Thursday, 27 September 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 32

குரு - கடவுள் தேவை - பட்டினி அங்கீகரிக்கப்படவில்லை .

இந்த அத்தியாயத்தில் ஹேமத்பந்த் இரண்டு விஷயங்களை விவரிக்கிறார்.

(1 )  பாபா எங்ஙனம் தமது குருவைக் காடுகளில் சந்தித்தார்?  அவர் மூலம் கடவுள் சந்திப்பு.

(2 )  மூன்று நாட்கள் விரதமிருக்க எண்ணிய திருமதி.கோகலேயை எங்ஙனம் பாபா பூரணப்போளியைச் சாப்பிடச் செய்தார்.



முன்னுரை

முதலில் கண்ணுக்குத் தெரியும் இச்சம்சார வாழ்க்கையை ஹேமத்பந்த் ஆலமரத்துடன் ஒப்பிடுகிறார்.  கீதையின் சொற்களில் வேர் மேலும், கிளைகள் கீழும் என்பதாக அதன் கிளைகள் மேலும், கீழும் பரவுகின்றன.  குணங்களால் போஷிக்கப்படுகின்றன.  அதன் துளிர்கள் புலன்களாகின்றன.  அதன் வேர்கள் செயல்களாக மனிதர்களின் இவ்வுலகம்வரை நீண்டிருக்கின்றன.  இவ்வுலகத்தில் அதன் ரூபமோ, முடிவோ, ஆரம்பமோ அல்லது அதன் பற்றுக்கேடோ தெரியாது.  வலிமையான வேர்களுள்ள இவ்வாலமரத்தைப் பற்றின்மை என்னும்
கூரிய ஆயுதத்தால் வெட்டுவதன் மூலம் அதற்கப்பாலுள்ள பாதையை ஒருவன் தேடவேண்டும்.  அதில் செல்பவன் திரும்பிவருதல் கிடையாது.

இப்பாதையில் செல்வதற்கு நல்ல வழிகாட்டியின் (குரு) உதவி இன்றியமையாதது.  ஒருவன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாய் இருப்பினும் வேதவேதாந்தங்களில் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுடையவனாக இருப்பினும் தனது பயணமுடிவை அவன் பத்திரமாகச் சென்றடைய முடியாது.  வழிகாட்டி ஒருவர் அவனுக்கு உதவ அங்கிருந்தால் சரியான வழியைக் காண்பித்துப் பயணத்தின் போதுள்ள இடர்கள், குழிகள், கொடிய மிருகங்கள் இவற்றை ஒதுக்கிச் செல்லமுடியும்.  பயணமும் இலகுவானதாகிவிடும்.  இவ்விஷயத்தில் பாபாவின் சொந்த அனுபவமாக அவர் சொன்ன கதை உண்மையில் ஆச்சரியமானது.  கேட்டறியும்போது நம்பிக்கை, பக்தி, ரஷணை ஆகியவற்றை அளிக்கிறது.



தாகம்

ஒருமுறை எங்களில் நால்வர் மத சாஸ்திரங்களையும், மற்ற புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தோம்.  இவ்வாறாக உற்சாகம் பெற்றுப் பிரம்மத்தின் குணத்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். 

எங்களுள் ஒருவர்:  "அவரவர் ஆன்மாவைத் தத்தம் ஆன்மாவாலேயே உயர்த்தவேண்டும் என்றும் பிறரை நாடக்கூடாது என்றும் கூறினார்".

இதற்கு இரண்டாமவர்:  "யார் மனத்தைக் கட்டுப்படுத்துகிறானோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.  எண்ணங்கள், யோசனைகள் இவற்றிலிருந்து நாம் விடுபட்டவர்களாக இருக்கவேண்டும்.  நாமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் கிடையாது" என்றார்.

மூன்றாமவர்:  உலகம் (தோற்றம்) எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறது.  அருவமே நிலைத்தது (முடிவற்றது).  எனவே நாம் நிலையான, நிலையற்றவற்றைப் பகுத்துணர வேண்டும்.

நான்காமவர் (பாபா):  (தீவிரமாக) ஏட்டறிவு பயனற்றது.  நமக்கிடப்பட்ட கடைமைகளைச் செய்து, குருவின் பாதத்தில் உடல், மனம், ஐந்து பிராணன்கள் இவற்றைச் சமர்ப்பித்துவிட வேண்டும்.  குருவே கடவுள், சர்வ வியாபி, இவ்வுறுதியான மனநிலை பெறுவதற்கு எல்லையற்ற திடநம்பிக்கை அவசியமாகும்.

இவ்வாறாக விவாதித்துக்கொண்டு கற்றறிந்த நாங்கள் நால்வரும் காடுகளில் கடவுளைத் தேடி அலையத் தொடங்கினோம்.  அம்மூவரும் அறிவின் துணைகொண்டே சுதந்திரமாக எவர் உதவியுமின்றி தேட முயன்றனர்.  வழியில் ஒரு வனஜாரி (எருமையின் மீது தானியத்தைக் கொண்டுசென்று விற்பவன்) எதிர்ப்பட்டான்.

வனஜாரி:  இப்போது உஷ்ணமாயிருக்கிறது.  எங்கே இவ்வளவு தூரம் போகிறீர்கள்?

நாங்கள்:  காட்டில் தேடுவதற்கு

வனஜாரி:  எதைத் தேடிச் செல்கிறீர்கள்.

நாங்கள் அவனுக்கு நம்பமுடியாத மழுப்பும் விதத்தில் ஒரு பதில் கொடுத்தோம்.  திக்குதிசை தெரியாமல் காட்டில் நாங்கள் அலைந்துகொடிருப்பதைக் கண்ட அவன் மனதிரங்கி, "காடுகளை முழுவதும் அறியாமல், திடீரென்று நீங்கள் இப்படி திசை தெரியாமல் அலையக்கூடாது.  காடுகளிடையே நீங்கள் செல்லவிரும்பினால் ஒரு நல்ல வழிகாட்டியை அழைத்துச் செல்லவேண்டும்.  இந்த கடுமையான உச்சிவேளையில் அனாவசியமாக ஏன் அலைந்துகொண்டிருக்கிறீர்கள்.  தேடும் உங்களது இரகசியத்தை நீங்கள் எனக்கு வெளியிட வேண்டாம்.  ஆயினும் நீங்கள் அமர்ந்து, சாப்பிட்டு, நீர் குடித்து இளைப்பாறிய பின் செல்லலாம்.  உள்ளத்தில் எப்போதும் பொறுமையாய் இருங்கள்" என்று கூறினான்.  அவ்வளவு இனிமையாகப் பேசியபோதும் அவனது வேண்டுதலை நிராகரித்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கினோம்.

நாங்கள் தன்னறிவு நிரம்பியவர்கள் என்றும், ஒருவரின் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைத்தோம்.  காடு பரந்ததாகவும், பாதையற்றதாகவும் இருந்தது.  சூரியஒளி கூட உட்புகாத அளவுக்கு மரங்கள் அவ்வளவு நெருக்கமாகவும், உயரமாகவும் வளர்ந்து இருந்தன.  எனவே நாங்கள் வழிதவறி இங்குமங்கும் நெடுநேரம் அலைந்துகொண்டிருந்தோம்.  முடிவாக நலதிர்ஷ்டம் ஒன்றினால் மட்டுமே எங்குவிட்டோமோ அங்கேயே வந்துசேர்ந்தோம்.  வனஜாரி திரும்பவும் எங்களைச் சந்தித்தான். 


வனஜாரி:  உங்கள் சொந்த புத்திசாதுர்யத்தை மட்டுமே நம்பி வழியை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள்.  சிறிய அல்லது பெரிய விஷயங்களில் வழிகாட்ட ஒரு வழிகாட்டி நமக்கு எப்போதும் தேவை.  வெறும் வயிற்றுடன் எந்த இலட்சியத்திலும் வெற்றியடைய இயலாது.  கடவுள் நினைத்தாலன்றி ஒருவரும் நம்மை வழியில் சந்திப்பதில்லை.  உணவளிக்கப்படுவதை மறுக்காதீர்கள்.  பரிமாறப்பட்ட உணவு தள்ளப்படக்கூடாது.  ரொட்டி, உணவு ஆகியவை கிடப்பது வெற்றியின் அடையாளமாகும்.

இதைக் கூறிக்கொண்டே அவன் மீண்டும் எங்களுக்கு உணவை வைத்து அமைதியுடனும், பொறுமையுடனும் இருக்கும்படி கூறினான்.  மீண்டும் என்னுடன் இருந்தவர்களுக்கு இந்த நல்ல விருந்தோம்பல் பிடிக்கவில்லை.  அவனை நிராகரித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.  தாகத்தையும், பசியையும் தீர்த்துக்கொள்ளாமலேயே மூவரும் செல்லும் அளவுக்குப் பிடிவாதமாக இருந்தனர்.  எனக்குப் பசியாயும், தாகமாயும் இருந்ததால் வனஜாரியின் அசாதாரண அன்பில் உருகினேன்.  மிகவும் கற்றறிந்தவர்கள் என்று எங்களை எண்ணிக்கொண்டோம்.  அன்புக்கும், இரக்க குணத்திற்கும் நாங்கள் புதியவர்களாகவே இருந்தோம்.  வனஜாரி கல்வியறிவற்றவன், தகுதியற்றவன்.  கீழ்குலத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவன் உள்ளத்தில் அன்பு இருந்தது.  அவன் எங்களை உண்ணச் சொன்னான்.  மற்றவர்களை நிஷ்காமியாக நேசிப்பவன் உண்மையிலேயே உயர்த்தப்படுகிறான்.  அவனது விருந்தோம்புதலை ஏற்றுக்கொள்ளுதலே ஞானத்தை ஏற்றுக்கொள்வதற்கான  சிறந்த ஆரம்பமாகுமென நான் நினைத்தேன்.  எனவே அளிக்கப்பட்ட ரொட்டித்துண்டை மிக்க மரியாதையுடன் நான் ஏற்றுக்கொண்டேன்.  தண்ணீரையும் பருகினேன்.

