Thursday, 31 May 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 24

•  பாபாவின் தமாஷும் வேடிக்கையும்
    - சணா  லீலை
(1 )  ஹேமத்பந்த்
(2 )  சுதாமர்
(3 )  அண்ணா சிஞ்சணீ கரும் மௌஷிபாயியும்


முன்னுரை

சத்குருவின் பாதங்களில் நம் அஹங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் வெற்றிபெறமாட்டோம். 
அஹங்காரத்தை ஒழித்தால் நமது வெற்றி உறுதியளிக்கப்படுகிறது.

சாயிபாபாவை வணங்குவதால் இகபர சௌபாக்கியம் இரண்டுமே கிடைக்கிறது.  நம் உண்மையான இயற்கையில் நிலையாக்கப்பட்டு அமைதியும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.  எனவே எவரொருவர் அவரது அவரது சுபிட்சத்தைப்பெற விரும்புகிறாரோ அவர் சாயிபாபாவின் லீலைகளையும், கதைகளையும் பக்தியுடன் கேட்கவேண்டும்.  அவைகளைத் தியானம் செய்யவேண்டும்.  இவைகளை அவர் செய்வாரேயானால் தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்.

பொதுவாக அனைவரும் தமாஷையும், வேடிக்கையையும் விரும்புவார்கள்.  ஆனால் தங்களைப் பொருளாக வைத்து தமாஷ் செய்யப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  ஆனால் பாபாவின் வழியோ விசித்திரமானது.  அவைகள் அபிநயத்துடன் சேரும்போது பொதுமக்களுக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், அறிவுரை தருவதாகவும் இருக்கின்றன.  எனவே கேலிக்கு அவர்கள் இலக்காயினும் பொருட்படுத்துவதில்லை.  ஹேமத்பந்த் தனது சொந்த அனுபவத்திலேயே கீழே குறிப்பிடுகின்றார்.



சணா லீலை

ஷீர்டியில் ஞாயிறுதோறும் சந்தை நடைபெறும்.  அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் அங்குவந்து தெருவில் பந்தல் கடைகளைப் போட்டு தங்களது பொருட்களையெல்லாம்  விற்பனை செய்வர்.  ஒவ்வொரு மாலையும் மசூதியில் ஏறக்குறைய கும்பல் வந்துவிடும்.  ஆனால் ஞாயிறு மாலையோ மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடிவிடும்.  அத்தகைய ஒரு ஞாயிற்றுக் கிழமையின்போது ஹேமத்பந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து பாபாவின் கால்களை நீவிப் பிடித்துக்கொண்டும், கடவுள் பெயரை முணுமுணுத்துக்கொண்டும் இருந்தார்.

ஷாமா பாபாவின் இடப்பக்கத்திலும் வாமன்ராவ் வலப்பக்கத்திலும் இருந்தனர்.  அப்போது பாபா சிரித்துக்கொண்டே அண்ணா சாஹேபிடம், "பாரும் உமது கோட்டின் கை மடிப்பில் தானியங்கள் இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே அவர் கோட்டு மடிப்பைத் தொட்டு அங்கு தானியங்கள் இருப்பதைக் கண்டார்.  ஹேமத்பந்த் விஷயம் என்னவென்று அறிவதற்காகத் தனது இடது முழங்கையை நீட்டினார்.  அப்போது அனைவரின் ஆச்சரியத்தி
ற்கேற்ப சில பருப்பு மணிகள் கீழே உருண்டோடி சுற்றி உட்கார்ந்திருந்தவர்களால் பொறுக்கியெடுக்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியே தமாஷிற்கான விஷயமாக ஆனது.  அங்கிருந்த அனைவரும் எங்ஙனம் தானியம் கோட்டு மடிப்புக்குள் சென்று அவ்வளவு நேரமும் அங்கேயே இருந்தன என்று யூகிக்க இயலவில்லை.  ஒருவரும் இவ்விஷயத்தில் திருப்தியான பதிலை அளிக்க இயலாத இவ்வினோதத்தைப் பற்றி அதிசயித்துக் கொண்டிருக்கையில் பாபா கூறினார்.

"இந்த ஆளுக்கு (அண்ணா சாஹேப்) தனியாகத் தின்னும் பழக்கம் இருக்கிறது.  இன்றைக்குச் சந்தை நாளாகையால் பருப்பு மணிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தார்.  அவர் பழக்கம் எனக்குத் தெரியும்.  அதற்கு இதுவே சாட்சி, இவ்விஷயத்தில் வேறென்ன ஆச்சரியமிருக்கிறது?"

ஹேமத்பந்த்: பாபா பொருட்களைத் தனியாகத் தின்று நானறியேன்.  பின்னர் என்மீது இந்தக் கெட்ட வழக்கத்தை ஏன் சுமத்துகிறீர்கள்?  ஷீர்டி சந்தையையே நான் இன்னும் பார்த்தது இல்லை.  இன்றைக்கு, சந்தைக்கு நான் போகவே இல்லை.  பின்னர் எங்ஙனம் நான் பருப்பு மணிகள் வாங்கியிருக்க முடியும்?  அவைகளை வாங்காதபோது எப்படி நான் உண்ணமுடியும்?  எனதருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் நான் ஒருபோதும் எதையும் சாப்பிடுவதில்லையே!

பாபா:  அருகிலிருப்பவர்களுக்கு நீர் கொடுப்பது உண்மைதான்.  ஆனால் ஒருவரும் அருகில் இல்லையென்றால் நீரோ, நானோ என்னசெய்யமுடியும்?  ஆனால் நீர் உண்ணும்முன் என்னை நினவு கொள்கிறீரா?  எப்போதும் நான் உம்முடன் இருக்கவில்லையா?  பின்பு நீர் உண்ணும் முன்பாக எதையேனும் எனக்கு அளிக்கிறீரா?



நீதி

இந்நிங்கழ்சியின் வாயிலாக பாபா நமக்கு என்ன போதிக்கிறார் என்பதைக் கவனத்துடன் நினைவில் வைப்போமாக!  புலன்கள் தரும் தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் அவைகளின் பலன்களை அனுபவித்துவிடுகின்றன என பாபா அறிவுறுத்தியுள்ளார்.  முதலில் பாபாவை நினை.  அதுவே உன் மனதில் நிலைகொண்டுள்ள அவருக்கு நிவேதனம் செய்யும் முறையாகிறது.  புலன்கள் முதலியன தங்கள் தேவைகளை அடையாமல் இருக்க இயலாது.  ஆனால் அவைகள் முதலில் குருவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டால் அவைகளின் மீதுள்ள பற்று இயற்கையாகவே மறைந்துவிடுகிறது.  இவ்விதமாக ஆசை, கோபம், வெறுப்பு முதலியவை பற்றிய நமது எல்லா எண்ணங்களும் முதலில் குருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரை நோக்கிச் செலுத்தும் பயி
ற்சியானது அளிக்கப்பட்டால் எல்லாவித எண்ணங்களையும் களைவதற்குக்
கடவுள் உதவிசெய்வார்.

பொருட்களை அனுபவிக்கும்முன் பாபா அருகிலோ, அல்லது அங்கிருப்பதாகவோ, நினைத்துக்கொண்டால் அப்பொருள் அவர் அனுபவிக்கத்தக்கதா அல்லவா என்ற கேள்வி உடனே எழும்.   பின் அனுபவிக்கத்தகாதவை எல்லாம் நம்மால் ஒதுக்கப்பட்டு, நமது தீய பண்புகள் அல்லது செயல்கள் நம்மைவிட்டு மறைகின்றன.  நமது பண்பும் வளர்கிறது.  பின்னர் குருவிடம் உள்ள அன்பு வளர்ந்து தூய ஞானம் துளிர்க்கிறது. 

இந்த ஞானம் வளரும்போது, 'நான்', 'எனது' என்ற எண்ணம் அழிந்து நமது அறிவு ஆன்ம உணர்வுடன் கலக்கிறது.  பின்னர் நாம் பேரின்பத்தையும், திருப்தியையும் பெறுகிறோம்.  குருவுக்கும், கடவுளுக்கும் பேதமில்லை.  அவர்களுள் பேதம் காண்பவன் கடவுளை எவ்விடத்தும் காண்பதில்லை.  எனவே பேத மனப்பான்மையை ஒழித்துக் குருவையும், கடவுளையும் ஒன்றாகக் கருதவேண்டும்.  எனவே எண்ண மாறுபாடுகளை நீக்கி குருவைக் கடவுளாக வழிபடவேண்டும்.  இவ்வாறு நமது குருவுக்குப் பணிவிடை செய்தோமானால் கடவுள் நிச்சயம் மகிழ்வடைந்து நமது மனத்தைத் தூய்மைப்படுத்தி நம்மை நாமே அறியும் உணர்வையளிக்கிறார்.  இரத்தினச் சுருக்கமாக, முதலில் குருவை நினைக்காமல் நாம் எப்பொருட்களையும் புலன்கள் வழி அனுபவிக்கக்கூடாது.

