Thursday, 5 April 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 16/17

துரித பிரம்மஞானம் 

இவ்விரண்டு அத்தியாயங்களும் சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையைப் பற்றிக் கூறுவதாகும்.  



முன்னுரை

முன் அத்தியாயத்தில் சோல்கரின் சிறிய அளவிலான சமர்ப்பண விரதம் எவ்விதம் நிறைவேற்றப்பட்டு ஏற்கப்பட்டதென விளக்கப்பெற்றது.  அன்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் ஏற்றுக்கொள்வார் என்று அக்கதையின் வாயிலாக சாயிபாபா அறிவுறுத்தினார்.  ஆனால் அதுவே பெருமையுடனும், இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்.  தாமே சச்சிதானந்தத்தினால் (சத்து - சித்து - ஆனந்தம்) முழுமையும் நிரம்பப் பெற்றிருந்தமையால், வெறும் புறச்சம்பிரதாயங்களை அவர் பெருமளவு இலட்சியம் செய்வதில்லை.  அடக்கவொடுக்கத்துடனும், பணிவான உணர்வுடனும் ஒன்று சமர்ப்பிக்கப்படுமானால், அதை அவர் வரவேற்று பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்வார்.

உண்மையில் சாயிபாபாவைப் போன்ற சத்குருவைக் காட்டிலும், மிகுதியான தாராளம், தயை முதலான பண்புகள் அமையப்பெற்ற பிறிதொருவர் எவரும் இல்லை.  அவரை சிந்தாமணிக் கல்லுக்கோ(நினைத்தவை அனைத்தையும் தரும் ஓர் அரும் பொன்மணி), கற்பக தருவிற்கோ(விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீக மரம்), காமதேனுவிற்கோ(விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீகப்பசு) ஒப்பிடமுடியாது.  ஏனெனில் நாம் விரும்பியவற்றை மட்டுமே அவை அளிக்கின்றன.  ஆனால் சத்குருவோ, கருதுதற்கியலாத, ஆராய்ந்து அறிதற்கியலாத, மெய்ப்பொருளாம் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு நல்கிறார்.

இப்போது சாயிபாபாவிடம் வந்து தனக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென்று மன்றாடி வேண்டிக்கொண்ட ஒரு பணக்காரரைச் சமாளித்து, எப்படி அனுப்பி வைத்தார் என்னும் கதையைக் கேட்போம்.  தனது வாழ்க்கையில் மிகவும் சுபிட்சத்துடன் விளங்கிய பணக்காரர் ஒருவர் இருந்தார்.  (துரதிஷ்ட வசமாக அவர் பெயர், இருப்பிடம் முதலியன குறிக்கப்படவில்லை)

அவர் ஏராளமாக செல்வம், வீடுகள், வயல்கள், நிலங்கள் முதலியவற்றைப் பெருந்திரளாகக் குவித்திருந்தார்.  பல வேலையாட்களும், சார்ந்து வாழ்வோரும் வாய்க்கப்பட்டவராக இருந்தார்.  பாபாவினது புகழ் அவர் செவிகளை எட்டியபோது, அவர் தனது நண்பர் ஒருவரிடம், தனக்கு எவ்விதமான பொருளும் தேவையிருக்கவில்லை என்றும், எனவே அவர் ஷீர்டிக்குச் சென்று, பாபாவிடம், பிரம்ம ஞானத்தை அருளும்படி வேண்டப்போவதாகவும், அங்ஙனம் அதை அவர் பெற்றால், அது நிச்சயம் தன்னை இன்னும் அதிக மகிழ்ச்சியுடையவராக்கும் என்றும் கூறினார்.  அவருடைய நண்பர் பின்வருமாறு உரைத்து, அவர் கருத்தை மாற்ற முயன்றார்.  "பிரம்மத்தை அறிவதென்பது அவ்வளவு எளிதல்ல.  அதிலும் குறிப்பாக மனைவி, மக்கள், செல்வம் என்னும் கவனங்களிலேயே முழுவதுமாகக் கவரப்பட்டிருக்கும் பேராசைக்காரருக்கு அது எளிதே அல்ல.  ஒரு பைசாவும் தர்மத்திற்காக ஈயா மனிதராகிய உம்முடைய பிரம்மஞான நாட்டத்தை யாரே திருப்தி செய்ய இயலும்?"