அப்போது ஆ! குருவே எங்கள்முன் வந்து நின்றார்.  "எதைப்பற்றி சர்ச்சை?" என்று அவர் கேட்டார்.  நடந்த எல்லாவற்றையும் நான் கூறினேன்.  அப்போது அவர், "நீ என்னுடன் வர விரும்புகிறாயா?  உனக்குத் தேவையானதை நான் காண்பிப்பேன்.  ஆனால் நான் சொல்வதில் நம்பிக்கையுடையவனே வெற்றியடைவான்" என்றார்.  மற்றவர்கள் அவர் கூறியதை ஒப்புக்கொள்ளாமல் அவரை விட்டுச் சென்றனர்.  ஆனால் நான் அவரை வணங்கி அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டேன்.  பின்னர் அவர் என்னை ஒரு கேணிக்கு அழைத்துச் சென்றார்.  என் கால்களைக் கையிற்றால் கட்டினார்.  என்னைத் தலைகீழாக பக்கத்தில் இருந்த மரத்தில் தொங்கவிட்டார்.  கிணற்று நீர் மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே தொங்கவிடப்பட்டிருந்த எனக்குத் தண்ணீர் கைகளுக்கோ வாய்க்கோ எட்டவில்லை.**

------------------------------------------------------------------------------------------- 
** நாலைந்து மணிநேரம் தலைகீழாகக் கிணற்றில் தொங்கவிடப்படுதலை உண்மையாக அப்படியே நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.  அது சமாதி நிலையைக் குறிக்கும் ஒரு ரூப விளக்கமாகும்.    உணர்வுகளில் இரண்டு வகைகள் உண்டு. 
(1 )  புலன் வழி உணர்வுகள்
(2 )  ஆன்ம வழி உணர்வுகள்
தங்கள் இலட்சியத்தை அடைய புலன்களும், மனதும் வெளியேறி தங்கள் ஆசையை அடையும்படி படைக்கப்பட்டிருக்கின்றன.  நமக்கு அப்போது இன்பமோ அல்லது துன்பமோ, தனியோ அல்லது கலப்போ ஆகிய புலன்வழி உணர்வுகள் ஏற்படுகின்றன.  ஆனால் பேரின்பநிலையோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை.  புலன்களும், மனதும் தங்கள் ஆசையிலிருந்து திருப்பிவிடப்பட்டு தலைகீழான நிலை அவைகளுக்குக் கொடுக்கப்படும்போது அதாவது உள்நோக்கி ஆன்மாவில் சங்கமிக்கும்போது மற்றொன்றான ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்.  அது சொல்லால் விவரிக்க முடியாத அளவு பேரின்பத்தையும், கலப்பற்ற மகிழ்ச்சியையும் நமக்கு அளிக்கிறது.  "நான் பேரானந்தத்தின் உச்ச நிலையில் இருந்தேன்.  நான் அனுபவித்த மகிழ்ச்சியை எங்ஙனம் கூறுவேன்" என்னும் மொழிகள் குரு அவரை சமாதிநிலையில் வைத்தாரென்றும் தண்ணீர் மேலென்பது அமைதியற்ற புலன், மனம் இவைகளுக்கு அப்பால் என்பதாம்.  

------------------------------------------------------------------------------------------- 

இவ்வாறாக என்னைத் தொங்கவிட்டு அவர் போய்விட்டார்.  எங்கு போனாரென்பது ஒருவருக்கும் தெரியாது.  நாலைந்து மணிநேரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.  என்னைத் துரிதமாக வெளியில் எடுத்து, எப்படி இருந்தது என்று கேட்டார்.  "நான் பேரானந்தத்தின் உச்சநிலையில் இருந்தேன்.  என்னைப் போன்ற முட்டாள் அந்தப் பேரானந்தத்தை எங்ஙனம் விவரிக்க முடியும்?" என்று பதில் சொன்னேன்.  இவ்விடையைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.  என்னை அவர்பால் இழுத்துத் தட்டிக்கொடுத்து என்னை அவரிடம் வைத்துக்கொண்டார்.

தாய்ப்பறவை தன் குஞ்சைப் பேணுதல் போன்று என்னை அன்புடன் கவனித்தார்.  அவருடைய குருகுலத்தில் என்னைச் சேர்த்துக்கொண்டார்.  எத்தகைய அழகுடையது அது!  அங்கே என் பெற்றோர்களை மறந்தேன்.  பாசத்தைத் துறந்தேன்.  எளிதாக விடுவிக்கப்பட்டேன்.  அவரது கழுத்தைக் கட்டியணைத்து எப்போதும் அவரையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கவேண்டுமென்று நினைத்தேன்.  அவரது ரூபம் எனது கண்மணியில் பதிக்கப்படாவிட்டால் நான் குருடாயிருப்பதே நலம்.  குருகுலம் அத்தகையது.  அதனுள் ஒருமுறை நுழைந்த யாரும் வெறுங்கையுடன் திரும்ப இயலாது.  எனது வீடு, சொத்து, தாய், தந்தை அனைத்தும் முழுக்க முழுக்க குருவேயானார்.  எனது உணர்வுகள் எல்லாம் தங்கள் இடத்தை விட்டுவிட்டு எனது கண்களிலேயே ஒருமை அடைந்தன.  எனது பார்வை அவரை மையமாகக் கொண்டிருந்தது.  எனது தியானத்தின் ஒரே இலட்சியமாக அவர் இருந்தார்.

அவரைத் தவிரப் பிறரைப்பற்றி நான் உணரவில்லை.  இவரே எனது குரு.  அவரைத் தியானம் செய்யும்போது எனது மனமும், புத்தியும் அசையாமல் நின்றுவிட்டன.  இவ்வாறாக நான் அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று.  அமைதியுடன் அவரை வணங்க வேண்டியதாயிற்று.  


நீங்கள் முழுவதும் வேறான காட்சிகளைக் காணும் மற்ற குருகுலங்கள் உள்ளன.  ஞானத்தைப் பயில்வதற்காக சீடர்கள் அங்கு செல்கிறார்கள்.  பணம், காலம், உழைப்பு இவைகளைச் செலவழிக்கிறார்கள்.  ஆனால் முடிவாக அவர்கள் வருத்தப்பட நேரிடும்.  அங்கேயுள்ள குரு தனது இரகசிய ஞானத்தைப் பற்றியும், தனது நேர்மையைப் பற்றியும் பெருமையடித்துக்கொள்கிறார்.  தனது புனிதத் தன்மையையும், தூய்மையையும் அவர் ஒரு காட்சியாக்கிகொள்கிறார்.  ஆனால் அவர் தன் உள்ளத்தில் பட்சமாய் இல்லை.  தனது புகழைப் பற்றியே அவர் பலப்படப் புகழ்ந்து பாடிக்கொள்கிறார்.  ஆனால் அவரது சொந்த மொழிகளே அடியவர்களை உருவாக்குவதில்லை.  அவர்களும் தெளிவடைவதில்லை.  தன்னையறிதலைப் பொறுத்தவரை அவரிடம் ஒன்றுமில்லை.  சீடர்களுக்கு அத்தகைய பள்ளிகள் என்ன விதத்தில் பயன்படும்?  அதனால் அவர்கள் என்ன நன்மை அடைவார்கள்?

இதற்கு முன்னர் குறிப்பிட்ட குருவானவர் வேறுவிதமானவர்.  அவரது அருளால் எவ்வித முயற்சி, படிப்புமின்றியே ஞானம் தானாகவே எனக்குப் பளிச்சிட்டது.  நான் எதையும் தேடவில்லை.  ஆனால் எனக்கு எல்லாம் வெள்ளிடைமலையென விளங்கியது.  குரு மட்டுமே 'தலைகீழ் தொங்கவிடுதல்' எவ்வாறு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை அறிவார்.

அந்நான்கு பேர்களில் ஒருவன் கர்மகர்த்தா.  அவனுக்கு எவ்வாறு சில சடங்குமுறைகளை செய்வது அல்லது செய்யாமல் இருப்பது என்று
மட்டுமே தெரியும்.  இரண்டாமவன் ஞானி.  தனது ஞானப் பெருகையில் ஊறியவன்.  மூன்றாவது ஆள் கடவுள் ஒருவரே ஆட்டுவிப்பவர் என்று நம்பி அவரிடம் தம்மை முழுமையாக சரணாக்கிவிட்ட பக்தன்.  மூவரும் விவாதித்து வாதம் பண்ணிக்கொண்டிருக்கையில் கடவுளைப் பற்றிய கேள்வி எழுந்தது.  முறையான வழிகாட்டுதல் இல்லாத அறிவுடன் அவரைத் தேடிக்கொண்டு போனார்கள்.  விவேகம், பற்றின்மை இவைகளின் அவதாரமான சாயி நால்வருள் ஒருவர்.

அவரே பிரம்ம அவதாரமாயிருந்தும் ஏன் அவர்களுடன் சேர்ந்து முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார் என்று சிலர் கேட்கலாம்.  மக்கள் நன்மையடைவதற்கும், அவர்கள் தம்மைப் பின்பற்றும்படி தாம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவுமே அவர் இதைச் செய்தார்.  தாமே ஒரு அவதாரமாயிருந்தும் கீழான வனஜாரியை மதித்து, 'உணவே கடவுள்' (அன்னம் - பிரம்மம்) என்று உறுதியான நம்பிக்கையுடன் அதை ஏற்றுக்கொண்டார்.

வனஜாரியின் விருந்தோம்பலை ஏற்காதவர்கள் எங்ஙனம் கஷ்டப்பட்டார்கள் என்றும் குருவின்றி ஞானம் அடைவது இயலாதென்பதையும் அவர் காண்பித்தார்.  ஸ்ருதி (தைத்ரீய உபநிஷதம்) நமக்கு மாதா - பிதா - குருவின் வழிபாட்டையும், புனித கிரந்தங்களைக் கற்பதையும், கற்பிக்க வேண்டுவதையும் வற்புறுத்துகின்றது.  இவைகளே நமது மனதைத் தூய்மைப்படுத்தும்.  இத்தூய்மை செய்யப்பட்டாலொழிய தன்னையறிதல் இயலாததாகும்.  உணர்சிகளோ, மனதோ, புத்தியோ ஆன்மாவை எட்டுவதில்லை.  காணுதல், அறிந்துகொள்ளுதல் இவ்விஷயத்தில் நமக்கு உதவாது.  குருவின் அருள் ஒன்றே எண்ணப்படுவதாகும்.  நமது வாழ்க்கையின் இலட்சியங்களான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவை நமது முயற்சியாலேயே அடையப்படுகிறது.  ஆனால் மோட்ஷம் (விடுதலை) குருவின் உதவியாலேயே அடையப்படுகிறது. 