இவ்விதமாகப் பயி
ற்சியளிக்கப்பட்டால், நம் மனம் பாபாவால் நிறைந்து, பாபாவின் தியானம் விரைவில் வளரும்.  பாபாவின் சகுணரூபம் எப்போதும் நம் கண்முன் இருக்கும்.  பிறகு பக்தி, பற்றின்மை, முக்தி யாவும் நம்முடையதேயாம்.  இங்ஙனமாக நமது மனக்கண்ணில் பாபாவின் ரூபம் நிலைப்படுத்தப்பட்டால் நாம் பசி - தாகத்தையும், இச்சம்சார வாழ்க்கையையும் மறைந்துவிடுகிறோம்.  உலக போகங்களில் நமக்கிருக்கும் ஞாபகம் மறைந்துவிடும்.  நமது மனம் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையும்.



சுதாமரின் கதை

மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமத்பந்த் அதே மாதிரியான சுதாமரின் கதையை நினைவுகூர்கிறார்.  
அதே தத்துவத்தை இக்கதையும் விளக்குவதால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. 

கிருஷ்ணரும், அவரது அண்ணனான பலராமரும் சுதாமர் என்ற தோழருடன் அவர்களது குரு சாந்தீபனி முனிவரின் ஆச்சிரமத்தில் வசித்து வந்தனர்.  ஒருமுறை 
கிருஷ்ணரும், பலராமரும் காட்டிற்கு விறகு கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டனர்.  பின்னர் சாந்தீபனியின் மனைவி அதேபோல் சுதாமரையும் மூவருக்குமான கடலைப் பருப்புகளுடன் காட்டுக்கு அனுப்பினாள். 

கிருஷ்ணர், சுதாமரைக் காட்டிடையே கண்டபோது அவரிடம், "தாதா, நான் தாகமாயிருப்பதால் எனக்கு தண்ணீர் வேண்டும்" என்றார்.  அதற்கு சுதாமர் "வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது.  சிறிதுநேரம் இளைப்பாறுவது நல்லது" என்றார்.  அவர் தன்னிடம் கடலை இருப்பதாகவோ, அதைச் சிறிது அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றோ கூறவில்லை.  கிருஷ்ணர் களைப்பாயிருந்தமையால் சுதாமரின் மடியில் தலைவைத்துப் படுத்துக் குறட்டைவிட்டார்.  இதைக்கண்டு சுதாமர் தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத் தொடங்கினார்.  கிருஷ்ணர் திடீரெனக் கேட்டார், "தாதா என்ன சாப்பிடுகிறாய்? சப்தம் எங்கிருந்து வருகிறது?"

அதற்கு சுதாமர், "சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?  நான் குளிரால் நடுங்கிக்கொண்டு இருக்கிறேன்.  எனது பற்கள் தாளம் அடித்துக்கொண்டிருக்கின்றன.  விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் கூட என்னால் திருத்தமாகப் பராயணம் செய்யமுடியவில்லை" என்றார்.

இதைக்கேட்ட சர்வவியாபியான கிருஷ்ணர், "மற்றவர்களது பொருட்களை உண்ணும் ஒரு மனிதனைக் கனவில் கண்டேன், அதைப்பற்றிக் கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில், 'என்ன? மண்ணா தின்பதற்கு உள்ளது!' எனக் கேட்டான்.  அதற்கு மற்றொருவன் 'அது அங்ஙனமே இருக்கட்டும்' என்றான்.  தாதா இது ஒரு கனவுதான்.  நீ எதையும் எனக்கில்லாமல் உண்ணமாட்டாய் என்று எனக்குத் தெரியும்.  ஆயினும் கனவில் கண்ட ஞாபகத்தில் நீ என்ன உண்கிறாய் என்று நான் கேட்டேன்?"  என்றார்.

சர்வவியாபியான கிருஷ்ணரைப் பற்றியும், அவர்தம் லீலையைப் பற்றியும், சுதாமர் எள்ளளவேனும் அறிந்திருப்பாராயின் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கமாட்டார்.  எனவே தன் செய்கைக்காக அவர் வருந்த வேண்டியதாயிற்று.  அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரானபோதும் தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில் கழிக்க வேண்டியதாயிற்று.

ஆனால் பின்னர் அவர் கிருஷ்ணருக்குத் தன் மனைவியின் சொந்த உழைப்பால் ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன் நகரத்தை அளித்தார்.  மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணாது தனியாகத் தின்போர் இக்கதையை நினைவில் வைக்கவேண்டும்.  கடவுளுக்கு முதலில் சமர்ப்பித்து அவைகள் அவரால் திருப்தியடையப்பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்ருதியும் பகர்கின்றது.  பாபாவும் நமக்கு அதையே அவர்தம் ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில் கற்பித்திருக்கிறார்.



அண்ணா சிஞ்சணீ கரும் மௌஷிபாயியும்

ஹேமத்பந்த் இப்போது சமாதானம் நிலைநாட்டுவோரின் பாகத்தை பாபா ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார்.  தாமோதர் கனஷ்யாம் பாபரே என அழைக்கப்பட்ட அண்ணா
சிஞ்சணீ கர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார்.  அவர் எளிமையானவர், முரடர், நேர்மையானவர்.  அவர் எவரையும் இலட்சியம் செய்யமாட்டார்.  எப்போதும் கரவின்றிப் பேசி எல்லாவற்றையும் கைமேல் காசிலேயே நடத்தினார்.  வெளிப்படையாகக் கடுமையாகவும், வசப்படாதவராயும் இருந்தபோதும் அவர் நட்பண்புடையவராயும், கள்ளமின்றியுமிருந்தார்.  எனவே சாயிபாபா அவரை நேசித்தார்*.  (* இவர் பின்னர் தனது சொத்துக்கள் யாவற்றையும் ஷீர்டி சாயிபாபா சமஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்.)

ஒருநாள், ஒவ்வொருவரும் ஒரு வழியில் சேவை செய்வதைப்போன்று, அண்ணாவும் தலைகுனிந்து நின்றுகொண்டு கைப்பிடியில் இருந்து இடது கைக்கு நீவிக்கொண்டிருந்தார்.  அம்மா என்று பாபாவாலும் மௌஷிபாயி என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழ விதவையான வேணுபாஜி கௌஜல்கி வலது புறத்தில் அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள்.  மௌஷிபாயி தூய உள்ளத்துடன் கூடிய முதியவள்.  அவள் தன் இரு கைவிரல்களையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாக பதித்துப் பிசைந்தாள். 

அடிவயிறே தட்டையாகி விடும்படியான வேகத்துடன் சேவை செய்துகொண்டிருந்தாள்.  பாபா இப்படியும் அப்படியும் புரண்டுகொண்டிருந்தார்.  மற்றொருபுறமிருந்த அண்ணா நிதானத்துடன் இருந்தார்.  ஆனால்
மௌஷிபாயின் அசைவுகளுடன் அவளது முகமும் அசைந்தது.  ஒருதரம் அவளது முகம் அண்ணாவின் முகத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது.  வேடிக்கையான பண்புடைய அவள், "ஓ! இந்த அண்ணா ஒரு கெட்டவன்.  அவன் என்னை முத்தமிட விரும்புகிறான்.  தலை நரைக்கும் வயதாகியும் முத்தமிடுவதற்கு அவன் வெட்கப்படவில்லை" என்றாள்.  இச்சொற்கள் அண்ணாவைக் கொபாவேசமடையச் செய்தன.  முஷ்டியை மடக்கிவிட்டுக்கொண்டு அவர் "நான் ஒரு கெட்ட கிழவன் என்றா கூறுகிறாய்?  நான் அவ்வளவு முட்டாளா?  நீயே சண்டையை ஆரம்பித்தாய், என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர்களுக்கிடையே நடைபெறும் விஷயங்களை ரசித்துக்கொண்டிருந்தனர்.  அவர்கள் இருவரையுமே பாபா சமமாக நேசித்தார்.  சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார்.  அன்புடன் அவர் கூறினார்.  "அண்ணா, ஏன் அனாவசியமாக இக்கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்?  தாய் முத்தமிடும்போது உள்ள நெறியின்மை அல்லது தீங்குதான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை?" என்றார்.  பாபாவின் இம்மொழிகளைக் கெட்ட இருவரும் திருப்தியடைந்தனர்.  எல்லோரும் மன மகிழ்வுடன் தங்கள் உளம் நிறைவடையும்வரை சிரித்தனர்.



