Thursday, 20 September 2012

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 31

(1)  சந்நியாசி வியஜானந்த்
(2)  பாலாராம் மான்கர்
(3)  நூல்கர்
(4)  மேகா
(5)  புலி  

இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்


முன்னுரை

தனது மரணத் தறுவாயில் ஒருவனுக்குள்ள ஆசை அல்லது எண்ணம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.  கிருஷ்ணரும் கீதையில், "எவன் என்னை முடியுந்தறுவாயில் எண்ணுகிறானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான்.  அத்தருணத்தில் வேறெதையும்பற்றி எண்ணுபவன் அவன் விரும்பியபடியே செல்கிறான்" என்று கூறுகிறார்.  நமது கடைசித் தறுவாயில் ஒரு குறிப்பிட்ட நல்லெண்ணத்தை நினைவில்கொள்ளவேண்டும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கமுடியாது.  இல்லை என்பதைவிடப் பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் நாம் பயந்து பீதியடைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே எப்போதாவதோ அல்லது நமது கடைசித் தருணத்திலோ கொள்ளவேண்டிய நாம் விரும்புகிற புனித நினைவுகளை நம் மனதில் நிலைப்படுத்த நிலையான பயிற்சி அவசியம்.  எனவே கிளம்புவதற்கான இறுதிநேரம் வந்தபோது குழப்பம் அடையாமல் இருப்பதற்காக, எப்போதும் இறைவனை நினைவுகூர்ந்து அவனது நாமத்தைச் சதாகாலம் உச்சரிக்குமாறு எல்லா ஞானிகளும் போதிக்கிறார்கள்.  அடியவர்கள் தம்மைத்தாமே முழுமையாக ஞானிகளிடம் அர்ப்பணித்து விடுகிறார்கள்.  சர்வமும் அறிந்த ஞானிகள் அவர்களது கடைசிக் காலத்தில் அவர்களை வழிநடத்தி உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.  இம்மாதிரியான சில நிகழ்சிகள் பின்வருமாறு:



சந்நியாசி விஜயானந்


சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்ற ஞானி மானஸரோவருக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார்.  வழியில் பாபாவின் புகழைக் கேள்வியுற்று ஷீர்டியில் தங்கினார்.  அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமியைச் சந்தித்தார்.  மானஸரோவர் பயணத்தைப்பற்றி அவரிடம் விசாரித்தார்.  கங்கோத்ரிக்கு மேல் மானஸரோவர் 500மைல் உயரத்திலுள்ளது என்றும் ஏராளமான பனி, 50 காத தூரத்திற்கு ஒருமுறை மொழிமாற்றம், வழியில் யாத்ரீகர்களுக்கு ஏராளமாக தொல்லை கொடுக்கும் பூட்டான் மக்களின் சந்தேக குணங்கள் போன்ற யாத்திரையிலுள்ள கஷ்டங்களை விவரித்தார்.

இதைச் செவிமடுத்த துறவி மனந்தளர்வுற்றார்.  தமது விஜயத்தை இரத்துச் செய்தார்.  அவர் பாபாவிடம் சென்று சாஷ்டாங்கமாகப் பணிந்தபோது பாபா கோபாவேஷம் அடைந்து கூறினார், "அந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள், அவரின் நட்பு பயனற்றது".

பாபாவின் குணத்தை அத்துறவி அறியார்.  ஆயினும் அங்கு அமர்ந்து அங்கே நடந்துகொண்டிருந்த நிகழ்சிகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்.  அது காலைநேர தர்பார்.  மசூதியில் கூட்டம் அதிகமாய் இருந்தது.  பாபா பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டார்.  சிலர் அவரின் கால்களைக் கழுவிக்கொண்டிருந்தனர்.  சிலர் அவர் கால் கட்டைவிரலினின்று புனிதநீரை எடுத்து மனநிறைவுடன் குடித்துக்கொண்டிருந்தனர்.  சிலர் சந்தனம் பூசினர்.  சிலர் அவர்தம் புனிதமேனிக்கு நறுமணம் தடவினர்.  குலம், ஆசாரம் இவற்றை மறந்து அனைவரும் வழிபாடு செய்தனர்.  பாபா அத்துறவியின் மேல் கோபம் கொண்டவராய் இருந்தாலும் அவர் பாபாவின்பால் பாசம் நிரம்பியவராய் மசூதியைவிட்டுப் போகவில்லை.