சாயியின் தர்பாரில் பல மனிதர்கள் தோன்றி தங்கள் பாத்திரத்தை நடித்தார்கள்.  ஜோசியர்கள் வந்து தங்கள் ஜோசியங்களைக் கூறினார்கள்.  இளவரசர்கள், கனவான்கள், ஏழைகள், பணக்காரர்கள், சந்நியாசிகள், யோகிகள், பாடகர்கள் மற்றும் பலரும் தரிசனத்திற்காக வந்தனர்.  மஹார் (கீழ்ஜாதியினர்) கூட வந்து தனது ஜோஹாரைத் (வந்தனத்தைத்) தெரிவித்துவிட்டு சாயிபாபாவே தனது மாயிபாபா (உண்மையான பெற்றோர்) என்கிறார்.  ஜாலவித்தைக்காரன், கோந்தலிகள் (வில்லுப்பட்டுக்காரர்கள்), குருடு, நொண்டி, நாத்பன்திகள் (பாடகர்கள்), நாட்டியக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வாறாக மற்றும் பலரும் வந்தனர்.  உரிய வரவேற்பு அளிக்கப்ட்டனர்.  வனஜாரியும் தனது தருணத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்தான்.  நாம் இப்போது வேறொரு கதைக்குப் போவோம்.  
 


உண்ணாவிரதமும் திருமதி கோகலேயும்

பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை.  மற்றவர்களையும் பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை.  விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதே இல்லை.  பின்னர் அவன் எங்ஙனம் பரமார்த்திகத்தை அடையமுடியும்?  வெறும் வயிற்றுடன் கடவுள் அறியப்படமாட்டார்.  முதலில் ஆன்மா சாந்தப்படவேண்டும்.  வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்க முடியும்?  கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்?  அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்?

சுருக்கமாக, நமது எல்லா உறுப்புக்களும் அவைகட்குரிய போஷிப்பைப் பெற்று நன்றாக இருக்கும்போது கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நாம் பெற முடியும்.  எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது.  உடலுக்கும், மனதுக்கும் மிதமான போக்கே உண்மையில் நல்லது.
 


திருமதி கோகலே என்ற பெண்மணி பாபாவின் பக்தையான திருமதி காஷிபாய் கனிட்கர்  என்பவளிடமிருந்து தாதா கேல்கருக்கு ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிவந்தாள்.  அதற்கு முந்தின தினம் பாபா, தாதா கேல்கரிடம் தமது குழந்தைகளை ஷிம்காவின் (புனித நாட்கள்) போது பட்டினியாயிருப்பதைத் தாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

அடுத்த நாள் அப்பெண்மணி தாதா கேல்கருடன் சென்று பாபாவின்முன் அமர்ந்தபோது பாபா, உடனே அவளை நோக்கி, "பட்டி
னியிருக்கத் தேவையென்ன?" என்று கேட்டார்.  தாதாபட்டின் வீட்டுக்குப் போய் பூரணப் போளியைச் (கடலை மாவு, வெல்லம் சேர்ந்த கோதுமை ரொட்டி) செய்து அவர் குழந்தைகளுக்குக் கொடுத்து நீயும் உண்பாய் என்று கூறினார்.  பண்டிகை நன்னாட்கள் இருந்தன.  திருமதி கேல்கர் அப்போது வீட்டு விலக்கம் ஆகியிருந்தாள்.  தாதாபட்டின் வீட்டில் சமையல் செய்ய ஒருவரும் இல்லை, எனவே பாபாவின் அறிவுரை 'காலத்திநாற்' செய்ததாயிற்று.  திருமதி கோகலே தாதாபட்டின் வீட்டிற்குச் செல்லவேண்டியதாயிற்று.  சொல்லியபடி அப்பண்டத்தைச் செய்யவேண்டியதாயிற்று.  அன்றைக்கு அவள் சமைத்து மற்றவர்க்கும் போட்டுத் தானும் உண்டாள்.  என்ன அருமையான கதை.  எத்தகைய ஆழமான படிப்பினை!



பாபாவின் எஜமானர்


பாபா தமது பால்யப் பருவத்தின் கதை ஒன்றைப் பின்வருமாறு சொன்னார்.  "நான் சிறு பையனாக இருந்தபோது உணவுக்காக வேலை தேடிக்கொண்டிருந்தேன்.
 
பீட்காவனுக்கு சென்றேன்.  அங்கு எனக்கு எம்ப்ராய்டரி வேலை கிடைத்து.  ஒரு துன்பத்தையும் பாராது கடுமையாக உழைத்தேன்.  முதலாளி என்மீது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.  எனக்குமுன் மற்ற மூன்று பையன்களும் வேலை செய்தனர்.  முதல்வன் ரூ.50ம், இரண்டாமவன் ரூ.100ம், மூன்றாமவன் ரூ.150ம் பெற்றனர்.  இவர்களின் மொத்தத் தொகையைப் போல் இரண்டு பங்கு நான் பெற்றேன்.  அதாவது ரூ.600ஐப் பெற்றேன்.  எனது புதிசாதுர்யத்தைக் கண்ட முதலாளி என்னை நேசித்தார், துதித்தார்.  முழுஆடை, தலைக்கு டர்பன், உடம்புக்கு ஷேலா(சால்வை) முதலியவற்றைத் தந்து என்னைக் கௌரவித்தார்.  இவற்றி உபயோகிக்காமல் நான் பத்திரமாக வைத்திருந்தேன்.  எந்த ஒரு மனிதன் அளிப்பதும் நெடுநாள் இருப்பதில்லை.  அது முழுமையுடையதுமல்ல.  ஆனால் எனது எஜமானர் (கடவுள்) அளிப்பதோ காலமுடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறது.  அவரின் வெகுமதியை வேறெந்த வெகுமதியுடனும் ஒப்பிடமுடியாது.  எனது எஜமானரோ, 'எடுத்துக்கொள், எடுத்துகொள்' என்கிறார்.  ஆனால் எல்லோரும் என்னிடம் வந்து 'கொடு, கொடு' என்கிறார்கள்.  நான் கூறுவதன் பொருளை ஒருவரும் கவனத்துடன் பார்ப்பதில்லை.

எனது எஜமானரின் கஜானா நிரம்பியிருக்கிறது.  நிரம்பி வழிகிறது.  நான் கூறுவதாவது, வண்டிப் பாரங்களில் இச்செல்வத்தை எடுத்துச் செல்லுங்கள்.  சத்தியவதியான தாயாரின் ஆசீர்வதிக்கப்பட்ட மகன் இச்செல்வத்தால் தன்னை நிரப்பிக் கொள்ளட்டும்.  எனது பக்கீரின் திறமை, எனது பகவானின் லீலை, எனது எஜமானரின் இயகையான செயல்வன்மை இவை மிகவும் நூதனமானவை.  என்னைப்பற்றி என்ன?  உடம்பு (மண்) மண்ணுடன் கலந்துவிடும்.  இந்நேரம் இனிமேல் மீண்டும் வராது.  நான் எங்கோ செல்கிறேன்.  எங்கோ அமர்கிறேன்.  மாயை என்னைக் கடுமையாகத் தொல்லைப்படுத்துகிறது.  இருப்பினும் எனது மாந்தர்களுக்காக எப்போது நான், ஆசைபூண்டு கவலைப்படுகிறேன்.  எதையாவது (ஆன்மிக முயற்சி) செய்யும் ஒருவன் அதன் பழத்தை அறுவடை செய்கிறான்.  எனது இம்மொழிகளைக் கேட்பவன் விலைமதிப்பற்ற சந்தோஷத்தைப் பெறுகிறான்".   

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

Thursday, 20 September 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 31

(1)  சந்நியாசி வியஜானந்த்
(2)  பாலாராம் மான்கர்
(3)  நூல்கர்
(4)  மேகா
(5)  புலி  

இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்


முன்னுரை

தனது மரணத் தறுவாயில் ஒருவனுக்குள்ள ஆசை அல்லது எண்ணம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.  கிருஷ்ணரும் கீதையில், "எவன் என்னை முடியுந்தறுவாயில் எண்ணுகிறானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான்.  அத்தருணத்தில் வேறெதையும்பற்றி எண்ணுபவன் அவன் விரும்பியபடியே செல்கிறான்" என்று கூறுகிறார்.  நமது கடைசித் தறுவாயில் ஒரு குறிப்பிட்ட நல்லெண்ணத்தை நினைவில்கொள்ளவேண்டும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கமுடியாது.  இல்லை என்பதைவிடப் பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் நாம் பயந்து பீதியடைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே எப்போதாவதோ அல்லது நமது கடைசித் தருணத்திலோ கொள்ளவேண்டிய நாம் விரும்புகிற புனித நினைவுகளை நம் மனதில் நிலைப்படுத்த நிலையான பயிற்சி அவசியம்.  எனவே கிளம்புவதற்கான இறுதிநேரம் வந்தபோது குழப்பம் அடையாமல் இருப்பதற்காக, எப்போதும் இறைவனை நினைவுகூர்ந்து அவனது நாமத்தைச் சதாகாலம் உச்சரிக்குமாறு எல்லா ஞானிகளும் போதிக்கிறார்கள்.  அடியவர்கள் தம்மைத்தாமே முழுமையாக ஞானிகளிடம் அர்ப்பணித்து விடுகிறார்கள்.  சர்வமும் அறிந்த ஞானிகள் அவர்களது கடைசிக் காலத்தில் அவர்களை வழிநடத்தி உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.  இம்மாதிரியான சில நிகழ்சிகள் பின்வருமாறு:



சந்நியாசி விஜயானந்


சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்ற ஞானி மானஸரோவருக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார்.  வழியில் பாபாவின் புகழைக் கேள்வியுற்று ஷீர்டியில் தங்கினார்.  அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமியைச் சந்தித்தார்.  மானஸரோவர் பயணத்தைப்பற்றி அவரிடம் விசாரித்தார்.  கங்கோத்ரிக்கு மேல் மானஸரோவர் 500மைல் உயரத்திலுள்ளது என்றும் ஏராளமான பனி, 50 காத தூரத்திற்கு ஒருமுறை மொழிமாற்றம், வழியில் யாத்ரீகர்களுக்கு ஏராளமாக தொல்லை கொடுக்கும் பூட்டான் மக்களின் சந்தேக குணங்கள் போன்ற யாத்திரையிலுள்ள கஷ்டங்களை விவரித்தார்.