பாபாவின் குணாதிசயம் - பக்தர்களின்பால் அவரின் சார்பு

பாபாவின் அடியவர்கள் அவரர்வர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச் சேவைசெய்ய அவர் அனுமதித்திருந்தார்.  இதில் பிறர் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.  உதாரணமாக இதே மௌஷிபாஜி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாபாவின் அடிவயிற்றைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  அவள் உபயோகித்த கடுமையையும், வேகத்தையும் கண்டு மற்ற அடியவர்களெல்லாம் மனந்தளர்ந்து கவலை கொண்டவரானார்கள்.  அவர்கள் "ஓ! அம்மா இன்னும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்படு.  அல்லாவிடில் பாபாவின் இரத்தக்குழாய், நரம்பு இவைளை உடைத்துவிடுவாய்" என்று அவளிடம் கூறினார்கள்.
 

இதன் பேரில் பாபா உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தார்.  தமது சட்காவைத் தரையில் ஓங்கி அடித்தார்.  அவர் கோபாவேசம் அடைந்தார்.  அவரது கண்கள் நெருப்புத் துண்டம் போலாயின.  ஒருவருக்கும் அவர் முன் நிற்கவோ, பேசவோ தைரியம் இல்லை.  பின்னர் அவர் சட்காவின் ஒரு முனையைத் தன் இரு கைகளாலும் எடுத்துக்கொண்டு, வயிற்றிலுள்ள தொப்புளில் குச்சியின் ஒரு நுனியை அமுக்கினார்.  மற்றொரு நுனியைக் கம்பத்தில் பொருத்தவைத்து அழுத்த இரண்டு - மூன்றடி நாலமுள்ள சட்கா முழுவதும் அடிவயிற்றுக்குள் சென்றுவிட்ட மாதிரியாகத் தோன்றியது. 

இன்னும் சிறிது நேரத்தில் அடிவயிறு கிழிந்துவிடுமென்று மக்கள் பயந்தனர்.  தூண் உறுதியானது.  அசையாதது.  பாபா அதனருகில் மிகமிக நெருக்கமாகப் போகத்தொடங்கித் தூணைப் பலமாக அணைத்தார்.  எந்த வினாடியிலும் வயிறுகிழியுமென எதிர்பார்க்கப்பட்டது.  அவர்கள் எல்லாம் பீதியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தாலும், வியப்பாலும் ஊமையாகி நின்றனர்.  பாபா தமது அடியவனுக்காகவே இவ்விதம் கஷ்டப்பட்டார்.  மற்ற அடியவர்கள் மௌஷிபாஜிடம் அவளது சேவையில் இன்னும் நிதானமாக இருக்கும்படியும் பாபாவுக்கு எவ்வித வலியையோ, தொல்லையையோ உண்டாக்கவேண்டாம் என்றும் குறிக்கவே விரும்பினர்.  நல்லெண்ணத்துடனே அவர்கள் இதைச் செய்தனர்.  ஆனால் பாபா இதைக்கூடப் பொறுக்கவில்லை.  தங்களது நல்லெண்ண முயற்சியினால் பெருந்துன்பம் விளைவிக்கும் இத்திடீர் விளைவைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.  காத்திருந்து பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்யமுடியவில்லை.

அதிஷ்டவசமாக பாபாவின் ஆவேசம் சீக்கிரம் குளிர்ந்தது.  அவர் குச்சியை விட்டுவிட்டுத் தன் இடத்தினுள் வந்து அமர்ந்தார்.  இதிலிருந்து அடியவர்கள் மற்றவர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பியவண்ணமே பாபாவுக்கு அவர்கள் சேவைசெய்ய விட்டுவிடவேண்டுமென்கிற பாடத்தைத் தெரிந்துகொண்டனர்.  ஏனெனில் அவர்கள் செய்யும் சேவைகளின் மதிப்பையும், தகுதியையும் பாபாவே அளக்க வல்லமையுடையவராய் இருக்கிறார்.


ஸ்ரீ சாயியை பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
  

Thursday, 24 May 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 23

•  யோகமும், வெங்காயமும் 
•  பாம்புக் கடியினின்று ஷாமா
குணமாக்கப்படுதல் 
•  வாந்தி பேதியின் (காலரா) கட்டளைகள் மீறப்பட்டன 
•  குரு பக்திக்குக் கடுமையான சோதனை 



முன்னுரை 

உண்மையிலேயே இந்த ஜீவன் (மனித ஆத்மா) சத்துவம், ராஜஸம் என்ற மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது.  ஆனால் மனிதன் மாயையால் மறைக்கப்பட்டுத் தனது இயற்பண்பான சச்சிதானந்தப் பெருநிலையை மறந்து தானே செய்விப்பவனும், அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறாக முடிவற்ற இடர்ப்பாடுகளில் தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.  விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்குப் புலப்படவில்லை.

குருவின் பாதங்களில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே விடுதலையடைவதற்கான ஒரே வழி.  சாயிபிரபு என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் அல்லது நடிகர், தம் அடியவர்களை மகிழ்வித்தார்.  அவர்களைத் தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்துகொண்டார்.

முன்னரே குறிப்பிட்ட காரணங்களால் சாயிபாபாவை நாம் ஒரு அவதாரமாகவே கருதுகிறோம்.  ஆனால் தான் கடவுளின் பணிவுள்ள ஒரு சேவகன் என்றே அவர் எப்போதும் கூறினார்.  அவர் தாமே ஓர் அவதாரமானபோதும்கூட எங்ஙனம் திருப்தியான வகையில் மக்கள் நடந்துகொள்ளவேண்டும், வாழ்க்கையில் தாங்கள் தங்கள், பணித்துறையிடத்தி
ற்கேற்ற (வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப) கடமைகளைச் செய்யவேண்டும் என்று வழி காண்பித்தார்.

அவர் ஒருபோதும் எந்த வகையிலும் மற்றவர்களைப் போட்டியிட்டு மேம்படும் முயற்சிகளைக் கொண்டதில்லை அல்லது தமக்காக ஏதேனும் செய்யும்படி அவர்களைக் கேட்டதில்லை.  இவ்வுலகின் அசையும், அசையாப் பொருட்கள் யாவற்றிலும் கடவுளைக் கண்ட அவருக்குப் பணிவுடைமையே மிகவும் பொருத்தமானதொன்றாகும்.  ஒருவரையும் அவர் புறக்கணித்ததில்லை அல்லது மதிக்காமல் இருந்ததில்லை.  நாராயணனை (கடவுளை) சர்வ ஜீவராசிகளிடமும் கண்டார்.  'நான் கடவுள்' என்று ஒருபோதும் அவர் சொன்னதில்லை.  ஆனால் தான் ஒரு பணிவுள்ள சேவகன் என்றும், எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார்.  'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்று எப்போதும் உச்சரிப்பார்.

பல்வேறு வகையான முனிவர்களையெல்லாம் நமக்குத் தெரியாது.  எங்ஙனம் அவர்கள் நடந்து கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதெல்லாம் நாமறியோம்.  அறியாமையிலுள்ள, பிணிக்கப்பட்ட ஆன்மாக்களை விடுவிப்பதற்காகக் கடவுள் அருளால் அவர்கள் இவ்வுலகத்தில் தங்களை அவதரித்துக்கொள்கிறார்கள்.
 
 
நல்வினைகளின் சேமிப்பு ஏதேனும் நமது கணக்கில் இருக்குமானால் முனிவர்களின் கதைகள் அல்லது லீலைகளைக் கேட்பதற்கு நமக்கு ஓர் ஆர்வம் அல்லது சுவாரசியம் ஏற்படுகிறது.  அல்லாவிடில் கேட்பதற்கு ஆர்வம் எழாது.  இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைகளுக்கு இப்போது திரும்புவோம்.

 

யோகமும் - வெங்காயமும்
 
நானா சாஹேப் சாந்தோர்கருடன் ஒருமுறை ஷீர்டிக்கு ஒரு யோகப் பயிற்சியாளர் (யோகா சாதகர்) வரும்படி நேரிட்டது.  பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் உள்ளிட்ட எல்லா யோகப் புத்தகங்களையும் அவர் கற்றிருந்தார்.  எனினும் யோகத்தில் நடைமுறை அனுபவம் ஏதும் அவருக்கு இல்லை.  தமது மனதை ஒருமுகப்படுத்தி குவிக்கவும், சமாதி நிலையை ஒரு சிறிதுநேரம் எய்தவும் அவரால் முடியவில்லை.  சாயிபாபா தம்பால் மகிழ்ச்சி அடைந்தாரென்றால், நீண்டநேரம் சமாதிநிலையை எய்துவதற்கு அவர் தமக்கு வழிகாட்டுவார் என்று நினைத்தார்.  உள்ளத்தில் இக்குறிக்கோளுடன் அவர் ஷீர்டிக்கு வந்தார். 

