Thursday, 10 May 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 22

 பாம்புக் கடியிலிருந்து மீட்புதவி
(1)  பாலா சாஹேப்  மிரீகர் 
(2)  பாபு சாஹேப் பூட்டி 
(3)  அமீர் ஷக்கர்
(4)  ஹேமத்பந்த்
 பாம்புகளைக் கொல்வதைப் பற்றி பாபாவின் கருத்து  



முன்னுரை 

பாபாவை எங்ஙனம் தியானிப்பது?  கடவுளின் தன்மையையோ, ரூபத்தையோ ஆழ்ந்தறிய யாராலும் இயலாது.  வேதங்களும், ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனும்கூட அதை முழுமையாக விவரிக்க இயலவில்லை.  கடவுளின் ரூபத்தைத் தரிசிக்கவும், அறியவும் அடியவர்களால் மட்டுமே இயலும்.  ஏனெனில் அவர்தம் பாதங்கள் மட்டுமே அவர்களுடைய மகிழ்ச்சிக்குரிய ஒரே வழி என்பதை அவர்கள் அறிவார்கள்.  வாழ்க்கையின் உச்ச உயர் இலட்சியத்தை அடைய அவர்தம் பாதங்களைத் தியானிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெவ்வித வழியும் தெரியாது.  ஹேமத்பந்த் தியானத்திற்கும், பக்திக்கும் ஒரு எளிய வழியைப் பின்வருமாறு தெரியப்படுத்துகிறார்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகக் கழிவுறுவதைப் போன்றே சந்திரனது ஒளியும், அதே நுட்ப அளவில் தேய்வடைகிறது.  அமாவாசையன்று நாம் சந்திரனையே பார்க்கமுடிவதில்லை.  அதனது ஒளியையும் பெறுவது இல்லை.  எனவே வளர்பிறை நாட்கள் தொடங்கும்போது மக்கள் சந்திரனைக் காண்பதில் மிக்க ஆவலாக இருக்கிறார்கள்.  முதல்நாள் அது தெரிவதில்லை.  இரண்டாம் நாளும்கூட அது தெளிவாகத் தெரிவதில்லை.  பின்னர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவிலுள்ள திறப்பிலிருந்து அச்சந்திரனைப் பார்க்கும்படி மக்கள் கேட்க்கப்படுகிறார்கள்.

அவர்களும் ஆர்வத்துடனும், ஒரே கவனத்துடனும் நோக்கும்போது தூரத்திலுள்ள அவ்விளம்பிறை அவர்களின் காட்சி எல்லைக்கு எட்டுவதை அவர்கள் பேருவகையுடன் காண்கிறார்கள்.  இந்த வழிக்குறிப்பைத் தொடர்ந்தே நாம் பாபாவின் ஒளியைக் காண முயலுவோம்.  பாபாவின் தோற்ற அமைப்பைக் காணுங்கள்.  அது எவ்வளவு அருமையாக இருக்கிறது!  அவர் அட்டணக்கால் இட்டு அமர்ந்திருக்கிறார்.  வலதுகால் இடது முழங்கால் மேலும், இடது கையின் விரல்கள் வலது பாதத்திலும் படரப்பட்டு இருக்கின்றன.  வலதுகால் பெருவிரலில் அவர்தம் இரண்டு கைவிரல்கள் ஆள்காட்டிவிரலும், நடுவிரலும் படர்ந்திருக்கின்றன.

இத்தோற்ற அமைப்பால் பாபா குறிப்பிடுவதாகத் தோன்றுவதாவது, நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப் பணிவுடனும் இருப்பாயாக.  எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக.  அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே.  அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும்.  இதுவே பக்தியை அடைய மிகமிக எளிய வழியாகும்.  