இப்பேர்வழி, தமது நண்பரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது போய்வர குதிரைவண்டியைப் பேசியமர்த்தி ஷீர்டிக்கு வந்தார்.  மசூதிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்த்தார்.  அவர் பாதங்களில் வீழ்ந்து, "பாபா, இங்கு வருவோர் அனைவர்க்கும் எவ்விதத் தாமதமுமின்றித் தாங்கள் பிரம்மத்தைக் காண்பிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு தொலைவிலுள்ள இடத்தில் இருந்து நான் இங்கு வந்திருக்கிறேன்.  எனது பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்து உள்ளேன்.  நான் தங்களிடமிருந்து பிரம்மத்தைப் பெறுவேனாகில் எனது கடின முயற்சிகளெல்லாம் நன்றாக ஊதியம் அளிக்கப்பட்டு, பரிசு நல்கப்பட்டவையாகும்" என்றார்.  

பாபா அப்போது கூறியதாவது, "ஓ! எனதருமை நண்பனே, ஏங்கிக் கவலையுறாதே.  நான் உடனேயே உனக்குப் பிரம்மத்தைக் காண்பிக்கிறேன்.  எனது நடைமுறைத் தொடர்புகள் அனைத்தும் ரொக்கத்திலேதான்.  கடனில் அல்ல.  எனவே பலர் என்னிடம் வந்து, செல்வம், தேக ஆரோக்கியம், ஆற்றல், புகழ், பதவி, நோய் தீர்த்தல் போன்ற இவ்வுலகப் பொருட்களையே கேட்கின்றனர்.  இங்கு வந்து பிரம்ம ஞானத்தைக் கேட்டவர் மிகவும் அரிது.  இவ்வுலகப் பொருள்களைக் கேட்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை.  ஆத்மார்த்த விஷயங்களில் ஆர்வமுடைய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகையால், உம்மைப்போன்ற மனிதர்கள் வந்து என்னைப் பிரம்மஞானம் தரச்சொல்லி வற்புறுத்தும்போது அத்தருணத்தை யான் அதிஷ்டமும், புனிதமும் வாய்ந்ததாகக் கருதுகிறேன்.  எனவே, உடனே மகிழ்ச்சியுடன் உனக்கு பிரம்மத்தின் சுற்றுச்சூழலையும், அதை அடைவதில் உள்ள சிக்கல்களையும், தெரிவித்துத் தெளிவிப்பேன்" என்றார்.

இதைப் புகன்ற பின்னர், பாபா பிரம்மத்தைப் புலப்படுத்த ஆரம்பித்தார்.  அவரை அங்கே அமரும்படி செய்து, பிறிதோர் உரையாடலிலோ, விவகாரத்திலோ அவர் ஈடுபடும்படியாகச் செய்தார்.  இவ்வாறாகத் தற்காலிகமாக அவரைத் தம் வினாவினை மறக்கச் செய்தார்.  பிறகு ஒரு பையனைக் கூப்பிட்டு, அவனை நந்து மார்வாடியிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கி வரும்படி கூறினார்.  பையன் சென்று உடனே திரும்பிவந்து, இல்லையென்றும் அவர் வீடு பூட்டி இருப்பதாயும் கூறினான்.  பின்னர் பாபா அவனை, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம் சென்று அவரிடமிருந்து குறிப்பிட்ட கைமாற்றை வாங்கிவரும்படி கூறினார்.  இம்முறையும் பையன் வெற்றிபெறாமல் திரும்பி வந்தான்.  இந்தப் பரிசோதனை இரண்டு, மூன்று முறை அதே விளைவுடன் நடத்தப்பட்டது.  

