Thursday, 17 January 2013

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 49

•   ஹரி கானோபா
•   ஸோமதேவ் ஸ்வாமி
•   நானா சாஹேப் சாந்தோர்கர்
     ஆகியோரின் கதைகள்




முன்னுரை

வேதங்களும், புராணங்களும் பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது.  அவ்வாறெனின் ஏதுமறியாதவர்களாகிய நாம் எங்ஙனம் நமது சத்குரு, சாயிபாபாவை விவரிக்க இயலும்?  இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகிறோம்.  உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும்.  ஆனால் சாயிபாபாவினது நல்ல பண்புகள் மௌன விரதத்தை மறக்கச்செய்து நம்மைப் பேசுமாறு ஊக்குவிக்கின்றன.  நண்பர்கள், உறவினர்கள் இவர்களும் நம்மோடு இருந்து உண்ணவில்லையாயின் நல்ல ருசியான உணவுகூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை.  ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உண்பார்களானால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன.  சாயி லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயி லீலாம்ருதமும் இது போன்றதே.  அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ணமுடியாது.  நண்பர்களும், சகோதரர்களும் நம்முடன் சேரவேண்டும்.  எவ்வளவு அதிகமோ அவ்வளவு நலம்.

இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும் தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும் சாயிபாபா அவர்களேயாகும்.  பரிபூரண சரணாகதியடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது கடமை.  க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும்விட தவமிருத்தல் நல்லது.  தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம்.  இவையெல்லாவற்றையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது.  

ஆகவே சாயியின் நாமத்தை ஸ்மரணம் செய்து அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக.  சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை.  மேலே கூறியவாறு நமது கடமையைச் செய்தோமானால் சாயி நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர்.  இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்.



ஹரி கானோபா

பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபாவின் பல லீலைகளைக் கேள்வியுற்றார்.  அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை.  அவர் பாபாவைத் தாமே பரீட்சிக்க விரும்பினார்.  எனவே சில பம்பாய் நண்பர்களுடன் ஷீர்டிக்கு வந்தார்.  ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார்.  பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துபணிய எண்ணினார்.  அவரது புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை.  எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று அவைகளை வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.

பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதி, பிரசாதம் இவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினார்.  அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார்.  அவைகளுக்காக வீணாகத் தேடியபின், தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துபோய்த் திரும்பினார்.  குளித்து வழிபட்டு நைவேத்தியம் சமர்ப்பித்துவிட்டு, உணவுக்காக அமர்ந்தார்.  ஆயினும் அவ்வளவு நேரமும் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை.

உணவை முடித்துக்கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தான்.  அவனது கையில் ஒரு கோல் இருந்தது.  அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.  கை கழுவ வெளியேவந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், 'ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா!' ('க' என்பவரின் புதல்வரான ஹரியே! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே!) என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும் அவர் 'க'வின் (அதாவது கானோபா) புதல்வர்தானா என்றும், அவர் ஜரிகை தலைப்பாகை அணிபவர்தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை அவரிடம் கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் சொன்னான்.  இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார்.  அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார்.  தனது பெயர் ஹரி என்றும், தாம் 'க'வின் (கானோபா) புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்.

பையன் திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.  தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது.  எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம்.  ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக ஷீர்டிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக்கூடும் என மனதில் நினைத்து வியந்தார்.  வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் ஷீர்டிக்கு வந்தார்.  இந்நிகழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார்.  அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்.



சோமதேவ் ஸ்வாமி

பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள்.  காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார்.  1906ம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார்.  இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக்கொண்டனர்.  ஐந்தாண்டுகளுக்குப்பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார்.  பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்.

ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆசை எழுந்தது.  பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினார்.  மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக்கொண்டு ஷீர்டிக்குப் போனார்.  ஷீர்டிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார்.  வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம்.  ஆயின் இப்புறச் சின்னங்கள் அந்த ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா.  ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில், அது வேறு விதமாய் இருந்தது.  கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்?  இது துறவையா உணர்த்துகிறது?  இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்.

இவ்வாறாக அவர் தமது ஷீர்டி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார்.  அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும்.  கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது ஷீர்டியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்களையெல்லாம் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைகுலையும்" என்றார்கள்.  இதைக்கேட்டு ஸ்வாமி மேலும் குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு இன்னோரன்ன படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, (அனேகரைக் கண்டிருக்கிறேன்)  அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிப் போதலே எனக்கு நன்று" என்றுரைத்தார்.  இதைக்கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார்.  உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்.

பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், அந்த சாது (அதாவது பாபா) கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர்.  அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர்.  முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர்.  பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின.  "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகிறதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுகூர்ந்தார்.  பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும்.  நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ.  இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை.  மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்?  இது துறவின் அறிகுறியா?  இங்கே கணமேனும் இருக்காதே" என்றார்.  ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்.

 பாபா தமது உள்ளத்தைப் படித்து அதைப் பேசினார் என உணர்ந்தார்.  எத்தகைய நிறைபேரறிவுடையவர் அவர்!  தாம் ஞாமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார்.  சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார்.  தான் மட்டும் ஏன் அவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்?  அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேறவேண்டுமென நினைத்தார்.  பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே.  பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு பாபாவின் ஒரு முற்றிலும் பற்றுறுதியுள்ள அடியவராக ஆனார் என்று சொல்லத் தேவையில்லை.  

 

நானா சாஹேப் சாந்தோர்கர்

நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.  ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மஹல்ஸாபதி மற்றுமுள்ளோருடன் அமர்ந்திருக்கையில், பீஜப்பூரிலிருந்து ஒரு முஹமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார்.  கோஷா(பர்தா) அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பால் போய்விட விரும்பினார்.  ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார்.  பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர்.  பாபாவின் பாதங்களை வணங்குமுகமாக அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார்.  அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பாபா அவரை நோக்கி,


"நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய்.  புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும்.  நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம்.  கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார்.  அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.  மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும்.  முன்கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும்.  உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை.  நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்?  கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?" என்றார்.

ஷாமா அவ்விடத்தில் இருந்தார்.  பாபா கூறியதன் பொருளை அவரால் உணர இயலவில்லை.  எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார்.  நானா, அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கமடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து அதைப்பற்றி அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார்.  பாபாவின் பொருளை நானா இவ்வாறாக விளக்கினார்.  "அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது.  அதைத் தான்தோன்றித்தனமாகப் போக அனுமதிக்கக் கூடாது.  உணர்வுகள் குழப்பமுறலாம்.  ஆயினும் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும்.  பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது.

விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன.  ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது.  மெதுவான படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிகாண இயலும்.  உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது.  ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது.  தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.  அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே.  பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும்.  வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை.  கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது.  பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும்.  இவ்வாறாக உணர்வுகள் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டுவிடும்.  பொருட்களை அனுபவிப்பதில்கூட நீங்கள் இறைவனைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுவீர்கள்.

வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித்தொடர அனுமதிக்கப்பட்டு அவைகள்பால் பற்றுக்கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது.  புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது.  விவேகம் என்னும் சாரதியைக்கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம்.  அத்தகையதொரு சாரதியுடன் நம் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்தத் திருமாலின் திருவடிகளை எய்துவோம்" என்றார்.  

ஸ்ரீ சாயியைப் பணிக 
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

No comments:

Post a Comment