சில கணங்கள் நாம் பாபாவின் வாழ்க்கையை நோக்குவோம்.  பாபாவின் வாசத்தால் ஷீர்டி ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறியது.  எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அங்கே கூடத் தொடங்கினார்கள்.  ஏழைகளும், பணக்காரர்களும் ஒன்றுக்கு மேலிட்ட பல வகைகளால் ஏதோ ஒரு ரூபத்தில் நன்மையடையத் தொடங்கினார்கள்.  பாபாவின் எல்லையற்ற அன்பையும், அவரின் வியத்தகு இயற்கையான ஞானத்தையும், அவரின் சர்வவியாபகத் தன்மையையும் யாரே விவரிக்க இயலும்!  இவைகளுள் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ யார் அனுபவிக்க வல்லரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சில நேரங்களில் பாபா நீண்டநேரம் மௌனம் அனுஷ்டித்தார்.  அது ஒருவகையில் பிரம்மத்தைப் பற்றிய அவரின் நீண்ட விளக்கமாகும்.  மற்ற சிலநேரங்களில் தமது அடியவர்களால் சூழப்பட்டு உணர்ச்சிகளின் திரள், ஆனந்தம் இவைகளின் அவதாரமாகத் தோன்றினார்.  சில நேரங்களில் அவர் உருவகக் கதைகளால் பேசினார்.  மற்ற சில நேரங்களில் தமாஷுக்கும், நகைச்சுவைக்கும் அதிக இடம் கொடுத்தார்.  சில நேரங்களில் அவர் முழுவதும் ஐயமின்றியும், சில நேரங்களில் சீற்றம் கொண்டவர் போலும் தோன்றினார்.  சில சமயங்களில் தமது நீதியை இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.  வேறுசில சந்தர்ப்பங்களில் அதைப் பற்றி நெடிய விவாதம் நடத்தினார். பல சமயங்களில் அவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார்.  இவ்வாறாக அவர் பலருக்கும் வெவ்வேறுவிதமான செயல்துறைக் கட்டளைகளை அவரவர்களின் தேவைக்கேற்ப அளித்தார்.  எனவே அவர் வாழ்க்கையானது அறிவால் அறிந்துகொள்ள இயலாதது.  நமது மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது.  நமது புத்தி சாதுர்யத்தையும், மொழிகளையும் கடந்தது.  அவரது முகத்தைப் பார்க்க, அவருடன் பேச, அவரது லீலைகளைக் கேட்க இருக்கும் நமது பேரார்வமானது திருப்தி செய்யப்படவேயில்லை என்றாலும் நாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறோம்.  மழையின் துளிகளை நாம் எண்ணிவிடலாம்.  காற்றைத் தோல் பையினுள் அடைத்துவிடலாம்.  ஆனால் அவரது லீலைகளை யாரே அளக்கமுடியும்!

அவைகளில் ஒரு பண்புக்கூற்றினைப் பற்றி இங்கே நாம் கூறுகிறோம்.  எங்ஙனம் எதிர்பார்த்திருந்த, முன்னால் அறியப்பட்டிருந்த, பக்தர்களின் பேராபத்துக்கள் உரிய நேரத்தில் எச்சரிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டன என்பதைக் காண்போம். 



பாலா சாஹேப் மிரீகர்

கோபர்காவனில் மம்லதாரான பாலா சாஹேப் மிரீகர் (சர்தார் காகா சாஹேப் மிரீகர் என்பவரின் மகன்) சிதலீக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றுகொண்டிருந்தார்.  வழியில் அவர் ஷீர்டிக்கு சாயிபாபாவைப் பார்க்க வந்தார்.  மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்து பணிந்ததும், உடல்நலம் மற்றும் வேறு விஷயங்கள் பற்றிய வழக்கமான உரையாடல் துவங்கியது.  பாபா எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை விடுத்தார்.  "உங்களுக்கு நம்முடைய த்வாரகாமாயியைத் தெரியுமா? "  பாலா சாஹேபுக்கு இது புரியாததால் அவர் அமைதியாக இருந்தார்.
 

பாபா தொடர்ந்து, "நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் இதுவே நமது த்வாரகாமாயி.  தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும், கவலைகளையும் அவள் தடுத்து விலக்குகிறாள்.  இந்த மசூதி மாயி (அடக்கி ஆட்சி செய்யும் இதன் அம்பிகை) மிகவும் கருணையுள்ளவள்.  அவள் எளிய பக்தர்களின் தாயாவாள்.  அவர்களைப் பேராபத்துக்களிளிருந்து அவள் பாதுகாக்கிறாள்.  ஒரு மனிதன் அவளது மடியில் ஒருமுறை அமர்ந்தால் அவனது எல்லாக் கஷ்டங்களும் முடிவடைந்துவிடும்.  அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்" என்றார். 

