம்.  நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேடில், ஒரு பார்சி மில் காண்ட்ராக்டரும், வியாபாரியுமான ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் வசித்து வந்தார்.  அவர் பெருமளவு செல்வம் சேகரித்து வயல்களையும், நிலங்களையும் பெற்றிருந்தார்.  ஆடு, மாடு, குதிரை, போக்குவரத்து வசதிகள் இவ்வளவையும் பெற்று மிகவும் சுபிட்சத்துடன் இருந்தார்.  புறத்தோற்றங்கள் அனைத்திற்கும் மிகவும் திருப்தி வாய்ந்தவராகவும், சந்தோஷமுடையவராகவும் காணப்பட்டார்.  ஆனால் அந்தரங்கமாகவும், உண்மையாகவும் அவர் அங்ஙனம் இருக்கவில்லை.  எவரும் முழுமையும் செல்வந்தராகவும், மகிழ்ச்சியுற்றவராகவும் இருக்கக்கூடாதென்பது பரலோகத் தீர்ப்பாய் இருக்கிறது.  ரத்தன்ஜியும் இதற்கு விதிவிலக்கல்ல.

அவர் தாரளமானவராயும், தான தர்மசீலராயும், ஏழைகட்கு உணவு, உடையளித்தும் அனைவருக்கும் பல்லாற்றானும் உதவிபுரிந்தார்.  மக்கள் அவரை நல்லவர், மகிழ்ச்சி நிரம்பியவர் என்று கருதினர்.  ஆனால் நெடுநாளாகத் தனக்கு ஆணோ, பெண்ணோ எக்குழந்தையுமே இல்லாததனால் தமக்குள்ளேயே அவர் மிக்க துயர் கொண்டவரானார்.  அன்பும் பக்தியுமின்றிப் பாடப்பெறும் இறைவன் புகழ் குறித்த கீர்த்தனை போன்றும், பக்க வாத்தியங்களற்ற இசையைப் போன்றும், பூணூல் அற்ற பிராமணனைப் போன்றும், பொது அறிவின்றிக் கலைகளில் பெற்ற சிறப்பறிவைப் போன்றும், பாவத்திற்காகக் கழிவிரக்கமின்றிச் செய்யும் தீர்த்த யாத்திரையைப் போன்றும், அட்டிகை அற்ற ஆபரண அணிமணிகள் போன்று அழகற்றதாகவும், பயனற்றதாகவும் இருப்பதைப் போன்றே ஆண் குழந்தையற்ற இல்லறத்தானுடைய நிலையுமாம்.

இவ்விஷயத்தைப் பற்றியே ரத்தன்ஜி சதா சிந்தித்து, எனக்கொரு புத்திரனைக் கடவுள் எப்போதாவது மகிழ்ந்தருளுவாரா? என்று ஏங்கினார்.  இவ்வாறாக அவர் கலகலப்பின்றியும், முகவாட்டத்துடனும் காணப்பட்டார்.  உணவில் அவருக்குச் சுவை ஈடுபாடு இல்லை.  தான் ஒரு புதல்வனுக்காக ஆசீர்வதிக்கப்படுவோமோ என்று அவர் அல்லும் பகலும் இதே கவலையால் பீடிக்கப்பட்டார்.  தாஸ்கணு மகராஜிடம் அவருக்கு மரியாதை அதிகம்.  அவரைக் கண்டு தன் உள்ளத்தை வெளியிட்டார்.  தாஸ்கணுவும் அவரை ஷீர்டிக்குப் போகும்படியும், பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர்தம் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்று குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தினார்.  ரத்தன்ஜிக்கு இக்கருத்துப் பிடித்தது.  ஷீர்டிக்குப் போகவும் தீர்மானித்தார்.