இதைச் செவிமடுத்த துறவி மனந்தளர்வுற்றார்.  தமது விஜயத்தை இரத்துச் செய்தார்.  அவர் பாபாவிடம் சென்று சாஷ்டாங்கமாகப் பணிந்தபோது பாபா கோபாவேஷம் அடைந்து கூறினார், "அந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள், அவரின் நட்பு பயனற்றது".

பாபாவின் குணத்தை அத்துறவி அறியார்.  ஆயினும் அங்கு அமர்ந்து அங்கே நடந்துகொண்டிருந்த நிகழ்சிகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்.  அது காலைநேர தர்பார்.  மசூதியில் கூட்டம் அதிகமாய் இருந்தது.  பாபா பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டார்.  சிலர் அவரின் கால்களைக் கழுவிக்கொண்டிருந்தனர்.  சிலர் அவர் கால் கட்டைவிரலினின்று புனிதநீரை எடுத்து மனநிறைவுடன் குடித்துக்கொண்டிருந்தனர்.  சிலர் சந்தனம் பூசினர்.  சிலர் அவர்தம் புனிதமேனிக்கு நறுமணம் தடவினர்.  குலம், ஆசாரம் இவற்றை மறந்து அனைவரும் வழிபாடு செய்தனர்.  பாபா அத்துறவியின் மேல் கோபம் கொண்டவராய் இருந்தாலும் அவர் பாபாவின்பால் பாசம் நிரம்பியவராய் மசூதியைவிட்டுப் போகவில்லை.

ஷீர்டியில் அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.  சென்னையிலிருந்து அப்போது அவருடைய தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது.  அவர் மிகவும் மனம் தளர்ந்து, தமது தாயார் அருகில் செல்ல விரும்பினார்.  ஆனால் அவரால் பாபாவின் அனுமதியின்றிச் செல்ல முடியாது.  எனவே தமது கரத்தில் கடிதத்துடன் பாபாவைக்கண்டு வீடு திரும்ப அனுமதி கேட்டார்.  வருங்காலத்தை அறிந்த எங்கும்நிறை பாபா அவரிடம் "உன்னுடைய தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானாய்?  சொந்தபந்தங்களும், ஆபாசங்களும் காவி உடைக்கு ஒத்துவராது.  உன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் சில நாட்கள் காத்திரு.  வாதாவில் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள்.  உனது கதவுகளை நன்றாகத் தாழிடு.  அதிக ஜாக்கிரதையாக இரு.  திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவர்.  செல்வமும், சுபிட்சமும் நிலையற்றவை.  இவ்வுடல் அழிவிற்கும்,  மரணத்திற்கும் உட்பட்டது.  இதை உணர்ந்து இம்மை - மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடைமையைச் செய்.  இவ்வாறாகச் செய்து, எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவினின்றும் விடுபட்டு 'பேரானந்தப் பெருநிலை' எய்துகிறான்.  அன்புடனும், பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ, பரமாத்மா அவனுக்கு ஓடிச்சென்று உதவி புரிகிறார்.  உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம்.  எனவே நீ இங்கு வந்துள்ளாய்.  இப்போது நான் சொல்வதைக் கவனி, உனது அந்திம வாழ்க்கையை உணர்.  ஆசைகளற்று நாளைமுதல் பாகவதத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கு.  மூன்றுமுறை சப்தாஹம் செய்.  அதாவது பக்தி பூர்வமாக மூன்றுவாரம் மூன்றுமுறை பாராயணம் செய்க.  பரமாத்மா உன்னிடம் மகிழ்வெய்தி நினது கவலைகளை அழிப்பார்.  உனது துயர் நிலை மறைந்து நீ அமைதியுறுவாய்" என்று கூறினார். 

அவரது முடிவு நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து பாபா இந்த சிகிச்சையை தேர்ந்தளித்தார்.  மரணத் தெய்வமான எமனை மகிழ்விக்கும் 'ராம விஜயம்' படிக்கும்படி செய்தார்.  அடுத்தநாள் காலை குளித்து மற்ற தூய சம்பிரதாயங்களைச் செய்த பிறகு லெண்டித் தோட்டத்திலுள்ள ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று பாகவதம் படிக்கத் தொடங்கினார்.  இரண்டுமுறை பாகவதப் பாராயணம் செய்தார்.  அதன் பின்னர் மிகச் சோர்வடைந்தார்.  வாதாவிற்குத் திரும்பினார்.  இரண்டு நாட்கள் தமது இருப்பிடத்தில் தங்கினார்.

மூறாவது நாள் 'பக்கீர் பாபா' என்ற படேபாபாவின் மடியில் உயிர் துறந்தார்.  பாபா அவரது உடலை ஒருநாளைக்கு ஒரு நல்ல காரணம் கருதி பாதுகாக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.  பின்னர் போலீஸ் வந்து உரிய விசாரணை செய்து, உடலை அடக்கம் செய்யும்படி அனுமதி அளித்தனர்.  உரிய இடத்தில் தக்க மரியாதையுடன் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.  இவ்விதமாக பாபா துறவிக்கு உதவி அளித்து, அவருக்கு நற்கதியளித்தார்.



பாலாராம் மான்கர்

பாலாராம் மான்கர் என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர் தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார்.  வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்புவித்துவிட்டு, வீட்டைத் துறந்து ஷீர்டி சென்று பாபாவுடன் வாழ்ந்து வந்தார்.  பாபா அவர்தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார்.  அதை அவர் இவ்வாறாகச் செய்தார்.  அவருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி கோரினார்.  மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துசென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய் இருந்தார்.  ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கைமுறையைக் கொடுத்துள்ளதாக உறுதிகூறி அவரைத் தேற்றினார்.

ஒரு நாளைக்கு மூன்றுமுறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.  பாபாவின் சொற்களை நம்பி மான்கர்
மச்சிந்த்ரகட்டுக்கு வந்தார்.  இன்பமான காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் பாபா அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார்.  சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக் காட்சி அவருக்கு ஏற்பட்டது.  அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதிநிலையில் அல்லது தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள்.  ஆனால் மான்கரைப்
பொறுத்தமட்டிலோ, தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அதை அவர் பெற்றார்.  பாபா தாமே அவர்முன் தோன்றினார்.  மான்கர் அவரைப் பார்த்தது மட்டுமல்லாது தான் ஏன் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் கேட்டார்.

பாபா பதில் அளிக்கையில், "ஷீர்டியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன.  உனது நிலையற்ற மனதை அடக்கவே இங்கு உன்னை அனுப்பினேன்.  நான் ஷீர்டியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய்.  பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம் ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய்.  இப்போது நீ கண்ணார ஷீர்டியில் கண்ட அதே மனிதர்தானா இவர் என்று தீர்மானித்துக்கொள்.  இந்த காரணத்திற்காகத்தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்" என்று கூறினார்.  குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் மான்கர்
மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார்.  புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார்.  ஆனால் அவர் டிக்கெட் பெற புக்கிங் ஆபீசுக்கு சென்றபோது மிகவும் கூட்டமாக இருப்பதைக் கண்டார்.  விரைவில் அவரால் டிக்கெட் பெற முடியவில்லை.

அப்போது தனது இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில் வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்?" எனக் கேட்டார்.  மான்கர், "தாதருக்கு" என்று பதிலளித்தார்.  அவர், "தவுசெய்து என்னுடைய தாதர் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.  இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர் பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று சொன்னார்.  மான்கர் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.  பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார்.  மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை.  ஸ்டேஷனைவிட்டு வண்டி போகும்வரை மான்கர் அவருக்காகக் காத்திருந்தார்.  ஆனால் அவரைப்பற்றி எவ்விதச் சுவட்டையும் அவர் காணவில்லை. 

இது மான்கர் விநோதமாகப் பெற்ற இரண்டாவது காட்சியாகும்.  மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் ஷீர்டிக்குத் திரும்பி பாபாவின் ஏவலையும், சேவையையும் செய்துவந்தார்.  அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார்.  பாபாவின் முன்னிலையிலேயே அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும் நல்லதிர்ஷ்டம் படைத்திருந்தார்.



தாத்யா சாஹேப் நூ
ல்கர்   

தாத்யா சாஹேப் குறித்து, ஷீர்டியில் உயிர் நீத்தார் என்று மட்டுமே ஹேமத்பந்த் குறிப்பிட்டுள்ளார்.  சாயிலீலா சஞ்சிகையில் அவரைப்பற்றி வெளியானதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.  1909ஆம் ஆண்டு நானா சாஹேப் அங்கு மம்லதராக இருக்கும்போது பண்டரீபுரத்தில் தாத்யா சாஹேப் ஒரு சப்-ஜட்ஜாக இருந்தார்.  இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினர்.  தாத்யா சாஹேப் ஞானிகளை நம்புவதில்லை.  ஆனால் நானா சாஹேப் அவர்களை விரும்பினார்.  சாயிபாபாவின் லீலைகளை நானா சாஹேப் அவருக்குக் கூறினார்.  ஷீர்டிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்க்க அவரை வற்புறுத்தினார்.  முடிவாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் ஷீர்டிக்குப் போகச் சம்மதித்தார்.

(1)  ஒரு பிராமண சமையற்காரர் அவருக்குக் கிடைக்கவேண்டும்
(2)  அன்பளிப்புக்காக நல்ல நாக்பூர் ஆரஞ்சுகளைப் பெறவேண்டும்

இவ்விரண்டு நிபந்தனைகளும் தெய்வாதீனமாக நிறைவேறின.  நானா சாஹேபிடம் சேவைக்காக ஒரு பிராமணர் வந்தார்.  அவர் தாத்யா சாஹேபிடம் அனுப்பப்பட்டார்.  தாத்யா சாஹேப் நூறு அழகிய ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய பார்சலைப் பெற்றார்.  அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. 

நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தாத்யா சாஹேப் ஷீர்டிக்குப் போகவேண்டியதாயிற்று.  முதலில் பாபா அவரிடம் மிகவும் கோபாவேஷம் அடைந்தார்.  ஆனால் படிப்படியாக தாத்யா சாஹேப் தமது அனுபவங்களால் பாபா கடவுள் அவதாரமே என்று உறுதி பெற்றார்.  பாபாவிடம் அத்தகைய அன்பு பூண்டு தனது மரணம்வரை அங்கேயே தங்கினார்.  அவருடைய முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்போது அவரிடம் புனித வேதங்கள் படிக்கப்பட்டன.  முடியுந்தறுவாயில் பாபாவின் பாததீர்த்தம் கொண்டுவரப்பட்டு குடிப்பதற்காக அவரிடம் தரப்பட்டது.  பாபா அவருடைய மரணத்தைக் கேள்விப்பட்டு, "ஓ! தாத்யா, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.  அவர் மீண்டும் பிறக்கமாட்டார்" என்றார்.



 

மேகா

மேகாவின் கதை முன்னாலேயே 28 ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது.  மேகா இறந்தபின்பு கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல்மீது பொழிந்தார்.  சடங்குகள் செய்யப்பட்ட பிறகு சாதாரண மனிதர்களைப் போன்று பாபாவின் கண்களினின்றும் நீர் வழிந்தது.  பெருந்துக்கத்தாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டார்.  பின்னர் அவரது உடம்பை மலரால் மூடி நெருங்கிய உறவினரைப் போல் அழுதபின்பு பாபா மசூதிக்குத் திரும்பினார்.

மனிதர்களுக்குப் பல ஞானிகள் சத்கதி அளிப்பது கண்ணுறப்பட்டிருக்கிறது.  ஆனால் சாயிபாபாவின் பெருமை ஒப்புவமையற்றது.



புலி

பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்குமுன் ஷீர்டியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது.  ஒரு கிராமப்புற வண்டி வந்து மசூதிக்கு முன்னால் நின்றது.  தனது பயங்கர முகம் வண்டியின் பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது.  அது ஏதோவொரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது.  அதனுடைய காவலாளர்களான மூன்று தெர்வஷிகள் அதை ஊரூராக எடுத்துச் சென்று காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர்.  அதுவே அவர்களின் ஜீவனோபாயமாகும்.  அந்தப் புலி அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனைகளினின்று அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட பலவித சிகிச்சைமுறைகளும் பலனற்றதாய்விட்டன.

அப்போது அவர்கள் பாபாவின் புகழைக் கேள்வியுற்று மிருகத்துடன் அவரைப் பார்க்க வந்தனர்.  தங்கள் கைகளில் சங்கிலியுடன் அதை அவர்க
ள் கீழிறக்கி, கதவருகில் அதை நிற்கும்படி செய்தனர்.  அது இயற்கையிலேயே குரூரமானது.  அத்துடன் நோய்வாய்ப்பட்டது.  எனவே அது இருப்புக்கொள்ளாமல் இருந்தது.  மக்கள் அதை பயத்துடனும், வியப்புடனும் பார்க்கத் துவங்கினர்.  தெர்வஷிகள் உள்ளேசென்று புலியைப் பற்றிய அனைத்தையும் பாபாவுக்குக் கூறி, அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர்.  புலி படிகளை நெருங்கியதும் பாபாவின் ஒளியினால் அதிர்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது.  பாபாவும், புலியும் சந்தித்துக்கொண்டபோது அது படியேறி பாபாவைப் பாசத்துடன் நோக்கியது.  தனது வாலில் உள்ள மயிர்க்கொத்தை ஆட்டி, அதை மூன்றுமுறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்தது.

அது இறந்தது கண்டு தெர்வஷிகள் முதலில் பெருந்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர்.  ஆனால் பக்குவமடைந்த எண்ணத்திற்குப்பின் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பினர்.  புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்ததால் அது தனது முடிவை நெருங்கிகொண்டிருந்தது என்றும், அது மிகுந்த தகைமை உடையதாய் இருந்ததால் பாபாவின் பாதாரவிந்தகளில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள்.  அது அவர்களின் கடனாளி, கடன் தீர்ந்ததும் விடுதலையடைந்து தன் முடிவை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பித்தது. (ஷீர்டியில் மஹாதேவ் மந்திரின் எதிரில் இந்தப் புலியின் சமாதி உள்ளது)  ஏதேனும் ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்ததாகிவிடுகிறது.  அத்தகைய ஜந்துக்களைப் பொறுத்தவரை அவைகள் புண்ணியசாலிகளாக இருந்தாலன்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்சிகரமான முடிவை எய்தவியலும்?!



ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

Thursday, 13 September 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 30

(1)  வணியைச் சேர்ந்த காகாஜி வைத்யா
(2)  பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்

இவ்வத்தியாயத்தில் ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட இன்னும் இரண்டு அடியவர்களைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.



முன்னுரை

கருணையின் இருப்பிடமாம் ஷீர்டி சாயிராம், தம் அடியவர்களிடம் பாசமும், அளவில்லா நேசமும் காட்டி அவருடைய வெறும் தரிசனத்தாலேயே இச்சம்சார வாழ்க்கையில் அவர்களுக்குள்ள பயத்தைப் போக்குகிறார்.  அவர்களின் பெருங்கேடுகளை அழிக்கிறார்.  அவர் முதலில் அருவமாய் இருந்தார்.  ஆயின் தம் அடியவர்களின் பக்தியின் பொருட்டு ஓர் உருவத்தை எடுக்க வேண்டியவரானார்.  ஞானிகளின் வருகையின் காரணம் அடியவர்களுக்கு 'விடுதலை' - 'தன்னையறிதல்' அளிப்பதேயாகும்.  அவர்களி
ல் ஸ்ரேஷ்டரான சாயிக்கு அக்காரணம் தவிக்க இயலாதது.  எவர், அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது.  அவர்தம் பாதாரவிந்தங்களை நினைத்துக்கொண்டு பிராமணர்கள் புனித க்ஷேத்திரங்களினின்றும், வந்து அவர்தம் சன்னிதானத்தில் வேதங்களை ஓதுகிறார்கள்.  காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள்.  பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் 'பக்தி' என்றால் என்ன என்பதை அறியோம்.  ஆனால் மற்றெல்லோரும் கைவிட்டபோதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம்.  யாரை அவர் ஆச்சீர்வதிக்கிறாரோ அவர்கள் எல்லையற்ற வலிமைபெற்று, மெய் - பொய் ஆகியவற்றைப் பகுத்துணரும் ஞானம் எய்துகிறார்கள்.      

தம் அடியவர்களின் ஆசையை சாயி முழுமையாக அறிகிறார்.  அவைகளை நிறைவேற்றுகிறார்.  எனவே அவர்கள் விரும்பியதைப் பெற்று நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்.  எனவே அவரைப் பிரார்த்திக்கிறோம்.  அவர்முன் வீழ்ந்து வணங்குகிறோம்.  நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக்கொண்டு கவலைகளினின்றும் நம்மை அவர் விடுவிக்கட்டும்.  பெருந்துயரங்களால் அவதியுற்றுக்கொண்டிருப்பவன் சாயியை இங்ஙனம் நினைத்துத் தியானிக்கிறான்.  அவரது அருளாலே அவன் மனம் அமைதியடைகிறது.

இந்த சாயி கருணைக்கடல், தம்மீது அவர் கருணை பொழிந்ததன் விழைவே இந்த சத்சரிதம் என்கிறார் ஹேமத்பந்த்.  அல்லாவிடில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது!  யார்தான் இவ்வேலையை மேற்கொள்ள இயலும்!  ஆனால் சாயி எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதால் ஹேமத்பந்த் எவ்வித பாரத்தையும் உணரவில்லை.  இது குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.  அவரது பேச்சையும், பேனாவையும் உணர்வூட்ட ஆற்றல் மிக்க ஞானஒளி இருக்கும்போது அவர் ஏன் சந்தேகம் கொள்ளவேண்டும்?  அல்லது ஏன் எவ்விதக் கவலையும் கொள்ளவேண்டும்?  இது அவர்தம் முன்வினைப் புண்ணியவசத்தால் ஸ்ரீசாயி அவர்கள் இச்சேவைக்குத் தம்மை ஆட்படுத்தி, ஆசீ
ர்வதித்த அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்கிறார்.

இந்தப் பின்வரும் நிகழ்ச்சி ஓர் சுவையான கதை மட்டுமன்று, புனிதமான அமுதமுமாகும்.  இதைப் பருகுபவன் சாயியின் பெருமையையும் அவர்தம் எங்கும்நிறை தன்மையையும் உணர்வான்.  விவாதிக்க, விமர்சிக்க விரும்புவோர் இந்தக் கதைகளுக்குச் செல்லக்கூடாது.  இங்கு தேவையாய் உள்ளது விவாதமல்ல.  அளவற்ற அன்பும், பக்தியுமேயாம்.  கற்றறிந்தோர், பக்தியுடையோர், உண்மையுடன் நம்பிக்கை கொண்டுள்ளோர் மட்டுமின்றி ஞானிகளின் சேவகர் என்று தம்மைக் கருதுவோர்களும் இக்கதைகளை விரும்பிப் பாராட்டுவர். 

மற்றவர்கள் அவைகளைக் கற்பனைக் கதைகள் என்றுகொள்வர்.  சாயியின் அதிர்ஷ்டம் வாய்ந்த அடியார்கள் சாயி லீலைகளைக் கற்பகதருவாகக் கருதுவர்.  இந்த சாயி லீலைகளின் அமிர்தத்தைப் பருகுவது அறியாமையில் மூழ்கியுள்ள ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும்.  இல்லறத்தார்க்கு மனநிறைவளிக்கும்.  இலட்சியவாதிகளுக்குச் சாதனை கைகூடும்.  இது பற்றிய கதையைக் கவனிப்போம். 



காகாஜி வைத்யா

நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணியில் காகாஜி வைத்யா என்பவர் வாழ்ந்து வந்தார்.  அவர் அங்கே சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர்.  சாதகமற்ற சூழ்நிலைகளாலும், துயரங்களாலும் அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார்.  இத்தகைய சூழ்நிலையில் ஒருநாள் மாலை தேவியின் கோவிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும் பக்திபூர்வமாக, மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.  தேவி அவரது பக்தியால் மிகவும் மகிழ்ந்து அதேநாள் இரவு கனவில் தோன்றி அவரிடம் கூறினாள், "பாபாவிடம் நீ செல்வாயாக, பின் உன் மனம் அமைதியடையும்".  இந்த பாபா யார் என்று அவளிடமிருந்து அறிவதில் காகாஜி ஆர்வமுற்றார்.  ஆனால் எவ்வித விளக்கமும் பெறும்முன்னரே தூக்கம் க
லைந்து எழுந்துவிட்டார்.  தேவி, தன்னைக் காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார். 