பின்னர் பாபா அவருக்கு உதியை அளித்து தமது பாதுகாக்கின்ற கரங்களை அவர் தலையில் வைத்தார்.  பாலா சாஹேப் புறப்படப்போகும் அத்தருணத்தில், "உங்களுக்கு லம்பா பாபாவைத் தெரியுமா? (நீண்ட பெருந்தகை) அதாவது பாம்பை?" என்றார்.  பின்னர் இடது கை முட்டியை மூடிக்கொண்டு வந்து தமது இடது புஜத்தை பாம்பின் படம் போன்று ஆட்டிக்கொண்டு அவர் "அவன் எவ்வளவு பயங்கரமானவன், ஆனால் த்வாரகாமாயியின் குழந்தைகளை அவன் என்ன செய்யமுடியும்?!  த்வாரகாமாயியானவள் பாதுகாக்கும்போது பாம்பு என்ன செய்யமுடியம்" என்று கூறினார்.

இவையனைத்திற்கும் பொருள், மிரீகருக்கு அதுபற்றிய சுட்டுக்குறியீடு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அங்கு பிரசன்னமாயிருந்த அனைவரும் ஆவலாய் இருந்தனர்.  ஆனால் ஒருவருக்கும் இதைப்பற்றி பாபாவிடம் கேட்கத் துணிவு இல்லை.  பின்னர் பாலா சாஹேப் பாபாவை வணங்கிவிட்டு ஷாமாவுடன் மசூதியை விட்டுப் புறப்பட்டார்.  பாபா, ஷாமாவைத் திரும்ப அழைத்து பாலா சாஹேபுடன் கூடச் செல்லும்படியும் சிதலீ சுற்றுலாவை மகிழ்ந்தனுபவிக்கும்படியும் கூறினார். 

ஷாமா பாலா சாஹேபிடம் வந்து பாபாவின் விருப்பப்படி தாமும் அவருடன் வருவதாகக் கூறினார்.  அது அசௌகரியமாய் இருக்குமாதலால் அவர் வரவேண்டியதில்லையென்று பாலா சாஹேப் கூறினார்.   ஷாமா பாபாவிடம் திரும்பிவந்து பாலா சாஹேப் தம்மிடம் கூறியதைத் தெரிவித்தார்.  அப்போது பாபா, "நன்று, போகாதே, நாம் நல்லவற்றையே செய்யவேண்டும்.  எதுதானென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நிச்சயம் நடந்தேறும்" என்று கூறினார்.  

இதற்கிடையில் பாலா சாஹேப் இதைப்பற்றி மீண்டும் சிந்தித்து ஷாமாவைக் கூப்பிட்டுத் தன்னுடன் வரச்சொன்னார்.  பின்னர் ஷாமா மீண்டும் பாபாவிடம் சென்று, அவரிடம் விடைபெற்றுக்க்கொண்டு பாலா சாஹேபுடன் ஒரு குதிரை வண்டியில் புறப்பட்டார்.  அவர்கள் சிதலீக்கு இரவு ஒன்பது மணிக்குப் போய்ச்சேர்ந்தார்கள்.  மாருதி கோவிலில் தங்கினார்கள்.  அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வரவில்லையாதலால் அவர்கள் கோவிலிலேயே பேசிக்கொண்டும், அரட்டையடித்துகொண்டும் அமர்ந்திருந்தனர்.

பாலா சாஹேப், பாயின் மீது அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.  அவரது மேல் வேட்டி இடுப்பின்மீது போடப்பட்டிருந்தது.  அதன் ஒரு பகுதியில் ஒரு பாம்பு கவனிக்கபடாமல் அமர்ந்து கொண்டிருந்தது.  அது ஒரு சலசல சத்தத்துடன் நகர்ந்தது பியூனுக்குக் கேட்டது.  அவன் ஒரு விளக்கு கொண்டுவந்து பாம்பைப் பார்த்துவிட்டு "பாம்பு... பாம்பு...!" என்று அபாயக்குரல் எழுப்பினான்.  பாலா சாஹேப் திகலடைந்து நடுங்கத் தொடங்கினார்.  ஷாமாவும் திகைத்தார்.  பின்னர் அவரும் மற்றவர்களும் சந்தடி செய்யாமல் தடிகளையும், குச்சிகளையும் எடுத்து வந்தனர்.  பாம்பு மெதுவாக இடுப்பைவிட்டுக் கீழிறங்கி பாலா சாஹேபை விட்டு அப்பால் செல்லத் தொடங்கியது.  அது உடனே கொல்லப்பட்டது.  இவ்விதமாக பாபாவின் தீர்க்க தரிசனத்தால் அறிவித்திருந்த பேராபத்து தடுக்கப்பட்டது.  பாலா சாஹேபுக்கு பாபாவிடமுள்ள அன்பு மிகவும் ஆழமாக உறுதிப்படுத்தப்பட்டது.