சில நாட்களுக்குப் பின்னர் அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதங்களில் வீழ்ந்தார்.  பிறகு தம் கூடையைத் திறந்து ஒரு அழகிய பூமாலையை எடுத்து, அதை பாபாவின் கழுத்திலிட்டுக் கூடைநிறையப் பழங்களையும் சமர்ப்பித்தார்.  பாபாவுக்கு அருகில் மிக்க மரியாதையுடன் அவர் அமர்ந்து பின்வருமாறு வேண்டத்தொடங்கினார்.  "இக்கட்டான நாட்களில் இருக்கும்போதே அநேகர் தங்களிடம் வருகிறார்கள்.  தாங்கள் அவர்களின் துன்பங்களை உடனே துடைக்கிறீர்கள்.  இதைக்கேட்டு நான் தங்களது பாதகமலத்தை அடைக்கலம் புகுந்தேன்.  ஆகவே தயவுசெய்து என்னை ஏமாற்றாதீர்கள்".

பாபா ரத்தன்ஜி கொடுக்க இருந்த ரூ.5 ஐக் கேட்டார்.  ஆனால் ரூ. 3.14 ஐத் தாம் முன்னரே வாங்கிக்கொண்டதாகவும், மீதத்தையே கொடுக்கவேண்டும் என்றார்.  ரத்தன்ஜி பெரிதளவில் குழப்பமடைந்தார்.  பாபா என்ன கூறினார் என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை.  அவர் ஷீர்டிக்குச் செல்வது இதுவே முதல்முறை.  முன்னமே ரூ. 3.14 ஐ தாம் வாங்கிக்கொண்டதாக பாபா கூறியது எங்ஙனம் என்று அவர் நினைத்தார்.  அவரால் புதிரை விடுவிக்க இயலவில்லை.  ஆனால் அவர் பாபாவின் பாதத்தடியில் அமர்ந்து, கேட்கப்பட்ட மீதமுள்ள தட்ஷிணையை அளித்தார்.

பாபாவிடம் தாம் வந்த காரணத்தை முழுமையும் விளக்கிக்கூறி, அவருடைய உதவியைக் கோரினார்.  தமக்கு ஒரு புத்திரனை பாபா ஆசீர்வதித்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். 

பாபாவும் மனதுருகி, அவரைக் கவலைப்படாமல் இருக்கும்படியும், அதிலிருந்து அவரின் கஷ்டமான நாட்கள் முடிந்துவிட்டன என்றும் கூறினார்.  பினார் அவருக்கு உதியை அளித்து, அவரது தலையில் கையை வைத்து, அல்லா அவரது உள்ளத்தின் ஆசையைப் பூர்த்திசெய்வார் என்றும் கூறினார்.

பின்னர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு நாந்தேடுக்குத் திரும்பி, ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும் தாஸ்கணுவுக்குக் கூறினார்.  அங்கு எல்லாம் நன்றாகவே நிறைவேறியதாகவும், தாம் பாபாவின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும், பிரசாதத்துடன் பெற்றதாகவும், ஆனால் அவரால் ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.  பாபா அவரிடம் தாம் ஏற்கனவே  ரூ 3.14 ஐ வாங்கிக்கொண்டதாகக் கூறினார்.  இக்குறிப்பினால் பாபா என்ன கூறுகிறார் என்பதைத் தயவுசெய்து விவரியுங்கள்.  நான் ஷீர்டிக்குப் போனதேயில்லை.  பிறகு பாபாவிடம் அத்தொகையை நான் எவ்விதம் கொடுத்திருக்க முடியும் என்று தாஸ்கணுவிடம் கூறினார்.  தாஸ்கணுவுக்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது.  அதைப்பற்றிப் பெரிதும் அவர் நீண்ட நேரம் சிந்தித்தார்.  சிறிது நேரத்திற்குப் பிறகு பின்வரும் நிகழ்ச்சி அவர் கவனத்திற்கு வந்துற்றது.  சில நாட்களுக்கு முன் ரத்தன்ஜி, மௌலா சாஹேப் என்ற ஒரு முஹமதிய முனிவரை வரவேற்று, அவரின் வரவேற்பு உபசாரணைக்காக கொஞ்சம் பணம் செலவழித்தார்.  