மசூதிக்கு அவர் சென்றபோது சாயிபாபா ரொட்டியை வெங்காயத்துடன் சாப்பிட்டுகொண்டிருப்பதைக் கண்டார்.  இதைக் கண்ணுற்ற அவருக்கு மனதில் ஓர் எண்ணம் எழுந்தது.  "மட்கிப்போன ரொட்டியுடன் பச்சை வெங்காயத்தை உண்டுகொண்டிருக்கும் இம்மனிதர் எங்ஙனம் எனது தொல்லைகளுக்கு விடைகண்டு எனக்கு உதவிசெயயமுடியும்?!"    

சாயிபாபா அவரது உள்ளத்தைப் படித்தறிந்து நானா சாஹேபை நோக்கிக் கூறினார், "ஓ! நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ணவேண்டும். மற்ற ஒருவரும் அங்ஙனம் செய்யக்கூடாது".

இக்குறிப்பைக் கேட்ட யோகி ஆச்சரியத்தால் செயலிழந்தார்.  பின்னர் பூரணசரணாகதியுடன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  தூய, திறந்த உள்ளத்துடன் தனது தொல்லைகளைக்  கேட்டு பாபாவிடமிருந்து அவைகளுக்கு விடையும் பெற்றார்.  இவ்வாறாகத் திருப்தியும், மகிழ்ச்சியும் அடையப்பெற்று பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் அவர் ஷீர்டியை விட்டுச்சென்றார்.



பாம்புக் கடியினின்று குணமாகுதல்

இக்கதையைத் தொடங்கும் முன்பாக ஹேமத்பந்த், ஜீவனைக் கிளிக்கு மிக நன்றாக ஒப்பிடலாம் என்றும், ஒன்று உடம்பினுள்ளும் மற்றொன்று கூண்டினுள்ளுமாக இரண்டுமே கட்டுண்டிருக்கின்றன என்றும், கட்டுண்டுகிடக்கும் அவைகளது தற்போதைய நிலையே அவைகளுக்கு ஏற்ற நன்மையானது என்று அவைகள் கருதுவதாகவும் கூறுகிறார்.  உதவியாளர் ஒருவர் அதாவது குரு வரும்போது கடவுளருளால் அவைகளின் கண்ணைத் திறந்து, அவைகளின் கட்டுக்களினின்று அவைகளை விடுவிக்கும்போது மட்டுமே அவைகளின் கண்கள், இன்னும் பெரியதும் சிறந்ததுமான வாழ்க்கைக்குத் திறந்துவிடப்படுகிறது.  இத்துடன் அவர்கள் முன்னைய வரையறையை உடைய வாழ்க்கையை ஒப்பிட்டால் அது சூன்யமே ஆகும்.
 

கடந்த அத்தியாயத்தில் மிரீகருக்கு நேரிடவிருந்த பேராபத்தினை எங்ஙனம் பாபா அறிந்திருந்தார் என்பதையும், அதிலிருந்து எங்ஙனம் அவரைக் காப்பாற்றினார் என்பதையும் கண்டோம்.  இதைவிடச் சிறப்பான கதை ஒன்றினை இப்போது வாசகர்கள் கேட்பார்களாக!

ஒருமுறை ஷாமாவை நச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது.  அவரது கையிலுள்ள சுண்டு விரலில் கடிபட்டு விஷம் உடம்பு முழுக்கப் பரவத்தொடங்கியது.  ஷாமாவும் தாம் இறந்துவிடுவோமேன்று என்று எண்ணுமளவிற்கு வலியும் அவ்வளவு தீவிரமாக இருந்தது.  அந்த மாதியான விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி அனுப்பப்படும் விட்டோபா கடவுளிடம் அவரது நண்பர்கள் அவரை எடுத்துச் செல்ல விரும்பினர்.

ஆனால் ஷாமா, மசூதிக்குத் தமது விட்டோபாவிடம் (சாயிபாபா) ஓடிவந்தார்.  அவரைப் பார்த்ததும், பாபா திட்டவும், கண்டிக்கவும் தொடங்கினார்.  அவர் மூர்க்கமடைந்து "ஓ! இழிந்த பதுர்த்யா! (பூசாரியே) மேலே ஏறாதே.  அங்ஙனம் ஏறினாயோ ஜாக்கிரதை" என்று கர்ஜித்தார்.  பின்பு "போ, அப்பாலே போ! கீழிறங்கு" என்றார்.  இங்ஙனம் பாபா சீற்றத்தினால் சிவந்து இருப்பதைப் பார்த்த ஷாமா பெரிதும் குழப்பமடைந்து ஏமாற்றமடைந்தார்.  அவர் மசூதியே தமது வீடு என்றும், சாயிபாபாவே தமது ஒரே அடைக்கலம் என்றும் எண்ணியிருந்தார்.  ஆனால் இங்ஙனம் விரப்பட்டால் அவர் எங்கே செல்வார்?  உயிர் வாழ்வதின் நம்பிக்கை அனைத்தையும் இழந்து அமைதியாய் இருந்தார்.  சிறிது நேரத்திற்குப் பின் பாபா சாதாரணமாகவும், அமைதியாகவும் ஆனார்.  அப்போது ஷாமா மேலே சென்று அவர் அருகில் அமர்ந்தார்.

பின்னர் பாபா அவரிடம், "பயப்படாதே, எள்ளளவும் கவலைப்படாதே!  கருணையுள்ள பக்கிரி உன்னைக் காப்பாற்றுவார்.  போய் வீட்டில் அமைதியாக அமர்ந்திரு, வெளியில் செல்லாதே.  என்னை நம்பு.  பயப்படாமல் இரு, கவலைப்படாதே" என்று கூறினார்.  பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.  அதன் பின்னர் ஷாமா எதை விரும்புகிறாரோ, அதை உண்ணவேண்டுமென்றும், வீட்டில் நடையுடையாக இருக்கவேண்டும் என்றும், ஆனால் படுத்து உறங்கவே கூடாது என்றும் குறிப்புக்களுடன் தாத்யா பாடீலையும், காகா சாஹேப் தீஷித்தையும் உடனேயே பாபா அனுப்பினார்.  இவ்வுரைகள் பின்பற்றப்பட்டன என்றும், சிறிது நேரத்தில் ஷாமா குணப்படுத்தப்பட்டார் என்றும் கூறவும் வேண்டுமா!

இது சம்பந்தமாக நினைவில் வைக்கவேண்டியது ஒன்றுதான்.  பாபாவின் மொழிகள் ( போ, அப்பாலே ஓடு!, 'கீழிறங்கு' என்னும் ஐந்தெழுத்து மந்திரம்) மேலெழுந்தவாரியாக அது காப்பட்டாற்போல் ஷாமாவை நோக்கிக் கூறப்பட்டதல்ல.  அவை ஷாமாவின் உடலினுள் புகுந்து இரத்த ஓட்டத்துடன் கலக்க வேண்டாமென்று பாம்புக்கும், அதன் விஷத்துக்கும் இடப்பட்ட நேரடிக் கட்டளைகளாகும்.  மந்திர சாஸ்திரத்தில், நல்லறிவுத் திறமுடைய பிறர்களைப் போன்று எவ்வித மந்திர உச்சாடனமிடப்பட்ட அரிசியையோ, தண்ணீரையோ உபயோகிக்க வேண்டியிருந்ததில்லை.  அவர்தம் சொற்களே ஷாமாவின் உயிரைக் காப்பதில் மிகச்சிறந்த பயனுள்ளனவாய் இருந்தன.

இக்கதைகளையும் அதைப் போன்றவற்றையும் கேட்கும் எவனும் சாயிபாபாவின் பாதங்களில் உறுதியான நம்பிக்கை அடையப் பெறுவான்.  மாயை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு பாபாவின் பாதங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதே ஒரே வழியாகும்.



காலாரா வியாதி

ஒருமுறை ஷீர்டியில் காலரா நச்சுத்தன்மை மிகுந்து தாண்டவமாடியது.  ஊர்க்காரர்கள் மிகவும் பயந்து புறத்தேயுள்ள மக்கள் தொடர்பையெல்லாம் நிறுத்திக்கொண்டனர்.  பஞ்சாயத்தார் கூடி தொத்துவியாதி தடுப்புக்கும், ஒழிப்பிற்கும் இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர்.  அவைகளாவன:
1.  எவ்வித எரிபொருள் (விறகு) வண்டியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது.
2.  அங்கு ஒரு ஆடு கூட கொல்லப்படக்கூடாது.