பாபு சாஹேப் பூட்டி

நானா சாஹேப் டேங்க்லே என்னும் பெரிய ஜோசியர் ஒருவர், அப்போது ஷீர்டியிலிருந்த பாபு சாஹேப் பூட்டியிடம் ஒருநாள், "இந்நாள் தங்களுக்கு ஒரு அமங்கலமான நாள், தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கூறினார்.  இது பாபு சாஹேபை இருப்புக்கொள்ளாமல் செய்தது.  அவர் வழக்கம்போல் மசூதிக்கு வந்தபோது பாபா, பாபு சாஹேபிடம், "இந்த நானா என்ன கூறுகிறார்?  அவர் உமக்கு மரணமென்று ஜோசியம் கூறுகிறார்.  நன்று, நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.  அவரிடம் தைரியத்துடன் சொல்லுங்கள், எங்ஙனம் சாவு கொல்கிறது என்பதைக் காண்போம் என்று கூறுங்கள்" என்று கூறினார்.
  

பாபு சாஹேப் பிறகு மாலை நேரத்தில் இயற்கைக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகத் தனியிடத்திற்குச் சென்றார்.  அங்கு ஒரு பாம்பைக் கண்டார்.  அவரது சேவகன் அதைக் கண்டு அதை அடிப்பதற்காக ஒரு கல்லை எடுத்தான்.  பாபு சாஹேப் ஒரு பெரிய தடியை எடுத்து வரும்படி கூறினார்.  வேலையாள் தடியுடன் வரும் முன்பே பாம்பு நகர்ந்து சென்று எங்கோ மறைந்துவிட்டது.  பாபாவின், "அஞ்ச வேண்டாம்!" என்ற மொழிகளை பாபு சாஹேப் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார். 



 அமீர் ஷக்கர்

அமீர் ஷக்கரின் சொந்த ஊர் கொபர்காவன் தாலுக்காவைச் சேர்ந்த கொரலா என்னும் கிராமமாகும்.  அவர் இறைச்சி விற்கும் ஜாதியைச் சேர்ந்தவர்.  அவர் பாந்த்ராவில் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்தார்.  அங்கு மிகவும் பிரசித்தமானவர்.  அவர் ஒருமுறை கீழ்வாதத்தால் கஷ்டப்பட்டார்.  அது அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது.  அப்போது அவர் கடவுளை நினைவுகூர்ந்தார்.  தனது தொழிலை விட்டுவிட்டு ஷீர்டிக்கு வந்து தனது பிணியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பாபாவை வேண்டிக்கொண்டார்.  பாபா அவருக்கு சாவடியில் தங்க இடம் அமர்த்திக்கொடுத்தர்.
 

சாவடி ஈரம் நிரம்பியதாகவும், சுகாதாரமற்ற இடமாகவும், அத்தகைய நோயாளி தங்குவதற்கு ஏற்றதாய் இல்லாமலும் இருந்தது.  கிராமத்திலுள்ள மற்ற எந்த இடமும் அல்லது கொரலா கிராமமே கூட அவர் தங்குவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  ஆனால் பாபாவின் மொழிகளே இதைத் தீர்மானிக்கின்ற காரணக்கூறும், ஸ்ரேஷ்டமான மருந்துமாகும்.  பாபா அவரை மசூதிக்கு வர அனுமதிக்கவில்லை.  ஆனால் சாவடியிலேயே நிலைநிறுத்தித் தங்கவைத்தார்.  அங்கே அவருக்குப் பெரும் நன்மை விளைந்தது.  பாபா சாவடி வழியாக ஒவ்வொருநாள் காலையும், மாலையும் கடந்து சென்றார்.  ஒருநாள் விட்டு ஒருநாள் ஊர்வலமாகச் சென்று அங்கு துயின்றார்.  எனவே அமீர், பாபாவின் தொடர்பை மிகவும் எளிதாக அடுத்தடுத்துப் பெற்றார்.