ஷீர்டியில் அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.  சென்னையிலிருந்து அப்போது அவருடைய தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது.  அவர் மிகவும் மனம் தளர்ந்து, தமது தாயார் அருகில் செல்ல விரும்பினார்.  ஆனால் அவரால் பாபாவின் அனுமதியின்றிச் செல்ல முடியாது.  எனவே தமது கரத்தில் கடிதத்துடன் பாபாவைக்கண்டு வீடு திரும்ப அனுமதி கேட்டார்.  வருங்காலத்தை அறிந்த எங்கும்நிறை பாபா அவரிடம் "உன்னுடைய தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானாய்?  சொந்தபந்தங்களும், ஆபாசங்களும் காவி உடைக்கு ஒத்துவராது.  உன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் சில நாட்கள் காத்திரு.  வாதாவில் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள்.  உனது கதவுகளை நன்றாகத் தாழிடு.  அதிக ஜாக்கிரதையாக இரு.  திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவர்.  செல்வமும், சுபிட்சமும் நிலையற்றவை.  இவ்வுடல் அழிவிற்கும்,  மரணத்திற்கும் உட்பட்டது.  இதை உணர்ந்து இம்மை - மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடைமையைச் செய்.  இவ்வாறாகச் செய்து, எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவினின்றும் விடுபட்டு 'பேரானந்தப் பெருநிலை' எய்துகிறான்.  அன்புடனும், பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ, பரமாத்மா அவனுக்கு ஓடிச்சென்று உதவி புரிகிறார்.  உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம்.  எனவே நீ இங்கு வந்துள்ளாய்.  இப்போது நான் சொல்வதைக் கவனி, உனது அந்திம வாழ்க்கையை உணர்.  ஆசைகளற்று நாளைமுதல் பாகவதத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கு.  மூன்றுமுறை சப்தாஹம் செய்.  அதாவது பக்தி பூர்வமாக மூன்றுவாரம் மூன்றுமுறை பாராயணம் செய்க.  பரமாத்மா உன்னிடம் மகிழ்வெய்தி நினது கவலைகளை அழிப்பார்.  உனது துயர் நிலை மறைந்து நீ அமைதியுறுவாய்" என்று கூறினார். 

அவரது முடிவு நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து பாபா இந்த சிகிச்சையை தேர்ந்தளித்தார்.  மரணத் தெய்வமான எமனை மகிழ்விக்கும் 'ராம விஜயம்' படிக்கும்படி செய்தார்.  அடுத்தநாள் காலை குளித்து மற்ற தூய சம்பிரதாயங்களைச் செய்த பிறகு லெண்டித் தோட்டத்திலுள்ள ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று பாகவதம் படிக்கத் தொடங்கினார்.  இரண்டுமுறை பாகவதப் பாராயணம் செய்தார்.  அதன் பின்னர் மிகச் சோர்வடைந்தார்.  வாதாவிற்குத் திரும்பினார்.  இரண்டு நாட்கள் தமது இருப்பிடத்தில் தங்கினார்.

மூறாவது நாள் 'பக்கீர் பாபா' என்ற படேபாபாவின் மடியில் உயிர் துறந்தார்.  பாபா அவரது உடலை ஒருநாளைக்கு ஒரு நல்ல காரணம் கருதி பாதுகாக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.  பின்னர் போலீஸ் வந்து உரிய விசாரணை செய்து, உடலை அடக்கம் செய்யும்படி அனுமதி அளித்தனர்.  உரிய இடத்தில் தக்க மரியாதையுடன் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.  இவ்விதமாக பாபா துறவிக்கு உதவி அளித்து, அவருக்கு நற்கதியளித்தார்.



பாலாராம் மான்கர்

பாலாராம் மான்கர் என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர் தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார்.  வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்புவித்துவிட்டு, வீட்டைத் துறந்து ஷீர்டி சென்று பாபாவுடன் வாழ்ந்து வந்தார்.  பாபா அவர்தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார்.  அதை அவர் இவ்வாறாகச் செய்தார்.  அவருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி கோரினார்.  மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துசென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய் இருந்தார்.  ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கைமுறையைக் கொடுத்துள்ளதாக உறுதிகூறி அவரைத் தேற்றினார்.