எவரேனும், இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் கிராமப் பஞ்சாயத்தார்களாலும், அதிகாரிகளாலும் அபராதம் விதிக்கப்படுவர்.  இவைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று பாபா அறிந்தவராதலால் காலராக் கட்டளைகளை சிறிதளவும் இலட்சியம் செய்யவில்லை.  இக்கட்டளைகள் அமுலில் இருக்கும்போது ஒரு எரிபொருள் வண்டி அங்கு வந்து கிராமத்துக்குள் நுழைய விரும்பியது.  கிராமத்தில் எரிபொருள் பஞ்சம் இருந்தது எல்லோருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் மக்கள் எரிபொருள் வண்டியை விரட்ட ஆரம்பித்தனர்.

பாபாவுக்கு இவைகளெல்லாம் தெரியவந்தன.  அவர் அவ்விடத்திற்குச் சென்று வண்டிக்காரனை மசூதிக்கு ஓட்டிவரும்படி கூறினார்.  பாபாவின் செய்கைக்காக ஒருவருக்கும் குரல் எழுப்பத் தைரியம் இல்லை.  தமது துனிக்கு அவருக்கு எரிபொருள் தேவைப்பட்டது.  எனவே அதை அவர் வாங்கினார்.  அக்னிஹோத்ரி தனது புனித நெருப்பை தன் வாழ்நாள் முழுவதும் எரியவிடுவது போன்றே பாபா தமது துனியை இரவும், பகலும் எரியவிட்டார்.  இதற்காக அவர் எப்போதும் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்தார்.  பாபாவின்  பாபாவின் வீடான மசூதி அனைவருக்கும் தடைகளற்றும், திறந்து வைக்கப்பட்டும் இருந்தது.  அதற்குப் பூட்டோ, சாவியோ கிடையாது.  அங்கிருந்து சில ஏழை மக்கள் தங்கள் உபயோகத்திற்காக விறகை எடுத்துக்கொண்டு சென்றனர்.

பாபா இதைக்கண்டு முணுமுணுக்கவில்லை.  பிரபஞ்சமனைத்திலும் கடவுள் வியாபித்திருந்ததை அவர் கண்டார்.  எனவே எவருடனும் அவர் பகையோ, கேட்ட எண்ணமோ கொண்டதில்லை.  முழுவதுமாகத் துறந்தவராயினும் மக்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருக்கும் பொருட்டு அவர் இல்லறத்தார் போன்று வாழ்ந்தார்.



குருபக்திக்குக் கடுமையான சோதனை
 
இரண்டாவது காலராக் கட்டளை பாபாவினால் எங்ஙனம் செயல்படுத்தப்பட்டது என்பதைத் தற்போது காண்போம். 
கட்டளை அமுலில் இருக்கையில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டுவந்தார்.  அது பலவீனமாயும், மூப்புடனும் இறக்கபோகும் தருவாயிலும் இருந்தது.  இத்தருணத்தில் மாலிகானைச் சேர்ந்த ஃபக்கீர் பீர் முஹமது என்ற படேபாபா அருகில் இருந்தார். 

சாயிபாபா அவரை அதை ஒரே வெட்டில் வெட்டிப் பலியிட்டுச் சமர்ப்பிக்கும்படி கேட்டார்.  இந்த படேபாபா என்பவர் சாயி பாபாவால் மிகவும் மதிக்கப்பட்டவர்.  சாயிபாபாவின் வலதுபுறத்திலேயே அவர் எப்போதும் அமர்ந்திருந்தார்.  ஹூக்காவை அவர் முதலில் குடித்தபின்பு அது பாபாவுக்கும் பிறருக்கும் அளிக்கப்படும்.  மத்தியான
உணவுவேளையின் போது கறிவகைகள் எல்லாம் பரிமாறப்பட்டபின்பு பாபா, படேபாபாவை மரியாதையுடன் கூப்பிட்டுத் தமது இடப்பக்கத்தில் அமர்த்திய பின்பு எல்லோரும் உண்டனர்.  தட்ஷிணையாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்தும் பாபா அவருக்கு தினசரி ரூ.50 அளித்து வந்தார்.  அவர் போகும்போது பாபாவும் நூறு அடி தூரம்வரை அவருடன் கூடச் செல்வார்.  பாபாவிடம் அவருக்கிருந்த அந்தஸ்து அத்தகையது. 

ஆட்டை வெட்டும்படி பாபா அவரிடம் கேட்டபோது அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.  "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்படவேண்டும்?" என்று அவர் கேட்டார்.  பின்னர் பாபா ஷாமாவை அதனைக்
கொல்லும்படி கேட்டுக்கொண்டார்.  ராதாகிருஷ்ணமாயிடம் சென்று கத்தி ஒன்றை அவளிடமிருந்து வாங்கிவந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார்.  கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த ராதாகிருஷ்ணமாயி அதைத் திருப்பி எடுத்துக்கொண்டாள்.

பின்னர் ஷாமா மற்றொரு கத்தியைப் பெறுவதற்காகச் சென்று உடனே திரும்பிவராமல் காகா சாஹேப் தீஷித்தின் வாதாவில் தங்கிவிட்டார்.  அப்போது காகா சாஹேபின் முறை வந்தது.  அவர் 'நல்ல தங்கம்' தான் என்பதில் ஐயமில்லை என்றாலும் பரீட்சிக்கப்படவேண்டும்.  கத்தியை வாங்கி வந்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார்.  அவர் சாதேவின் வாதாவுக்குச் சென்று ஒரு கத்தியுடன் திரும்பிவந்தார்.
  பாபா ஏவியதும் கொல்லுவதற்குத் தயாராக அவர் இருந்தார்.  தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்குத் தமது வாழ்க்கையில் கொலையைப் பற்றியே தெரியாது.  ஹிம்சைச் செயலுக்கு முற்றும் அவர் எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டார்.    

முஹமதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், இந்த தூய பிராமணர் அதைக் கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  தன் வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு கையைக் கத்தியுடன் தூக்கிக்கொண்டு பாபாவின் முடிவான அனுமதிக் குறிப்புக்காக அவரைப் பார்த்தார்.  பாபா "எதை நினைத்துக் கொண்டு இருக்கிறாய், உம்! வெட்டு" என்றார். 

பின்னர் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா, "நிறுத்து, நீ எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்!  பிராமணனாயிருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார்.  காகா சாஹேப் கீழ்ப்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார்.  "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும்.  எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது.  எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம்.  தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.  இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.  கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை.  பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை.  ஆனால் குருவின் கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்
றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."

பின்னர் பாபா, காகா சாஹேபிடம் தாமே பலியிடுதலையும், வெட்டும் வேலையையும் செய்துவிடுவதாகக் கூறினார்.  ஃபக்கீர்கள் அமரும் தகியா என்னும் இடத்தில் ஆட்டை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.  பின்னர் ஆடு அவ்விடத்துக்குக் கொண்டுசெல்லபடுகையில் வழியிலேயே இறந்து விழுந்தது.

ஹேமத்பந்த் அடியவர்களைப் பாகுபடுத்துவதுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.  மூன்று விதமானவர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
     (1)  முதல் தரம் அல்லது சிறந்தவர்கள்
     (2)  இரண்டாம் தரம் அல்லது நடுவானவர்கள்
     (3)  மூன்றாம் தரம் அல்லது சாதாரணமானவர்கள் 


முதல் தரமானவர்கள் குரு என்ன விரும்புகிறார் என்பதை ஊகித்தறிந்து அதை உடனே நிறைவேற்றி அவர்களிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல் அவர்களுக்குச் சேவை செய்கிறார்கள். 

இரண்டாம் தரமானவர்கள் தங்களது குருவின் கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும் தாமதமின்றிக் கீழ்ப்படிகிறார்கள்.

மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுக்கொண்டும், ஒவ்வொரு படியிலும் தவறு செய்துகொண்டும் இருக்கிறார்கள். 

அறிவுக்கூர்மையைப் பின்னணியாகக்கொண்ட உறுதியான நம்பிக்கையைச் சீடர்கள் பெற்றிருக்க வேண்டும்.  பொறுமையும் இவைகளுடன் சேருமானால் ஆன்மீக இலட்சியம் தொலைவில் இல்லை.  மூச்சுக் கட்டுப்பாடு (உள் மூச்சு - வெளி மூச்சு) அல்லது ஹடயோகம் அல்லது பிற கடினப் பயிற்ச்சிகள் தேவையே இல்லை.  மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களை அடியவர்கள் பெறுவார்களேயானால் இன்னும் அதிகமான செயல் திட்டங்களுக்கு அவர்கள் தயாராகின்றார்கள்.  பின்னர் குருமார்கள் தோன்றி ஆன்மீக பாதையின் முழுநிறைவுக்கு அவர்களை வழிநடத்துகிறார்கள்.