அமீர் ஒன்பது மாதங்கள் முழுமையாகத் தங்கியிருந்தார்.  பின்னர் எப்படியோ அவ்விடத்தில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.  எனவே ஒருநாள் ஒருவரும் அறியாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றார்.  கோபர்காவனுக்கு வந்து அங்கு தர்மசாலையில் தங்கினார்.  அப்போது முதுமையான, இறந்துகொண்டிருக்கும் பக்கீர் ஒருவர் அவரிடம் தண்ணீர் கேட்டார்.  அமீர் அதைக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்.  அவர் அதை அருந்திய உடனேயே மரணம் அடைந்தார்.  அமீர் இக்கட்டான நிலையை அடைந்தார்.  அவர் சென்று அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவிப்பாரேயாகில், அவரே முதல் தகவல் அளித்தவராதலாலும், தகவலும் அவருடையது மட்டுமேயானதாலும் அதுகுறித்து அவர் சிறிதளவாவது அறிந்திருப்பதனாலும் அவரே மரணத்துக்குப் பொறுப்பாக்கப்படுவார் என்று நினைத்தார்.  பாபாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் ஷீர்டியை விட்டு வந்ததைப்பற்றி தமது செய்கைக்காக அவர் நனியிரங்கி, பாபாவை வேண்டிக்கொண்டார்.  அவர் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பத் தீர்மானித்தார்.

அதே இரவு வழிநெடுக பாபாவின் பெயரை நினைவு கூர்ந்துகொண்டும், உச்சரித்துகொண்டும் பொழுது விடிவதற்குள் ஷீர்டிக்குத் திரும்ப ஓடி வந்துவிட்டார்.  கவலையிலிருந்து விடுபட்டவரானார்.  பாபாவின் பரிபூரண விருப்பத்திற்கும் ஆணைகளுக்குமிணங்க சாவடியிலேயே தங்கியிருந்தார்.  குணப்படுத்தவும்பட்டார்.  ஒருநாள் நள்ளிரவு பாபா, "ஓ! அப்துல், ஏதோ ஒரு பிசாசு ஜந்து என் படுக்கையின் பக்கங்களில் மோதிக்கொண்டு இருக்கிறது" என்று சொன்னார்.

 அப்துல் விளக்குடன் வந்தான்.  பாபாவின் படுக்கையைச் சோதித்தான்.  ஆனால் அவன் ஒன்றையும் காணவில்லை.  பாபா அவனை எல்லா இடங்களையும் கவனத்துடன் பார்க்கும்படி கூறி தமது சட்காவைத் தரையை நோக்கி அடிக்கத் தொடங்கினார்.  இந்த லீலையைக் கண்டு ஏதாவது பாம்பு அங்கே வந்திருப்பதாக பாபா சந்தேகப்பட்டிருக்க வேண்டுமென்று அமீர் நினைத்தார்.  நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாக பாபாவின் மொழிகட்கும், செயல்களுக்கும் அமீர் பொருள் தெரிந்துகொள்ள வல்லவராயிருந்தார்.  பாபா அமீரின் மெத்தைக்கு அருகில் ஏதோ அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அப்துல்லை விளக்கைக் கொணரும்படி சொன்னார்.  அவன் அதைக் கொணர்ந்ததும் அங்கு ஒரு பாம்பு தன் தலையை மேலும், கீழும் அசைத்துக்கொண்டு, சுருட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்டான்.  அதன் பின்னர் பாம்பு உடனே அடித்துக் கொல்லப்பட்டது.  இவ்வாறாக பாபா குறித்த நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து அமீரைக் காப்பாற்றினார். 


 
ஹேமத்பந்த் (தேளும் பாம்பும்)

(1)  பாபாவின் பரிந்துரையின் பேரில் காகா சாஹேப் தீஷித் தினந்தோறும் ஏக்நாத் மஹராஜின் இரண்டு நூல்களைப் பாராயணம் செய்துவந்தார்.  அதாவது பாகவதமும், பாவார்த்த ராமாயணமுமாகும்.  அவைகள் பாராயணம் செய்யப்படும்போது கேட்டுக்கொண்டிருந்த நல்லதிஷ்டம் பெற்ற மக்களில் ஹேமத்பந்தும் ஒருவராவார்.  தமது தாயாரின் அறிவுரையின்படி ஹனுமான் ராமரின் பெருமையைச் சோதிக்கும் கட்டம் படிக்கப்பட்டபோது அனைவரும் மந்திரத்துக்குக் கட்டுப்படவர்கள் போன்று கேட்பதில் மூழ்கியிருந்தனர். 