ஒரு நாளைக்கு மூன்றுமுறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.  பாபாவின் சொற்களை நம்பி மான்கர்
மச்சிந்த்ரகட்டுக்கு வந்தார்.  இன்பமான காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் பாபா அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார்.  சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக் காட்சி அவருக்கு ஏற்பட்டது.  அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதிநிலையில் அல்லது தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள்.  ஆனால் மான்கரைப்
பொறுத்தமட்டிலோ, தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அதை அவர் பெற்றார்.  பாபா தாமே அவர்முன் தோன்றினார்.  மான்கர் அவரைப் பார்த்தது மட்டுமல்லாது தான் ஏன் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் கேட்டார்.

பாபா பதில் அளிக்கையில், "ஷீர்டியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன.  உனது நிலையற்ற மனதை அடக்கவே இங்கு உன்னை அனுப்பினேன்.  நான் ஷீர்டியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய்.  பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம் ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய்.  இப்போது நீ கண்ணார ஷீர்டியில் கண்ட அதே மனிதர்தானா இவர் என்று தீர்மானித்துக்கொள்.  இந்த காரணத்திற்காகத்தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்" என்று கூறினார்.  குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் மான்கர்
மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார்.  புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார்.  ஆனால் அவர் டிக்கெட் பெற புக்கிங் ஆபீசுக்கு சென்றபோது மிகவும் கூட்டமாக இருப்பதைக் கண்டார்.  விரைவில் அவரால் டிக்கெட் பெற முடியவில்லை.

அப்போது தனது இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில் வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்?" எனக் கேட்டார்.  மான்கர், "தாதருக்கு" என்று பதிலளித்தார்.  அவர், "தவுசெய்து என்னுடைய தாதர் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.  இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர் பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று சொன்னார்.  மான்கர் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.  பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார்.  மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை.  ஸ்டேஷனைவிட்டு வண்டி போகும்வரை மான்கர் அவருக்காகக் காத்திருந்தார்.  ஆனால் அவரைப்பற்றி எவ்விதச் சுவட்டையும் அவர் காணவில்லை. 

இது மான்கர் விநோதமாகப் பெற்ற இரண்டாவது காட்சியாகும்.  மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் ஷீர்டிக்குத் திரும்பி பாபாவின் ஏவலையும், சேவையையும் செய்துவந்தார்.  அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார்.  பாபாவின் முன்னிலையிலேயே அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும் நல்லதிர்ஷ்டம் படைத்திருந்தார்.



தாத்யா சாஹேப் நூ
ல்கர்   

தாத்யா சாஹேப் குறித்து, ஷீர்டியில் உயிர் நீத்தார் என்று மட்டுமே ஹேமத்பந்த் குறிப்பிட்டுள்ளார்.  சாயிலீலா சஞ்சிகையில் அவரைப்பற்றி வெளியானதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.  1909ஆம் ஆண்டு நானா சாஹேப் அங்கு மம்லதராக இருக்கும்போது பண்டரீபுரத்தில் தாத்யா சாஹேப் ஒரு சப்-ஜட்ஜாக இருந்தார்.  இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினர்.  தாத்யா சாஹேப் ஞானிகளை நம்புவதில்லை.  ஆனால் நானா சாஹேப் அவர்களை விரும்பினார்.  சாயிபாபாவின் லீலைகளை நானா சாஹேப் அவருக்குக் கூறினார்.  ஷீர்டிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்க்க அவரை வற்புறுத்தினார்.  முடிவாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் ஷீர்டிக்குப் போகச் சம்மதித்தார்.

(1)  ஒரு பிராமண சமையற்காரர் அவருக்குக் கிடைக்கவேண்டும்
(2)  அன்பளிப்புக்காக நல்ல நாக்பூர் ஆரஞ்சுகளைப் பெறவேண்டும்

இவ்விரண்டு நிபந்தனைகளும் தெய்வாதீனமாக நிறைவேறின.  நானா சாஹேபிடம் சேவைக்காக ஒரு பிராமணர் வந்தார்.  அவர் தாத்யா சாஹேபிடம் அனுப்பப்பட்டார்.  தாத்யா சாஹேப் நூறு அழகிய ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய பார்சலைப் பெற்றார்.  அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. 

நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தாத்யா சாஹேப் ஷீர்டிக்குப் போகவேண்டியதாயிற்று.  முதலில் பாபா அவரிடம் மிகவும் கோபாவேஷம் அடைந்தார்.  ஆனால் படிப்படியாக தாத்யா சாஹேப் தமது அனுபவங்களால் பாபா கடவுள் அவதாரமே என்று உறுதி பெற்றார்.  பாபாவிடம் அத்தகைய அன்பு பூண்டு தனது மரணம்வரை அங்கேயே தங்கினார்.  அவருடைய முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்போது அவரிடம் புனித வேதங்கள் படிக்கப்பட்டன.  முடியுந்தறுவாயில் பாபாவின் பாததீர்த்தம் கொண்டுவரப்பட்டு குடிப்பதற்காக அவரிடம் தரப்பட்டது.  பாபா அவருடைய மரணத்தைக் கேள்விப்பட்டு, "ஓ! தாத்யா, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.  அவர் மீண்டும் பிறக்கமாட்டார்" என்றார்.



 

மேகா

மேகாவின் கதை முன்னாலேயே 28 ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது.  மேகா இறந்தபின்பு கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல்மீது பொழிந்தார்.  சடங்குகள் செய்யப்பட்ட பிறகு சாதாரண மனிதர்களைப் போன்று பாபாவின் கண்களினின்றும் நீர் வழிந்தது.  பெருந்துக்கத்தாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டார்.  பின்னர் அவரது உடம்பை மலரால் மூடி நெருங்கிய உறவினரைப் போல் அழுதபின்பு பாபா மசூதிக்குத் திரும்பினார்.

மனிதர்களுக்குப் பல ஞானிகள் சத்கதி அளிப்பது கண்ணுறப்பட்டிருக்கிறது.  ஆனால் சாயிபாபாவின் பெருமை ஒப்புவமையற்றது.



புலி

பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்குமுன் ஷீர்டியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது.  ஒரு கிராமப்புற வண்டி வந்து மசூதிக்கு முன்னால் நின்றது.  தனது பயங்கர முகம் வண்டியின் பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது.  அது ஏதோவொரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது.  அதனுடைய காவலாளர்களான மூன்று தெர்வஷிகள் அதை ஊரூராக எடுத்துச் சென்று காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர்.  அதுவே அவர்களின் ஜீவனோபாயமாகும்.  அந்தப் புலி அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனைகளினின்று அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட பலவித சிகிச்சைமுறைகளும் பலனற்றதாய்விட்டன.

அப்போது அவர்கள் பாபாவின் புகழைக் கேள்வியுற்று மிருகத்துடன் அவரைப் பார்க்க வந்தனர்.  தங்கள் கைகளில் சங்கிலியுடன் அதை அவர்க
ள் கீழிறக்கி, கதவருகில் அதை நிற்கும்படி செய்தனர்.  அது இயற்கையிலேயே குரூரமானது.  அத்துடன் நோய்வாய்ப்பட்டது.  எனவே அது இருப்புக்கொள்ளாமல் இருந்தது.  மக்கள் அதை பயத்துடனும், வியப்புடனும் பார்க்கத் துவங்கினர்.  தெர்வஷிகள் உள்ளேசென்று புலியைப் பற்றிய அனைத்தையும் பாபாவுக்குக் கூறி, அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர்.  புலி படிகளை நெருங்கியதும் பாபாவின் ஒளியினால் அதிர்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது.  பாபாவும், புலியும் சந்தித்துக்கொண்டபோது அது படியேறி பாபாவைப் பாசத்துடன் நோக்கியது.  தனது வாலில் உள்ள மயிர்க்கொத்தை ஆட்டி, அதை மூன்றுமுறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்தது.

அது இறந்தது கண்டு தெர்வஷிகள் முதலில் பெருந்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர்.  ஆனால் பக்குவமடைந்த எண்ணத்திற்குப்பின் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பினர்.  புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்ததால் அது தனது முடிவை நெருங்கிகொண்டிருந்தது என்றும், அது மிகுந்த தகைமை உடையதாய் இருந்ததால் பாபாவின் பாதாரவிந்தகளில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள்.  அது அவர்களின் கடனாளி, கடன் தீர்ந்ததும் விடுதலையடைந்து தன் முடிவை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பித்தது. (ஷீர்டியில் மஹாதேவ் மந்திரின் எதிரில் இந்தப் புலியின் சமாதி உள்ளது)  ஏதேனும் ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்ததாகிவிடுகிறது.  அத்தகைய ஜந்துக்களைப் பொறுத்தவரை அவைகள் புண்ணியசாலிகளாக இருந்தாலன்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்சிகரமான முடிவை எய்தவியலும்?!



ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 

2 comments:

  1. Om sai ram 🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sai Ram! I always use ue blog every Thursday to read SaiSatcharithra. Thank you

    ReplyDelete