அடுத்த அத்தியாயத்தில் நாம் பாபாவின் விறுவிறுப்பான நகைச்சுவையையும், தமாஷையும் காண்போம்.      


ஸ்ரீ சாயியை பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 
   

Thursday, 10 May 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 22

 பாம்புக் கடியிலிருந்து மீட்புதவி
(1)  பாலா சாஹேப்  மிரீகர் 
(2)  பாபு சாஹேப் பூட்டி 
(3)  அமீர் ஷக்கர்
(4)  ஹேமத்பந்த்
 பாம்புகளைக் கொல்வதைப் பற்றி பாபாவின் கருத்து  



முன்னுரை 

பாபாவை எங்ஙனம் தியானிப்பது?  கடவுளின் தன்மையையோ, ரூபத்தையோ ஆழ்ந்தறிய யாராலும் இயலாது.  வேதங்களும், ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனும்கூட அதை முழுமையாக விவரிக்க இயலவில்லை.  கடவுளின் ரூபத்தைத் தரிசிக்கவும், அறியவும் அடியவர்களால் மட்டுமே இயலும்.  ஏனெனில் அவர்தம் பாதங்கள் மட்டுமே அவர்களுடைய மகிழ்ச்சிக்குரிய ஒரே வழி என்பதை அவர்கள் அறிவார்கள்.  வாழ்க்கையின் உச்ச உயர் இலட்சியத்தை அடைய அவர்தம் பாதங்களைத் தியானிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெவ்வித வழியும் தெரியாது.  ஹேமத்பந்த் தியானத்திற்கும், பக்திக்கும் ஒரு எளிய வழியைப் பின்வருமாறு தெரியப்படுத்துகிறார்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகக் கழிவுறுவதைப் போன்றே சந்திரனது ஒளியும், அதே நுட்ப அளவில் தேய்வடைகிறது.  அமாவாசையன்று நாம் சந்திரனையே பார்க்கமுடிவதில்லை.  அதனது ஒளியையும் பெறுவது இல்லை.  எனவே வளர்பிறை நாட்கள் தொடங்கும்போது மக்கள் சந்திரனைக் காண்பதில் மிக்க ஆவலாக இருக்கிறார்கள்.  முதல்நாள் அது தெரிவதில்லை.  இரண்டாம் நாளும்கூட அது தெளிவாகத் தெரிவதில்லை.  பின்னர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவிலுள்ள திறப்பிலிருந்து அச்சந்திரனைப் பார்க்கும்படி மக்கள் கேட்க்கப்படுகிறார்கள்.

அவர்களும் ஆர்வத்துடனும், ஒரே கவனத்துடனும் நோக்கும்போது தூரத்திலுள்ள அவ்விளம்பிறை அவர்களின் காட்சி எல்லைக்கு எட்டுவதை அவர்கள் பேருவகையுடன் காண்கிறார்கள்.  இந்த வழிக்குறிப்பைத் தொடர்ந்தே நாம் பாபாவின் ஒளியைக் காண முயலுவோம்.  பாபாவின் தோற்ற அமைப்பைக் காணுங்கள்.  அது எவ்வளவு அருமையாக இருக்கிறது!  அவர் அட்டணக்கால் இட்டு அமர்ந்திருக்கிறார்.  வலதுகால் இடது முழங்கால் மேலும், இடது கையின் விரல்கள் வலது பாதத்திலும் படரப்பட்டு இருக்கின்றன.  வலதுகால் பெருவிரலில் அவர்தம் இரண்டு கைவிரல்கள் ஆள்காட்டிவிரலும், நடுவிரலும் படர்ந்திருக்கின்றன.

இத்தோற்ற அமைப்பால் பாபா குறிப்பிடுவதாகத் தோன்றுவதாவது, நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப் பணிவுடனும் இருப்பாயாக.  எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக.  அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே.  அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும்.  இதுவே பக்தியை அடைய மிகமிக எளிய வழியாகும்.  

சில கணங்கள் நாம் பாபாவின் வாழ்க்கையை நோக்குவோம்.  பாபாவின் வாசத்தால் ஷீர்டி ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறியது.  எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அங்கே கூடத் தொடங்கினார்கள்.  ஏழைகளும், பணக்காரர்களும் ஒன்றுக்கு மேலிட்ட பல வகைகளால் ஏதோ ஒரு ரூபத்தில் நன்மையடையத் தொடங்கினார்கள்.  பாபாவின் எல்லையற்ற அன்பையும், அவரின் வியத்தகு இயற்கையான ஞானத்தையும், அவரின் சர்வவியாபகத் தன்மையையும் யாரே விவரிக்க இயலும்!  இவைகளுள் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ யார் அனுபவிக்க வல்லரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சில நேரங்களில் பாபா நீண்டநேரம் மௌனம் அனுஷ்டித்தார்.  அது ஒருவகையில் பிரம்மத்தைப் பற்றிய அவரின் நீண்ட விளக்கமாகும்.  மற்ற சிலநேரங்களில் தமது அடியவர்களால் சூழப்பட்டு உணர்ச்சிகளின் திரள், ஆனந்தம் இவைகளின் அவதாரமாகத் தோன்றினார்.  சில நேரங்களில் அவர் உருவகக் கதைகளால் பேசினார்.  மற்ற சில நேரங்களில் தமாஷுக்கும், நகைச்சுவைக்கும் அதிக இடம் கொடுத்தார்.  சில நேரங்களில் அவர் முழுவதும் ஐயமின்றியும், சில நேரங்களில் சீற்றம் கொண்டவர் போலும் தோன்றினார்.  சில சமயங்களில் தமது நீதியை இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.  வேறுசில சந்தர்ப்பங்களில் அதைப் பற்றி நெடிய விவாதம் நடத்தினார். பல சமயங்களில் அவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார்.  இவ்வாறாக அவர் பலருக்கும் வெவ்வேறுவிதமான செயல்துறைக் கட்டளைகளை அவரவர்களின் தேவைக்கேற்ப அளித்தார்.  எனவே அவர் வாழ்க்கையானது அறிவால் அறிந்துகொள்ள இயலாதது.  நமது மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது.  நமது புத்தி சாதுர்யத்தையும், மொழிகளையும் கடந்தது.  அவரது முகத்தைப் பார்க்க, அவருடன் பேச, அவரது லீலைகளைக் கேட்க இருக்கும் நமது பேரார்வமானது திருப்தி செய்யப்படவேயில்லை என்றாலும் நாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறோம்.  மழையின் துளிகளை நாம் எண்ணிவிடலாம்.  காற்றைத் தோல் பையினுள் அடைத்துவிடலாம்.  ஆனால் அவரது லீலைகளை யாரே அளக்கமுடியும்!

அவைகளில் ஒரு பண்புக்கூற்றினைப் பற்றி இங்கே நாம் கூறுகிறோம்.  எங்ஙனம் எதிர்பார்த்திருந்த, முன்னால் அறியப்பட்டிருந்த, பக்தர்களின் பேராபத்துக்கள் உரிய நேரத்தில் எச்சரிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டன என்பதைக் காண்போம். 



பாலா சாஹேப் மிரீகர்

கோபர்காவனில் மம்லதாரான பாலா சாஹேப் மிரீகர் (சர்தார் காகா சாஹேப் மிரீகர் என்பவரின் மகன்) சிதலீக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றுகொண்டிருந்தார்.  வழியில் அவர் ஷீர்டிக்கு சாயிபாபாவைப் பார்க்க வந்தார்.  மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்து பணிந்ததும், உடல்நலம் மற்றும் வேறு விஷயங்கள் பற்றிய வழக்கமான உரையாடல் துவங்கியது.  பாபா எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை விடுத்தார்.  "உங்களுக்கு நம்முடைய த்வாரகாமாயியைத் தெரியுமா? "  பாலா சாஹேபுக்கு இது புரியாததால் அவர் அமைதியாக இருந்தார்.
 

பாபா தொடர்ந்து, "நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் இதுவே நமது த்வாரகாமாயி.  தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும், கவலைகளையும் அவள் தடுத்து விலக்குகிறாள்.  இந்த மசூதி மாயி (அடக்கி ஆட்சி செய்யும் இதன் அம்பிகை) மிகவும் கருணையுள்ளவள்.  அவள் எளிய பக்தர்களின் தாயாவாள்.  அவர்களைப் பேராபத்துக்களிளிருந்து அவள் பாதுகாக்கிறாள்.  ஒரு மனிதன் அவளது மடியில் ஒருமுறை அமர்ந்தால் அவனது எல்லாக் கஷ்டங்களும் முடிவடைந்துவிடும்.  அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்" என்றார். 