ஹேமத்பந்தும் அவர்களுள் ஒருவர்.  அப்போது ஒரு பெரிய தேள் (அது எங்கிருந்து வந்ததென்று யாரும் அறியவில்லை) ஹேமத்பந்தின் வலது தோள் மீதிருந்த துண்டின்மீது தாவியது.  முதலில் அது கவனிக்கப்படவில்லை.  ஆனால் கடவுள் தமது கதைகளை ஆர்வத்துடன் கேட்பவர்களைப் பாதுகாக்கிறார்.  எனவே ஹேமத்பந்த் தற்செயலாகத் திரும்பியபோது பெரிய தேளைத் தோள்மீது கண்டார்.  அது மரண அமைதியுடன் இருந்தது.  இப்பக்கமோ, அப்பக்கமோ சிறிதும் அசையவில்லை.  அதுவும் பாராயணத்தைக் கேட்டு மகிழ்வது போன்றே தோன்றியது.  பின்னர் ஹேமத்பந்த் கடவுளருளால், அவையோரைத் தொந்தரவு செய்யாமல் வேட்டியின் இரு முனைகளையும் எடுத்துத் தேளை உள்ளே மடித்துக்கொண்டார்.  பின்னர் வெளியேசென்று அதைத் தோட்டத்தில் எறிந்தார்.

(2)  மற்றுமொரு சந்தப்பத்தின்போது ஒருநாள் சிலர் காகா சாஹேப் வாதாவின் மாடியில் அந்தி சாய்வதற்குச் சிறிதே முன்பாக உட்கார்ந்துகொண்டு இருந்தனர்.  அப்போது ஒரு பாம்பு ஜன்னல் நிலையிலுள்ள துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து சுருட்டிக்கொண்டு அமர்ந்தது.  விளக்கு ஒன்று கொண்டுவரப்பட்டது.  முதலில் அது மிரட்சி அடைந்தபோதும் அமைதியாக அமர்ந்து தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தது.  பின்னர் பலர் கம்புகளுடனும், தடிகளுடனும் ஓடி வந்தனர்.  அது ஒரு இடக்குமுடக்கான இடத்தில் அமர்ந்துகொண்டு இருந்தமையால், ஒரு அடியும் அதன்மீது படவில்லை.  மனிதர்களின் சப்தங்களைக் கேட்டு பாம்பு தான் வந்த துவாரம் வழியாகவே விரைவாகத் திருபிச் சென்றுவிட்டது.  பின்னர் அங்கிருந்த அனைவரும் கவலையை விடுத்தனர்.
  



பாபாவின் கருத்து

முக்தாரம் என்ற ஒரு பக்தர் அந்த வாயில்லா ஜீவன் தப்பிச்சென்றது நல்லது என்று கூறினார்.  ஹேமத்பந்த் பாம்புகள் கொல்லப்படவே வேண்டும் என்று அவருக்குச் சவால் விட்டார்.  முன்னவர் பாம்பு போன்ற ஜந்துக்கள் கொல்லப்படக் கூடாதென்றும், பின்னவர் கொல்லப்பட வேண்டும் என்றும் இருவருக்குமிடையே சூடான விவாதம் நடந்தது.  இரவு வந்ததும் விவாதம் எவ்வித முடிவுமின்றி முடிவடைந்தது.  மறுநாள் இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது.

பாபா தமது தீர்க்கமான கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார்.  தேளானாலும், பாம்பானாலும் கடவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கிறார்.  அவரே இவ்வுலகில் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர்.  அனைத்து ஜீவராசிகளும் (பாம்பும், தேளும்) அவரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றன.  அவர் நினைத்தாலொழிய யாரும், எதுவும் பிறருக்குத் தீங்கு செய்துவிட முடியாது.  உலகம் அவரையே முழுவதும் சார்ந்திருக்கிறது.  எவருமோ, எதுவுமோ சுதந்திரமானவர்களல்ல.  எனவே நாம் கருணைகூர்ந்து எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கவேண்டும்.  துணிச்சல், வீரமுள்ள கொலைகளையும், சண்டைகளையும் விடுத்துப் பொறுமையாய் இருக்கவேண்டும்.  கடவுளே அனைவரின் பாதுகாப்பாளர்.
 


ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
  

No comments:

Post a Comment