மௌலா சாஹேப், நாந்தேட் மக்கள் நன்றாக அறிந்த ஒரு முனிவர்.  (சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர்)  ரத்தன்ஜி ஷீர்டிக்குப் போகத் தீர்மானித்தபோது, இந்த மௌலா சாஹேப் தற்செயலாய் ரத்தன்ஜியின் வீட்டிற்கு வந்தார்.  ரத்தன்ஜி அவரை அறிந்திருந்தார்.  அவரிடம் அன்பு செலுத்தினார்.  எனவே அவரைக் கௌரவிக்குமுகமாக ஒரு விருந்து கொடுத்தார்.  தாஸ்கணு, ரத்தன்ஜியிடமிருந்து விருந்து உபசாரத்துக்கான செலவுக் குறிப்புக்களை வாங்கிப் பார்த்தார்.  எல்லாம் சரி நுட்பமாக ரூ 3.14 ஆகியிருந்தது.  அதற்குக் கூடவோ, குறையவோ இல்லாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் செயலிழந்தனர்.  அவர்கள் பாபா எங்கும் நிறை பேரறிவுடையார் என்பதை அறியத் தலைப்பட்டார்கள்.  ஷீர்டியில் வாழ்ந்தாலும், ஷீர்டியிலிருந்து நெடுந்தூரம் உள்ள வெளியிடங்களில் நடப்பதையும் அவர் அறிந்திருந்தார்.  

உண்மையில் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிந்திருந்தார்.  எவருடைய நெஞ்சத்தினுள்ளும், ஆவியினுள்ளும் தம்மை அவர் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.  மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மௌலா சாஹேபிடம் தம்மைக் காணாமலும், அவருடன் தாம் ஒன்றாகவும் இல்லாதிருப்பின் ரத்தன்ஜி மௌலா சாஹேபுக்குக் கொடுத்த வரவேற்பு பற்றியும், அதற்கு அவர் செலவழித்த தகையைப் பற்றியும் பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?

ரத்தன்ஜி தாஸ்கணுவின் விளக்கத்தால் திருப்தியுற்றார்.  பாபாவிடம் அவருக்குள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுப் பல்கிப் பெருகியது.  பின்னர் உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஆசீர்வதிக்கப்பட்டது.  அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.  அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் மொத்தத்தில் பிறந்தன என்றும் அதில் நான்கே உயிர் பிழைத்தன என்றும் கூறப்படுகிறது.

இவ்வத்தியாயத்தின் அடிக்குறிப்பில் பாபா, ராவ்பகதூர் ஹரி விநாயக் சாதே என்பவரை, அவர் முதல் மனைவி இறந்த பின்னர் மீண்டும் மணம் செய்துகொள்ளும் படியும், அவருக்கு மகன் பிறப்பான் என்றும் கூறினார்.  சாதே இரண்டாவது மணம் புரிந்துகொண்டார்.  இம்மனைவி மூலம் அவருக்குப் பெண் குழந்தைகளே பிறந்தன.  எனவே அவர் மிகவும் மனத்தளர்வடைந்தார்.  ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாகப் பிறந்தது.  பாபாவின் சொற்கள் உண்மையாயின.  அவரும் திருப்தியுற்றார்.



தட்ஷிணை - மீமாம்ஸம் (தட்ஷிணை பற்றிய தத்துவம்)

தட்ஷிணையைப் பற்றிய சில குறிப்புக்களுடன் இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்.  பாபாவைப் பார்க்கச் சென்றவர்களிடத்து அவர் தட்ஷிணை கேட்டார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.  சிலர் பாபா ஒரு பக்கிரியாகவும் அறவே பற்றன்றியும் இருந்தால், அவர் ஏன் தட்ஷிணை கேட்கவேண்டும்? ஏன் பணத்தைப்பற்றி இலட்சியம் செய்யவேண்டும்? என்று வினவலாம்.  இவைகளை இப்போது விளக்கமாகக் கவனிப்போம்.  

ஆரம்பத்தில் நெடுநாட்களுக்கு பாபா எதையுமே கேட்கவில்லை.  அவர் எரிக்கப்பட்ட தீக்குச்சிகளைச் சேமித்து தம் பைகளில் வைத்துக்கொண்டார்.  எவரிடமிருந்தும், அவர் அடியவராக இருப்பினும் பாபா எதையும் ஒருபோதும் கேட்கவில்லை.  யாராவது ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோ அவர் முன்னால் வைத்தால், அவர் எண்ணெயோ அல்லது புகையிலையோ வாங்கினார்.  அவர் புகையிலையின் மீது விருப்பமுடையவராக இருந்தார்.  ஏனெனில் அவர் எப்போதும் பீடி அல்லது சில்லிம் (புகைபிடிக்கும் ஒரு மண்குழாய்) குடித்தார்.