பின்னர் பாபா அவருக்கு உதியை அளித்து தமது பாதுகாக்கின்ற கரங்களை அவர் தலையில் வைத்தார்.  பாலா சாஹேப் புறப்படப்போகும் அத்தருணத்தில், "உங்களுக்கு லம்பா பாபாவைத் தெரியுமா? (நீண்ட பெருந்தகை) அதாவது பாம்பை?" என்றார்.  பின்னர் இடது கை முட்டியை மூடிக்கொண்டு வந்து தமது இடது புஜத்தை பாம்பின் படம் போன்று ஆட்டிக்கொண்டு அவர் "அவன் எவ்வளவு பயங்கரமானவன், ஆனால் த்வாரகாமாயியின் குழந்தைகளை அவன் என்ன செய்யமுடியும்?!  த்வாரகாமாயியானவள் பாதுகாக்கும்போது பாம்பு என்ன செய்யமுடியம்" என்று கூறினார்.

இவையனைத்திற்கும் பொருள், மிரீகருக்கு அதுபற்றிய சுட்டுக்குறியீடு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அங்கு பிரசன்னமாயிருந்த அனைவரும் ஆவலாய் இருந்தனர்.  ஆனால் ஒருவருக்கும் இதைப்பற்றி பாபாவிடம் கேட்கத் துணிவு இல்லை.  பின்னர் பாலா சாஹேப் பாபாவை வணங்கிவிட்டு ஷாமாவுடன் மசூதியை விட்டுப் புறப்பட்டார்.  பாபா, ஷாமாவைத் திரும்ப அழைத்து பாலா சாஹேபுடன் கூடச் செல்லும்படியும் சிதலீ சுற்றுலாவை மகிழ்ந்தனுபவிக்கும்படியும் கூறினார். 

ஷாமா பாலா சாஹேபிடம் வந்து பாபாவின் விருப்பப்படி தாமும் அவருடன் வருவதாகக் கூறினார்.  அது அசௌகரியமாய் இருக்குமாதலால் அவர் வரவேண்டியதில்லையென்று பாலா சாஹேப் கூறினார்.   ஷாமா பாபாவிடம் திரும்பிவந்து பாலா சாஹேப் தம்மிடம் கூறியதைத் தெரிவித்தார்.  அப்போது பாபா, "நன்று, போகாதே, நாம் நல்லவற்றையே செய்யவேண்டும்.  எதுதானென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நிச்சயம் நடந்தேறும்" என்று கூறினார்.  

இதற்கிடையில் பாலா சாஹேப் இதைப்பற்றி மீண்டும் சிந்தித்து ஷாமாவைக் கூப்பிட்டுத் தன்னுடன் வரச்சொன்னார்.  பின்னர் ஷாமா மீண்டும் பாபாவிடம் சென்று, அவரிடம் விடைபெற்றுக்க்கொண்டு பாலா சாஹேபுடன் ஒரு குதிரை வண்டியில் புறப்பட்டார்.  அவர்கள் சிதலீக்கு இரவு ஒன்பது மணிக்குப் போய்ச்சேர்ந்தார்கள்.  மாருதி கோவிலில் தங்கினார்கள்.  அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வரவில்லையாதலால் அவர்கள் கோவிலிலேயே பேசிக்கொண்டும், அரட்டையடித்துகொண்டும் அமர்ந்திருந்தனர்.

பாலா சாஹேப், பாயின் மீது அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.  அவரது மேல் வேட்டி இடுப்பின்மீது போடப்பட்டிருந்தது.  அதன் ஒரு பகுதியில் ஒரு பாம்பு கவனிக்கபடாமல் அமர்ந்து கொண்டிருந்தது.  அது ஒரு சலசல சத்தத்துடன் நகர்ந்தது பியூனுக்குக் கேட்டது.  அவன் ஒரு விளக்கு கொண்டுவந்து பாம்பைப் பார்த்துவிட்டு "பாம்பு... பாம்பு...!" என்று அபாயக்குரல் எழுப்பினான்.  பாலா சாஹேப் திகலடைந்து நடுங்கத் தொடங்கினார்.  ஷாமாவும் திகைத்தார்.  பின்னர் அவரும் மற்றவர்களும் சந்தடி செய்யாமல் தடிகளையும், குச்சிகளையும் எடுத்து வந்தனர்.  பாம்பு மெதுவாக இடுப்பைவிட்டுக் கீழிறங்கி பாலா சாஹேபை விட்டு அப்பால் செல்லத் தொடங்கியது.  அது உடனே கொல்லப்பட்டது.  இவ்விதமாக பாபாவின் தீர்க்க தரிசனத்தால் அறிவித்திருந்த பேராபத்து தடுக்கப்பட்டது.  பாலா சாஹேபுக்கு பாபாவிடமுள்ள அன்பு மிகவும் ஆழமாக உறுதிப்படுத்தப்பட்டது.



பாபு சாஹேப் பூட்டி

நானா சாஹேப் டேங்க்லே என்னும் பெரிய ஜோசியர் ஒருவர், அப்போது ஷீர்டியிலிருந்த பாபு சாஹேப் பூட்டியிடம் ஒருநாள், "இந்நாள் தங்களுக்கு ஒரு அமங்கலமான நாள், தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கூறினார்.  இது பாபு சாஹேபை இருப்புக்கொள்ளாமல் செய்தது.  அவர் வழக்கம்போல் மசூதிக்கு வந்தபோது பாபா, பாபு சாஹேபிடம், "இந்த நானா என்ன கூறுகிறார்?  அவர் உமக்கு மரணமென்று ஜோசியம் கூறுகிறார்.  நன்று, நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.  அவரிடம் தைரியத்துடன் சொல்லுங்கள், எங்ஙனம் சாவு கொல்கிறது என்பதைக் காண்போம் என்று கூறுங்கள்" என்று கூறினார்.
  

பாபு சாஹேப் பிறகு மாலை நேரத்தில் இயற்கைக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகத் தனியிடத்திற்குச் சென்றார்.  அங்கு ஒரு பாம்பைக் கண்டார்.  அவரது சேவகன் அதைக் கண்டு அதை அடிப்பதற்காக ஒரு கல்லை எடுத்தான்.  பாபு சாஹேப் ஒரு பெரிய தடியை எடுத்து வரும்படி கூறினார்.  வேலையாள் தடியுடன் வரும் முன்பே பாம்பு நகர்ந்து சென்று எங்கோ மறைந்துவிட்டது.  பாபாவின், "அஞ்ச வேண்டாம்!" என்ற மொழிகளை பாபு சாஹேப் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார். 



 அமீர் ஷக்கர்

அமீர் ஷக்கரின் சொந்த ஊர் கொபர்காவன் தாலுக்காவைச் சேர்ந்த கொரலா என்னும் கிராமமாகும்.  அவர் இறைச்சி விற்கும் ஜாதியைச் சேர்ந்தவர்.  அவர் பாந்த்ராவில் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்தார்.  அங்கு மிகவும் பிரசித்தமானவர்.  அவர் ஒருமுறை கீழ்வாதத்தால் கஷ்டப்பட்டார்.  அது அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது.  அப்போது அவர் கடவுளை நினைவுகூர்ந்தார்.  தனது தொழிலை விட்டுவிட்டு ஷீர்டிக்கு வந்து தனது பிணியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பாபாவை வேண்டிக்கொண்டார்.  பாபா அவருக்கு சாவடியில் தங்க இடம் அமர்த்திக்கொடுத்தர்.
 

சாவடி ஈரம் நிரம்பியதாகவும், சுகாதாரமற்ற இடமாகவும், அத்தகைய நோயாளி தங்குவதற்கு ஏற்றதாய் இல்லாமலும் இருந்தது.  கிராமத்திலுள்ள மற்ற எந்த இடமும் அல்லது கொரலா கிராமமே கூட அவர் தங்குவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  ஆனால் பாபாவின் மொழிகளே இதைத் தீர்மானிக்கின்ற காரணக்கூறும், ஸ்ரேஷ்டமான மருந்துமாகும்.  பாபா அவரை மசூதிக்கு வர அனுமதிக்கவில்லை.  ஆனால் சாவடியிலேயே நிலைநிறுத்தித் தங்கவைத்தார்.  அங்கே அவருக்குப் பெரும் நன்மை விளைந்தது.  பாபா சாவடி வழியாக ஒவ்வொருநாள் காலையும், மாலையும் கடந்து சென்றார்.  ஒருநாள் விட்டு ஒருநாள் ஊர்வலமாகச் சென்று அங்கு துயின்றார்.  எனவே அமீர், பாபாவின் தொடர்பை மிகவும் எளிதாக அடுத்தடுத்துப் பெற்றார்.