சிறிது எண்ணத்திற்குப்பின் இந்த பாபா த்ரயம்பகேஸ்வராக (சிவனாக) இருக்கவேண்டும் என முடிவு கட்டினார்.  எனவே அவர்
த்ரயம்பத்திற்கு
ச் (நாசிக் ஜில்லா) சென்றார்.  அங்கு பத்து நாட்கள் தங்கினார்.  அவ்வமயம் தினந்தோறும் அதிகாலை குளித்து, 'ஸ்ரீருத்ரம்' ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களையும் செய்தார்.  இவைகள் எல்லாம் செய்தும்கூட முன்போலவே அவர் சலனமுற்றவராகவே இருந்தார்.  பின்னர் அவர் தமது இருப்பிடத்திற்குச் சென்று மீண்டும் இரங்கத்தக்க நிலையில் வேண்டினார்.  அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, "நீ ஏன் த்ரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்?  நான் பாபா என்று கூறியது ஷீர்டியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை" என்றாள்.

எப்போது ஷீர்டிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் இப்போதைய கேள்வியாக இருந்தது.  ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார்.  உண்மையில் 'ஸந்த்'தும் (ஞானி), 'அனந்த்'தும் (கடவுள்) ஒருவரே.  எள்ளளவும் அவர்களிடையே வேறுபாடு இல்லை.  ஒரு ஞானியைப் பார்க்க அவனாகவே செல்கிறான் என்று ஒருவன் நினைத்தால் அது வெறும் டம்பமேயாகும்.  ஞானியின் அருளின்றி எவரே அவரை அணுகித் தரிசிக்க இயலும்?!  மரத்தின் இலைகூட அவன் ஆணையின்றி அசைவதில்லை.  ஞானியிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறானோ, அவ்வளவு
விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும்.  யாரையாவது விருந்துக்கு அழைக்கும் ஒருவன் அவரை வரவேற்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்கிறான்.  காகாஜி சம்பந்தப்பட்ட விஷயமும் அங்ஙனமே நடந்தது.



ஷாமாவின் வேண்டுதல்கள்
ஷீர்டிக்கு தமது விஷயத்தைப் பற்றி காகாஜி நினைத்துக்கொண்டிருக்கையில் அவரை அழைத்துச்செல்ல ஒருவர் அவர் இருப்பிடத்திற்கே வந்தார்.  அவர் வேறு யாருமல்ல, பாபாவின் மிக்க நெருங்கிய பழக்கமுள்ள அடியவரான ஷாமாவே ஆவார்.  இத்தருணத்தில் அவர் வணிக்கு எங்ஙனம் வந்தார் என்பதைத் தற்போது கவனிக்கலாம்.  ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.  அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான வணியில் உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.

தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள்.  அத்தருணத்தில் தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள்.  இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன.  அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்து அவரது கவனத்தை ஈர்ந்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள்.  சிலநாட்களுக்குப் பின்னர் ஷாமா இவ்வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார்.  இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்தன.

இத்தருணத்தில் ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார்.  ஸ்ரீமான் பூட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின.  அனைவரும் மகிழ்ந்தனர்.  ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார்.  அப்போது அவரது தாயாரின் வேண்டுதல்களை அவரின் அண்ணன் அவளின் மரணப்படுக்கையில் நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  எனவே கடவுள் அவர்கள்மீது மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.  பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவர் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார்.  மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் ஆபத்தானது என எண்ணி ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கச் சொன்னார்.

பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவர் முன்னர் இரண்டு வெள்ளி ஸ்தனங்களையும் வைத்து ஏற்றுக்கொண்டு தம்மை வேண்டுதல்களினின்று விடுவிக்கும்படி (ஏனெனில், பாபாவே ஷாமாவுக்கு சப்தஷ்ரிங்கி தெய்வம்) வேண்டிக்கொண்டார்.  சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் அவரையே சமர்ப்பிக்கும்படியும் பாபா வற்புறுத்தினார்.  பாபாவின் அனுமதியையும், உதியையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார்.  அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார்.  காகாஜி அப்போதுதான் பாபாவைப் பார்க்க மிக்க கவலையுள்ளவராக இருந்தார்.  அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார்.  எத்தகைய வியத்தகு ஒற்றுமை இது! 

காகாஜி அவரை யார் அவர் என்றும் எப்போது அவர் வந்தார் என்றும் விசாரித்தார்.  அவர் ஷீர்டியிலிருந்து வந்திருக்கிறார் என்றறிந்தவுடன் உடனே அவரைக் கட்டியணைத்துக்கொண்டார்.  அன்பால் அவர் அந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தார்.  பின்னர் அவர்கள் சாயியின் லீலைகளைப் பற்றிப் பேசினர்.  ஷாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றியபின்னர் இருவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.  காகாஜி மசூதிக்குச் சென்று பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார்.  உடனே அவர் கண்கள் குளமாயின.  அவர் அமைதியுற்றார்.

தேவியின் காட்சியின்படியே பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாயும், அடக்கமாகவும் ஆயிற்று.  தமது மனதில் காகாஜி கீழ்கண்டவாறு
எண்ண ஆரம்பித்தார், "என்ன வியத்தகு சக்தி இது!  பாபா ஒன்றும் பேசவில்லை.  எவ்விதக் கேள்வி பதிலும் இல்லை.  ஆசீர்வதிக்கவில்லை.  வெறும் தரிசனம் ஒன்றே இவ்விதமாக மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது.  எனவே அமைதியின்மை அவரது வெறும் தரிசனத்தாலேயே மறைந்து 'இன்ப உணர்வு' எனக்கு வந்திருக்கிறது.  இதுவே 'தரிசனத்தின் பெருமை' எனப்படுவது".  அவரது பார்வை சாயியின் பாதங்களில் நிலைகொண்டது.  அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலவில்லை.  பாபாவின் லீலைகளைக் கேட்டு கரைகாணா மகிழ்ச்சியடைந்தார்.  பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார்.  கலப்பற்ற இன்பத்தை அவர் எய்தினார்.  அங்கு அவர் பன்னிரெண்டு நாட்கள் தங்கி இருந்தார்.  பாபாவிடம் விடைபெற்று உதி, ஆசீர்வாதம் இவைகளுடன் வீடு திரும்பினார்.



ரஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்

அதிகாலை நேரங்களில் நாம் காணும்
கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று சொல்லப்படுகிறது.  அம்மாதிரி இருக்கலாம்.  ஆனால் பாபாவின் கனவுகட்குக் காலநியதியில்லை.  நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்குங்கால் - ஒருநாள் மாலை பாபா, காகா சாஹேப் தீஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச் சென்று, தாம் நெடுநாள் குஷால்சந்தை பார்க்காத காரணத்தால் அவரை ஷீர்டிக்கு அழைத்து வருமாறு கூறினார்.  அங்ஙனமே காகா சாஹேப் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின் செய்தியைத் தெரிவித்தார்.  அதைக்கேட்டு குஷால்சந்த் ஆச்சரியமடைந்தார். 

அன்று மதியம் உண்டபின் சிறுதுயில் கொண்டிருந்தபோது, பாபா அவர் கனவில் தோன்றி உடனே ஷீர்டிக்கு வரும்படி கூறினார்.  பக்கத்தில் தமது குதிரை இல்லாததால், தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும்படியாக அனுப்பியிருந்தார்.  அவருடைய மகன் கிராம எல்லைக்குப் போய்க்கொண்டிருந்தபோது தீஷித்தின் வண்டி எதிரே வந்தது.  தீஷித் குஷால்சந்தை அழைத்துவரவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார்.  பின் இருவரும் ஷீர்டி திரும்பினர்.  குஷால்சந்த் பாபாவைக் கண்டார்.  அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.  பாபாவின் இந்த லீலையைக் கண்டு குஷால்சந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.



பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்

 
பம்பாயைச் சேர்ந்த ராம்லால் என்ற பஞ்சாபி பிராமணர் ஒரு கனவு கண்டார்.  அதில் பாபா தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறினார்.  காட்சியில் அவர் ஒரு மஹந்த் (மஹான்) ஆகத் தோன்றினார்.  ஆனால் அவர் எங்கிருப்பார் என ராம்லால் அறியார்.  பாபாவைச் சென்று பார்க்க எண்ணினார்.  ஆனால் அவரது விலாசத்தை அறியார்.  என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை.  ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான்.  இந்த விஷயத்தில் அதுவே நடந்தது.

அதேநாள் மாலை, வீதிகளில் மெதுவாக நடந்துகொண்டிருக்குபோது பாபாவின் ஒரு படத்தை ஒரு கடையில் அவர் கண்டார்.  அவர் கனவில் கண்ட மஹானின் உருவாம்சங்கள் இப்படத்துடன் மிகப்பொருத்தமாக ஒன்றின.  விசாரித்ததில் அவர் ஷீர்டியைச் சேர்ந்த சாயிபாபா எனத் தெரிந்துகொண்டார்.  ஷீர்டிக்கு உடனே சென்றார்.  தனது இறுதிக்காலம்வரை அங்கேயே தங்கினார். 

தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா ஷீர்டிக்குத் தமது அடியவர்களைக் கொணர்ந்தார்.  அவர்களின் ஆத்மார்த்த, லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
    

Thursday, 6 September 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 29

(1)  சென்னை பஜனை சங்கம்
(2)  டெண்டுல்கர் (தகப்பனாரும் மகனும்)
(3)  டாக்டர் கேப்டன் ஹாடே
(4)  வாமன் நார்வேகர்
          ஆகியோரின் கதைகள்


இந்த அத்தியாயம் சாயிபாபாவைப் பற்றிய மற்ற பல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது.



சென்னை பஜனை சங்கம்

1916ஆம் ஆண்டில் இந்தக் குழு காசிக்குத் தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது.  ஒரு மனிதர், அவர் மனைவி, மகள், மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது.  துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை.  போகும் வழியில் அகமத்நகர் ஜில்லா கோபர்காவன் தாலுக்காவிலுள்ள ஷீர்டியில், தமது பக்தர்களுக்கும், அங்கு சென்று தங்களது திறமைகளைக் காட்டிய திறமைசாலிகளுக்கும் தினந்தோறும் பணத்தை விநியோகித்துவரும் தாராளமும், அமைதியும், சாந்தியும் உடைய பெரும்ஞானி ஒருவர் இருக்கிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டனர்.