பின்னர் சில ஞானிகள் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என நினைத்தனர்.  எனவே அவர்கள் பாபாவின் முன்னால் சில செப்புக் காசுகளை வைத்தனர்.  ஒரு பைசா கொடுக்கப்பட்டால் அதை அவர் பைக்குள் போட்டுக்கொள்வார்.  இரண்டு பைசா நாணயமாக இருப்பின் அது உடனே திருப்பிக் கொடுக்கப்படும்.  பாபாவின் புகழ் திக்கெங்கும் பரவிய பின்னர், மக்கள் அவரிடம் பெருந்திரளாக மண்டத் தொடங்கினர்.  அவர்களிடம் பாபா தட்ஷிணை கேட்கத் தொடங்கினார்.  ஒரு தங்கக் காசு வைக்கப்படாலன்றி கடவுளர்களின் பூஜை பூர்த்தியாவதில்லை என்று ஸ்ருதி (வேதங்கள்) பகர்கின்றது.  கடவுள்களின் பூஜைக்குக் காசு தேவைப்பட்டிருந்தால், ஞானிகளின் பூஜைக்குக் கூட ஏன் அது அங்ஙனம் இருக்கக்கூடாது?  முடிந்த சார்பாக ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைப் பார்க்கும்போது வெறும் கையுடன் போகலாகாது என்று விதிக்கப்பட்டது.  அவன் காசோ, பணமோ எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.  இது சம்பந்தமாக உபநிஷதங்கள் சிபாரிசு செய்த கருத்தை நாம் கவனிக்கலாம்.  பிருதாரண்ய உபநிஷதம் பிரஜாபதிக் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் இவைகளை 'த' என்ற ஒரே எழுத்தால் விளித்ததாகப் பகர்கின்றது.  இச்சொல்லால்,
  1. தேவர்கள் தாங்கள் தமா (தன்னடக்கம்) பழகவேண்டுமென்று புரிந்துகொண்டனர்.  
  2. மனிதர்கள் தானம் அல்லது தர்மம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர்.
  3. பேய்கள் தயை அல்லது பரிவு செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டன.
எனவே மனிதர்கள் தர்மம் அல்லது ஈகை செய்யவேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது.  தைத்ரீய உபநிஷத்தின் குரு தனது மாணவர்களை தர்மத்தையும், மற்ற நல்ல பண்புகளையும் பயிலும்படி ஊக்குவித்து உபதேசிக்கிறார்.  தர்மத்தைப்பற்றி அவர், நம்பிக்கையுடன் கொடுங்கள், அது இல்லாமலும் கொடுங்கள், பெருந்தன்மையுடன் கொடுங்கள், அதாவது தாராளமாகக் கொண்டுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.  

தான தர்மத்தை அடியவர்களுக்குப் போதிப்பதற்கும், பணத்தில் அவர்களுக்கு உள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும், பாபா அவர்களிடமிருந்து தட்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார்.  ஆனால் அதில் இவ்விசித்திரம் இருந்தது.  "அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தாக வேண்டும்".  இவ்வாறாகப் பல இடங்களில் நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஒன்று சொன்னால், பிரசித்திபெற்ற நடிகரான கணபதிராவ் போடஸ் தனது மாராத்திய சுயசரிதையில், பாபா தம்மைத் திரும்ப திரும்ப தட்ஷிணை கேட்டதாகவும், தனது பணப்பையையே அவர் முன்னர் காலியாக்கியதாகவும், இதன் விளைவாகப் பிற்கால வாழ்வில் தமக்கு ஏராளமாகப் பணம் வந்ததால் பணத் தேவையே இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.  

பல சந்தர்ப்பங்களில் தட்ஷிணைக்கு பாபா பணவகை சார்ந்தவற்றையே விரும்பிக் கேட்காத மறைபொருளும் உண்டு.  இரண்டு நிகழ்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.  