அமீர் ஒன்பது மாதங்கள் முழுமையாகத் தங்கியிருந்தார்.  பின்னர் எப்படியோ அவ்விடத்தில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.  எனவே ஒருநாள் ஒருவரும் அறியாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றார்.  கோபர்காவனுக்கு வந்து அங்கு தர்மசாலையில் தங்கினார்.  அப்போது முதுமையான, இறந்துகொண்டிருக்கும் பக்கீர் ஒருவர் அவரிடம் தண்ணீர் கேட்டார்.  அமீர் அதைக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.  அவர் அதை அருந்திய உடனேயே மரணம் அடைந்தார்.  அமீர் இக்கட்டான நிலையை அடைந்தார்.  அவர் சென்று அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவிப்பாரேயாகில், அவரே முதல் தகவல் அளித்தவராதலாலும், தகவலும் அவருடையது மட்டுமேயானதாலும் அதுகுறித்து அவர் சிறிதளவாவது அறிந்திருப்பதனாலும் அவரே மரணத்துக்குப் பொறுப்பாக்கப்படுவார் என்று நினைத்தார்.  பாபாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் ஷீர்டியை விட்டு வந்ததைப்பற்றி தமது செய்கைக்காக அவர் நனியிரங்கி, பாபாவை வேண்டிக்கொண்டார்.  அவர் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பத் தீர்மானித்தார்.

அதே இரவு வழிநெடுக பாபாவின் பெயரை நினைவு கூர்ந்துகொண்டும், உச்சரித்துகொண்டும் பொழுது விடிவதற்குள் ஷீர்டிக்குத் திரும்ப ஓடி வந்துவிட்டார்.  கவலையிலிருந்து விடுபட்டவரானார்.  பாபாவின் பரிபூரண விருப்பத்திற்கும் ஆணைகளுக்குமிணங்க சாவடியிலேயே தங்கியிருந்தார்.  குணப்படுத்தவும்பட்டார்.  ஒருநாள் நள்ளிரவு பாபா, "ஓ! அப்துல், ஏதோ ஒரு பிசாசு ஜந்து என் படுக்கையின் பக்கங்களில் மோதிக்கொண்டு இருக்கிறது" என்று சொன்னார்.

 அப்துல் விளக்குடன் வந்தான்.  பாபாவின் படுக்கையைச் சோதித்தான்.  ஆனால் அவன் ஒன்றையும் காணவில்லை.  பாபா அவனை எல்லா இடங்களையும் கவனத்துடன் பார்க்கும்படி கூறி தமது சட்காவைத் தரையை நோக்கி அடிக்கத் தொடங்கினார்.  இந்த லீலையைக் கண்டு ஏதாவது பாம்பு அங்கே வந்திருப்பதாக பாபா சந்தேகப்பட்டிருக்க வேண்டுமென்று அமீர் நினைத்தார்.  நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாக பாபாவின் மொழிகட்கும், செயல்களுக்கும் அமீர் பொருள் தெரிந்துகொள்ள வல்லவராயிருந்தார்.  பாபா அமீரின் மெத்தைக்கு அருகில் ஏதோ அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அப்துல்லை விளக்கைக் கொணரும்படி சொன்னார்.  அவன் அதைக் கொணர்ந்ததும் அங்கு ஒரு பாம்பு தன் தலையை மேலும், கீழும் அசைத்துக்கொண்டு, சுருட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்டான்.  அதன் பின்னர் பாம்பு உடனே அடித்துக் கொல்லப்பட்டது.  இவ்வாறாக பாபா குறித்த நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து அமீரைக் காப்பாற்றினார். 


 
ஹேமத்பந்த் (தேளும் பாம்பும்)

(1)  பாபாவின் பரிந்துரையின் பேரில் காகா சாஹேப் தீஷித் தினந்தோறும் ஏக்நாத் மஹராஜின் இரண்டு நூல்களைப் பாராயணம் செய்துவந்தார்.  அதாவது பாகவதமும், பாவார்த்த ராமாயணமுமாகும்.  அவைகள் பாராயணம் செய்யப்படும்போது கேட்டுக்கொண்டிருந்த நல்லதிஷ்டம் பெற்ற மக்களில் ஹேமத்பந்தும் ஒருவராவார்.  தமது தாயாரின் அறிவுரையின்படி ஹனுமான் ராமரின் பெருமையைச் சோதிக்கும் கட்டம் படிக்கப்பட்டபோது அனைவரும் மந்திரத்துக்குக் கட்டுப்படவர்கள் போன்று கேட்பதில் மூழ்கியிருந்தனர். 

ஹேமத்பந்தும் அவர்களுள் ஒருவர்.  அப்போது ஒரு பெரிய தேள் (அது எங்கிருந்து வந்ததென்று யாரும் அறியவில்லை) ஹேமத்பந்தின் வலது தோள் மீதிருந்த துண்டின்மீது தாவியது.  முதலில் அது கவனிக்கப்படவில்லை.  ஆனால் கடவுள் தமது கதைகளை ஆர்வத்துடன் கேட்பவர்களைப் பாதுகாக்கிறார்.  எனவே ஹேமத்பந்த் தற்செயலாகத் திரும்பியபோது பெரிய தேளைத் தோள்மீது கண்டார்.  அது மரண அமைதியுடன் இருந்தது.  இப்பக்கமோ, அப்பக்கமோ சிறிதும் அசையவில்லை.  அதுவும் பாராயணத்தைக் கேட்டு மகிழ்வது போன்றே தோன்றியது.  பின்னர் ஹேமத்பந்த் கடவுளருளால், அவையோரைத் தொந்தரவு செய்யாமல் வேட்டியின் இரு முனைகளையும் எடுத்துத் தேளை உள்ளே மடித்துக்கொண்டார்.  பின்னர் வெளியேசென்று அதைத் தோட்டத்தில் எறிந்தார்.

(2)  மற்றுமொரு சந்தப்பத்தின்போது ஒருநாள் சிலர் காகா சாஹேப் வாதாவின் மாடியில் அந்தி சாய்வதற்குச் சிறிதே முன்பாக உட்கார்ந்துகொண்டு இருந்தனர்.  அப்போது ஒரு பாம்பு ஜன்னல் நிலையிலுள்ள துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து சுருட்டிக்கொண்டு அமர்ந்தது.  விளக்கு ஒன்று கொண்டுவரப்பட்டது.  முதலில் அது மிரட்சி அடைந்தபோதும் அமைதியாக அமர்ந்து தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தது.  பின்னர் பலர் கம்புகளுடனும், தடிகளுடனும் ஓடி வந்தனர்.  அது ஒரு இடக்குமுடக்கான இடத்தில் அமர்ந்துகொண்டு இருந்தமையால், ஒரு அடியும் அதன்மீது படவில்லை.  மனிதர்களின் சப்தங்களைக் கேட்டு பாம்பு தான் வந்த துவாரம் வழியாகவே விரைவாகத் திருபிச் சென்றுவிட்டது.  பின்னர் அங்கிருந்த அனைவரும் கவலையை விடுத்தனர்.
  



பாபாவின் கருத்து

முக்தாரம் என்ற ஒரு பக்தர் அந்த வாயில்லா ஜீவன் தப்பிச்சென்றது நல்லது என்று கூறினார்.  ஹேமத்பந்த் பாம்புகள் கொல்லப்படவே வேண்டும் என்று அவருக்குச் சவால் விட்டார்.  முன்னவர் பாம்பு போன்ற ஜந்துக்கள் கொல்லப்படக் கூடாதென்றும், பின்னவர் கொல்லப்பட வேண்டும் என்றும் இருவருக்குமிடையே சூடான விவாதம் நடந்தது.  இரவு வந்ததும் விவாதம் எவ்வித முடிவுமின்றி முடிவடைந்தது.  மறுநாள் இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது.

பாபா தமது தீர்க்கமான கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார்.  தேளானாலும், பாம்பானாலும் கடவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கிறார்.  அவரே இவ்வுலகில் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர்.  அனைத்து ஜீவராசிகளும் (பாம்பும், தேளும்) அவரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றன.  அவர் நினைத்தாலொழிய யாரும், எதுவும் பிறருக்குத் தீங்கு செய்துவிட முடியாது.  உலகம் அவரையே முழுவதும் சார்ந்திருக்கிறது.  எவருமோ, எதுவுமோ சுதந்திரமானவர்களல்ல.  எனவே நாம் கருணைகூர்ந்து எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கவேண்டும்.  துணிச்சல், வீரமுள்ள கொலைகளையும், சண்டைகளையும் விடுத்துப் பொறுமையாய் இருக்கவேண்டும்.  கடவுளே அனைவரின் பாதுகாப்பாளர்.
 


ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்