சாயிபாபாவால் தஷிணையாக ஏராளமான பணம் தினந்தோறும் சேகரிக்கப்பட்டது.  இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின் மகளான அமனி என்ற 3 வயது குழந்தைக்குத் தினந்தோறும் ரூ.1ம், வேறு சிலருக்குத் தினந்தோறும்
ரூ.2 முதல் ரூ.5 வரையும், அமனியின் தாயாருக்குத் தினந்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், சமயத்தில் ரூ.50 கூட அவர் வினியோகித்தார்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அந்தக் கோஷ்டி ஷீர்டிக்கு வந்து தங்கியது.  அக்குழு மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம் பாடியது.  ஆனால் அந்தரங்கமாக அவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டனர். அக்கோஷ்டியில் மூவர் பேராசை பிடித்தவர்களாய் இருந்தனர்.  ஆனால் அவ்வீட்டுத் தலைவியின் குணம் வேறுபட்டதாய் இருந்தது.  அவளுக்கு பாபாவின் மேல் அன்பும், பிரியமும் இருந்தது.  ஒருநாள் மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில் பெருமகிழ்வடைந்த பாபா அவளுக்கு அவளது இஷ்ட தெய்வக் காட்சியை அளித்தார்.  வழக்கப்படி சாயிநாதனுக்குப் பதில் சீதாநாதனாக (ராமனாக) காட்சியளித்தார்.  அவளது இஷ்ட தெய்வத்தைக் கண்டு மிகமிக உருகிப்போய்விட்டாள்.  கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள்.  மக்கள் அவளது ஆனந்த நிலையைக் கண்டு அதிசயமுற்றனர்.  ஆனால் அதன் காரணத்தை அவர்கள் அறிய இயலவில்லை.

பின்னர் மாலைப் பொழுதில் எல்லாவற்றையும் அவள் தன் கணவனுக்கு விளக்கினாள்.  சாயிபாபாவுக்குப் பதிலாக அவள் எங்ஙனம் ராமரைக் கண்டாள் என அவள் கூறினாள்.  மிகுந்த எளிமையும், பக்தியும் உடையவளாதலால் அது அவளது 'மனப் பிராந்தியே' என அவர் நினைத்தார்.  "மற்றவர்கள் எல்லாம் சாயிபாபாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ மட்டும் ராமனைக் காண்பதாவது" என்று அவர் அவளைக் கேலி செய்தார்.  அவளது மனம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்தபோதெல்லாம் அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக் கண்டாள்.  ஆதலால் அவள் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.



அற்புதக் காட்சி

இம்மாதிரியாக எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது ஒருநாள் இரவு அவள் கணவர் தன் கனவில் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார்.  அது கீழ்வருமாறு:

அவர் ஒரு பெரிய நகரத்தில் இருக்கிறார்.  போலீஸ் அவரைக் கைதுசெய்து கைகளைக் கட்டி, லாக்-அப்பில் வைத்திருக்கிறது.  போலீஸ் நன்றாக அழுத்திக் கட்டிக்கொண்டிருக்கும்போது ஜெயிலுக்கு வெளியில் சாயிபாபா அமைதியாக நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறார்.  பாபா இவ்வளவு அருகில் இருப்பதைக் கண்டு வெளிப்படையான குரலில் அவரிடம் "உமது புகழைக் கேள்விப்பட்டு நான் உமது திருவடிகளிடையே வந்தேன்.  தாங்களே நேரில் நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக் கேடு ஏன் நிகழ வேண்டும்? என வினவுகிறார். 


பாபா:  உனது கர்மத்தின் விளைவை நீ அனுபவித்தாக வேண்டும்.

அவர்: இந்தப் பிறவியில் இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும் விதத்தில் நான் ஏதும் செய்யவில்லையே?

பாபா:  இப்பிறவியில் இல்லையென்றால் உனது போன பிறவியில் நீ ஏதும் பாவம் செய்திருப்பாய்.

அவர்:  எனது முந்தைய பிறவிபற்றி எனக்கு ஏதும் தெரியாது.  ஆனால் அப்படியே நான் செய்திருப்பதாகவே வைத்துக்கொண்டபோதிலும் தங்கள் சாந்நித்யத்தின் முன்னர், நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று ஏன் அவைகள் அழிக்கப்படக்கூடாது?

பாபா:  உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா?

அவர்:  ஆம்.

பாபா:  உனது கண்களை மூடு.

அவர் கண்களை மூடியது தான் தாமதம் ஏதோ ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த அடி விழுவதுபோல் கேட்டது.  அவர் கணைகளைத் திறந்த போது தாம் விடுதலையாகி இருப்பதையும், போலீஸ் இரத்தம் சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும் கண்டார்.  மிகவும் பீதியடைந்து பாபாவை அவர் பார்த்தார்.

பாபா:  நீ இப்போது நன்றாகப் பிடிபட்டுக்கொண்டாய்.  இப்போது அதிகாரிகள் வந்து உன்னைக் கைது செய்வார்கள். 

அவர்: (கெஞ்சினார்) தங்களைத் தவிர என்னைக் காப்பாற்றுவார் வேறு ஒருவரும் இல்லை.  எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்.

பின்னர் பாபா அவரை மீண்டும் கண்களை மூடச் சொன்னார்.  அவர் அதே மாதிரியாகச் செய்து பின் கண்களைத் திறந்ததும் அவர் ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும் பாபா அவரருகில் இருப்பதையும் கண்டார்.

பாபாவின் காலடிகளில் அப்போது அவர் வீழ்ந்தார், "இந்த நமஸ்காரத்திற்கும் முந்தைய நமஸ்காரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?" என்று பாபா கேட்டார்.  "ஏராளமான வித்தியாசம் இருக்கிறது.  எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம் தங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகச் செய்யப்பட்டன.  ஆனால் இந்த நமஸ்காரமோ தாங்கள் கடவுள் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது.  அத்துடன் தாங்கள் முஸ்லீமாக இருந்துகொண்டு ஹிந்துக்களைப் பாழ்படுத்துவதாக நினைத்தேன்.

பாபா:  முஹமதியக் கடவுள் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?

அவர்:  இல்லை.

பாபா:  'பஞ்சா' என்ற உலோகத்தாலான கை அடையாளம் உங்கள் வீட்டில் இல்லையா?  'தாபூத்' (மொஹரம்) சமயத்தில் நீ அதனை வழிபடுவதில்லையா?  கல்யாணம் மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் நீங்கள் அமைதிப்படுத்தி ஆற்றும் காட்பீபீ என்ற மற்றொரு முஹமதியப் பெண் தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா?

அவர் இவைகளையெல்லாம் ஒத்துக்கொண்டார்.

பாபா:  உனக்கு வேறென்ன வேண்டும்?

அவரது குரு ராம்தாஸின் தரிசனத்தைப் பெற அவர் மனதில் அவா ஒன்று எழுந்தது.  அப்போது பாபா பின்னால் திரும்பிப் பார்க்கச் சொன்னார்.  அவர் திரும்பியபோது ராம்தாஸ் நின்றுகொண்டிருந்தார்.  அவர் காலடியில் விழப்போனபோது ராம்தாஸ் மறைந்துவிட்டார்.  பின்னர் அவர் பாபாவை விருப்பத்துடன் "நீங்கள் வயதானவராகத் தோன்றுகிறீர்களே, உங்கள் வயது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்.

பாபா:  என்ன! நான் கிழவன் என்றா சொல்கிறாய்?  என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம் விட்டுப்பார்த்துவிட்டுச் சொல்.

இதைக் கூறிவிட்டு பாபா ஓடத் தொடங்கினார்.  அவரும் பின்னால் ஓடினார்.  ஓடும்போது பாபா அவர்தம் பாதத்தால் எழுப்பிய தூசியில் மறைந்துவிட்டார்.  அவரும் கண்விழித்தார்.


விழித்தபின் கனவுக்காட்சியைப் பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார்.  அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது.  பாபாவின் பெருமையை அவர் உணர்ந்துகொண்டார்.  இதன்பின் அவரது பறிக்கும் குணமும், சந்தேகமும் மறைந்து ஒழிந்தன.  பாபாவின் பாதாம்புயத்தில் உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது.  அக்காட்சி கனவுதான்.  ஆனால் கேட்கப்பட்ட வினா விடைகள் மிகவும் விருவிறுப்பானதும் பொருள் செறிந்ததும் ஆகும்.

மறுநாள் காலை எல்லோரும் ஆரத்திக்காக மசூதியில் குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய் மதிப்புள்ள இனிப்புக்களையும், தம் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் பணமும் எடுத்து பிரசாதமாக அளித்தார்.  மேலும் சில நாட்கள் அவரை அங்கு தங்கச்செய்து, "அல்ல உனக்கு தாராளமாக அளிப்பார்.  உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்" என்று ஆசி கூறினார்.  அங்கு அவர் அதிகமாகப் பணம் பெறவில்லை.  ஆனால் அதற்கும் மேலானவைகளைப் பெற்றார்.  அதாவது பாபாவின் ஆசியை!  அது அவருக்குத் தொடர்ந்து நன்மையளித்து வந்தது.  பின்னால் அக்கோஷ்டிக்கு ஏராளமான பணம் கிடைத்தது.  அவர்களது பிரயாணம் வெற்றிகரமாக முடிவடைந்தது.  அவர்கள் பிரயாணத்தின்போது எவ்வித அசௌகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை.  பாபாவின் அருளால் எய்திய ஆனந்தத்தையும், ஆசிகளையும் நினைந்தவாறே பத்திரமாகவும், சௌக்கியமாகவும் வீடு திரும்பினர்.



டெண்டுல்கர் குடும்பம்

பாந்த்ராவில் டெண்டுல்கர் என்னும் குடும்பம் ஒன்று இருந்தது.  அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாபாவிடம் பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர்.  'ஸ்ரீ சாயிநாத் பஜன்மாலா' என்னும் 800 செய்யுட்கள் கொண்ட ஒரு நூலை திருமதி சாவித்ரிபாயி டெண்டுல்கர் பதிப்பித்திருக்கிறார்.  அது பாபாவின் லீலைகள் எல்லாம் விளக்குகிறது.  பாபாவைப்பற்றி ஆர்வம் கொண்டோர் எல்லோரும் படிக்க உகந்த நூல் அது. 