நாம் அனைவரும் அறிந்தவாறு சாயிபாபா வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இயங்கிக் கொண்டிருக்கின்ற அவதாரமாகும்.  பின்னர் அற்பத் தொகையான ஐந்து ரூபாய் அவருக்கு ஏன் தேவைப்படுகிறது?  அதனைக் கைமாற்றாகப் பெறுவதற்கு அவர் ஏன் அரிதில் முயலவேண்டும் என்று சிலர் வினவக்கூடும்.  உண்மையில் அவருக்கு இத்தொகை தேவையிருக்கவில்லை.  நந்துவும், பாலாவும் அவரவர் இடங்களில் இல்லை என்பதை பாபா நிச்சயமாக முழுமையும் தெரிந்துகொண்டே இருந்தார்.  இவ்வழிமுறையை பிரம்மத்தினை எய்த நினைக்கின்றவருக்கு ஒரு சோதனையாக மேற்கொண்டார் போலும்.  அப்பெருந்தகை கரன்சி நோட்டுக்களின் கற்றை ஒன்றைத் தம் பையில் வைத்திருந்தார்.  அங்ஙனம் அவர் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்திருப்பின், ஐந்து ரூபாயைப் பெறுவதற்காக பாபா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் அத்தருணம், அங்கே அமைதியாக உட்கார்ந்துகொண்டு, நிகழ்வனவற்றின் வெறும் மேலோட்டப் பார்வையாளராக இருந்திருக்க மாட்டார்.  பாபா தமது மொழிகளைக் காப்பாற்றுவார் என்றும், கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்றும், தேவையான பணமும் ஓர் அற்பத் தொகையே என்றும் அவர் அறிந்தே இருந்தார்.  எனினும் அவருக்கு ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வரவோ, தொகையை முன்வந்து அளிக்கவோ இயலவில்லை.  அத்தகைய மனிதர் உலகிலேயே மிகமிகப் பெரிய பொருளான பிரம்மஞானத்தை பாபாவிடமிருந்து பெற விரும்பினார்.  

பாபாவிடம் அன்பு பூண்ட வேறெந்த மனிதனும் சும்மா பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக உடனடியாக பாபாவுக்கு ஐந்து ரூபாயை அளித்திருப்பான்.  இம்மனிதரின் இயல்போ வேறானதாக இருந்தது.  அவர் எவ்விதப் பணமும் கொடுக்கவில்லை, அமைதியாகவும் அமர்ந்திருக்கவில்லை.  திரும்பிச் செல்வதற்குப் பதட்டமாக இருந்தமையால், பொறுமை இழக்கத் தொடங்கினார்.  பாபாவிடம் மன்றாடி, "ஓ! பாபா, தயவு செய்து சீக்கிரம் எனக்கு பிரம்மத்தைக் காண்பியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.  

பாபாவும், "ஓ! எனதருமை நண்பனே, நீ பிரம்மத்தைக் கண்ணுறும் பொருட்டாகவே இவ்விடத்தில் அமர்ந்துகொண்டு நான் நுணுக்க விபரமாக ஆய்ந்த வழிமுறைகளையெல்லாம் நீ புரிந்து கொள்ளவில்லையா?  சுருக்கமாக அவை இவ்வாறானதாகும்.

பிரம்மத்தினைக் கண்டுணர்வதற்கு ஒருவன் ஐந்து பொருட்களைக் கொடுக்கவேண்டும்.  அதாவது ஐந்து பொருட்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.  அவையாவன:
(1)  ஐந்து பிராணன்கள் (முக்கிய சக்திகள்)
(2)  ஐந்து உணர்வுகள் (செயலில் ஐந்து, பார்வையில் ஐந்து)
(3)  மனது
(4)  புத்தி
(5)  அஹங்காரம் 

பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதி என்னும் வழியானது கத்தி முனையில் நடப்பதனை நிகர்த்த கடினமான ஒன்றாகும்" என்று ஆரம்பித்து இப்பொருளினைப்பற்றி சாயிபாபா நீண்ட போதனை அளித்தார்.  அதனுடைய கருத்துரை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.  

பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதியைப் பெறுவதற்கு வேண்டிய முன்னீட்டான வரையறைகள் (தகுதிகள்).

எல்லோரும் தத்தமது வாழ்நாட்களிலேயே பிரம்மத்தைப் பார்க்கவோ, தெளிவாக உணரவோ மாட்டார்கள்.  அதற்காக சில தகுதிகள் முழுமையாகத் தேவைப்படுகின்றன.

1.  முமுக்ஷை - விடுதலையடைய செறிந்த விருப்பம்
தான் கட்டுப்படிருப்பதாக நினைத்து, தடைகளினின்று விடுபட வேண்டும் என்ற அந்த இலட்சியத்திற்கே ஊக்கத்துடனும், தீர்மானத்துடனும் உழைப்பவன், மற்றெதைப் பற்றியும் கவலையுறாதவன் ஆத்மீக வாழ்க்கைக்குத் தகுதியுடையவன் ஆகின்றான்.  

2 .  விரக்தி - இவ்வுலக, மறுஉலகப் பொருட்களின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி 
இகபரங்களில் தனது செய்கையால் விளையும் பொருட்கள், ஆதாயங்கள், கௌரவங்கள் இவைகளை ஒருவன் வெறுத்தாலன்றி ஆத்மீக ராஜ்ஜத்தின் எல்லைக்குள் நுழைய உரிமை இல்லை.