பேராசிரியர் G.G.நார்கேயிடமிருந்து பாபா தட்ஷிணையாக ரூ. 15  கேட்டார்.  நார்கே தன்னிடம் பைசாகூட இல்லையென்று பதிலளித்தார்.  அதற்குப் பாபா கூறியதாவது, "உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன்.  யோக வசிஷ்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள்.  அதிலிருந்து எனக்கு தட்ஷிணை கொடுங்கள்".  தட்ஷிணை அழிப்பது என்பதற்கு இந்த சந்தர்ப்பத்தின் பொருளாவது, நூலிலிருந்து நீதிகளை உய்த்துணர்ந்து அவைகளை பாபா வாசம் செய்கிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்திக்கொள்ளுதலேயாம்.

இரண்டாவது சந்தர்ப்பத்தின்போது, திருமதி தர்கட் என்ற அம்மையாரிடம் ரூ.6 தட்ஷிணையாகக் கொடுக்கும்படி பாபா கேட்டார்.  ஏதும் அவள் கொடுக்க இயலவில்லை என்று மன வருத்தம் அடைந்தாள்.  பின்னர் அவளது கணவர், பாபா ஆறு உட்பகைவர்களையே (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம்) தம்மிடத்துச் சமர்ப்பிக்கும்படி கேட்டார் என்று அம்மையாருக்கு விளக்கினார்.  பாபா இவ்விளக்கத்துக்கு உடன்பாடு தெரிவித்தார்.   

தட்ஷிணையின் மூலம் பாபா ஏராளமாகப் பணம் சேகரித்தார் என்பதும், அவ்வளவு பணத்தையும் அதே நாளில் பகிர்ந்தளித்து விடுவார் என்பதும், அடுத்த நாள் காலை வழக்கம்போல் அவர் ஒரு ஏழைப் பக்கிரியாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏறக்குறையப் பத்து வருடங்களாக ஆயிரம் ஆயிரம் ரூபாய்களைத் தட்ஷிணையாகப் பெற்றுவந்த பாபா, பின்னர் மஹாசமாதி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன.  

சுருக்கமாகத் துறவையும், தூய்மையையும் போதிப்பதே அவர்களிடமிருந்து தட்ஷிணை பெற்றதன் முக்கிய காரணமாகும்.  




பின்னுரை

B.V.தேவ் என்பவர் ஓய்வுபெற்ற மம்லதாரும், பாபாவின் பெரும் அடியவர்களுள் ஒருவரும் ஆவார்.  அவர் சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7, எண். 25, பக்கம் 26) தட்ஷிணையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

"பாபா எல்லோரிடமிருந்தும் தட்ஷிணை கேட்கவில்லை.  கேட்காமலேயே சிலர் தட்ஷிணை அளித்தால் அவர் அதைச் சிலசமயங்களில் ஏற்றுக்கொண்டார்.  மற்ற நேரங்களில் மறுத்துவிட்டார்.  சில குறிப்பிட்ட அடியவர்களிடமே அவர் அதைக் கேட்டார்.  பாபா தங்களிடம் அதற்காகக் கேட்கவேண்டும், அப்போதே தாம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவர்களிடம் அவர் கேட்டதேயில்லை.  பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதைச் சமர்ப்பித்தால், அவர் தொடுவதில்லை.  அந்த அடியவர் அஃதை அங்கேயே வைத்திருந்தாள், அதை அப்பால் எடுத்துக்கொள்ளும்படி பாபா அவரைக் கேட்டார்.  பக்தர்களின் விருப்பம், பக்தி, சௌகர்யம் இவைகளுக்கேற்றவாறு அவர் சிறிய, பெரிய தொகைகளைக் கேட்டார்.  எல்லாச் செல்வந்தர்களையும் கேட்கவில்லை.  அன்றி எல்லா ஏழைகளிடமும் கேட்கவுமில்லை.