பாபு டெண்டுல்கர் என்னும் அவர்களது புதல்வன் இரவும், பகலும் அரும்பாடுபட்டு படித்துக்கொண்டிருந்தான்.  அவன் மருத்துவப் பரீட்சைக்குச் செல்லவேண்டும்.  சில ஜோசியர்களைக் கலந்தாலோசித்தான்.  அவனது ஜாதகத்தைப் பரிசீலித்துவிட்டு கிரஹங்கள் அவனுக்கு இவ்வருடம் சாதகமில்லை என்றும், எனவே அடுத்த வருடம் அவன் பரீட்சைக்குச் சென்றால் நிச்சயம் வெற்றிபெறுவான் என்றும் அவர்கள் கூறினர்.  இது அவனைக் கவலைக்குள்ளாக்கி, நிலைகொள்ளாமலிருக்கச் செய்தது.  சில நாட்களுக்குப்பின் அவனது தாயார் ஷீர்டி சென்று பாபாவைக் கண்டாள்.

பல விஷயங்களுடன், சில நாட்களில் பரீட்சை எழுதவிருந்த தன் மகனின் கவலைக்கிடமான நிலைமைகளையும் அவள் பாபாவுக்குக் கூறினாள்.  இதைக்கேட்டுவிட்டு பாபா கூறினார், "உனது மகனிடம் என்னை நம்பும்படி சொல்.  ஜாதகம், கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகிய முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் பாட்டுக்குப் படித்துக்கொண்டிருக்கட்டும்.  பரீட்சையை அமைதியாக எழுதட்டும்.  அவன் இவ்வாண்டு தேறுவது உறுதி.  என்னை நம்பும்படியும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் சொல்".

தாய் வீட்டுக்குத் திரும்பி இச்செய்தியை மகனுக்குத் தெரிவித்தாள்.  பின்னர் அவன் கஷ்டப்பட்டுப் படித்து உரிய காலத்தில் பரீட்சையும் எழுதினான்.  எழுதும் பேப்பர்களை (written-exam) அவன் நன்றாகச் செய்திருந்தான்.  ஆனால் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு பாஸ் செய்வதற்குப் போதுமான மார்க்குகள் தான் பெறப்போவதில்லை என்று எண்ணினான்.  எனவே வாய்மொழிப் பரீட்சைக்கு (oral) போவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.  ஆனால் பரீட்சை அதிகாரி அவனை விடுவதாக இல்லை.
 


அவன் எழுதிய பேப்பர்களில் பாஸ் செய்துவிட்டதாகவும், வாய்மொழிப் பரீட்சைக்கு அவன் வரவேண்டும் என்றும் சகமாணவன் ஒருவன் மூலம் செய்தியனுப்பினார்.  இவ்வாறாக அவன் அப்பரீட்சையில் தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான்.  கிரஹங்கள் அவனுக்கு எதிராக இருந்தபோதிலும், பாபாவின் அருளால் அவன் இவ்வாறாக வெற்றிபெற்றான்.  ஐயங்களும், கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறியவேண்டும்.  நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம்.  முழு நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூடப்பெறும். 

இப்பையனின் தந்தையாரான ரகுநாத்ராவ் பம்பாயில் உள்ள வெளிநாட்டு வாணிபக் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.  வயதாகிவிட்டபடியால் அவரால் வேலையைச் சரியாகச் செய்ய இயலவில்லை.  எனவே அவர் ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.  விடுமுறையின்போது அவர் தேகநிலை முன்னேறாததால் லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது.  அவர் முதுமையும், நம்பிக்கையும் வாய்ந்த பணியாளராக இருப்பதால் அந்த ஸ்தாபனத்தின் முக்கிய மேனேஜர் அவருக்கு ஒரு பென்ஷனுடன் ஓய்வு கொடுக்கத் தீர்மானித்தார்.

எவ்வளவு பென்ஷன் கொடுப்பது என்ற பிரச்சனை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது.  அவர் மாதம் ரூ.150 பெற்று வந்தார். பென்ஷன் தொகையான ரூ.75 வீட்டுச் செலவுகளைப் பராமரிக்கப் போதுமானவை அன்று.  எனவே அவர்களெல்லாம் இவ்விஷயத்தில் கவலையுள்ளவர்களாக இருந்தனர்.  முடிவான ஏற்பாட்டுக்குப் பதினைந்து தினங்கட்கு முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின் கனவில் தோன்றி, "பென்ஷன் நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.  இது உனக்குத் திருப்திதானே?" என்று கேட்டார்.  "பாபா இம்மாதிரி ஏன் என்னைக் கேட்கவேண்டும்?  நாங்கள் உங்களையே முழுவதும் நம்புகிறோம்" என்று திருமதி டெண்டுல்கர் பதிலளித்தார்.  பாபா ரூ.100 என்று கூறியபோதும், ரூ.10 இன்னும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது.  இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும், பாதுகாப்பையும் பாபா நிச்சயமாகவே காண்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.



கேப்டன் ஹாடே

பிகானீரில் தங்கியிருந்த
கேப்டன் ஹாடே என்பவர் பாபாவின் மிகப்பெரும் பக்தர்.  ஒருமுறை அவரது கனவில் பாபா தோன்றி "என்னை மறந்துவிட்டாயா?" என்று கேட்டார்.  ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "தனது தாயைக் குழந்தை மறந்துவிட்டால் அது எங்ஙனம் காப்பாற்றப்படும்?" என்றார்.

பின்னர் ஹாடே தோட்டத்துக்குச் சென்று அவரைக்காய் பறித்து ஒரு விருந்துக்கும், தஷிணைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம் பாபாவுக்குச் சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார்.  சிலநாட்களுக்குப்பின் அவர் குவாலியர் வந்தவுடன் ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர் மூலம் அனுப்பி
ரூ.2ஐ ஷிதா (மளிகை) பொருட்களுக்கும், காய்கறிகளுக்கும் ரூ.10ஐ பாபாவுக்குத் தஷிணையாக அளிக்கும் குறிப்பையும் அனுப்பியிருந்தார்.  அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று குறிப்பிடப்பட்ட சாமாங்களையெல்லாம் வாங்கினார்.  ஆனால் காய்கறிகள் கிடைக்கவில்லை.  சிறிது நேரத்தில் தலையில் சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில் எதிப்பட்டாள்.  வியப்பிற்கேற்ப அந்தக் கூடையில் வேண்டிய அவரைக்காய் கிடைத்தது.  அது வாங்கப்பட்டு மற்றெல்லாப் பொருட்களுடன் சேர்த்து கேப்டன் ஹாடேயின் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

நிமோண்கர் அடுத்த நாள் நைவேத்யம் (சோறும், காய்கறியும்) தயார் செய்து பாபாவுக்கு, கேப்டன் ஹாடேயின் சார்பில் சமர்ப்பித்தார்.  சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில் எடுத்துச் சாப்பிட்டதையும், சாதம் முதலியவற்றைத் தொடாதது கண்டும் அனைவரும் அதிசயப்பட்டனர்.  இதைத் தன் நண்பன் மூலமாகக் கேட்டறிந்த ஹடேயின் மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று. 



புனிதமாக்கப்பட்ட நாணயம்
பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்கவேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார்.  ஷீர்டிக்குப் போய்க்கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தார்.  அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார்.  அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று நமஸ்கரித்தபின் முதலில் தமது ரூபாயைத் தஷிணையாக அவர் பாபாவுக்கு அளித்தார்.  அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்.  பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தைக் கொடுத்தார்.  அதை பாபா வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால் சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்.

பின் அந்த நண்பரிடம் அவர் "உதிப் பிரசாதத்துடன் இதை அதன் உரிமையாளரிடம் திரும்பக்கோடு.  அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு.  அமைதியுடனும், திருப்தியுடனும் அவரை வாழச்சொல்" என்று கூறினார்.  அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேயிடம் திரும்ப அளித்து, ஷீர்டியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார்.  இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, பாபா எப்போதும் தாம் விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கிறார் என்று உணர்ந்தார்.  பாபாவும் அதையே முறையாக நிறைவேற்றினார்.



வாமன் நார்வேகர்

இப்போது வாசகர்கள் மற்றொரு கதையைக் கேளுங்கள்.  வாமன் நார்வேகர் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவர் பாபாவை மிகவும் நேசித்தார்.  அவர் ஒருமுறை ஒரு நாணயம் கொண்டுவந்தார்.  அதன் ஒரு பக்கத்தில் ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரின் உருவங்களும், மற்றொரு பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது.  அதை பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி உத்தியுடன் திருப்பி அளிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு அதை அவர் அளித்தார்.  ஆனால் பாபா உடனே அதைத் தம் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டுவிட்டார்.  வாமன்ராவின் என்னத்தை ஷாமா பின்னர் பாபாவுக்கு தெரிவித்து அதைத் திருப்பியளிக்க வேண்டினார்.

பாபா பின்னர் வாமன்ராவின் முன்னிலையில் இவ்வாறு பேசினார்.  "அது ஏன் அவருக்குத் திருப்பியளிக்கப்படவேண்டும்?  அதை நாமேதான் வைத்துக்கொள்ளவேண்டும்.  அதற்காக ரூ.25 கொடுத்தாரானால் அது திருப்பியளிக்கப்படும்".  வாமன்ராவ் ரூ.25 சேகரித்து அவற்றை பாபாவின் முன்னிலையில் வைத்தார்.  பின்னர் பாபா, "அந்த நாணயத்தின் மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும்.  ஷாமா இந்த ரூபாயை எடுத்து நமது ஸ்டோரில் வைத்துக்கொள்.  நாணயத்தை உனது பூஜை அறையில் வைத்து வழிபடு" என்றார்.

பாபா இம்மாதிரியான செயலை ஏன் பின்பற்றினார் என்பதைக் கேட்க ஒருவருக்கும் தைரியமில்லை.  ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, மிகப் பொருத்தமானது என்பதை பாபா மட்டுமே அறிவார்.

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்