3.  அந்தர் முகதா - உண்முக சிந்தனை
கடவுளால் நமது உணர்வுகளனைத்தையும் புறத்தே செல்லும் போக்குடையவைகளாய் படைக்கப்பட்டிருக்கின்றன.  எனவே, மனிதன் எப்போதும் தனக்குப் புறத்தே உள்ளனவற்றையே நோக்கி அகத்தைப் பாராதிருக்கிறான்.  ஆத்மானுபூதியையும், இறவாப் புகழுடைய பெருவாழ்வையும் விரும்புபவன், தனது கூர்ந்த நோக்கை உண்முகமாகத் திருப்பி உள்ளிருக்கும் ஆத்மாவைப் பார்க்கவேண்டும்.

4.  தீவினைகள் கசடறக் கழிபடுதல் 
ஒருவன் கொடுந்தன்மைகளிருந்து மாறினாலன்றியும், தவறுகள் செய்வதை நிறுத்தினாலன்றியும், தன்னைத் தான் ஒருங்கிணைத்து அமைதியுற்றாலன்றியும், மனம் சாந்தமுற்றாலன்றியும், தத்துவ ஞானத்தின் மூலமாக மட்டும் ஆத்மானுபூதியை எய்துவிட இயலாது.

5.  ஒழுங்கான நடத்தை 
உண்மையுடைய, தவமுடைய, உள்தரிசனத்துடன் கூடிய பிரம்மச்சர்ய வாழ்க்கையை நடத்தினாலன்றி, ஒருவன் இறையனுபூதியை எய்த இயலாது.

6.  புலனுணர்வு மகிழ்ச்சி - நலம் பயப்பவை                     
பொருட்கள் இரண்டு படித்தரமானவை.  அதாவது நன்மையானவைகளும், மனமகிழ்ச்சிக்குரியவையுமாகும்.  முன்னவை ஆன்மீகச் செயல் தொடர்புடையவை.  பின்னவை இகலோகப் பொருட்களின் செயல் தொடர்புடையவை.  தம்மை ஏற்றுக்கொள்ளும்படி இவை இரண்டுமே மனிதனை அணுகுகின்றன.  ஆலோசித்து அவற்றினுள் ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  விவேகமுள்ளவன் மகிழ்வைவிட நன்மையைத் தேர்ந்தெடுக்கிறான்.  அவிவேகியோ, பேராசையாலும், பற்றாலும், மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கிறான்.

7.  மனத்தையும் மற்ற உணர்வுகளையும் அடக்கியாளுதல் 
உடம்பே தேர்,  ஆத்மாவே எஜமானர்,  புத்தியே தேரோட்டி, மனதே கடிவாளம், உணர்வுகளே குதிரைகள், உணர்விற்குரிய பொருட்களே அவைகளின் பாதைகள்.  எவனொருவனுக்கு பற்றுணர்வு மிக்கத்திறமில்லையோ, எவனுடைய மனம் கட்டுப்பாட்டுடன் தடுக்கப்பட இயலாததோ, எவனுடைய உணர்வுகள் அடக்கியாளப்பட முடியாதவைகளோ, தேரோட்டியின் குறும்புச் சூழ்ச்சியுடைய பொல்லாத குதிரையின் செயலை நிகர்ப்ப, அவன் தன் பயண இலக்கை (ஆத்மானுபூதியை) சென்றடையாமல் பிறப்பு-இறப்பு என்னும் சுழலுக்கு ஆட்படுகிறான்.

ஆனால், எவனொருவனுக்குப் பற்றுணர்வுத்திறம் உள்ளதோ, அவனது மனம் அடக்கியாளப்படுகிறதோ, எவனது உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் சாரதியின் குதிரையின் செயலை நிகர்ப்ப, சேரும் இடத்தையடைகிறான்.  அதாவது, ஆத்மானுபூதியென்ற நிலைய எய்துகிறான்.  அங்கே அவன் மீண்டும் பிறப்பதில்லை.  தனது சாரதியை (வழிகாட்டியை) போன்ற பற்றுணர்வுத் திறம் உள்ளவனும், தன்  மனத்தைக் கடிவாளத்தினால் கட்டுப்படுத்தக் கூடியவனும், பிரயாணத்தின் இலக்கான எவற்றினும் மேம்பட்ட எங்கும்நிறை விஷ்ணுவின் (கடவுள்) வாசஸ்தலத்தை எய்துகிறான்.