தட்ஷிணை கேட்டு கொடுக்காதவர்களிடம் பாபா கோபம் அடைந்ததே இல்லை.  யாரேனும் நண்பன் மூலம் தட்ஷிணை அனுப்பப்பட்டு, அவன் அதை பாபாவிடம் கொடுக்க மறந்துவிட்டானாயின், அவர் அவனுக்கு அதை எப்படியோ ஞாபகமூட்டி அவனைக் கொடுக்கும்படி செய்தார்.  சில சந்தர்ப்பங்களில் தட்ஷிணையாகக் கொடுத்த பணத்தில் கொஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதைப் பாதுகாக்கும்படியோ  அல்லது வழிபாட்டிற்காக அவரது பூஜை அறையில் வைக்கும்படியோ கேட்டுகொள்வார்.

இம்முறையானது பணம் அளித்தவருக்கோ அல்லது அந்த பக்தருக்கோ எல்லையற்ற அளவு நன்மையளித்தது.  தான் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாக யாரேனும் கொடுத்தால், அவர் அதிகப்படியான மீதமுள்ள தொகையைத் திரும்ப அளித்துவிடுவார்.  சிலரிடம் தாங்கள் முதலில் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாகவும், அப்படி அவர்களிடம் பணம் இல்லையானால் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ அளிக்கச் சொன்னார்.  சிலரிடம் அவர் ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தட்ஷிணை கேட்டார்.  

தட்ஷிணையாகச் சேர்ந்த பணத்திலிருந்து அவர் தமக்காக மிகவும் கொஞ்சமே செலவழித்தார்.  அதாவது சில்லிம் என்ற புகைக் குழாய் வாங்குவதற்கும், துனி என்ற புனித அடுப்புக்கு எரிபொருள் வாங்குவதற்கும் செலவழித்து மிச்சமனைத்தையும் பல்வேறு மனிதர்களுக்கு வேறுபடும் விகிதங்களில் தர்மமாகப் பகிர்ந்து அளித்தார்.  ஷீர்டி சமஸ்தானத்தின் சிறுசிறு பொருட்களெல்லாம் அப்போது இருந்த பணக்கார அடியவர்களால் ராதாகிருஷ்ணமாயின் வேண்டுகோள், யோசனையின் பேரில் வாங்கி அளிக்கப்பட்டவை.  விலைமதிப்புள்ள, செல்வமிகு பொருட்களை யாரேனும் கொணர்ந்தால் பாபா சீற்றமடைந்து அவர்களைக் கடிந்துகொள்வார்.  நானா சாஹேப் சாந்தோர்கரிடம் தமது உடைமைகள் ஒரு கௌபீனம், ஒரு துண்டு, ஒரு கஃப்னி, ஒரு தகரக்குவளை என்றும் அவரைப் பலர் தேவையற்ற, பயனற்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் கொண்டுவந்து தொல்லைப்படுத்துவதாகவும் கூறினார்.

நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும், செல்வமும்.  பாபா ஷீர்டியில் இரண்டு நிலையான அமைப்புமுறைகளை ஏற்படுத்தினார்.  அதாவது தட்ஷணையும், ராதாகிருஷ்ணமாயியும் ஆகும்.  எனவே பக்தர்கள் அவரிடம் வந்தபோதெல்லாம் அவர்களிடம் தட்ஷணை கேட்டார்.  பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார்.  பள்ளிக்கூடமென்பது  ராதாகிருஷ்ணமாயியின் வீடு.  அவர்கள் இவ்விரண்டு சோதனைகளில் நன்றாகத் தேறினார்களேயானால், அதாவது செல்வத்துக்கும், பெண்ணுக்குமுள்ள பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்கள் என்று தெளிவுபடுத்துவார்களேயானால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் துரிதமானது.  பாபாவின் அருளாலும், ஆசிகளாலும் உறுதியளிக்கப்பட்டது.

தேவ், கீதை உபநிஷதங்களிளிருந்து புண்ணிய க்ஷேத்திரத்தில் புண்ணிய ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்ட தர்மமானது கொடுத்தவருக்கு அதிக பலன் அளிக்கிறது என்பதை ஸ்லோகங்கள் மூலம் எடுத்துக் காண்பித்து இருக்கிறார்.  ஷீர்டியில் அதில் உறையும் தெய்வவுமான சாயிபாபாவையும் தவிர புனிதமானது என்ன இருக்க முடியும்?!

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்


       

No comments:

Post a Comment