8.  மனத்தூய்மை
ஒருவன் தனது பணித்துறைக் கடைமைகளை மனநிறைவுடனும், பற்றின்றியும் செய்தாலொழிய மனம் தூய்மைப்படாது.  மனம் தூயதாக்கப்படாவிடில் அவன் ஆத்மானுபூதியைப் பெற இயலாது.  தூய்மையான மனம் ஒன்றினாலேயே விவேகமும் (நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பரிந்துணரும் ஆற்றல்), வைராக்கியமும் முளைத்து மேல் எழும்பி ஆத்மானுபூதிக்கு இட்டுச் செல்கின்றன.

9.  குருவின் இன்றியமையாமை     
ஆத்ம ஞானமானது, எவரொருவரும் தன்னுடைய சுய முயற்சியால் அடைவோம் என்று ஒருகாலும் நினைக்கக்கூட முடியாத அளவுக்கு, சூட்சுமமாகவும், அறிவுநிலை கடந்ததாகவும் இருக்கிறது.  ஆகவே தாமே ஆத்மானுபூதி எய்தப்பெற்ற மற்றொருவர் - அதாவது, குருவின் உதவி முழுமையாகத் தீராது வேண்டப்படுகிறது.  பெரும் உழைப்பாலும், பாடுகளாலும் பிறர் அளிக்க இயலாதவைகளை அத்தகைய குருவின் உதவியால் எளிதில் ஈட்டலாம்.  ஏனெனில், அவர், தாமே அப்பாதையில் நடந்திருப்பதால் தன் சீரடர்களை ஆன்மீக முனேற்றத்தின் ஏணியில், பட்ப்படியாக எளிதில் அழைத்துச் செல்ல முடியும்.

10.  இறுதியாக கடவுள் அனுக்ரகம் 
மிகமிக முக்கியமான பொருளாகும்.  கடவுள் எவர்மீதாவது மகிழ்ச்சியுற்றவராயின், அவருக்கு விவேகம், வைராக்கியத்தை அளித்து, இகவாழ்வென்னும் பெருங்கடலைத் தாண்டி பத்திரமாக அவரை அழைத்துச் செல்கிறார்.  "ஆத்மாவானது வேதங்களைக் கற்பதாலோ, புத்தியாலோ, மிகுதியான புலமையினாலோ பெறப்படுவதன்று.  ஆத்மா எவனைத் தேர்ந்தெடுக்கின்றதோ, அவனாலேயே அது பெறப்படுகின்றது.  அவனுக்கே, அது தனது பண்பை வெளிப்படுத்துகின்றது" என்று கடோபநிஷதம் பகர்கின்றது.

இவ்வாறாக விளக்கவுரையை முடித்ததும், பாபா, அப்பெருந்தகையிடம் திரும்பி, "நல்லதையா, உனது பையில் ஐந்து ரூபாயைப் போன்று ஐம்பது மடங்குள்ள உருவில் (ரூ. 250) பிரம்மம் (பணத்தெய்வம்) இருக்கிறது.  அவற்றைத் தயவுசெய்து வெளியே எடு" என்றார்.  அப்பெருந்தகையும் நோட்டுக்களின் கற்றையைத் தமது பையினின்று வெளியே எடுத்தார்.  அவற்றை அவர் எண்ணியபோது அவரது பெருவியப்பிற்குரிய வகையில், ஒவ்வொன்றும் பத்து ரூபாயான இருபத்தைந்து நோட்டுக்கள் இருப்பதைக் கண்டார்.  பாபாவின் எங்கும்நிறை பேரறிவைக் கண்ணுற்று, அவர் மனதுருகி, பாபாவின் ஆசீவாதங்களுக்காக ஏங்கி அவர் பாதத்தடியில் வீழ்ந்தார்.

அப்போது பாபா அவரிடம், "உனது கட்டுப்பிரம்மதைச் சுருட்டிக்கொள்க.(அதாவது கரன்சி நோட்டுக்கள்)  உன் பேராசையை முழுமையாக விட்டொழித்தாலன்றி, மெய்யான பிரம்மத்தை நீ அடையமுடியாது.  செல்வம், மக்கள், சுபிட்சம் என்னும் கவனங்களால் முழுமையுமாய் கவரப்பட்டிருக்கும் மனதை உடைய மனிதன், அவைகளுக்கான அவனது பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தாலன்றி, எங்கனம் பிரம்மத்தை அறிவதை எதிர்பார்க்கமுடியும்.  பற்றென்னும் மாயத்தோற்றம் அல்லது பணத்தாசை என்னும் இறுமாப்பு, பொறாமை என்னும் முதலைகள் நிறைந்த துன்பப் பெருநீர்ச்சுழி ஆகும்.  ஆசைகளை நீந்துவனுக்கே சுழியைக் கடத்தல் இயலுவதாம்.  பேராசையும், பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள்.  அவைகள் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.  எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே பிரம்மத்தைப்பற்றிய எண்ணத்திற்கோ, தியானத்திற்கோ இடமில்லை.  பின்னர் எங்கனம் ஒரு பேராசைக்காரன் சாந்தத்தையும், பரகதியையும் பெற்றிடமுடியும்.  பேராசைக்காரனுக்கு அமைதியில்லை, திருப்தியுமில்லை, நிலையுறிதிப்பாடுமில்லை.

எவ்வளவு பேராசை மனத்தகத்திருப்பினும் கூட, சாதனைகள் (ஆன்மீக முயற்சிகள்) அனைத்தும் பயனற்றவையேயாம்.  தனது கர்மங்களின் விளைவால் அடையவிருக்கும் பழத்தின் அல்லது பயனின் ஆசையினின்று விடுபடாமலும், அவைகளின்மேல் வெறுப்புறாமலும் உள்ள நன்றாகக் கற்றறிந்தவனுடைய ஞானமும் கூடப் பயனில்லை.  அது அவனுக்கு ஆத்மானுபூதியைப் பெறுவதில் உதவ இயலாது.  அஹங்காரம் முழுமையும் நிரம்பப்பெற்று புலனுணர்வுப் பொருட்களையே சிந்தித்துக்கொண்டு இருப்பவனுக்குக் குருவின் போதனைகள் கூடப் பயனற்றவையே.  மனத்தூய்மையே அறவே தேவைப்படுகிறது.  அஃதின்றி நமது ஆன்மீக சாதனைகள் யாவும் பயனற்ற வெளித்தோற்றமும், பகட்டு ஆரவாரமுமேயன்றிப் பிறிதில்லை.  எனவே, ஒருவனால் ஜீரணிக்க முடிந்த, கிரகிக்க இயன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வது நலமாகும்.  எனது கருவூலம் நிறைந்திருக்கிறது.  எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும்.  ஆனால் நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்பதை நான் கவனிக்க வேண்டும்.  என்னைக் கவனத்துடன் கேட்பீர்களானால், நீங்கள் உண்மையிலேயே நன்மை அடைவீர்கள்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை" என்று உரைத்தார்.

ஒரு வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கும்போது, வீட்டைச் சேர்ந்தவர்களும், அங்கிருக்க நேரிடும் மற்ற நண்பர்களும், உறவினர்களும், விருந்தாளியுடன் உபசரிக்கப்பட்டு மகிழ்வெய்துவார்கள்.  அவ்வாறே மசூதியில் அப்போது இருந்த அனைவரும், பாபாவினால் பணக்காரப் பெருந்தகைக்குப் பரிமாறப்பட்ட ஆன்மீக விருந்தில் பங்குகொண்டனர்.  பணக்காரப் பெருந்தகை உள்ளிட்ட அனைவரும், பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.  



பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள் 

தங்களது வீட்டைத் துறந்து காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்துகொண்டு, தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர்.  மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.  எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள்.  சாயிபாபா அவ்வகையைச் சார்ந்தவர் அல்ல.  அவருக்கு வீடில்லை,  மனைவி இல்லை,  மக்களில்லை, சேய்மை அண்மைய உறவினர்கள் யாருமே இல்லை.  எனினும் அவர் இவ்வுலகில் (சமூகத்தில்) வாழ்ந்தார்.  நாலைந்து வீடுகளிலிருந்து தமது உணவை அவர் இரண்டு உண்டு, எப்போதும் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்தார்.  

உலக விவகாரங்களை நடத்திக்கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம் நடக்கப் பழகவேண்டுமெனப் போதித்தார்.  கடவுள் காட்சியைப் பெற்றபின் மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது.  சாயிபாபா இவர்களிலெல்லாம் தலையாயவர்.  எனவே ஹேமத்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.

"இத்தகைய அசாதாரணமான, அறிவெல்லைகடந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் (சாயிபாபா) அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது.  குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது.  தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

  

No comments:

Post a Comment